திருவிதாங்கூர் நாட்டின் ஆறாவது அரசரான சுவாதித் திருநாள் பற்றி சூரநாடு குஞ்சம் பிள்ளை எழுதிய மலையாள நூலுக்கு முகவுரை எழுதிய சங்கீத வித்துவான் செம்மங்குடி ஆ ஸ்ரீநிவாச அய்யர் ".....இவர் அரசர்களில் சங்கீத வித்துவானாகவும் சங்கீத வித்துவான்களில் அரசராகவும் இருந்தவர்" என்று பாராட்டுகிறார்.

1729 முதல் 1948 வரை திருவிதாங்கூர் நாட்டை ஆண்ட 12 பேர்களில் 220 ஆண்டுகள் வரலாற்றில் காலங் கடந்து வாழ்ந்து கொண்டிருப்பவர் சுவாதித் திருநாள் என்ற அரசர். மற்றவர்கள் அரசியல் சாதனையாளர்கள் சுவாதித்திருநாள் கலைஞர் இசைத்துறையில் சாதித்தவர் தென்னிந்தியாவில் இவர் இன்றும் நினைக்கப்படுவதற்கு இவரது இசைப்புலமையே காரணம்.”

வட மலபாரிலிருந்து சங்கனாச்சேரிக்குக் குடியேறிய அரச குடும்பத்தைச் சார்ந்தவர் இராஜராஜவர்மா. இவர் சமஸ்கிருதப் பண்டிதர், 'மலையாளக் கவிஞர். இவரது மனைவி திருவிதாங்கூர் அரசவம்சத்தை சார்ந்த கௌரி லட்சுமிபாய். இவர்களுக்கு மூன்று மக்கள். இரண்டாவது சுவாதித் திருநாள் இவர் பிறந்தது 1813 ஏப்ரல் 13 ஆம் தேதி. திருவிதாங்கூர் அப்போது சுதந்திர சமஸ்தானமாகச் செயல்பட்டாலும் கிழக்கிந்தியக் கம்பெனி ஆளுநரின் மறைமுக ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போதைய வழக்கப்படி திருவிதாங்கூரில் கம்பெனியின் பிரதிநிதியாக கர்னல் மன்றோ என்பவர் இருந்தார். சுவாதித்திருநாள் பிறந்த செய்தியை அவருக்குத் தெரிவித்தனர். அப்படித் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது அப்போதைய கடமையும் கூட கர்னலுக்குத் திருவிதாங்கூர் அரசி அனுப்பிய கடிதம் ஒன்றில் சுவாதி பிறந்த அன்று தென் திருவிதாங்கூர் காட்டில் வெள்ளை யானைக்குட்டி ஒன்று பிடிக்கப்பட்ட செய்தியையும் குறிப்பிடுகிறார். இது அப்போது நல்ல சகுனம் என்றும் எழுதியிருக்கிறார். இந்தக் கடிதம் மலையாளத்தில் இருந்தாலும் தமிழ், மலையாளம் இரு மொழிக்கலப்புடையதாக உள்ளது.

suvathi thirunaalகௌரி லட்சுமி பாய்க்கு, மூன்றாவது மகவு பிறந்த ஓராண்டில் தன் 23ஆம் வயதில் இறந்து விட்டார். மூன்று குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை சுவாதியின் பெரியம்மா பார்வதிபாய் ஏற்றுக் கொண்டார். சுவாதி பிறந்த நான்காம் மாதத்தில் அவருக்கு இளவரசுப் பட்டம் கட்டிவிட்டனர். பார்வதிபாய் சுவாதியின் தாயாகவும் திருவிதாங்கூரின் பகர அரசியாகவும் இருந்தார்.. சுவாதியின் தந்தை இராஜராஜ வர்மா அரசிக்கு நிர்வாகத்தில் உதவி செய்தார்.

