மார்க்சியத்தின் புதிய பிரச்சினைகளை ஒன்பது கட்டுரைகளாக்கி இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அவை நான்கு பேராசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. அறியப்பட்ட மார்க்சியத்தினுள் உட்பொதிந்துள்ள சில பிரச்சினைகள் முதல் நான்கு கட்டுரைகளில் வெளிப்படுத்தப்பட்டு அவை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் இரண்டு கட்டுரைகள் ஹெகலின் “உரிமை பற்றிய தத்துவ”த்தை அரசியல் மற்றும் சமூகவியல் தளத்தில் விவாதிக்கின்றன.

கிரேக்க தத்துவத்தில் இயங்கியல் பற்றி ஒரு கட்டுரை பேசுகிறது. மார்க்ஸ் அவரின் முனைவர் பட்டத்திற்காக டெமாக்ரிட், எப்பிக்யூர் என்ற இரண்டு பொருள்முதல்வாதிகளை ஒப்பிட்டு எழுதிய கருத்துக்கள் இக்கட்டுரையில் தரப்பட்டுள்ளன. இளம் மார்க்சின் காத்திரமான தத்துவ விவாதங்களுக்கு மார்க்சின் இக்கட்டுரை சாட்சி. இறுதியாக நிற்கும் மூன்று கட்டுரைகள் பின்- வரலாறு (Post-History), மறுத்தலின் சீற்றம், மூலதனம்-உழைப்பு ஆகிய பிரச்சினைகளைக் குறித்துப் பேசுகின்றன.

werner bonefeld book on marxமுன்னுரை வடிவில் எழுதப்பட்ட முகப்புக் கட்டுரை, “செய்ய வேண்டுவது என்ன?” என்ற புரட்சிக்காரர்களின் மரபார்ந்த கேள்வியை முன்வைத்து பதில் காண முயலுகிறது. “மூடப்பட்ட, வறட்டுத்தனமான ஒரு மரபை நெகிழ்வாக்குவதுதான் செய்ய வேண்டுவது” என்று பதில் கிடைக்கிறது. “இந்த மரபின் துன்பியல் வரலாற்றைத் தூண்ட வேண்டும். அதுவே இப்போது இருக்கும் மிகச்சக்தி வாய்ந்த எதிர்ச்சிந்தனை மரபாக நீடிக்கிறது.” மார்க்சியத்தின் துன்பியல் வரலாறு இன்று வரை நினைவூட்டத்திற்கு உரியது. அமைப்பியல், நேர்க்காட்சிவாதம், சில சமூகவியல் கோட்பாடுகளின் செல்வாக்கு ஆகியவற்றிலிருந்து மார்க்சியத்தை விடுவித்தல் இத்தொகுதியின் வேலைத்திட்டம் என நூலாசிரியர் வெர்னர் போன்ஃபீல்ட் விளக்குகிறார். போராட்ட அனுபவங்கள் மார்க்சியத்தின் விமர்சனரீதியான அனுபவங்களை மீட்டுத் தரும் எனவும் சுட்டிக் காட்டுகிறார். எஞ்சிய மூன்று ஆசிரியர்களின் பங்களிப்புகள் ஒவ்வொன்றும், ஹெகல், மார்க்ஸ் இருவரின் பிரதிகளுக்கு திரும்பிச் சென்று மார்க்சியரின் விமர்சன ரீதியான அம்சத்தை வளர்த்தெடுக்க முயற்சிக்கின்றன.

