தமிழ்நாடு அரசு ஒழுங்கமைத்து நடத்தி வரும் சர்வதேச புத்தகக் கண்காட்சி, ‘தமிழிலிருந்து உலகிற்கு - உலகிலிருந்து தமிழிற்கு’ என்ற முழக்கத்தின் கீழ் தமிழ் நூல்களை உலக மொழிகளிலும் ஏனைய இந்திய மொழிகளுக்கும் கொண்டு செல்வது, உலக மொழிகளில் வந்துள்ள சிறப்பான நூல்களை தமிழிற்கு கொண்டு வருவது என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற நிகழ்விலும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி நிகழ்விலும் என்.சி.பி.ஹெச் நிறுவனம் கலந்துகொண்டது. அது போல 2025 ஜனவரி 16-18 நாட்களில் சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக் கண்காட்சியிலும் என்.சி.பி.ஹெச் கலந்துகொண்டது. நிறுவனத்தின் சார்பாக ப.கு.ராஜன் முழுநேரமும் கலந்து கொண்டார். தோழர் அருண்நாத் அந்த வளாகத்தில் இருந்த என்.சி.பி.ஹெச் – சிறார் இலக்கிய அரங்கை (மொத்தம் அனுமதிக்கப்பட்ட மூன்று அரங்குகளில் என்.சி.பி.ஹெச் அரங்கும் ஒன்று) கவனித்துக் கொண்டதோடு பல்வேறு பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டார். என்.சி.பி.ஹெச் நிறுவனத் தலைவர் தோழர்.ஸ்டாலின் குணசேகரன், பொது மேலாளர் தோழர்.சண்முகநாதன் ஆகியோரும் நிறைவு விழாக்களில் கலந்து கொண்டனர். தோழர். ஸ்டாலின் குணசேகரன் விழாவின் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு, என்.சி.பி.ஹெச் சார்பாக ஆறு புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தமிழக அரசு இரண்டு நூல்களுக்கு மொழிமாற்ற உதவித் தொகை வழங்கியது. அதன்படி சி.எஸ்.சுப்பிரமணியம், கே.முருகேசன் ஆகியோர் எழுதிய ‘சிங்காரவேலர் – வாழ்வும் பணியும்’ நூலும் சு.தமிழ்ச் செல்வி எழுதிய ‘அளம்’ எனும் நாவலும் மலையாள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வியின் நாவலான ‘அளம்’ மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ’லவணம்’ என்ற பெயரில் வெளிவந்தது. கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்ற முதல்வர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட முப்பது நூல்களில் அளம் – லவணம் ஒன்று என்பது சிறப்பு. ’சிங்காரவேலர் – வாழ்வும் பணியும் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளிவரும் எனத் தெரிகின்றது.
1925 ஆம் ஆண்டில் கான்பூர் நகரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் பெருந்தலைவரான (Chairman) சிங்காரவேலர் குறித்த நூல் கட்சியின் 100 ஆவது ஆண்டில்தான் முதன்முறையாக தமிழ், ஆங்கிலம் அல்லாத வேறு மொழியில் வருகிறது என்பது துரதிர்ஷ்டமானது என்றாலும் இப்போதாவது வருகிறதே என நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டியுள்ளது.