சுவாதித் திருநாள் இளவரசர் ஆதலால் அவரை முழு நேரத்தில் கவனிப்பதற்கு அம்பலப்புழை ராமவர்மா என்பவரை அரசி நியமித்தார். அவருடைய படிப்பு விஷயங்களில் தந்தை ராஜராஜ வர்மா முழு கவனம் எடுத்துக் கொண்டார். அவருக்கு முதலில் சமஸ்கிருதமும் மலையாளமும் கற்பிக்க ஹரிபாட்டு விழக்கேத்து கொச்சு பிள்ளை வாரியார் என்பவரை நியமித்தனர். இவர் முழு நேர ஆசிரியர். சுவாதிக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பொறுப்பை கர்னல் மன்றோ ஏற்றுக்கொண்டு தஞ்சாவூர் சேஷா பண்டிதர் சுப்பராயர் என்பவரை சிபாரிசு செய்தார். சென்னை பண்டிதர் ஒருவர் பார்சி கற்பித்தார். அறிவியல் கணக்கு போன்றவற்றை கற்பிக்க தனித்தனி ஆசிரியர்கள் இருந்தனர். சுவாதிக்கு ஆங்கிலம் கற்பித்த சுப்பராயர் பின்னர் திருவிதாங்கூரின் திவானாகவும் இருந்தார்.

சுவாதித் திருநாளுக்கு இசைப் பயிற்சி அளித்த ஆசிரியர் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. நாகர்கோவில் வடசேரியில் கிடைத்த ஒரு செப்பேடு திருவனந்தபுரம் கரமனை சுப்பிரமணிய பாகவதர் என்பவர் பயிற்சி அளித்தார் என்று கூறுகிறது. பிற்காலத்தில் கோவிந்த மாரார் உட்பட பல இசைக் கலைஞர்கள் வழி இவர் தன்னை உயர்த்திக் கொண்டார்.

சுவாதித் திருநாள் இளம்வயதில் அறிவுக் கூர்மையும் நுட்பமான பார்வை உடையவராகவும் இருந்தார். கடுமையான விஷயங்களை எளிமையாக விளக்கும் ஆற்றல் உடையவராகவும் விளங்கினார் என அவரைப் பற்றிய நூற்கள் கூறுகின்றன. ராமவர்மா விஜயம் என்ற மலையாள நூல் சுவாதித் திருநாளுக்கு சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, தமிழ், மராத்தி, பாரசீகம், ஆங்கிலம் முதலான மொழிகள் தெரியும் என்று பாராட்டுகிறது.

கர்னல் வெல்ஸ் என்பவர் திருவிதாங்கூர் வந்தபோது சுவாதித் திருநாளை சந்தித்திருக்கிறார். சுவாதி கணிதம், இயற்பியல் போன்றவற்றில் வல்லமை உடையவர் என்பதைத் தெரிந்து கொண்டார். சுவாதித் திருநாள் கர்னல் வெல்ஸிடம் மத்திய இந்தியா பற்றிய ஒரு ஆங்கில நூலின் ஒரு அத்தியாயத்தையும்" ஆங்கிலக் கவிதை இலக்கியத்தில் இரண்டு கவிதைகளையும் படித்துக்காட்டி, தனது உரையாடல் வழியில் விளக்கியதோடு பொது அறிவையும் வெளிப்படுத்தியிருக்கிறார் அப்போது அவருக்கு வயது 13 என ராமவர்ம விஜயம் நூல் கூறும்.

சுவாதி யூக்கிலிட்டின் கஷ்டமான ஒரு சூத்திரத்தை எழுதிக் காட்டி விளக்கினார். கணிதத்தின் ஒரு பிரிவான ஜியாமிட்டரி என்பது ஜயாமித்திரா என்னும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது என்று விவாதித்திருக்கிறார். இதெல்லாம் அந்த கர்னலுக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போது சுவாதித் திருநாளுக்கு வயது 13 தான். அந்த கர்னல் வெல்ஸ் " திருவிதாங்கூரின் இப்போதைய இளவரசர் மிகக் கூர்மையான அறிவு உடையவர். இவர் எதிர்காலத்தில் சிறந்த அரசராக மட்டுமல்ல மேதையாகவும் கலைஞராகவும் பெயர் பெறுவார்" என்று எழுதியுள்ளார்.

இளவரசரின் ஆங்கிலப் பேச்சு பற்றி எனக்கு அவ்வளவு உயர்ந்த அபிப்பிராயம் இல்லை, அவரது உச்சரிப்பு சரியானதாக இல்லை, இலக்கணப் பிழைகளும் உள்ளன. இவர் மட்டுமல்ல இவருக்கு ஆங்கிலம் கற்பிக்கின்ற ஆசிரியரும் கூட தவறாகவே பேசுகின்றார் என்று எச்சரிக்கின்றார் எனக் குறிப்பிடுகின்றனர்.

