கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் இருக்கலாம். தஞ்சை சிறப்பு மருத்துவர் ச.மருது துரை அவர்களின் மகன் சிபி சம்மந்தன் சிறுவனாக இருந்த காலம் அது. பேச்சுவாக்கில் ஒருநாள் கடிதம் எழுதுவது பற்றி அவனிடம் கேட்டேன். இதுவரை யாருக்கும் தான் கடிதம் எழுதியது இல்லை என்றான் அவன், என் தொடர்புக்கு அலைபேசி இருக்கிறதே என்றும் சொன்னான். “அவனைக் கடிதம் எழுத வைப்பதற் காகவே அவனுக்கொரு என் முகவரியிட்ட உறையை எழுதி, காகிதத்துடன் அனுப்பி, இதில் இன்னென்ன மாதிரி எழுதிக் கடிதமாக எனக்கு அனுப்பு என வற்புறுத்தினேன். அதன்படி எனக்கு அவன் கடிதம் எழுதினான். இப்பொழுது டாக்டர் மருது துரையிடம் நான் கேட்டபோது, சிபி எழுதிய முதல் கடிதம் அது, கடைசிக் கடிதமும் அதுதான் என்றார்.

செ. காமராசு என்று ஒரு நண்பர் ஒரு ஹைகூ கவிதை எழுதினார்.

“பெப்சி குடித்துச்

செத்துப்போனது - எங்கள்

கோலிச் சோடா”

இதே கதைதான் இன்று கடிதத்துக்கும் ஏற் பட்டிருக்கிறது. கணினியும், அலைபேசியும், தொலை பேசியுமாக மின்னனுத் தொடர்புக்கருவிகள் வந்து, கையால் எழுதும் கடிதங்களைக் கொன்றுவிட்டன!

ஆனாலும் நான் தொடர்ந்து கடிதங்கள் எழுதித் தான் வருகிறேன். மாதம் ரூபாய் ஐந்நூறு முதல் எழுநூறு வரை அஞ்சல் வில்லை வாங்க எனக்குச் செலவாகுது. ஆனாலும் கடிதம் எழுதுவதில் இருக்கக்கூடிய சுகம், அன்னியோன்னியம் அலைபேசியில் கிடைப்பதில்லையே.

கடித இலக்கியம் என்னும் தலைப்பில் முனைவர் இரா.காமராசுவின் நூலைப் பார்த்ததும், எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது 1988-ல் வாசிக்கக் கிடைத்த “ஆயன் கடிதங்கள்” என்னும் நூல். ஆயன் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடைக்காரர். என்னைப் போன்றோருக் கெல்லாம் அன்று நெருங்கிய கசை இலக்கிய நண்பர் அவர். நல்ல ஓவியர். தான் பார்த்த, கேட்ட, அனுபவித்த எல்லாவற்றையும் அவர் ரசனையோடு கடிதங்களாகப் பலருக்கு எழுதினார்.

உதாரணமாக, லாரியில் பயணம் செய்த அனுபவத்தை எழுதிய போது, லாரி டிரைவர் எவ்வளவு அந்நியோன்னியமானவராக இருக்கிறார், வழியில் சாப்பிடுவதற்கு நுங்கு முதற்கொண்டு எல்லாவற்றையும் அவரே வாங்கிக் கொடுத்தார் எனச் சின்னச்சின்ன அனுபவத்தையெல்லாம் தன் கடிதங்களில் எழுதி யிருந்தார் அவர்.

அந்த ஆயன் கடிதங்களை நாங்கள் மிக அரிய செல்வமாய்ப் பாதுகாத்து வைத்திருந்தோம். எப்படியோ என்னிடமிருந்த நூல் தொலைந்துவிட்டது. அதை வாசித்துவிட்டுத்தான் காமராசுவின் நூலுக்குள் நுழைய வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் எனக்கு ஏற்பட்டது. பலரைத் தொடர்பு கொண்டேன். கடைசியில் அதன் நகல் ஒன்று கவிஞர் இளசை அருணாவிடம் இருப்பதாகக் கலைஞர் கைலாசமூர்த்தி சொன்னார். இளசை அருணாவிடம் தொடர்புகொண்டு அதை வாங்கி வாசித்தப் பிறகுதான் மனநிறைவு ஏற்பட்டது. ஆயன் கடிதங்களா? அவை அல்வாத் துண்டுகள் அல்லவா! இளமைக் காலத்தில் மனதோடு ஒட்டிக்கொண்டவை எல்லாமே அப்படித்தான்.

