"அவன் அந்த விஷயத்தில் பெரிய ஜாம்பவான்" என்ற வழக்காறு இப்போதும் நிலவுகிறது. பழைய அகராதிகள் இதற்கு நெடுங்காலம் வாழ்ந்தவன், வயதானவன், கரடியின் அரசன் எனப் பொருள் கொள்கின்றன. ஒரு துறையில் அதிக அனுபவமும் தேர்ச்சியும் உடையவன் என க்ரியா அகராதி பொருள் கூறுகிறது. இப்போது இந்த சொல் வழக்காறு அருகி வருகிறது. முந்தைய படைப்பாளிகளும் கதாகாலட்சேபக்காரர்களும் இச்சொல்லைச் சாதாரணமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

jaambavaanஜாம்பவான் ராமாயண காவியத்தில் வருபவன் ராம ராவண போரில் ராமனின் பக்கம் நின்று போர் செய்தவன் இவன் கரடிகளின் தலைவன். ராமாயண காவியத்தில் மிகக் குறைவான இடங்களில் வருகிறான். ஆனால் பரவலாக எல்லோரும் அறிந்த பாத்திரமாக உள்ளான். இதற்கு இவனைப் பற்றி வேறு புராணங்களில் வருகின்ற கதைகளும் காரணம்.

இவன் ஜாம்பவித் (சமஸ்கிருதம்), ஜாம்ப வந்தா (அசாமி), ஜாம்பசந்தா (கன்னடம்), ஜாம்புலன் (வங்காளி), சாம்புவன் (தமிழ்) என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறான். குரங்குகளின் முதல்வன் என்னும் பொருளில் அபிஸ்ரேஷ்டா என்றும் அழைக்கப்படுகிறான்.

கம்பன் ஜாம்பவானை விரிஞ்ஞகன் மகன், (பிரம்மகுமாரன்) நாலு முகத்தான், உதவுற்றான் (நான்கு முகங்களை உடைய பிரம்ம தேவனால் பெறப்பட்டவன்), அயன் மைந்தன் (பிரம்மனின் மகன்) என குறிப்பிடுகிறான்.

ஜாம்பவான் விஷ்ணுவின் முதல் அவதாரம் பிறப்பதற்கு. முன்பு தோன்றி ஒன்பதாம் அவதாரத்தில் ராமனுக்கு உதவியவன். விஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் வாழ்ந்தவன், இப்போதும் அவன் வாழ்கிறான் என்பது தொன்மம், இவன் திரேதா யுகம் துவாபரயுகம் ஆகிய யுகங்களில் வாழ்ந்தவன். கலியுகத்திலும் வாழ்கிறான் என்பது நம்பிக்கை.

விஷ்ணுவின் வாமன அவதாரத்தின் போது உலகை 7 முறை சுற்றி வந்தவன் என்பதை ஜாம்பவானே அனுமனிடம் சொல்லுகிறான். ஜாம்பவானின் பிறப்பு பற்றி பாகவதம், சிவபுராணம், ராமாயணம் போன்றவற்றில் செய்திகள் உள்ளன. இந்தக் கதைகள் வேறுபட்ட வடிவங்களை உடையவை.

விஷ்ணு பாற்கடலில் அறிதுயில் கொண்டிருந்தபோது அவரது நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா பிறந்தார். சிறிது நேரத்தில் ஜாம்பவன் பிறந்தார், விஷ்ணுவின் கொட்டாவியில் ஜாம்பவான் (ஜரிட்டன்) பிறந்தான் என்னும் கதைகள் உண்டு.

சிவனும் பார்வதியும் ஆண் கரடியும்: பெண் கரடியுமாக உருமாறி உறவு கொண்டபோது ஜாம்பவான் பிறந்தான் என்பது ஒரு கதை. இந்தக் கதைகள் வழி ஜாம்பவான் பிரம்மாவின் அம்சமாகவும் சிவனின் அம்சமாகவும் சொல்லப்படுகிறான்.

