‘திடீரென்று கடந்த காலம் மிகத் தொலைவில் புதைக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றவில்லை. அத்தோடு எதிர்காலம் அமைதியாகச் சிந்திக்க முடியாதவாறு மிகவும் இருண்டதாக உள்ளது.’
அது நூலாசிரியர் நைஜில் ஜோன்ஸ் தனது நூலின் இரண்டாம் பதிப்பிற்கு எழுதிய பின்னுரையில் கூறியது. 1987 இல் எழுதிய நூலுக்கு 2004 இல் எழுதப்பட்ட வரி. அது இந்த 2026இல் இன்னும் கனத்த, கருத்த அச்சத்தைத் தருவதாக உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த நாஜிகளின் பிறப்பு இன்றைக்கு உலகை – குறிப்பாக, இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நூலின் வாசிப்பு காலப் பொருத்தமுள்ளதாக இருக்கின்றது.
எம்.என்.ராய், பால்மிரோ டோக்ளியாட்டி ஆகியோர் ஃபாசிஸத்தின் தத்துவார்த்த, பொருளாதார அடிப்படைகளை விளக்கினர். ஃபாசிஸம் அல்லது அதன் ஜெர்மன் வடிவமான நாஜியிஸம் உருவாகி காலூன்றிய வரலாற்றுப் போக்கு மற்றும் அரசியல் பின்னணியை விளக்கும் ஆங்கில நூல் ‘நாஜிகளின் பிறப்பு’ (The Birth of Nazis).
நூலாசிரியர்
நைஜில் ஜோன்ஸ் ஒரு வரலாற்று ஆய்வாளரும் பத்திரிகையாளரும் ஆவார். பி.பி.சி., ஹிஸ்டரி டுடே தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியுள்ள அவர், கார்டியன் உள்ளிட்ட முன்னணி இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகின்றார். இங்கிலாந்தில் பிறந்த (1961) ஜோன்ஸ் இங்கிலாந்திலும் ஜெர்மனியிலும் கல்வி கற்றவர். ஆங்கிலத்தோடு ஜெர்மன் மொழியிலும் புலமை கொண்ட அவரது சிறப்புத் தனித்திறனுக்கான புலம் ஜெர்மன் வரலாறு ஆகும். அவரது இந்த நூல் ஒரு வரலாற்று நாவல் போல மனதில் படமாக விரிகின்றது. எழுத்து இடதுசாரி சார்போடு இருக்கிறது. ஆனால், அவர் ஒருமுறை ஒரு வலதுசாரி மலினக் கட்சி (Right Popalist Party- UKIP) சார்பாக மேயர் தேர்தலில் நின்றுள்ளார். வாழ்க்கை பல வினோதங்கள் அடங்கியதுதான் போலிருக்கிறது!
நாஜியிசத்தின் பொருளடிப்படை
‘குறைந்து செல்லும் லாப விகிதப் போக்கு’ Tendency of falling Rate of Profit) என்பது முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பண்பு. இது மாமேதை மார்க்ஸ் அவர்களாலேயே மூலதனம் நூலின் மூன்றாம் தொகுதியில் கணிதத் துல்லியத்துடன் விளக்கப்பட்ட கோட்பாடுதான். பின்னர் ஆங்கிலப் பொருளாதார நிபுணரான மைக்கல் ராபர்ட்ஸ் போன்றோரால் ஏராளமான புள்ளி விவரங்கள் மூலம் இதுதான் உலக எதார்த்தம் என நிறுவப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடையும் லாப சதவீதத்தை வீழவிடாமல் பராமரிப்பதற்கும் உயர்த்துவதற்கும் முதலாளித்துவம் சகலவிதமான ஜனநாயக மறுப்பு, அடக்கு முறைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுரண்டலையும், உபரியையும், லாப சதவீதத்தையும் அதிகரிக்க முயலும். இதுகூட மார்க்ஸ் தொட்டுக் காட்டியதுதான். பிரிட்டன், ஃபிரான்ஸோடு ஒப்பிட வயதில் இளைய ஜெர்மன் முதலாளித்துவம் சற்று தாமதமாக உலகச் சந்தைக்கு வந்தது. உலகச் சந்தையும் காலனிகளும் பிரிட்டன், ஃபிரான்ஸ் ஆதிக்கத்தில் இருந்தன. தனது லாப அதிகரிப்பிற்காக தனது உற்பத்திச் சரக்குகளுக்கு விரிந்த சந்தை வேண்டி மூட்டியதுதான் முதலாம் உலகப் போர்.
