காலம், சமூகத்தின் பல தளங்களில் (பண்பாடு, அரசியல், பொருளாதாரம்) புதிது - புதிதாகத் தடங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்வது போன்றே கலை இலக்கியத்திலும் அது தன் தடத்தைப் பதித்து விட்டுச் செல்கிறது.  அந்தத் தடத்தைக் கண்டுபிடித்து, அதன் வழியே பயணித்தால் காலத்தின் சில அழுத்தமானப் பதிவுகளை நாம் அவற்றில் தரிசிக்க முடியும். 

அதிலும், அதனூடே பயணிப்பவர்கள் இலக்கியத் திறனாய்வாளர்களாக இருந்தால், எண்ணற்ற பதிவுகளை அவர்களால் கண்டுபிடிக்க இயலும்! மட்டுமின்றி அந்தக் கலை இலக்கியத்தின் உருவ - உள்ளடக்கம், கலைஞனின் உலகக் கண்ணோட்டம், படைப்பின் நிறை - குறை, வகை மாதிரி பாத்திரங்களின் (சிறுகதை, நாவல் களாக இருந்தால்) வார்ப்பு முறை, வகை மாதிரி பாத்திரங் களுக்கும் -  அதன் தோன்றலான உண்மை மனிதர்களுக்கும் இடையே நிலவும் உறவு அதில் கலையுண்மையாக மாறுதலடைந் திருக்கும் வாழ்க்கை யுண்மை படைப்பாளியின் சார்பு நிலை - இப்படி எண்ணற்ற விஷயங்களை ஒரு கலை இலக்கியத் திறனாய்வாளனால் வாசகர் களுக்குக் கண்டுபிடித்துத் தர இயலும். 

பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவை சமமற்ற முறையில் பிளவுண்டு, முரண்பட்டுக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், மக்கள் சார் புள்ள கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமே உருவாகும் என்று எதிர் பார்க்க முடியாது.  பல்வேறு வகைப் பட்ட வர்க்கங்களின் நலனை இலை மறை காய்மறையாகப் பிரதிபலிக்கும் ஏராளமான படைப்புகளும் தோன்றும்.

மேற்கண்ட தடத்தின் வழியே சஞ்சரித்து, புதுப்புதுப் போக்குகளைக் கண்டுபிடித்து, அவற்றை ஆய்ந்து, அறிந்து, அலசிப் பார்த்து, வாசகர் களுக்குத் தெரியப்படுத்துவது சமூக அக்கறையுள்ள ஒரு கலை இலக்கியத் திறனாய்வாளரின் கடமையாகும்.  அதை, முனைவர் சு.செல்வகுமாரன் தன் ‘சமகால நாவல்களில் புனைவின் அரசியல்’ என்ற திறனாய்வு நூலின் வழியே, மிகவும் பொறுப்புடன் செய்து காட்டியிருக்கிறார்.  இந்த அடிப்படையில் இருபத்தோராம் நூற்றாண்டுத் தமிழ் நாவல்கள் பனிரெண்டும், பிறமொழிகளில் எழுதப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்திய நாவல்கள் மூன்றும் இவரால் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கிறது.

அநேகமாக மார்க்சியம், பெண்ணியம், தலித் தியம், பின்-நவீனத்துவம் போன்றவைகளை அடிப் படையாகக் கொண்டு எழுதப்பட்டப் படைப்பு களே ஆசிரியரால் அதிகமாக திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.  இம்மாதிரிப் படைப்புகள் தான் இருபத்தோராம் நூற்றாண்டில் கலை இலக்கிய உலகில் மிக அதிகமாகப் பேசப்பட்டவைகளாகும்.

முனைவர்.சு.செல்வகுமாரன் படைப்புகளை அறிமுகம் செய்யும் போதும் சரி, உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டி எழுதும் போதும் சரி, ஒரு தேர்ந்த சமூக விஞ்ஞானியைப் போன்றே செயல்படுகிறார்.