அதுபோல ‘அளம்-லவணம்’ நாவல் குறித்து மலையாளப் பதிப்பகமான சாய்கதம் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் சங்கீதா மாத்யூ பகிர்ந்துகொண்ட செய்தியும் முக்கியமானது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்துதான் ‘உப்பு’ மலையாள தேசத்திற்குச் சென்றுள்ளது. சங்க இலக்கியங்களில் உமணர்கள் கழுதைப் பொதியோடு (மேற்குத் தொடர்ச்சி) மலைகளைக் கடந்து சென்றதற்கு குறிப்புகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. கேரளத்தின் நிலவியலும் வானியலும் உப்பு உற்பத்திக்கு ஏற்றது அல்ல. மூன்று வேளை உணவிலும் உப்பு இடம்பெற்றிருந்தாலும் மலையாள மக்கள், உப்பு எங்கிருந்து வருகின்றது. அதில் ஈடுபடும் மக்களின் ‘பாடு’ – கடின உழைப்பு (கடிணத்வானம்) என்பதை அறியார். உப்பு வயல் குறித்த இலக்கியம் மலையாளத்திற்குப் புதிது. அண்டை மாநிலமும் மொழி, கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட சகல அம்சங்களிலும் நெருக்கமான மக்களுக்கே தமிழகத்தின் முக்கியமான வாழ்வியல் இலக்கிய மொழிபெயர்ப்பு மூலம்தான் அறிமுகம் ஆகின்றது. இது மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் முக்கியத்துவத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் முறையான காப்புரிமைக் கையேடு, நூல்கள் பற்றிய விவரக் குறிப்புகள் ஆகியவற்றோடு கலந்துகொண்டோம். பத்து புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு மராத்தி, குஜராத்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யவும், பொன்னீலன் அவர்களின் ’கரிசல்’ நாவல் மலையாளம், மராத்தி, குஜராத்தி, அரபி, துருக்கிய மொழிகளிலும் எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதிய ‘அளம்’ நாவல் மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. வைக்கம் முகம்மது பஷீர், ஸ்ரீநாராயண குரு ஆகியோர் பற்றிய நூல்கள் மலையாளத்திலிருந்தும் துருக்கிய இடதுசாரி எழுத்தாளரான ஒயா பைதர் எழுதிய ‘லாஸ்ட் வேர்ல்டு’ எனும் நூல் துருக்கிய மொழியிலிருந்தும் தமிழிற்கு மொழிபெயர்கப்படவும் புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தழ்நாடு அரசின் நிதி நல்கை நான்கு நூல்களுக்கு கிடைத்தது. ஆனால் பணிகள் இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளன.
2023 ஆம் ஆண்டில் 24 நாடுகள் பங்கு பெற்றன. சுமார் 300 புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 2024 ஆம் ஆண்டு சுமார் 40 நாடுகள் பங்கு பெற்றன; சுமார் 700 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஆண்டு 60 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபெற்றன. சுமார் 1200 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. புரிந்துணர் ஒப்பந்தங்கள் எல்லாம் நிதி நல்கையாக மாறிவிடாது; நிதி நல்கை வழங்கப்படுவதாலேயே நூல் மொழிமாற்றம் செய்யப்பட்டு விடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இடைவிடாத பெருமுயற்சியில்தான் சிறிய பயன்களும் கிட்டும் எனத் தெரிகின்றது. அந்தப் புரிதலோடு பணியைத் தொடர வேண்டியுள்ளது.
இத்தோடு இந்த ஆண்டு முன்பு மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்ட இப்போது முக்கண்ட நாடுகள் (Tricontinental) என அழைக்கப்படும் லத்தின் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் அதிகமாக பங்குபெற்றது சிறப்பு. இந்த நாடுகளிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து வந்துள்ள பதிப்பகங்கள் இடதுசாரி, மதச்சார்பற்ற, ஜனநாயகக் கருத்துகள் கொண்ட நூல்களின் கொண்டு கொடுத்தலுக்குத் தயாராக இருப்பது நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்.
செர்பிய நாட்டின் பிரதிநிதி ’டிட்டோவின் மொழிபெயர்ப்பாளர்’ என்ற நூலை தமிழில் கொண்டுவர முன்மொழிந்துள்ளார். நூலாசிரியரான இவான் இவாஞ்ஜி செர்பிய மொழியின் முதன்மையான எழுத்தாளராகக் கருதப்படுபவர். அவர் ஹிட்லரின் ஆஸ்விட்ஸ், புச்சன்வால்ட் வதை முகாம்களில் இருந்து உயிர் பிழைத்தவர். தன் தாய் தந்தையரை இந்த வதைமுகாம்களில் இழந்தவர். 95 வயதான இவர் சமீபத்தில்தான் மறைந்தார். அவர் பல ஆண்டுகள் மார்ஷல் டிட்டோவின் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர். அவர் பல நாவல்களை எழுதியிருந்தாலும் ’டிட்டோவின் மொழிபெயர்ப்பாளர்’ என்ற பெயரில் டிட்டோ காலம் குறித்தும் தனது அனுபவங்கள் குறித்தும் எழுதியுள்ள நூல் பொருத்தமாக இருக்கும் எனப் பேச்சுவார்த்தையில் கருதினோம். அதற்கான மொழிபெயர்ப்பிற்கு செர்பிய அரசு நிதிநல்கையும் அளிக்கத் தயாராக உள்ளது. காப்புரிமை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. அதுபோல போர்ச்சுகீசிய நிறுவனமான லேயா, பிரேஸிலிய எழுத்தாளர், இடமார் வீய்ரா ஜூனியர் (Brazilian author Itamar Vieira Junior) எழுதி சர்வதேச அளவில் பெரும் விற்பனை கண்ட ‘வளைந்த கலப்பை’ (TORTO ARADO -Crooked Plow) நூலை ஆங்கிலம் வழி தமிழ் மொழிபெயர்ப்பிற்கு பரிந்துரைத்துள்ளது.