சுவாதித் திருநாளின் மனைவி திருவட்டாறு பானம்பிள்ளை ஆயிக்குட்டி நாராயணி பிள்ளை என்பவர் ஆவார். மன்னர் இறுதிக்காலத்தில் குலசேகரத்தின் பக்கத்தில் பெருஞ்சாணிப்பகுதியில் தன் மனைவிக்கு ஒரு அரண்மனை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

சுவாதித் திருநாள் 1829 ஏப்ரல் 21 ஆம் நாளில் தன் பெரியம்மா பார்வதியிடம் இருந்து திருவிதாங்கூரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்போது திருவிதாங்கூர் திவானாக வெங்கட ராயர் என்பவர் இருந்தார். அரசருக்கு தன் ஆங்கில ஆசிரியரான சுப்பராயரை நாட்டின் திவானாக ஆக்க வேண்டும் என்ற ஆசை. கிழக்கிந்தியக் கம்பெனி பிரதிநிதிக்கு பழைய திவானை நீக்க விருப்பமில்லை. வெங்கடராயர் அரசருக்கு விருப்பமில்லாமல் திவானாக தான் பதவியில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல என்று எண்ணியதால் தன் பதவியை விட்டு விலகினார். உடனே சுப்பராயர் திவான் ஆனார்.

புதிய திவானான சுப்பராயர் கிழக்கிந்தியக் கம்பெனியின் நல்ல உறவே நாட்டுக்கு நல்லது; நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்று நினைத்தார். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் அவர் கூச்சப்படவில்லை மன்னருக்குக் கூட சாடை மாடையாக அதை சொல்லிக் கொண்டார்.

அந்தக் காலத்தில் ஆரல்வாய் மொழியிலும் பூதப்பாண்டியிலும் நாட்டின் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த திருவிதாங்கூர் படைகளை திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற அரசரின் வேண்டுகோளை நிறைவேற்றினார்.

கம்பெனி அரசிடமிருந்து தோவாளை என்ற ஊருக்கு அருகில் சிறிய கிராமத்தில் இருந்த குதிரை வீரர்களும் குதிரைகளும் திருவனந்தபுரத்திற்கு செல்லும்படியான உத்தரவு வந்தது. நாகர்கோவிலில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள் திருவனந்தபுரத்திற்கு அழைக்கப்பட்டன.

இதுபோன்ற காரியங்களை நிறைவேற்றுவதில் கம்பெனி அரசுடன் சுவாதித் திருநாளுக்கு இருந்த உறவு சுமுகமாக இருந்தது. இதை வெளிப்படையாக காட்டிக்கொண்டார். திருவிதாங்கூரின் ராணுவத்திற்கு நாயர் பட்டாளம் என்று பெயரிடப்பட்டது. ஆங்கில வீரர்களின் பாணியில் நாயர் படைவீரர்களும் சீருடை அணிந்தார்கள்.

 1837 ஆம் ஆண்டில் சுப்பராயர் லஞ்ச ஊழல் குற்றம் சாட்டப்பட்டார். அவரை கர்னல் மன்றோவின் மகன் மீ மன்றோ என்பவர் விசாரித்தார். அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் தெளிவாக இல்லை. அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பானது. அதற்கு பின்பு அவர், பதவியை விடும்படி வற்புறுத்தப்பட்டார். சுப்பராயர் பதவி விலகினார். முன்பு திவானாக இருந்த வெங்கடராயர் மீண்டும் பதவிக்கு வந்தார்.

1840இல் கர்னல் கோலன் என்பவர் திருவிதாங்கூரின் ரெசிடென்டாக வந்தபிறகு சுவாதித்திருநாளின் அமைதி குலைந்தது. கோலனுக்கு வேண்டியவரான கிருஷ்ணராவ் என்னும் ஆந்திராக்காரரை திவானாக ஆக்கும் முயற்சி நடந்தது. அதனால் அரசர் அமைதி இழந்தார். அவரது உடல்நிலை பாதித்தது.

கோலனின் எதேச்சதிகார செயலும் திருவிதாங்கூரில் நிலையான நேர்மையான திவான் இல்லாத நிலையும் அரசருக்கு மனநிம்மதியை இல்லாமலாக்கியது. கிழக்கிந்தியக் கம்பெனியை பகைத்துக்கொண்டோ திவானை வெறுத்தோ அதிகாரிகளின் உதவியில்லாமலோ செயல்பட்டால் திருவிதாங்கூர் மன்னர் நிம்மதியாக வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்..