இரா. காமராசுவின் ‘கடித இலக்கியம்’ ஒரு வகையில் கல்விப் புலம் சார்ந்தது என்று சொல்ல வேண்டும். கடித இலக்கியம் என்றால் என்ன? கடிதம் என்பதைக் குறிக்கும் பிற சொற்கள் எவை? இலக்கிய வரலாற்றில் கடிதங்கள் எங்கெங்கெல்லாம் இடம் பெற்றிருக்கின்றன? என்றெல்லாம் அடையாளப்படுத்து கிறார் காமராசு. ஜவகர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள், காந்தியடிகள் எழுதிய கடிதங்கள், விவேகானந்தர் எழுதிய கடிதங்கள், சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய கடிதங்கள் எனப் பலர் எழுதிய கடிதங்களை நினைவு கூர்கிறார்.

தொடர்ந்து கடிதங்களை இனம் பிரித்தும் காட்டுகிறார் காமராசு. கடிதத்தில் இருக்கவேண்டிய ஏழு உறுப்புகளைச் சொல்லுகிறார். இவற்றையெல்லாம் விளக்கிய பின் அண்மைக் காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய ஆளுமைகள் பலரின் கடிதங்களைப் பதிவு செய்கிறார். பாரதியார் கடிதங்கள், பாரதிதாசன் கடிதங்கள், புதுமைப்பித்தன் கடிதங்கள் எனத் தஞ்சை பிரகாஷ் கடிதங்கள் வரை தொட்டுத் தொட்டுக் காட்டி, அவற்றின் சிறப்பம்சங்களைச் சொல்லுகிறார்.

இந்தக் கடிதங்கள் வெறும் கடித நகல் அல்ல. பெரும் பெரும் இலக்கிய ஆளுமைகளின் வாழ்வியல் உணர்வுப் பதிவுகள் இவை. அவர்களுடைய அனுபவங்கள், நெருக்கடிகள், வாழ்வியல் நோக்கங்கள், இவை யெல்லாம் கடிதங்களில் வெளிப்படுகின்றன.

எடுத்துக்காட்டாகப் புதுமைபித்தன் கடிதங்கள். அவை பு.பிக்கு அவருடைய துணைவியாரின் மீது இருக்கும் அளவில்லாத அன்பை வெளிப்படுத்தும் வகையில் கடிதத்தைத் தொடங்குகிறார்.  பாரதியும் தன் மனைவிக்குரிய கடிதத்தை “எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு” என்றே தொடங்குகிறார். கணவன் மனைவி பாசம் மட்டுமல்ல, நண்பர்களுக்கிடையேயும், தோழர்களுக்கிடையேயும், உறவினர்களுக்கிடையேயும் எழுதும் கடிதங்களும் அவர்களின் உறவு நிலை ஆழங்களைக் குறிக்கின்றன.

வெள்ளியங்காட்டான் கடிதத்தில், சமூக உணர்வுகள் பல பதிவாகியுள்ளன. அதில் ஒரு வரி. (உடல் மேல் கதராடைகளை அணிந்துகொண்டு) உள்ளத்தைச் சுயநிலை அந்தகாரர் எமனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டவர்களைக் காட்டிலும், கோட்சே ஒரு காலத்தில் நல்லவனாகக் கருதப்பட்டு விடலாம் என வருகிறது. யார் காலத்தை முன்நிறுத்தி, யாரை அந்தக்கால எமன் என்று குறிப்பிடுகிறார் இந்த வெள்ளியங்காட்டான்?

கவிஞராக வாழ்வது எத்தனை கடினம் என்பதையும் வெள்ளியங்காட்டானின் கடிதத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. “இன்று இந்த உலகில் ஒரு கவிஞனாக வாழ்வதைக்காட்டிலும் ஒரு பணக் காரணாவது மிகவும் சுலபம். ஆனால், ஒரு கவிஞனாக வாழ்வதைக் காட்டிலும் உயர்ந்த வாழ்க்கை உண்மை யிலேயே இல்லை. இந்த வார்த்தைகளுக்குள்ளே கவிஞருடைய வாழ்க்கையின் தவிப்பு துலங்குகிறது, பொருளாதாரத் தவிப்புக்கும், கவிதைத் தவிப்புக்கும் இடையில் அவர் படும் பாடும் அருமையாகப் பதிவாகியிருக்கிறது.