முதல் உலகப் போரில் தோல்வியடைந்த ஜெர்மனி
1914இல் கெய்ஸர் வில்ஹெம் மற்றும் இவரது ராணுவ ஜெனரல் ஃபால்கன்ஹைய்ன் (Falkenhayn), சான்சலர் (பிரதமர் போன்ற பதவி) பெத்மேன் ஹால்வாக் (Bethman Holwag), ஆகியோர் ஜெர்மனியைப் போருக்கு இழுத்து வந்தனர். 1916-17இல் போர் அவர்கள் நினைத்தவாறு நடக்கவில்லை. ராணுவ ஜெனரல்களான ஹிண்டன்பர்க், லூண்டார்ஃப் ஆகியோரின் அதிகாரம் முதன்மையானது. கெய்ஸர் பெயரளவிலான அரசராக மாறிப்போனார். கெய்ஸரின் சான்ஸலரும் ராணுவத் தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். ஜெர்மனி நடைமுறையில் ஒரு ராணுவ சர்வாதிகார நாடாக ஆனது.
ஆனால், முதலாம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வியடைந்தது. அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ் அடங்கிய நேச நாடுகள் கூட்டணி கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில்தான் போரை முடித்தன. இந்த நிபந்தனைகள் ஜெர்மனி மீதும் அதன் மக்கள் மீதும் கடுமையான பொருளாதாரச் சுமையை ஏற்றின. அத்தோடு, ஜெர்மன் நாட்டையும் மக்களையும் அவமானத்தால் மனம் குன்றச் செய்யும் நிபந்தனைகளையும் நேசநாடுகள் ஜெர்மனி மேல் சுமத்தின.
ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சி) பிளவு
ஜெர்மன் நாட்டு வரலாற்றையும் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றையும் அதிகம் படிக்காத இடதுசாரிகளுக்கும் ‘ஓடுகாலி காவுட்ஸ்கி’ என்ற பதம் தெரிந்திருக்கும். முதல் உலகப்போர் வெடித்தபோது இது ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போர்; சர்வதேசியம் பேசும் பாட்டாளி வர்க்கக் கட்சிகள் போரை எதிர்க்க வேண்டும்; ஏகாதிபத்தியப் போரை புரட்சியாக மாற்ற வேண்டும் என்று லெனின் அறைகூவல் விடுத்தார். ஆனால் அன்றைய 2ஆம் அகிலத்தின் கீழ் இருந்த கட்சிகள் சர்வதேசியத்தைக் கைவிட்டு தத்தமது நாட்டின் போர் முயற்சிகளை ஆதரிப்பவர்களாக மாறிப் போயின அன்றைக்கு ஆகப் பெரிய ‘கம்யூனிஸ்ட் கட்சி’ ஆன ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் (SDP) பெரும்பான்மையே ஜெர்மனியின் போர் நடிவடிக்கைகளை ஆதரித்தது. அன்றைய ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் முதுபெரும் தலைவர், எங்கல்ஸின் மறைவிற்குப் பிறகு அகிலத்தின் சகல கட்சிகளும் அண்ணாந்து பார்க்கும் கோட்பாட்டு வழிகாட்டியாக இருந்தவர் கார்ல் காவுட்ஸ்கி. அவரே ‘ஷனப் பித்தம்’ கொண்டு ஜெர்மனியின் போர் முயற்சியை ஆதரித்தார். ஜெர்மன் பாராளுமன்றத்தில் போருக்கான ஒதுக்கீடு குறித்த மசோதா நிறைவேற்ற வாக்கெடுப்பு நடந்தது. கட்சி 35% வாக்குளையும் 110 பாராளுமனற உறுப்பினர்களையும் கொண்டதாக வலுவுடன் இருந்தது. ஆனால் அன்றைய பாராளுமன்ற கட்சி தலைவரான ஃபிரட்ரிக் எபர்ட் தலைமையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் (96) போர் முயற்சியை ஆதரித்து வாக்களித்தனர்.