“முதலாளித்துவமும் மறுவுற்பத்தியும்” என்ற இரண்டாவது கட்டுரை மரியா ரோசா டல்லா கோஸ்டா என்ற இத்தாலியப் பேராசிரியரால் எழுதப்பட்டது. ஆரம்பகால முதலாளியத்தால் தீவிரமாகப் பயன்படுத்தப்பட்ட “மறு உற்பத்தி” எனும் தொழில் உத்தி எவ்வாறு 20 ஆம் நூற்றாண்டின் காலப்பகுதியில் கொடூரமாகப் பயன்படுத்தப்பட்டது என்பதை இக்கட்டுரை விரிவாக எடுத்துப் பேசுகிறது. 16-18 ஆம் நூற்றாண்டுகளில் நிலம் என்னும் ஆதி உடைமை பறிக்கப்பட்டது. பின்னர் கூலி பெறும் தொழிலாளி, கூலி பெறாத தொழிலாளி என்ற பிரிவினை உருவாக்கப்பட்டது. வர்க்கம், பாலினம், இனம், தேசியம் என்ற பிரிவினைகள் கட்டப்பட்டன. விரைவில் முதலாளித்துவ மூலதனத் திரட்டல் தொழிற்சாலைகள், தோட்டத்தொழில், அணைகள், சுரங்கத் தொழில் ஆகியவற்றில் குழந்தை அடிமைத் தொழில் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இவற்றை ஓரளவு ஈடுகட்ட அடிமை உழைப்புக்கு மக்கள் நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சமீப காலங்களில், “பேய்த்தனமான் திருப்பமாக உடல் உறுப்புகளை விற்பவர்களைக் கொண்டு” கடைக்கோடி உற்பத்தி சக்திகளைத் திரட்டி வருகின்றனர். இதற்கு இணையாக குற்றத் தொழில்களும் கொழித்து வருகின்றன. ஆதித்திரட்டலின் வழியாக உடைமை பறிப்புகள் நிகழ்த்தப்பட்டது இப்போது மீண்டும் அவை மறு உற்பத்தி செய்யப்படுகின்றன. கூலி பெறாத பெண் தொழிலாளர்கள், பெண்கள் கடத்தப்பட்டு அடிமையாக்கப்படுதல், பாலியல் சுரண்டல் ஆகியன பெருகி வருகின்றன.

மனித இன அழிவு, சுற்றுச் சூழல் அழிவு என்பவை இணைகின்றன. பெண்கள் இனப்பெருக்கம் செய்ய மறுத்து வருகின்றனர். எந்திரகதியிலான மறு உற்பத்தி பெருகி வருகிறது. இவற்றை எதிர் கொள்ள சோசலிசம் இன்னும் தயாராகவில்லையா என்ற கேள்வி மிஞ்சத்தான் செய்கிறது?

இந்தப் பகுதியின் நாலாவது கட்டுரையாக, மார்க்சினுடைய ஆய்வுப் பட்டத்திற்கான கிரேக்கத் தத்துவம் குறித்த கட்டுரை அமைகிறது. டெமாக்ரிட், எப்பிக்யூர் ஆகிய இரண்டு பொருள்முதல்வாதிகளை ஒப்பிட்டு எழுதிய கட்டுரை அது. கிரேக்கத் தத்துவத்தை அதன் கோட்டையிலேயே மார்க்ஸ் சந்தித்த ஓர் அற்புதமான தருணம் அது. கிரேக்க பொருள்முதல்வாதம், இயங்கியல், தருக்கவியல் குறித்த ஒரு திறந்த விவாதத்தை மார்க்ஸ் நடாத்திய சந்தர்ப்பம் அது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய கிரேக்க தத்துவம் ஒருபுறம், மார்க்ஸ் வாழ்ந்து உருவாக்கிய இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் ஆகியன உருவெடுத்த காலம் ஆகியவற்றைத் தாண்டி, 22-23 ஆம் நூற்றாண்டுகள் படையெடுத்து விட்ட மற்றொரு காலம் எனப் பலவகைப்பட்ட கால முரண்களைத் தன்னில் எதிரொலிக்கும் பரப்புகளைக் கொண்டது இக்கட்டுரை. பல தத்துவங்கள் சந்தித்துக் கொண்டு, சூடுபரக்கும் அற்புதமான சந்திப்பு அது.