அவருக்கு வெள்ளைக்கார அரசை வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. பரம்பரை அரச பதவியை விட்டு விடலாமா என்று அரசர் எண்ணினார். கோலன், மன்னரின் அன்றாட வாழ்விலும் தலையிட ஆரம்பித்தார். இயற்கையிலேயே காது கேட்காத கோலமுடன் மன்னரால் பேச முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமானது.

சுவாதி அரசபதவியை விடுவது சித்தம் என்று சென்னை கவர்னர் ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். ஆனால், அரசரின் பெரியம்மா அந்தக் கடிதத்தை அனுப்ப வேண்டாம் என்று தடுத்து விட்டார். மன்னருக்கு பத்மநாபனின் வழிபாடும் சடங்கு ஆச்சாரங்களும் அமைதியைக் கொடுத்தன.

மன்னர் அடிக்கடி உபவாசம் இருந்தார். பத்மநாப சுவாமி கோவிலுக்கு நிவந்தங்கள் நிறையக் கொடுத்தார். மன அமைதிக்காக கொல்லம் நகரத்திற்குச் சென்று சில நாட்கள் தங்கினார். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோவிலில் இருந்தார். அப்போது நாஞ்சில் நாட்டு மக்கள் அவரை சந்திப்பதற்காக பெருமளவில் கூடினர். ஆனால் மன்னர் அவர்களை சந்திக்க மறுத்து விட்டார்.

கோலன் நாஞ்சில் நாட்டு மக்களுக்கு வரி பிடிப்பதிலும் வேறு நிலைகளிலும் செய்த அநீதிகளை மக்கள் தன்னிடம் முறையிடுவார்களோ என்று எண்ணிய மன்னர், நாஞ்சில் நாட்டு மக்களை சந்திக்க மறுத்து விட்டார் என்று முதலியார் ஆவணம் கூறுகிறது.

மன்னர், தன்னுடைய பிரச்சினைகளை சென்னைக்கு எழுதினார். சென்னை கவர்னர் அதற்கு செவிசாய்க்கவில்லை. திவான்களின் சூழ்ச்சி, ஊழல், அடிக்கடி அதிகாரிகளின் மாற்றம் | தந்தை ராஜராஜ வர்மாவின் இறப்பு, அக்கா ருக்மணி பாயின் 4 வயது குழந்தை இறப்பு இப்படியான பல காரியங்கள் அரசரின் உடம்பை நிலைகுலைய வைத்தன.

1846 டிசம்பர் மாதம் மன்னர் மறைந்தார். திருவிதாங்கூரின் இசைக் கலைஞரும் பன்மொழிப் புலவரும் சிறந்த ரசிக்குமான ராமவர்மா சுவாதித் திருநாள் அரசர், இரவு உறங்கியவர் அமரராகி விட்டார். மிகக் குறுகிய ஆண்டுகள் 33 வயதே வாழ்ந்தவர். 18 ஆண்டுகள் அரசியல் நிர்வாகம் மொழி இலக்கியம் ஆகியவற்றுக்கு சாதித்த சாதனைகளை பட்டியல் போட்டு காட்ட முடியாது.

அரசு நிர்வாகத்தில் இழந்த ஊழல்களை களைவதற்கு பெருமுயற்சி செய்தார். சில அதிகாரிகளை பெரிய அதிகாரிகளையும் எச்சரித்தார். திவானைக்கூட பதவி விலகும்படி செய்தார். நிர்வாக வசதிக்காக கொல்லத்தில் இருந்த ஹொசூர் கச்சேரியை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார்.

கண்டன் மேனோன் என்பவர் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தி, மாவட்டங்களில் உள்ள எல்லா நிலங்களின் வருமானத்தை ஒழுங்கு செய்தார். திருவிதாங்கூர் நாட்டிற்கு என்று சிவில் கிரிமினல் சட்டங்களை ஆராய்ந்து தொகுக்க வைத்தார். இந்த சட்டங்கள் கோட்டையம் மிஷன் அச்சகத்தில் புத்தக வடிவில்வர மானியம் கொடுத்தார்.