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்த போது தேவர்களுக்கு ஜாம்பவான் உதவினான். தேவர்கள் சோர்ந்துபோய் அமர்ந்தபோது ஜாம்பவான் அசுரர்களுக்கு எதிர் பக்கம் தனியாக நின்று கடலைக் கடைந்தான் என்பது ஒரு கதை. ராம ராவண போரில் இந்திரஜித்தின் பாணத்தால் எல்லோரும் மயக்கம் அடைந்த போது ஜாம்பவான் விழித்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணனுடன் சண்டையிட்டு தோற்றவன், அனுமனுக்கு அவன் பலத்தை நினைவுபடுத்தியவன் ஜாம்பாவானுக்கு ஜாம்பவ என்ற மகள் உண்டு.

விஷ்ணு புராணத்தில் ஜாம்பவான் பற்றி விரிவான ஒரு கதை வருகிறது. சியாமந்தக மணி தொடர்பான இந்தக் கதை ஜாம்பவானின் வீரத்தை வர்ணிக்கிறது. சூரியனுக்கு சியாமந்தக மணி என்னும் சக்திமிக்க ரத்தினம் ஒன்று கிடைக்கிறது. யார் இதை அணிகிறார்களோ அவரது நாட்டில் மழை பெய்யும் பஞ்சம் வராது.

ஒரு முறை சூரியன் யாதவ குலத்தைச் சார்ந்த சத்ரஜித் என்பவனுக்கு இந்த சியாமந்தக மணியை கொடுத்தான். யாதவ குல கிருஷ்ணன் ரத்தின மணியை துவாரகை அரசன் உக்கிர சேனனுக்கு கொடுக்கும்படி சத்ரஜித்திடம் சொன்னான் அவன் மறுத்து விட்டான்.

சத்ரஜித் தன் தம்பி பிரசேனனிடம் அந்த அபூர்வ மணியைக் கொடுத்தான். அவன் ஒரு முறை காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது சிங்கத்தால் கொல்லப்பட்டான். அப்போது அங்கே தற்செயலாக வந்த ஜாம்பவான் அவனது கழுத்தில் உள்ள ரத்தினத்தை எடுத்துச் சென்றான், அதைத் தன் மகள் ஜாம்பவியிடம் கொடுத்தான்.

விலை மதிப்பற்ற அந்த ரத்தினம் தொலைந்த தற்கும் பிரசேனன் இறந்ததற்கும் கிருஷ்ணனே காரணம் என்ற குற்றச்சாட்டு வந்தது தன் பழியைத் துடைக்க சியாமந்தக மணியை தேடிச் சென்றான் கிருஷ்ணன். ஒரு குகையில் உள்ளே சென்றபோது சாம்பவியைக் கண்டான். அவள் கழுத்தில் இரத்தின மணி இருந்தது அதை எடுக்க முயன்றபோது ஜாம்பவான் வந்தான். கிருஷ்ணனுடன் ஜாம்பவான் சண்டையிட்டான். நீண்ட நேரத்திற்குப் பிறகு ஜாம்பவான் தோற்றான். தன்மகள் ஜாம்பவியைக் கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகள் அவர்கள் ருக்மணி, சத்தியபாமா, ஜாம்பவி, காளிந்தி, மித்ரவிந்தா, நாகநதி, பத்ரா, லக்குமணை ஆகியோர் ஆவர். ஜாம்பவி மூன்றாவது மனைவியாவாள். அவளை இலட்சுமியின் அவதாரமாகக் கூறுவர் இவனை ரோகிணி என்றும் கூறுவர், மகாபாரதத்தில் ஜாம்பவி வருகிறாள்.

ஜாம்பவான் மகன் ஜம்பா என்பவன் துரியோதனின் மகள் இலக்குமனணயை மணந்தான். ஜாம்பவானின் பேரன் ஒருவன் யது குலம் அழிவதற்குக் காரணம் ஆனான் என்றும் ஒரு கதை உண்டு.

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் சாம்பவி கல்யாணம் என்ற ஒரு நூலை எழுதியிருக்கிறார். ஏக ராமானந்தரின் சாம்பவி பரிநயனம் என்ற ஒரு நூலும் உண்டு. இவ்விரு நூல்களும் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்றவை இவற்றின் அடிப்படையில் தமிழில் சாம்பவி கல்யாணம் என்ற நாடகம் வந்திருக்கிறது, இது மராட்டியர் காலத்தது, ஆரம்பகாலத்தில் இது சினிமாவாகவும் வந்தது.

