ஒரு தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உயிரோட்டத்துடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. மாணவியர்க்கு அவசியம் என்று கருதப்படுகின்ற ஆயிரக்கணக்கான நூல்கள் அந்நூலகத்தில் உள்ளன. குறிப்பிட்ட நூல் ஒன்றைக் கேட்டு ஒரு மாணவி பள்ளி நூலகத்திற்கு வருகிறாள். மாணவிக்குத் தேவைப்படும் அந்தநூல் நூலகத்தில் இல்லை. அது ஓர் அரிய ஆங்கில நூல். உடனே ஒரு படிவம் அம்மாணவிக்கு நூலகரால் வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவம் அயல்நாட்டில் வணிகராக உள்ள அந்தப் பள்ளியின் தாளாளருக்கு உடனே மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படுகிறது. அவர் அந்நூல் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் என்ன விலையாக இருந்தாலும் சிரத்தை எடுத்து வரவழைத்துத் தருகிறார். இவ்வாறு பொதுவாக நல்ல நூல்களைத் தேடிவரும் மாணவர்களுக்கும் - குறிப்பாக, இந்த நூல் வேண்டும் என்று கேட்டுவரும் மாணவர்களுக்கும் இல்லை என்று சொல்லாமல் நூல்களை இன்முகத்துடன், ஈடுபாட்டுடன் வழங்கும் ஏற்பாடு அப்பள்ளியில் உள்ளது.

கல்வி நிலையங்களில் உள்ள நூலகம் அப்பள்ளியின் இதயத்தைப் போன்றது. பள்ளி, கல்லூரி நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்துமாறு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும், நூலகர்களும் அறிவுறுத்துதல் அவசியமாகும். தற்போது மாணவர்களிடையே பொது நூல்களை வாசிக்கும் பழக்கம் குறைந்துகொண்டே வருகிறது என்பதைத் தெரிந்து, அந்த நிலையை மாற்ற என்னென்ன வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டால் மாணவர்களை வாசிப்புப் பழக்கத்திற்கு வசப்பட வைக்கலாம் என்று அரசும், கல்வி நிறுவன நிர்வாகமும், ஆசிரியர்களும், பெற்றோரும் ஒருங்கிணைந்து யோசித்துச் செயல்படுவதன் மூலம் ஒரு விடிவு காணலாம்.

பொதுவாக, நிறைய அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் அவற்றுக்குரிய இலக்கணத்துடன் தனியாகச் செயல்படுவதில்லை. பள்ளிகளுக்கு நூல்கள் அரசால் வழங்கப்படுகின்றன. நூல்கள் தலைமையாசிரியர் அறையிலோ அல்லது அதற்கென்று பொறுப்பளிக்கப்பட்ட பிற பாட ஆசிரியரின் கட்டுப்பாட்டிலோ இருக்கும். பொறுப்பளிக்கப்பட்ட ஆசிரியர் அவரது பாடத்தையும் கவனித்துக் கொண்டு பொறுப்பு நூலகராகவும் செயல்பட வேண்டும். தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்று தனக்கான நூல்களை மாணவர்கள் தேடியெடுத்துப் படிப்பது நடைமுறையில் சாத்தியம் இல்லை. பாட ஆசிரியர்களை அவர்களின் பாடநேரம் போக மீதமுள்ள நேரத்தில் நூலகப் பணிகளுக்கு நேரம் ஒதுக்குவது நடைமுறையில் சிரமம். அப்படியே ஒதுக்கினாலும், ஒரு நூலகருக்குரிய அனைத்துப் பணிகளையும் முழுமையாகச் செய்ய, அந்த ஆசிரியரால் இயலாது.

முறையான தகுதியோடு கூடிய நூலகர்கள் நியமிக்கப்பட வேண்டியதும் நூலக வகுப்புக்கென்று ஒதுக்கப்பட்ட நேரத்தை அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டியதும் மிக முக்கியமானவையாகும். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் - குறிப்பாக, சிபிஎஸ்சி பள்ளிகளில் இவ்வாறான நூலகமும் நூலகர்களும் உண்டு.

தமிழ்நாடு மாநிலத்தில் மொத்தம் 173 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. அவற்றுள் 127 கல்லூரிகளில் நூலகப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பிற பாடப் பேராசிரியர்கள் பொறுப்பு நூலகர்கள் போல செயல்படுகின்றனர். உதவிபெறும் கல்லூரிகளில் தனியார் நிர்வாகம் என்பதால் பெரும்பாலான நூலகப் பணியிடங்களுக்குத் தேவையான நிதியை அரசிடம் வற்புறுத்திப் பெற்றோ அல்லது தங்களது சொந்த நிதியின் மூலமோ நூலகச் சேவை தொடருமாறு செய்து விடுகின்றனர். அவற்றிலும்கூட பல கல்லூரிகளில் நூலகங்கள் இல்லை. பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரிகளுக்கு அளித்துவந்த நிதியை 2014-15க்குப் பிறகு அப்படியே நிறுத்திவிட்டது. அதனால் வருடந்தோறும் அதிகத் தொகைக்கு நூல்களைக் கல்லூரி நூலகங்களுக்குக் கொள்முதல் செய்த கல்லூரிகளால் இப்போது அவ்வாறு செய்ய இயலவில்லை. மாணவர்கள் நூலகக் கட்டணமாகச் செலுத்துகிற மிகவும் சொற்பத்தொகையைக் கொண்டு மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நூல்களையே வாங்க முடிகிறது.

 தமிழ்நாடு முழுவதிலுமுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் இதே பிரச்சினை நிலவுகிறது. முழுத் தகுதியுள்ள நூலகர்கள் செய்ய வேண்டிய பணிகளை சில பாட ஆசிரியர்கள் செய்ய வேண்டிய நிலைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

மதிப்பெண்கள், தேர்ச்சிவிகிதம் உள்ளிட்ட காரணங்களினால் நூலகப் பயன்பாடு உரிய முக்கியத்துவம் பெறாத சூழலும் உள்ளது. நூலக வகுப்பு இருக்கிற கல்வி நிலையங்களிலும் பிற ஆசிரியர்கள் அந்நேரத்தைப் பயன்படுத்தும் போக்கு நிலவுகிறது.

ஏற்கெனவே பொதுவாக வாசிப்பு பல புறக்காரணங்களால் குறைந்து வரும் சூழலில் நூலகம் இல்லை, நூலகர் இல்லை, அப்படியே இருந்தாலும் போதிய முக்கியத்துவம் இல்லை என்பன போன்ற நிலை தனிக்கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்களில் விளையாட்டுத் துறையும் இவ்வாறே இதுவரை இருந்து வந்தது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் எடுத்துவரும் தீவிர நடவடிக்கைககளால் கல்வி நிலையங்களில் விளையாட்டுத் துறை சீர்பெற்று வளர்வதை நன்கு உணர முடிகிறது. அதுபோன்று போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்கள் உயிர்ப்புடன் விளங்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ஒருபுறமிருக்க, பெற்றோர் - ஆசிரியர் சங்கம், அந்தந்த ஊரைச் சேர்ந்த பொதுநலம் விரும்பும் தொழில் முனைவோர், தன்னார்வ அமைப்புகள் என எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைந்து பள்ளி நூலகங்களின் மேம்பாட்டுக்கு உதவுவது இன்றியமையாதது.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.