1837 - 1838 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் நாட்டில் உள்ள நிலங்கள் எல்லாம் அளக்கப்பட்டன வரன்முறையோடு அவை நெறிப்படுத்தபட்டன இதற்காக ஒரு அதிகாரியை தனியாக நியமித்தார். நிலம் ஒழுங்காக 'அளக்கப்பட்டதால் நிலம் தொடர்பான வழக்குகள் விரைவில் முடிக்கப்பட்டன.

1837-இல் திருவிதாங்கூர் மக்கள் தொகை கணக்கிடப்பட்டது. அப்போது மக்கள் தொகை மொத்த திருவிதாங்கூரில் 12,80,668 ஆகும். மராமத்து இலாகா என்ற துறை தனியாக செயல்பட ஆரம்பித்தது. இதற்காக ஒருவர் நியமிக்கப்பட்டார்.

பெண் குற்றவாளிகளையும் மொட்டையடித்தல், ஒழுக்கம் இறந்தவராகக் கருதப்பட்ட நம்பூதிரி ஆண்கள் சுசீந்திரம் கோவிலில் கைமுக்கு மண்டபத்தில் கொதிக்கும் நெய்யில் கையை விடவேண்டும் என்ற வழக்கம் ஆகியன நிறுத்தப்பட்டன. நாகர்கோவிலில் இலவச மருத்துவமனை ஒன்று கட்டவேண்டும் என்ற மீட் என்பவரின் வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது.

நாகர்கோவிலில் ஆங்கில மொழிப் பள்ளி ஒன்றை நடத்தி வந்த ராபர்ட் என்பவரை திருவனந்தபுரத்திற்கு அழைத்து ஆங்கில மாதிரிப் பள்ளியை நிறுவினார் ஆங்கிலக் கல்வி முறைக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.

சுவாதித்திருநாள் என்றதும் கர்நாடக இசைக்கும் மோகினி ஆட்டத்திற்கு செய்த காரியங்கள் மிகவும் முக்கியமானவை. அவர் அப்போது இந்தியா முழுக்கத் தெரிந்த குறிப்பாக தஞ்சாவூர் கலைஞர்களுக்கு புகலிடமாக இருந்தார்.

தஞ்சை வடிவேலு, பொன்னையா, சின்னையா, சிவானந்தம் ஆகிய நான்கு சகோதரர்களும் முத்துசாமி தீட்சிதரின் சீடர்கள். வடிவேலு கர்நாடக சங்கீதத்தில் வல்லவர். பரதநாட்டியத்திற்கு பதம் பாடியவர் வயலின் என்ற இசைக் கருவியை திறமையாக மீட்டியவர் .

வடிவேலு கர்நாடக சங்கீத மேடையில் வயலினை அறிமுகப்படுத்தியவர். இப்படியான பெருமைகளை உடைய இவர் சுவாதித் திருநாளின் அவையிலேயே இருந்தார். அவர் தங்குவதற்கு உரிய எல்லா வசதிகளையும் அரசர் செய்து கொடுத்திருக்கிறார்.

அரசர் வடிவேலுவிற்கு கொல்லத்தில் செய்யப்பட்ட தந்தத்தால் ஆன வயலின் ஒன்றை பரிசளித்து இருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் வீணை வித்வானாக சுப்புக்குட்டி ஐயா என்பவரும் திருவனந்தபுரத்திற்கு வந்தார்.

புகழ் பெற்ற கர்நாடக இசைக்கலைஞரும் பக்திமானும் ஆகிய தியாகப் பிரம்மம் எனப்படும் தியாகராஜரின் சீடர் கண்ணையா பாகவதர் என்பவர் சுவாதித் திருநாளின் அவையில் தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார். அதைக்கேட்ட சுவாதித் திருநாள் மெய்மறந்து நின்றார். இதுகுறித்த வெள்ளை அதிகாரி ஒருவரின் கடிதம் உண்டு.

ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த நாகரத்தினம், தஞ்சை தேவதாசி மங்கம்மா, தஞ்சை கனக மாலை ஆகியோர் சுவாதித்திருநாளின் அவையில் நடனமாடி இருக்கின்றனர். திருச்செந்தூர் ராமநாத மாணிக்கம், தஞ்சை நீலாள் ஆகிய மோகினி ஆட்டக்காரிகள் அரசரிடம் தொடர்ந்து நிறைய பரிசுகள் பெற்றனர்.