உதாரணத்திற்கு திரு.ராஜ்கௌதமனின் (‘சிலுவை ராஜ் சரித்திரம்’ நாவலை விமர்சிக்கும் போது முனைவர் சு.செல்வகுமாரன் சிலுவையைக் கீழ்க்கண்டவாறு அறிமுகப்படுத்துகிறார்: (புதினம் முன்வைக்கின்ற சிலுவையும், ‘அனைத்து நிலை களிலும் புறந்தள்ளப்பட்ட பறையர் சமூகத்தில் பிறந்து, அரசியல், சமூக பொருளியல் காரணங் களால் பெரும் கவலைக்கு உட்படுத்தப்பட்டான்’ என்று (பக்.1).

மேலும், சிலுவையின் மனஉணர்வை நூலாசிரியர் கீழ்க்கண்டவாறு எடுத்துக்காட்டுகிறார்: ‘திருமணத் திற்குப் பின் பல ஆண்கள் தனது மனைவி வீட்டை மையமாகக் கொண்டு செயல்படுவது அல்லது அவர்களின் நல் உணர்வுகளை மனதில் கொண்டு செயல்படுவது என்பன உலக வழக்கு.  புதினத்தில் ‘ஒருமுறை சிலுவை ஊருக்கு வந்த போது ஊருல ஒரு வீடு வாங்க தாய் வற்புறுத்துவதும், அதற்கு தனது மனைவி ஊரு அருகே வள்ளியூரில் கால் ஏக்கர் நிலம் சீப்பாய் வாங்கியாச்சு என்ற செய்தியைச் சிலுவை சொல்கிறான். 

அதைச் சற்றும் சகித்துக் கொள்ள இயலாத தாய், தந்தை மற்றும் தங்கை யிடையே தீவிர பிரச்சினை சிலுவைக்கு ஏற்படு கின்றது.  விளைவு, தன் வீட்டில் உள்ள அனை வரிடமும் முற்றிலும் உறவு அறுந்து போகிறது.’ (பக்.5) என்று நமக்கு, சாதாரணத் தலித் மக்களிட மிருந்து - அரசு அலுவலர்களும், அதிகாரி களான தலித்துகளும் தற்போது விலகிச் சென்று கொண் டிருப்பதை நமக்கு மிகச் சரியாகவே எடுத்துக் காட்டுகிறார்.

இந்த நாவலில் மட்டுமல்ல, அவர் இவ்வாறு எடுத்துக்காட்டுவது! ஆதிவாசி மக்களை மைய மாகக் கொண்டு ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’யானாலும் சரி, பாமாவின் ‘கருக்கு’, ‘வன்மம்’ ஆனாலுஞ் சரி, சிவகாமியின் ‘ஆனந்தாயி’யை எடுத்துக்கொண்டாலும் சரி, தருமனின் ‘கூகை’ நாவலானாலுஞ் சரி; தலித்திய நாவல்களைப் பற்றிய அணுகுமுறையில் எள்ளளவும் பிசகில்லாமல் செய்திருப்பதைக் காண முடிகிறது. 

அதோடு நின்று விடாமல், அவர்களை அடக்கி, ஒடுக்கி வைத் திருக்கும் ஆதிக்கச் சாதியினரின் நடவடிக்கை, மனஉணர்வு போன்றவைகளும் பல நாவல்களின் பின்னணியாக ஆங்காங்கே எடுத்துக் காட்டப் படுகிறது.  தருமனின் ‘கூகை’ நாவலைப் பற்றி விமர்சிக்கும் போது, ஆதிக்கச் சாதியினரைப் பற்றிய சில பதிவுகள், ஆசிரியரால் ஒரு கதா பாத்திரம் வாயிலாக வெளிப்படுவதை, முனைவர் தன் விமர்சனத்தின் போது, அதைச் சரியாகக் கண்டெடுத்து நமக்குக் காட்டுகிறார்.

“பள்ளக்குடி பறக்குடி சக்கிலியக்குடில அந்தச் சண்டாளங்களோட அர்ணாக்கயிறு படாத பொம் பளையே இருக்கமாட்டா.  காலம் அவுக கால மாய்ப் போச்சு, அழிச்சாட்டம் பண்றாங்க” என்ற வரிகள், ஆதிக்கச் சாதியினர் தலித் பெண்களின் மீது நடத்திய பாலியல் வன்கொடுமையினையும் எடுத்துக் காட்டுகிறது.  பாலியல் வன்முறை மட்டு மின்றி எல்லா நிலையிலும் தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் சுட்டப்படுகின்றது.