வியட்நாம் நாட்டின் பதிப்பகமான தைய்ஹா புக்ஸ், வியட்நாம் போராட்டத்தில் ஹோசிமின் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த ராணுவத் தலைவரான ஜெனரல் கியாப் குறித்த நூலை ஆங்கிலம், தமிழில் வெளியிட பரிந்துரைத்துள்ளது.
மலேசிய நாட்டின் செலாஙோர் மாநில நூலகங்களின் பொறுப்பாளர்கள் NCBH நூல்களை வாங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆர்வம் காட்டியுள்ளதோடு அவர்கள் மாநிலத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் NCBH பங்குபெற அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, தான்சானியா, நைஜீரியா ஆகியவை என்.சி.பி.ஹெச் நிறுவனத்தின் சிறார் நூல்களை மிகவும் விதந்தோதினர். மொழிபெயர்ப்பு உரிமைகள் ஒருபுறமிருக்க ஆங்கில நூல்களை கொள்முதல் செய்வது, அவர்களுக்குத் தேவையான ஆங்கில நூல்களை என்.சி.பி.ஹெச் சின் அச்சகத்தில் அச்சிடுவது ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டியுள்ளனர். அரசின் நோக்கத்திற்கும் மேலான சில பயன்கள் விளைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன எனத் தெரிய வந்தது. கிடைத்துள்ள தொடர்புகளையும் வாய்ப்புகளையும் முறையாக தொடர்ந்து பயன்படுத்துவது நீண்டகால நோக்கில் மிகுந்த பயனளிப்பதாக இருக்கும்.
இந்த ஆண்டில் பதினைந்திற்கும் மேற்பட்ட பதிப்பகங்கள், இலக்கிய முகமைகளுடன் என்.சி.பிஹெச் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆறு புரிந்துணர் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
நிகழ்வில் பங்கேற்ற ஏனைய மொழிப் பதிப்பகங்களில் பலவும் தங்கள் நூல்களை தமிழ்ப் பதிப்புரிமையை விற்பனை செய்யவே வந்திருந்தனர் என்பதாலும் வந்தவர்களில் பெரும்பான்மையினர் புனைவிலக்கியங்களை மட்டும் பதிப்பிப்பவர்கள் என்பதாலும் என்.சி.பி.ஹெச் நிறுவனத்தின் மரபார்ந்த பலமான அல்புனைவு (Non – Fiction) நூல்களை அதிகம் கொண்டு செல்வதற்கு வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் இவை நல்ல தொடக்கம் என்றுதான் கூறவேண்டும்.
அரசு, தமிழகத்தின் தொல் வரலாறு, இலக்கிய வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் ஆகியவை குறித்து நூல்கள் வெளியிடும் வெளிநாட்டுப் பதிப்பகங்கள், அவை குறித்து ஆய்வு நடத்தும் பல்கலைக் கழகங்கள், அவற்றின் பதிப்பகங்கள் ஆகியவற்றின் பங்கேற்பை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோள். அத்தோடு அறிவியல் தொழில்நுட்ப நூல்களை தமிழுக்குக் கொண்டு வருவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். உலகிலிருந்து தமிழுக்கு வரவேண்டியதில் அறிவியல் நூல்கள் அதிகம் இருப்பது தமிழ் நவீன மொழியாவதற்கு இன்றியமையாதது என்பதை அதிகம் வலியுறுத்த வேண்டியதில்லை.
இந்த நூல்களுக்கான காப்புரிமைத் தொகைகளும் அவற்றின் அச்சு எண்ணிக்கைகளும் அரசின் உதவியின்றிச் செய்வதை மிகக் கடினம் என ஆக்கியுள்ளன. எனவே அரசின் நிதி நல்கையில் ஒரு பகுதியை இதற்கென ஒதுக்க வேண்டும் என்பதும் நமது வேண்டுகோள். இவை ‘தமிழிலிருந்து உலகிற்கு – உலகிலிருந்து தமிழிற்கு’ எனும் அருமையான நோக்கத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் என நம்புகின்றோம்.
- ப.கு.ராஜன்