தஞ்சை மண்ணிலே பிரபலமாக இருந்த கதாகாலட்சேப வடிவத்தை திருவிதாங்கூரில் அறிமுகப்படுத்தியவர் சுவாதித்திருநாள்தான். தஞ்சை சரபோஜி காலத்தில் வாழ்ந்த மேரு சுவாமிகள் என்பவர் திருவனந்தபுரத்திற்கு வந்தபோது அரசர் எழுதிய குசேலோபாக்கியானம் என்ற நூலை அரங்கேற்றி யிருக்கிறார். இது 28 ஸ்லோகங்களைக் கொண்ட 12 பாட்டுக்களை உடையது.

சுவாதித் திருநாளின் கலைப் பின்னணிக்கு காரணமாயிருந்த பலரில் கோவிந்த மாரார் (1798 - 1841) என்பவரும் ஒருவர். மூவாற்றுப்புழை அருகே உள்ள ராம மங்கலம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். செண்டை, இடக்கா இசைக்கருவிகளை அடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். ஹரிபாடு ராமசாமி பாகவதரிடம் ஆறு ஆண்டுகள் வாய்ப்பாட்டு படித்தவர்

அந்தக் காலத்தில் கோவிந்த மாரார் உச்சம் மிதம், மத்திமம் என்னும் சுதியில் பாடுகின்றவர் என்ற பெயரைப் பெற்றவர். ஊர் ஊராய் அலைந்து அனுபவங்களைத் தேடிக் கொண்டவர். ஆன்மீகவாதியும்கூட இவர் தமிழகத்தில் கோவில்களில் பாடப்பட்ட பல பாடல்களை சேகரித்திருக்கிறார். தஞ்சையில் சேஷா ஐயர் என்பவரை சந்தித்து சில ஏடுகளைப் பெற்றிருக்கிறார் இறுதிக் காலத்தில் பண்டரிபுரத்தில் வாழ்ந்தார். கோவிந்த மாராரின் பாதிப்பு சுவாதித் திருநாளிடம் நிறைய உண்டு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சுவாதித் திருநாள், இசை மும்மூர்த்திகளான தியாகராஜ சாமிகள், முத்துசாமி தீட்சதர். சியாமா சாஸ்திரி ஆகிய மூவரின் காலத்தில் வாழ்ந்தவர். தியாகராஜரை தரிசிக்கவும் அவருக்கு பரிசளிக்கவும் தன் உறவினர்களை அனுப்பியிருக்கிறார் அரசர். இதுபற்றி மதிலாக குறிப்பில் ஒரு செய்தி உள்ளது.

சுவாதித் திருநாளின் காலத்திற்கு முன்பு திருவிதாங்கூரில் ஷோபன சங்கீதமும் நாட்டார் இசையும்தான் பெரும் அளவில் வழக்கில் இருந்தன. இந்த நிலையில் சுவாதியின் தோற்றம் திருவிதாங்கூர் சங்கீத உலகில் பெரும் மாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது.

மோகினி ஆட்டம் இப்போது கேரளத்திற்கு உரிய கலையாக உள்ளது. உண்மையில் இதன் பூர்வீகம் தமிழ்நாடு தஞ்சை தேவதாசிகள் ஆடிய சதுர் ஆட்டமும் கதகளியும் தான் மோகினி ஆட்டமாக ஆனது என்கின்றனர். ஒருவகையில் இதற்குக் காரணமாக இருந்தவர் வடிவேலு ஆவார். முக்கியமாக சுவாதித் திருநாளின் தூண்டுதல் மோகினி ஆட்டத்தின் தோற்றத்திற்குக் காரணம் என்றும் கூறலாம்.

சுவாதித் திருநாள் 200 க்கு மேற்பட்ட கீர்த்தனைகள் எழுதியிருக்கிறார். மலையாளத்தில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் எழுதியிருக்கிறார்,

இவர் எழுதியவை நவரத்தினமாலா, பக்தி மஞ்சரி, அஜாமினோபாக்கியானம், குசேல பாக்கியானம். உற்சவ வர்ணனை பிரபந்தம் ஆகியன. திருவனந்தபுரம் வரலாறு குறித்த சம்பு வடிவிலும் ஒரு நூல் எழுதியுள்ளார். இவரது கீர்த்தனைகளை சிதம்பர வாத்தியார் என்பவர் தொகுத்துள்ளார்.

- அ.கா.பெருமாள், ஓய்வுபெற்ற பேராசிரியர். நாட்டார் வழக்காற்றியல் மற்றும் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.

Pin It