கட்சி, போர் ஆதரவு ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி (SPD), போர் எதிர்ப்பு சுதந்திர சமூக ஜனநாயகக் கட்சி (USPD) என்று இரண்டாகப் பிரிந்தது. போரை எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களித்த கார்ல் லீப்னக்ட் மற்றும் ரோஸா லக்ஸம்பர்க் ஆகியோர் யு.எஸ்.பி.டி.க்குள் இணைந்த ஸ்பார்ட்டகஸ் லீக்கில் இருந்தனர். போரை ஆதரித்த காவுட்ஸ்கி போன்றோரும் மனம்மாறி யு.எஸ்.பி.டி.ஐ ஆதரித்தனர். ஆனாலும் வாழ்நாளையெல்லாம் மார்க்சியத்திற்கு அர்ப்பணித்த கார்ல் காவுட்ஸ்கி, ‘ஓடுகாலி’யாக இருந்ததைத் தவிர வேறேதும் செய்யாதவர் என்று நாமெல்லாம் நினைக்குமாறு ‘ஓடுகாலி காவுட்ஸ்கி’ என்ற பெயர் நிலைத்துப் போனது. இவர்களைத் தவிர பல ஜனநாயகக் குடியரசை வலியுறுத்திய கட்சிகள், கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சிகள், பிரிட்டனில் போல் அரசியல் சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சியைக் கோரிய கட்சிகள் ஆகியவையும் இருந்தன.
இடைக்கால அரசும் வலதுசாரி, இடதுசாரி கலகங்களும்
1918 நவம்பரில் ஜெர்மனி போரில் தோற்பது உறுதி என்பது பட்டவர்த்தமானது. எதிரி நாட்டுத் தலைவர்கள் - குறிப்பாக, அமெரிக்காவின் வில்ஸன் கெய்ஸரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. எனவே, கெய்ஸர் 1918 நவம்பர் 9ஆம் தேதி ஆட்சியைத் துறந்து ஹாலந்திற்குச் சென்று தஞ்சம் அடைந்து விட்டார். அவரது முடியாட்சியின் கீழ் அதிபராக இருந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர் இளவரசர் மாக்ஸ்வான் பேடன் பதவி விலகினார். பாராளுமன்றத்தின் ஆகப்பெரிய கட்சியான ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஃபிரடெரிக் எபர்ட் அவர்களிடம் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார். அன்றைக்கும் எஸ்.பி.டி. (SPD) என அழைக்கப்பட்ட கட்சி தன்னை ஒரு மார்க்சிஸ்ட் கட்சி என்றுதான் அழைத்துக் கொண்டது.
முடியரசிற்குப் பதில் குடியரசு கோரிய ஜனநாயகக் கட்சிகளும் சோசலிஸக் கட்சிகளும் ஜெர்மனி மீது பொருளாதாரச் சுமையையும் அவமானத்தையும் சுமத்திய வெர்ஷய்ல்ஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டிய கேவலமான பணியைச் செய்ய வேண்டியவை ஆயின. ஜெர்மனியை மோசமான போரில் ஈடுபடுத்தி தேரை இழுத்து தெருவில் விட்ட முடியரசு ஆதரவாளர்களும், ராணுவ ஜெனரல்களும் தாங்கள் போரில் தோற்கவில்லை; தாங்கள் முதுகில் கத்தியால் குத்தப்பட்டவர்கள் என்றனர். போல்ஷ்விக்குகளும், சோஸலிஸ்ட்டுகளும், யூதர்களும், முதலாளித்துவமும் நேச நாடுகளும் சேர்ந்துதான் இந்தத் துரோகத்தை இழைத்தனர் என்றனர். நாடே வேலைநிறுத்தங்கள், ராணுவ கப்பற்படையினரின் கலகம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம், முற்றுகை எனக் கொந்தளிப்பில் இருந்தது.