ரசிகமணி டி.கே.சி அவர்களின் கடிதங்கள் முழுமையுமே அவருடைய ரசனையின் வெளிப்பாடுகள். எடுத்துக்காட்டாக கலிங்கத்துப்பரணி ஆசிரியர் சிருங்காரச் சுவைப்படப் பாடுவதில் வெகு சமர்த்தர். ஆனாலும் பேய்களையும் அவைகளின் ஸ்வரூபங் களையும் வர்ணிப்பதில் அவரை இணையில்லாதவர் என்றே சொல்லிவிடலாம். அவ்வளவு அழகாய் இருக்கும் கோர வருணனை.

“கோம்பி பாம்பிடை

கோத்தணி தாலிய”

(கோம்பி: பச்சோந்தி)

தாலியை எப்படி அற்புதமாக வர்ணித்து விட்டார்! கவிஞர்.

மனக் கண்ணால் பேயையும் தாலியையும் பார்த்தார். அந்த உண்மையைப் பாடிவிட்டார் பரணி ஆசிரியர்.

ரகுநாதனுக்கு விந்தன் எழுதிய கடிதத்தில், ரகுநாதனின் இலக்கிய மேதைமையை விந்தன் வியந்து பாராட்டுவதைக் காணமுடிகிறது. ரகுநாதன் தான் நடத்திய பத்திரிக்கையில் விந்தனைக் காதல் கதை எழுதச் சொன்னார் போல, அதற்கு பதிலாக விந்தன் எழுதுகிறார்.

Òஇன்னொரு சந்தேகம் எனக்கு, என்னால் காதல் கதை தங்களுக்குப் பிடித்தமான முறையில் எழுத முடியுமா என்பதே அந்த சந்தேகம். தங்கள் கன்னிகா வுக்குப் பிறகுதான் எனக்கு அந்தச் சந்தேகம் தோன்றி யிருக்கிறது. ஆம், கதை முடிவைத்தவிர மற்றவை அனைத்தும் என்னை பிரம்மிக்க வைத்தன.Ó ஒரு படைப்பாளி இன்னொருவர் படைப்பில் தனக்கு பிடித்ததையும் பிடிக்காததையும் எவ்வளவு நாசுக்காக பதிவு செய்கிறார்!

காமராசுவும், தனுஷ்கோடியும் ஈருடல் ஓருயிராகத் திரிந்தவர்கள். தனுஷ்கோடி ராமசாமி எப்போதுமே நெகிழ்ச்சியானவர். அன்பில் குழைந்து போகிறவர். அவருடைய கடிதத்தில் அதை நன்றாகக் காண

முடியும். அவர் கடிதம் ஒன்று இப்படித் தொடங்கு கிறது. “மேலும் மேலும் சந்தோஷங்களை என் மீது கொட்டுகிறீர்கள். வாழ்வதன் அர்த்தத்தை மேலும் மேலும் வளப்படுத்துகிறீர்கள். அறமும் பல நேரங்களில் அப்படித்தான். ஞானக்குயில் அப்படியே செய்யட்டும். எவ்வளவு வளம் மிக்க அன்பு மனம் இருக்கவேண்டும். இப்படியெல்லாம் எழுத!

இவ்வாறு கிட்டத்தட்ட இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்பாளிகள் மிகப் பலரின் கடிதங்களைப் பதிவு செய்வதன் மூலம், அவர்களின் அக புற உணர்வு களை மிக அருமையாக இந்தக் கடிதங்கள் வழியே வெளிப்படுத்தியிருக்கிறார் இரா. காமராசு.

கடிதங்கள் என்பவையே ஒரு வகையில் அந்தரங்கத் தன்மை கொண்டவைதானே! அந்தரங்கத்தைத் தெரிந்து கொள்ளத்தானே மனித மனம் துடிக்கும். ஆக, இந்தக் கடித நூல் ஈர்ப்பு மிக்கது. அந்தரங்கத் தன்மை கொண்டது. படைப்பாளிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ள வழி திறப்பது.

மிகுந்த பொறுமையோடும் கவனத்தோடும் கடிதங் களைத் தொகுத்து நூலாக்கியிருக்கிறார் இரா. காமராசு. அவருடைய இனிய முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.

கடித இலக்கியம்

ஆசிரியர்: இரா.காமராசு

வெளியீடு: சாகித்ய அகாதமி

குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை,

தேனாம்பேட்டை, சென்னை - 600 018

விலை: ` 200/.

Pin It