‘பாமாவின் வன்மம் தலித் முரண்களின் உரை யாடல்’ என்ற திறனாய்வுக் கட்டுரையில், தலித் மக்களின் வாழ்வு, ஆதிக்கச் சாதியினரின் மனங் களில் பதிந்துள்ள சாதி அழுக்கு, தலித் மக்களின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள இயலாத அவர்களின் ‘இடுங்கிய மனது’ - போன்றவைகளை எடுத்துக்காட்டிய முனைவர் கோட்பாடு சார்ந்த ஒரு தெளிவான வரையறையை ஏற்படுத்த இயலாத தலித்தியக் கருத்தியலாளர்களின் குறை பாட்டினையும் சுட்டத் தவறவில்லை.

சூர்யகாந்தனின் ‘விதைச் சோளம்’ நாவலை விமர்சிக்கும் வேளையில் தலித் மக்களின் சமூக அந்தஸ்து உணவுப் பழக்கவழக்கங்கள், சமூக - அரசியல் - பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மாதாரி (பறையர்) சாதி மக்களின் வாழ்வியல் துயரங்களைப் பிரதிபலிப்பதையும், உயர்சாதி மக்களின் போலிச் செயல்பாடுகளைக் கேள்விக் குள்ளாக்குவதையும் முனைவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார். 

மட்டுமல்ல! தலித் மக்கள் சாதி எல்லையைக் கடந்து, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் பண்ணுவதையும், அதனைக் கண்டு ஆதிக்கச் சாதியினர் சாதி வெறியால் கிளர்ந் தெழுவதையும் ஏன், தீண்டத்தகாதவர்களைக் கொன் றொழிக்கவும் கூட தயங்குவதில்லை என்பதையும் முனைவர் செல்வகுமாரன் தன் திறனாய்வு வழியாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.

இதுபோன்றுதான் அவர், பொன்னீலனின் ‘மறுபக்கம்’ நாவலைப் பற்றிப் பேசும் பொழுதும்! வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, வாக்கியங் களுக்கு வாக்கியம் பயணித்து, மறுபக்கம் நாவலை நம் முன்னால் விரித்துப் போட்டு மண்டைக்காடு கலவரம், கலவரத்தின் போது மதங்கள் ஆற்றிய பங்கு, மதஉணர்வுள்ள மனிதர்களின் செயல்

பாடு, சில பிரத்தியேகச் சூழ்நிலையில் மதவெறி எவ்வாறு கொலை வெறியாக வடிவம் எடுக்கிறது என்று, நாவலில் வரும் நிகழ்வுகளால் அகமும் புறமுமாகத் திறனாய்வாளரால் எடுத்துக்காட்டப் படுகிறது.  நாவலின் ஒவ்வொரு நிகழ்வும் அதன் காரணகாரியங்களோடு முனைவரால் மக்கள் சார்புடன் எடுத்துக்காட்டப்படுவது இங்கே குறிப் பிடப்பட வேண்டியதாகும்.

தமிழில் வெளிவந்துள்ள மூன்று புலம்பெயர்வு நாவல்கள் முனைவரால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு உள்ளது.  காஞ்சனா தாமோதரனின் ‘இக்கரை’ நாவலின் வழியே புலம்பெயர்ந்த இந்திய மக்களின் வாழ்வு எடுத்துக்காட்டப்படுகிறது.  ஏராளமான இந்தியர்கள் இன்று வெளிநாடுகளில், வேலையின் நிமித்தம் வசித்து வருவது இங்கே குறிப்பிடத் தக்கதாகும். ஷோபாசக்தி இன்று தமிழ் இலக்கியப் பரப்பில் பிரபலமாகப் பேசப்பட்டு வரும் படைப்பாளிகளில் ஒருவராவார். 