1918 நவம்பர் 9ஆம் தேதி காலை 11 மணி அளவில் பாராளுமன்றக் கட்டடமான ரீச்ஸ்டாக்கின் ஒரு உப்பரிகையில் இருந்து, எஸ்.பி.டி. கட்சித் தலைவர் ஷெய்டமான் ஒரு ஜெர்மன் குடியரசு நிறுவப்பட்டதைப் பிரகடனம் செய்தார். அதே நாளில் பிற்பகலில் அதே கட்டடத்தின் வேறு ஓர் உப்பரிகையில் இருந்து கார்ல் லீப்னெக்ட் ஜெர்மன் தொழிலாளர், படைவீரர்கள் கவுன்ஸில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாக, ரஷ்ய சோவியத் பாணியிலான அமைப்பைப் பிரகடனம் செய்தார். ஒன்றுபட்டிருந்த ஜெர்மனியின் ‘மார்க்சியக் கட்சி’ ஆன ஜெர்மன் சமூக ஜனநாயக் கட்சியின் இரண்டு பிரிவுகள் இரண்டு சோசலிஸ அரசுகளை அறிவித்தன. இரண்டும் தாங்கள்தான் உண்மையான மார்க்சிஸ்ட் கட்சி என உரிமை கோரின. கொடுத்து வைத்த ஜெர்மன் மக்களுக்கு ஒரே நாளில் ஒன்றுக்கு இரண்டாய் சோசலிஸ அரசுகள் கிடைத்தன. ஆனால் ஜெர்மன் மக்கள் கொடுத்து வைத்தது, கலவரம், ஆயுதந்தாங்கிய மோதல்கள், படுகொலைகள், துரோகங்கள், எதார்த்தம் அறியாத இடதுசாரி அதிதீவிர சாகசவாதங்கள் ஆகியவற்றுக்குத்தான் என ஆனது.
1918இல் கையெழுத்தான வெர்ஷெய்ல்ஸ் ஒப்பந்தம் ஜெர்மனியின் ராணுவத்தை ஒரு லட்சம் பேர் கொண்டதாகக் குறைக்கச் செய்தது. ஒரு கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இருந்த ராணுவ வீரர்களில் எஞ்சியவர்கள், வீடு திரும்பினர். ஒரு பகுதியினர் இடதுசாரிகளால் ஈர்க்கப்பட்டனர். பெரும்பான்மை புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தந்தையர் தேசக் கட்சி (Fatherland Party) என்ற தீவிர வலதுசாரி தேசிய வெறிக் கட்சியின் பக்கம் சென்றனர். பெரும்பான்மையான ராணுவ வீரர்களுக்குப் போர்த் தொழிலைத் தவிர வேறேதும் தெரியாது. நீண்ட போருக்குப் பின் அவர்களுக்கு அமைதி கால வாழ்க்கையோடு இணங்கிப் போக இயலவில்லை. பழைய ராணுவத் தலைமையும், முடியாட்சி ஆதரவாளர்களும், “ஜெர்மன் ராணுவம் போரில் தோற்கடிக்கப்படவில்லை. சோசலிஸ்ட்டுகள், சர்வதேசியவாதிகள், முதலாளித்துவாதிகள், யூதர்கள் ஆகியோரே முதுகில் குத்தினார்கள்” என்று செய்த தொடர் பிரசாரம் இவர்களிடம் எடுபட்டது.
அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இவர்கள் எல்லாம் என்ன தியாகம் செய்தார்கள்? போர் புரிய வேண்டும், அல்லது போர் புரியக் கூடாது என ஆணையிட இவர்கள் யார்? என்ற அவர்களது கேள்வியும் வெறுப்பும் ஊதிப் பெரிதாக்கப்பட்டன; பரவலாக்கப்பட்டன. இந்தியாவில் பஜ்ரங்தள், ராமசேனா, ஹனுமன் சேனா என்ற பெயர்களில் இருப்பது போன்ற குழுக்கள் உருவாக்கப்பட்டன. இங்கு வாளும், வேளும், சூலும், கடப்பாரையும்தான் ஆயுதங்கள். ஜெர்மனியில் உருவான வன்முறைக் குழுக்களுக்கு - சுதந்திரப் படைகள் – ஃபிரீ கார்ப்ஸ் (Freie corps) எனப் பெயர். இந்த குழுக்கள் முறையான ராணுவப் பயிற்சி பெற்ற வீரர்களை பெரும் பகுதியாகக் கொண்டவை. போர்முனையில் அனுபவம் பெற்ற ராணுவ அதிகாரிகளால் வழிநடத்தப்படுபவை துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள், எரிகுண்டுகள் இத்தியாதி இத்தியாதி நவீன கனரக ஆயுதங்கள் ஏந்தியவை. ‘சுதந்திரப் படைகள்’ சரி… யாரிடமிருந்து சுதந்திரம்? எதிலிருந்து சுதந்திரம்? முன்னமே சொல்வதுபோல் முதலாளித்துவம், சோசலிஸம் இரண்டிலும் இருந்தும்! யூதர்கள், சோசலிஸ்டுகள் குடியரசுவாதிகள், சர்வதேசவாதிகள் எல்லோரிடமிருந்தும்… மொத்தத்தில் ‘ராணுவ ஆட்சி வரவேண்டும் சார்’ என்பதன் மிகவும் முரட்டு நடைமுறை வடிவம்.
எஸ்.பி.டி. கட்சியின் சார்பில் அதிபரான ஃபிரெடரிக் எபர்ட், பாதுகாப்பு அமைச்சர் குஸ்தவ் நாஸ்க் ஆகியோர் ராணுவத் தலைவர்களான லுடண்டார்ஃப், குரோய்னர் ஆகியோரோடு உடன்பாடு கண்டனர். அதன்படி எபர்ட் அரசு போல்ஸ்விக்குகளை எதிர்த்து நிற்கவேண்டும், பதிலுக்கு ராணுவம் எபர்ட் தலைமையிலான அரசை ஆதரிக்கும் என்பதுதான் புரிதல். ஆம் ரோசா, லீப்னெக்ட் போன்றோர் அடங்கிய ஸ்பார்ட்டகஸ் லீக் பிரிவைத்தான் போல்ஸ்ஷ்க்குகள் எனக் குற்றஞ்சாட்டுவர்.
எபர்ட் காலம் தாழ்த்தாமல் தேர்தலை அறிவித்தார். ஜனவரி 19, 1919இல் முதன்முறையாக பெண்களும் பங்குபெற்ற ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படையில் தேர்தல் நடந்தது. தேர்தலில் ஃபிரடெரிக் எபர்ட், பிலிப் ஷேய்டமான் தலைமையிலான, மார்க்சிய சோசலிஸம் பேசிய எஸ்.பி.டி. மொத்தமுள்ள 423 இடங்களில் 165 இடங்களை வென்றது. கிறித்துவ ஜனநாயகம் பேசிய சிவிபி (CVP): 91, தாராளவாத ஜனநாயகம் பேசிய டிடிபி (DDP): 75; பழைமைவாத பாராளுமன்ற முடியாட்சி அரசு கோரிய டி.என்.வி.பி:44; போர் எதிர்ப்போடு தீவிர மார்க்சிய சோசலிஸம் பேசிய - எஸ்.பி.டி.யில் இருந்து பிரிந்த யு.எஸ்.பி.டி. (ஹயூகோ ஹாஸ் தலைமை): 22; மற்றுமொரு தாராளவாத முதலாளித்துவ ஜனநாயகக் கட்சியான டி.வி.பி: 15 என ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைந்தது. தேர்தலுக்கு மூன்று வாரங்கள் முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி - கே.பி.டி (KPD) தேர்தலில் பங்கு பெறவில்லை.