பண்டைய கிரேக்கத்தின் இயங்கியல் முறையைத் “தேவையற்ற பழம்பொருளாக” மார்க்ஸ் கருதினாரா? என்ற ஒரு கேள்வியோடு விவாதத்தை கட்டுரை ஆசிரியர் துவக்குகிறார். கிரேக்கத் தத்துவ விவாதம் “மூலதனம்” (முதல் தொகுதி) முதல் பதிப்பிற்கும் இரண்டாவது பதிப்பிற்கும் இடையிலான வேறுபாடுகளை எடுத்துக் கூறும் முக்கியமான பகுதி ஆகும். கிரேக்கத் தத்துவத்தின் வெளிப்படையான வாரிசாகவும் தெளிவான ஞானியாகவும் மேதமையாகவும் மார்க்ஸ் இப்பகுதியில் மிளிருகிறார்.

தத்துவம் தனக்கு இணையாக வேறு எதையும் கருதாது. அது ஹெகலிலிருந்து தொடங்குகிறது என்ற கருத்துடன் மார்க்ஸ் விவாதத்தைத் தொடங்குகிறார். உச்சநிலைகளில் அரிஸ்டாட்டில், எப்பிக்யூர் ஆகிய இருவரை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். எப்பிக்யூர், டெமாக்ரிட், அரிஸ்டாட்டில் மூவரில் எப்பிக்யூரைத்தான் உயர்த்திக் காட்டுகிறார். தத்துவத்தை மார்க்ஸ் உலகுடன் இணைக்கிறார். இது எப்பிக்யூரிய அணுகுமுறை. உலகம் தத்துவத்தோடு இணையும்போது, தத்துவமும் உலகம் சார்ந்ததாகிறது.

அறிவு, சுதந்திரம், சனநாயகம் ஆகியன மார்க்சின் வாதங்களில் ஒன்றுபடுகின்றன. அறிவின் இடத்தை சனநாயகம் எடுத்துக் கொள்கிறது. முன்பிருந்த முடியாட்சி அரசின் வடிவங்கள் தலைகீழாக நிறுத்தப்படும்போது சனநாயகங்கள் தோற்றமெடுக்கின்றன. அறிவியலும் தத்துவமும் அரிஸ்டாட்டில் தொடங்கி அல்தூசர் வரை பின்னிப் பிணைந்து இணைந்து கிடக்கின்றன. தொடர்ந்து மார்க்ஸ் ஹெகலின் “உரிமை பற்றிய தத்துவத்தை”ப் பற்றி எழுதுகிறார். அறிவு, சுதந்திரம், சனநாயகம், மனித உரிமை இவற்றில் எது ஒன்றும் மார்க்சியத்தை விட்டு விலகியவை அல்ல.

சமீப காலங்களில் உரிமை புத்துயிர் பெற்றுள்ளது. உரிமை முக்கியமான கோட்பாடாகிறது. மனிதர் மனிதரோடு இணைக்கப்படுகிறார். மனித இருத்தலிலிருந்து அந்நியமாதல் விலகுகிறது. மனிதர் சமூக மனிதராக்கப்படுகின்றனர்.

நூலின் இறுதி அத்தியாயம் பின் வரலாறு, மறுத்தலின் சீற்றம் ஆகியன குறித்துப் பேசுகின்றன. வால்டர் பெஞ்சமினின் சொற்கள் இங்கு எடுத்துப் பயன்படுத்தப்படுகின்றன. “வரலாற்றில் உள்ள புனைகதைக் காரணிகளைக் கைவிட்டு விட்டு, மாறாக, சகாப்தத்தின் தொடர்ச்சியை வெடித்துப் பிளக்க வேண்டும்” என்கிறார் வால்டர் பெஞ்சமின்.

“ஆரம்பத்தில் சீற்றம் இருந்தது” இதுவே முதுபெரும் மொழி.

- ந.முத்துமோகன்

Pin It