அவரது ‘கொரில்லா’, ‘ம்’ என்ற நாவல்களில் புலம்பெயர்ந்த ஈழத்து மக்களையும் அவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களையும் முனைவர் நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.  மேலும் தமிழ்ச் சமூகத்தின் உள்முரண்பாடுகளையும், தமிழீழ விடுதலை இயக்கங்களின் உள்முரண்களையும் முனைவர் சு.செல்வகுமாரன் நுட்பமாக ஆய்வு செய்து, வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்று பக்கத்து மாநிலமான கேரளத்தி லிருந்து ஏராளமான புதினங்களும், சிறுகதை நூல்களும், தத்துவ நூல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அவை, தமிழ்ச் சமூகத்திலும், இலக்கியப் பரப் பிலும் ஏற்படுத்தி வரும் தாக்கத்தைப் பற்றி எவரும் அதிகம் பேசுவது இல்லை.   மலையாள இலக்கிய உலகில் திரு.ஓ.வி.விஜயன், எம்.டி.வாசுதேவன் நாயர், முகுந்தன், சி.ராதாகிருஷ்ணன் - போன்றவர் களின் புதினங்களைத் தவிர்த்துவிட்டு ஒருவராலும் பேசவியலாது.  அந்த வகையில், பிரபல மலையாள இலக்கியவாதியான சி.ராதாகிருஷ்ணனின் புதினமான ‘நில அதிர்வு மானிகளே நன்றி’  (மலையாளத்தில் இது ‘ஸ்பந்தமா பினிகளே நன்னி’ என்பதாகும்).

இந்த நாவலைப் பற்றிப் பேசும் போது, ஆசிரியரின் கூற்றாக எடுத்துக்காட்டப்படும் திறனாய்வாளரின் வரிகள், இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.  ‘மருத்துவமனை பிணவறையில் கருப்புத் துணியைப் போர்த்திப் படுக்க வைத்த சவப்பெட்டிகளைப் போல நிலஅதிர்வுக் கருவிகள் கிடக்கின்றன’ - என்ற பதிவு, அதன் பயன்பாடற்ற, பயன்படுத்த இயலாத தன்மையைப் புலப்படுத்துகின்றது. இயற்கை அழிவிலிருந்தும், செயற்கை அழிவி லிருந்தும் மக்களைப் பாதுகாப்பது, அவர்களுடைய சொத்துக்களைப் பாதுகாப்பது போன்ற முன்னெச் சரிக்கையான, புத்திபூர்வமான நடவடிக்கைகளில் நாம் இன்னும் பின்தங்கியிருப்பதைத் திறனாய்வின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.  இந்த நாவல் பேரா.கி.நாச்சிமுத்து அவர்களால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் அன்றும், இன்றும் இலக்கியத் திறனாய்வு என்பது இரண்டு பிரதானப்பட்ட பிரிவினரால், இரு வேறு கண் ணோட்டத்தில் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதைக் காண முடிகிறது.  ஒன்று திரு.க.நா.சு.வின் பார்வையில், அவரது இலக்கிய வாரிசுகளால்! இன்னொன்று திரு.தொ.மு.சி.ரகுநாதன், பேராசிரியர் நா.வானமாமலை போன்றவர்களின் (மார்க்சியப் பார்வையில்!) பார்வையில், அவர்களது இலக்கியச் சீடர்களால் சாதி, மதம் இவை சமூகத்தில் ஆற்றும் பங்கு, ஆதிக்கவர்க்கத்திற்கு எதிராக வரலாற்றில் அடித்தள மக்கள் நடத்திய போராட்டம், அவர்களுடைய பண்பாடு - இவை இன்னும்கூட க.நா.சு.வின் இலக்கிய வாரிசுகளால் தொடர்ந்து, திறனாய்வுத் துறையில் புறக்கணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும், அவற்றைக் கண்டும் காணாதது மாதிரி உட்கார்ந்து கண்ணை மூடிக் கொள்ளும் போக்கிற்கு எதிராக, கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இன்று திரு. தொ.மு.சி., பேராசிரியர் வானமாமலை போன்றவர்களின் ஆய்வு முறை தமிழகமெங்கும் பரவலாக அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.  இந்த இலக்கியத் திறனாய்வின் மூலம் முனைவர் சு.செல்வகுமாரன், அதில் ஒரு கண்ணியாகத் திகழ்கிறார்.

Pin It