ஜாம்பவான் ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்திலும் சுந்தரகாண்டத்திலும் வருகிறான். சீதையைத் தேடி அங்கதன், ஜாம்பவான், அனுமன், ஆகியோர் வானரப் படைகளுடன் சென்றனர். இலங்கையில் அவள் ராவணனின் சிறையில் இருக்கிறாள் என்பதை சம்பாதி என்னும் கழுகு அரசன் வழி அறிந்தார்கள். இலங்கைக்கு யார் செல்வது என்ற கேள்வி எழுகிறது. (வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் சருக்கம் 65, 66 இல் இந்த நிகழ்ச்சி வருகிறது).

வானர வீரர்கள் தங்களின் வலிமையைச் சொல்லி இலங்கைக்குச் செல்ல தங்களால் இயலாது என்பதை நாகரீகமாகச் சொல்லி விடுகின்றனர் அப்போது ஜாம்பவான் அனுமனிடம் பேசுகிறான்.

வானர வீரரே! எல்லாம் அறிந்தவரே! சர்வ சாத்திரத்தில் வல்லவரே! நீர் பலம், தேஜஸ், புத்தி ஸத்வ குணம் ஆகியவற்றில் மேலானவர். ஒரு காலத்தில் நான் திரிவிக்கிரம அவதார= காலத்தில் இந்தப் பூமியை இருபத்தி ஒரு தடவை சுற்றி வந்தேன் இப்போது. முதியவனாகி விட்டேன். வீரியம் இழந்துவிட்டேன். நீ இறப்பு இல்லாதவன். சர்வ குண சம்பன்னன். சீதையைத் தேடிச் செல்வதற்கு உனக்குத் தகுதி உள்ளது என்று கூறுகிறான்.

கம்பன் நான்கு முகங்களையுடைய பிரம்மாவால் பெறப்பட்டவனான ஜாம்பவான் அனுமனிடம் பேசுகிறான். அனுமனே! நான் வாமன அவதாரத்தில் எட்டு திசைகளுக்கும் சென்றேன். அப்போது மேருமலையில் மோதியதால் வலிமை குன்றி கால் ஊனமுற்றேன். அதனால் இப்போது என்னால் கடலைத் தாண்ட முடியாது. இதற்கு நீயே தகுதி உடையவன் என்று சொன்னான் என்கிறார். கம்பன், இதை பத்து பாடல்களில் விவரிக்கிறான்.

யுத்தகாண்டத்தில் ஜாம்பவானின் இடம் முக்கியமானது. இவனது பெருமை இங்கே மறைமுகமாகக் கூறப்படுகிறது. ஜாம்பவான் இல்லை என்றால் ராமன் ராவணனை வென்றிருக்க முடியாது என்பது மறைமுகமான உண்மை.ramayanam 700யுத்தம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது கிஷ்கிந்தை அரசன் என்பதால் சுக்ரீவனுக்கு விபீஷணனும், ஜாம்பவானும், கரடி வீரர்கள் பலரும் பாதுகாப்பாக நிற்கிறார்கள். இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தை விட்டதும் வானர கரடி வீரர்கள் எல்லோரும் மயங்கி விழுகிறார்கள். விபீஷணனும் அனுமானும் மயங்கவில்லை அவர்கள் ஜாம்பவான் தேடிவருகிறார்கள். அப்போது அனுமன் "ஜாம்பவானைக் கண்டுபிடித்தால் எல்லோருடைய மயக்கத்தைத் தீர்த்துவிடலாம் உயிர் பிழைக்க வைத்து விடலாம் " என்று சொல்லுகிறான்.

அவர்கள் இருவரும் ஜாம்பவானைக் கண்டுபிடித்து விட்டனர். விபீஷணன் ஜாம்பவானிடம் "பூஜ்ய ரே பாணங்களால் உமக்கு ஆபத்து இல்லையே" என்று கேட்கிறான். ஜாம்பவான் பானங்கள் என் கண்களை மறைத்துவிட்டன உடலுக்கும் உயிருக்கும் சேதம் இல்லை. உமது குரலை அடையாளம் கண்டு பேசுகிறேன் விபீஷணரே அனுமான் நலமாக இருக்கிறானா என்று கேட்கிறான். உடனே அனுமான் நான் இங்கேயே தான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு ஜாம்பவானை வணங்குகிறான்.