பெரும்பான்மைக்கு 212 இடங்கள் வேண்டும் என்ற நிலை. நாடாளுமன்றத்தின் ஆகப் பெரிய கட்சியான எஸ்.பி.டி.க்கு பெரும்பான்மைக்கு இன்னும் 47 இடங்கள் வேண்டும் எனும் நிலை. எஸ்.பி.டி. கட்சி சி.வி.பி. மற்றும் டிடிபி ஆசிய மையநிலை முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து அரசு அமைத்தது. இந்த நாடாளுமன்றம் ஜெர்மனியின் வெய்மர் நகரில் இயங்கியது. இது ‘வெய்மர் அரசியல் அமைப்புச் சட்டம்’ உருவாக்கி, அதனை அங்கீகரித்து ஏற்றது. எனவே இதன் அடிப்படையில் அமைந்த ஜெர்மனி 'வெய்மர் குடியரசு’ என அழைக்கப்பட்டது. இந்த அரசியல் யாப்பின் அடிப்படையிலான தேர்தல்
6 ஜூன் 1920 அன்று நடந்தது.
ஃபிரெடரிக் எபர்ட் தலைமையிலான இடைக்கால அரசை எதிர்த்து ரோசா லக்ஸம்பர்க், கார்ல் லீப்னெக்ட் தலைமையிலான இடதுசாரி தீவிரவாத ஸ்பார்ட்டகஸ் குழுவினர் புரட்சியில் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து அரசின் படைகளும் வலதுசாரி ‘சுதந்திரப் படைகளும்’ போரிட்டனர். வலதுசாரி ‘சுதந்திரப் படையினர்’ ரோசா லக்ஸ்ம்பர்க், கார்ல் லீப்னெக்ட் ஆகியோரைப் படுகொலை செய்து, புரட்சியாளர்களுக்கு எதிராக கடும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். ஃபிரெடரிக் எபர்ட், பிலிப் ஷெய்டமான், குஸ்தவ் நோஸ்க் தலைமை இதனை தூண்டிவிட்டது, ஒருங்கிணைத்தது, கண்டும் காணாமல் இருந்தது. ஐயோ பாவம், அவர்களால் ஏதும் செய்ய இயலவில்லை என பல்வேறு வகை விளக்கங்கள், வியாக்யானங்கள், சால்ஜாப்புகள், குற்றச்சாட்டுகள் இன்றுவரை முடிவற்று விவாதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யாவில் கெரன்ஸ்கி அரசை எதிர்த்து லெனின் தலைமையில் நடந்த புரட்சி போன்ற ஒன்றை நடத்துவதற்குத் தேவையான தலைமை, அமைப்பு ஸ்பார்ட்டகஸிடம் இல்லை. அவர்கள் செய்தது இடதுசாரி சாகசவாதம் என்பது அவர்கள் மீது அனுதாபம் கொள்வோரும் கூறுவதாக உள்ளது.
ஜனவரி 1919இல் ஸ்பார்ட்டகஸ் எழுச்சியை ஒடுக்கியது போல, ஏப்ரல் 1919இல் மியூனிச் நகரைத் தலைநகராகக் கொண்ட பவேரியா மாநிலத்தில் அமைக்கப்பட்ட பவேரியன் சோவியத் குடியரசும் வன்முறையில் ஒடுக்கப்பட்டு கலைக்கப்பட்டது. அதன்பின் 1920இல் ஜெர்மனியின் தொழில் மாநிலமான ரூர் (Ruhr) பகுதியில் நடந்த எழுச்சியும் அடக்கி ஒடுக்கப்பட்டது.
வெய்மர் குடியரசும் தொடர்ந்த கலகங்களும்
ஜூன் 1920இல் புதிய வெய்மர் யாப்பு அடிப்படையிலான தேர்தலில், எஸ்.பி.டி. கட்சி 103 இடங்களை மட்டுமே பெற்றது. இடதுசாரி, சோசலிஸம் பேசிய சுதந்திர சமூக ஜனநாயக் கட்சி – யு.எஸ்.பி.டி. 83 இடங்களைப் பெற்றது. தாராளவாத முதலாளித்துவக் கட்சிகள் பின்னுக்குப் போயின. தீவிர வலதுசாரிக் கட்சிகளான ஜெர்மன் தேசிய மக்கள் கட்சி: 71; ஜெர்மன் மக்கள் கட்சி: 65 பெற்று இடது வலது இருமுனை அரசியல் தொடங்கியது. தாரளவாத ஜனநாயக் கட்சிகளான மையக் கட்சி: 64; ஜனநாயகக் கட்சி: 39; பவேரியன் மக்கள் கட்சி: 20 இடங்களைப் பெற்றன. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி-கே.பி.டி. 4 இடங்களை மட்டுமே பெற்றது. ஏனைய சிறிய கட்சிகள் 10 இடங்களைப் பெற்றன. எஸ்.பி்.டி., யு.எஸ்.பி.டி., கே.பி.டி. ஆகிய மூன்றும் தாங்கள்தான் – தாங்கள் மட்டும்தான் சரியான மார்க்சிய சோசலிஸ்ட் என உரிமை கோரின. இவர்கள் மூவரையும் வலதுசாரிகள் எதிரிகளாகத்தான் கருதினர்.
ஃபிரெடரிக் எபர்ட் ‘கட்சிகளைத் தாண்டிய’ அதிபராகத் தொடர்ந்தார். சான்சலர் எனும் பிரதமர் போன்ற பதவிக்குப் பலரும் வந்தார்கள்; போனார்கள். மார்ச் 1920 இல் வலதுசாரி தேசிய வெறி அமைப்புகளும் சுதந்திரப் படை (Freicorps) வன்முறை அமைப்புகளும் இணைந்து எபர்ட் தலைமையிலான ‘சோசலிஸ’ அரசைத் தூக்கி எறிய ஆயுதந் தாங்கிய கலகத்தை நடத்தினர். இது அதற்குத் தலைமை தாங்கிய ராணுவ ஜெனரல் வுல்ஃப்காங் காப் பெயிரில் காப் கலகம் (Kapp putch) என அழைக்கப்படுகின்றது. அரசாங்கம், தொழிற்சங்கங்கள் இடதுசாரி சார்பான ராணுவப் பகுதிகள் அனைவரும் இணைந்து இதனை அடக்கி ஒடுக்கினர்.
ஹிட்லரின் வருகை
இந்த வரிசையில் வந்த கடைசிக் கலகம்தான் மியூனிச் பீர் ஹால் கலகம் (Munich Beer Hall B’ Putch) என அழைக்கப்படுவது. முதலாம் உலகப் போரின்போது சாதாரணப் படைவீரராக (கார்ப்பொரல்) ஆக இருந்த அடால்ஃப் ஹிட்லர், ஜெர்மன் தொழிலாளர் கட்சி - டி.ஏ.பி. என்ற சிறிய கட்சியின் தலைவராக ஆனார். அது எப்படி என்பதே பெரிய கதை. அவரும் ஜெர்மனியை முதலாம் உலகப் போரில் இழுத்துவிட்ட ஜெனரல் லூடன்டார்ஃப் ஆகியோர் இணைந்து நடத்திய கலகம். ஃபிரெடரிக் எபர்ட்டின் அரசும் கலகங்களை ஒடுக்குவதில் தயவு தாட்சன்யமில்லாது தொடர்ந்து செயல்பட்ட குஸ்தவ் நாஸ்க், பவேரியாவின் ‘அதிபர்’ குஸ்தவ் ஃபர் போன்றாரும் இணைந்து கலகத்தை அடக்கினர்.