விபீஷணனுக்கு ஜாம்பவானின் பேச்சுப் புரியவில்லை. இராம இலட்சுமணரை நலமா என்று கேட்கவில்லையே. அனுமனை மட்டும் ஏன் கேட்கிறான் என்று நினைக்கிறான். அதைக் கேட்டும் விடுகிறான் ஜாம்பவான். அனுமான் இருந்தால் மட்டுமே எல்லோரும் பிழைக்க முடியும்; பகைவருடன் போர் செய்ய முடியும். ராவணனை வென்று சீதையை மீட்க முடியும் இவை எல்லாமே அனுமனின் கையில் இருக்கிறது என்று சொல்லுகிறான்.

ஜாம்பவான் அனுமனைப் பார்த்து "நீ வீராதி வீரன். வானர வீரர்களைக் காப்பாற்ற மேருமலைக்குச் செல்லுவாய், மலையின் உச்சியில் நான்கு மூலிகைச் செடிகள் உள்ளன. அவை மிருத ஸஞ்ஜீவினி (இறந்தவரை பிழைக்க வைக்கும் மூலிகை)),விகல்யகரணி (காயங்களை ஆற்றும் மருந்து) ஸாவர்ண்ய கரணி (உடம்புக்கு பொலிவைத் தரும் மூலிகை), ஸந்த்தான கரணி (உடைந்த எலும்பை ஒட்டு மருந்து மூலிகை) ஆகிய இவற்றையெல்லாம் சேகரித்துக் கொண்டு வரவேண்டும் என்றான்.

கம்பனிடம் இந்த நிகழ்ச்சி மருத்துமலை படலத்தில் வருகிறது (யுத்தகாண்டம் பிற்பகுதி வை மு.கோ.ப171). ஜாம்பவான் அனுமனிடம் அந்த மருந்தை காண்பதற்கு வழியும் சொல்லுகிறான். அது வந்த வரலாற்றையும் சொல்லுகிறான். பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த பொருட்களில் இந்த நான்கு மருந்துகளும் உண்டு, இதை இமயமலையில் மறைத்து வைத்தனர் வாமன அவதார காலத்தில் ஜாம்பவான் உலகைக் சுற்றி வந்தபோது இந்த மருந்தைக் கண்டதான்.

 இப்படியாகச் சிறப்புகளை உடைய ஜாம்பவான் இன்று தமிழகத் தோல்பாவைக்கூத்தில் நகைச்சுவை பாத்திரமாக பிறர் எள்ளி நகையாடும் பாத்திரமாக இருக்கிறான். சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோபாலராவ் தோல்பாவைக்கூத்து நடத்தியபோது ஜாம்பவான் மரியாதைக்குரிய கதாபாத்திரமாக இருந்த அனுமன், சுக்ரீவன் அங்கதன் என எல்லோரும் அவனிடம் மரியாதையுடன் பேசினார்கள். ஆனால் கலைமாமணி பரமசிவராவ் காலத்தில் ஜாம்பவான் மரியாதையை இழந்து விட்டான்.

உச்சிக்குடுமி, உளுவத் தலையன் என்னும் இரண்டு நகைச்சுவை பாத்திரங்களும் ஜாம்பவானை "ஓய் சம்பா அரிசி கிழட்டுப் பிணமே கட்டேல போறவனே என அழைப்பார்கள். அங்கதன் விபீஷணன் போன்றவர்கள் தாத்தா என்று கூறுவார்கள். இப்போது பெரும்பாலான தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிகளில் ஜாம்பவான் கிண்டலாகவே பேசப்படுகிறான்.

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் திருப்புறைப் பூண்டியில் உள்ள மந்திரபுரீஸ்வரர் தலபுராணம் மூலவரை ஜாம்பவான் வழிபட்டு பேறு அடைந்ததாகக் கூறும் ஆந்திராவில் ஜாம்பகா என்ற ஒரு இனக்குழுவினர் இருக்கின்றனர். இவர்கள் தங்களை ஜாம்பவானின் வம்சாவளியினர் என்று கூறுகின்றனர்.

குஜராத் போர்பந்தர் பகுதியில் உள்ள ஒரு மலையில் காணப்படும் நீண்ட குகையை கிருஷ்ணனும் ஜாம்பவானும் சண்டையிட்ட இடம் என்று கூறுகின்றனர். இந்தக் குகை இப்போது தொல்லியல் துறையினரிடம் உள்ளது..

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It