தோல்வியுற்ற கலகத்தை திறமையின்றி நடத்தி, பேரணியில் கையை உடைத்துக் கொண்டவராக, டி.ஏ.பி. எனும் சிறிய கட்சித் தலைவராக ஹிட்லர் சிறைக்குச் சென்றார். அரசு எந்திரம் இன்று இந்தியாவில் இருப்பது போல ஜெர்மனியில் வலதுசாரி தேசிய வெறியில் ஊறிப்போயிருந்தது; ஜெர்மன் நீதிமன்றம் இந்தியாவின் உச்சிக் குடுமி நீதிமன்றம் போல ஆகியிருந்தது. எனவே, ஹிட்லர் 5 ஆண்டு சிறைத் தண்டனையை 13 மாதங்களில் முடித்துக் கொண்டு வெளியில் வந்தார். சிறையில் இருந்த போது தனது வாழ்க்கை வரலாறாகவும் கட்சியின் தத்துவம், கோட்பாடு, பிரகடனம் என்பதாகவும் அமைந்த ‘எனது போராட்டங்கள்’ (மெயின் காஃப் – Mein Kampf) நூலோடும், புகழோடும் வெளியே வந்தார். அவரோடு பின்னர் அவரது வெறியாட்டங்களுக்கு துணையிருந்த அவரது அடிப் பெட்டிகளான எனஸ்ட் ரோம், ருடார்ஃப் ஹெஸ், ஹெர்மன் கோயரிங், ஹென்றிச் ஹிம்லர் ஆகியோரும் வெளிவந்தனர். பின்னர் நடந்தது மானுடகுல வரலாற்றின் ஆக மோசமான அத்தியாயம். அந்த அத்தியாயம் இந்த நூலின் பகுதி அல்ல.
நூல் கற்றுத் தரும் பாடம்
முதலாம் உலகப் போர் நாட்களில் தொடங்கி 1923 இல் மியூனிச் நகரில் பீர் ஹாலில் ஹிட்லர் முயற்சி செய்த அரண்மனைக் கலகம் (Putch) தோல்வியுற்று ஹிட்லர் சிறைக்குச் சென்றது வரையிலுமான குழப்பமான அரசியல் வரலாற்றுக் காலம், ஜெர்மனியின் வரலாற்றில் முக்கியமான காலகட்டம். ஜெர்மனியின் முதலாளித்துவமும் வலதுசாரி தீவிரவாதிகளும் நாஜியிசத்தையும் ஹிட்லரையும் அடைகாத்து குஞ்சு பொரிக்கச் செய்த காலகட்டம். இன்றைய உலகிற்கு (குறிப்பாக இந்தியாவிற்கு) ஏராளமான பாடங்களைக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தின் சிக்கலான, வரலாற்று நிகழ்வுப் போக்கையும் அதன் பின்னே உள்ள அரசியல் சித்தாந்த விசைகளையும் நைஜில் ஜோன்ஸ் விளக்குகின்றார்.
இந்தியாவில் ஃபாசிஸம், நாஜியிஸம் வந்து விட்டதா இல்லையா? என்ற விவாதங்கள் ஒரு புறம் இருக்கின்றன. ஆனால், ஹிட்லரும் நாஜிகளும் உருவாவதற்கு முந்தைய ஜெர்மனியின் வரலாற்றை இந்தியாவின் சமீபகால வரலாற்றோடு ஒப்பிட்டு நோக்கினால், ஹிட்லரும் நாஜிகளும் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பதை ஏற்காதவர்களும் அந்த நாள் தொலைவில் இல்லை என்பதைத் தெளிவாய் உணரலாம். "எந்தவொரு நாட்டின் ஃபாசிஸ எழுச்சிக்குப் பின்னாலும் அந்த நாட்டின் தோல்வியுற்ற [இடதுசாரி] புரட்சி இருக்கும்" என்றார் வால்டர் பெஞ்சமின். தோல்வியுற்ற ஜெர்மன் புரட்சியிலிருந்து, ஜெர்மன் இடதுசாரிகளின் தவறுகளிலிருந்து இந்திய இடதுசாரிகள் பாடம் கற்றுள்ளார்களா, இல்லையென்றால் கற்றுக் கொள்வார்களா? என்ன பாடம் கற்க வேண்டும்? தெரிந்துகொள்ள வேண்டுமா? படித்துப் பாருங்களேன்.
நாஜிகளின் பிறப்பு - நைஜில் ஜோன்ஸ்
The Birth of the Nazis - How the Freikorps Blazed A Trail for Hitler
- ப.கு.ராஜன்