கட்டிடக் கலை

இந்தக் காலப் பகுதியிலேயே கோயில் கட்டிடக் கலையில் சிகுரத் அமைப்புகள் தோன்றின. நான்கு பக்கங்களிலும் உள் பக்கமாக சரிந்த சிறியக் குன்றுப் போன்ற உயரமான கட்டிடத்தின் உச்சிப் பகுதியில் கோயில்கள் கட்டப்பட்டன.

namu sigureth

ஊர்-நாமு சிகுரத். மாதிரி வரைப்படம்.

குன்று போன்ற உயரமான அமைப்பின் மீது கோயில்களைக் கட்டியதற்கான விளக்கங்கள் இன்றைக்கு கிடைக்கவில்லை. சுமேரிய மதக் கோட்பாடுகளில் இத்தகைய உயரமான குன்றுகள் எதைக் குறிக்கின்றன என்கிற ஆதாரத் தகவல்களும் நமக்குக் கிடைக்கவில்லை. மலைகள் அற்ற தெற்குப் பகுதியில் சிறு மலை போன்ற குன்று வடிவை உருவாக்கி, அதன் மீது கோயில்களை சுமேரியர்கள் கட்டியதற்கான அனுமானங்களை வேண்டுமானால் முன்வைக்க முடியும். சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுமேரியாவின் தெற்குப் பகுதியில் ஊடுருவிய மக்களினம் மலைகள் சார்ந்த குறிஞ்சி நிலப் பகுதியிலிருந்து வந்திருக்க வேண்டும். தமிழர்களின் முருகக் கடவுள் குன்றுகளின் அதிபதி என்பதை இங்கே ஒப்பு நோக்க வேண்டியிருக்கிறது. சுமேரியர்களிடையே மிக செல்வாக்குப் பெற்ற இனானா கடவுள் தமிழர்களின் கொற்றவைக்கு ஒப்பானவள் என்பதும் இங்கே ஒப்பு நோக்க வேண்டிய சங்கதி.

முதன் முறையாக கல்லறை கட்டிடக் கலையும் முக்கிய இடம் பிடித்தது இந்த காலகட்டத்தில்தான். இதற்கு முன்பும் சரி, இதற்குப் பின்பும் சரி மத்திய கிழக்குப் பகுதி கட்டிடக் கலையில் கல்லறை கட்டிடக் கலைக்கு இத்தகைய முதன்மை இடம் தரப்படவில்லை என்று துணிந்து சொல்ல முடியும்.

சிற்பக் கலை

அக்கேடிய சிற்பக் கலையின் தொடர்ச்சியாக அமைந்தது இந்தக் காலகட்ட சுமேரிய சிற்பக் கலை. இதற்கு சிறந்த உதாரணம் அரசன் குடியாவின் சிற்பங்கள். இந்த அரசனின் பல சிற்பங்கள் இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது. அவைகள் அக்கேடிய சிற்பக் கலையின் தாக்கங்களை கொண்டவைகளாக இருக்கின்றன. முற்கால சுமேரிய சிற்பங்களின் விறைப்புத் தன்மை இவைகளில் அறவே கிடையாது. மேலாடையை மீறிக்கொண்டு வெளித் தெரியும் உடல் பாகங்கள் இந்த காலகட்ட சிற்பக் கலைஞர்களின் உடல் கூற்றியல் புரிதலை வெளிப்படுத்துவதுடன் பார்வையாளர்களையும் கவரும்படி இருக்கிறது. குறிப்பாக வலிமை மிகுந்த தோள்களும், கைகளும் அவற்றின் தசைகளோடு கல்லில் சிறைவைத்ததைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. இந்த சிலைகளில் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

king gudiya

(அரசன் குடியாவின் சிலை. சுமார் நான்காயிரம் வருடங்களுக்கு முற்பட்டது.)

இந்த காலகட்ட புடைப்பு சிற்பங்கள் இப்பொழுது கிடைக்கப்பெறவில்லை.

ஓவியக் கலை

இந்த காலகட்டத்தைச் சேர்ந்த - இன்றைய நிலையில் பாதுகாக்கப்பட்ட - சுவர் ஓவியங்களாக நமக்கு கிடைப்பவைகள் மாரி நகரத்திலிருந்த இடிந்த அரண்மனை ஒன்றைச் சேர்ந்தவைகள். இன்வெஸ்டிடியூர் ஆப் சிம்ரிலிம் என்கிற ஓவியம் சிறப்பான ஒன்று. அரசன் சிம்ரிலிமை குறிக்கும் ஓவியத் தொகுதி இது.

simrlim paintings

(அசல் இன்வெஸ்டிடியூர் ஆப் சிம்ரிலிம் சுவர் ஓவியத் தொகுதி)

simrlim paintings model

(இன்வெஸ்டிடியூர் ஆப் சிம்ரிலிம் ஓவியத் தொகுதியின் நகல் உருவாக்கம்)

இஸ்தார் கடவுள், அரசன் சிம்ரிலிமிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கும் காட்சியை சித்தரிக்கும் ஓவியம். இங்கே இஸ்தார் கடவுள் குறித்த சித்தரிப்பு கவனிக்கப்படவேண்டிய ஒன்று. இடது கையில் வாளும், வலது காலை சிங்கத்தின் மீது வைத்திருக்கும் இஸ்தார் போர்க் கடவுளாக தெளிவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். தமிழர்களின் கொற்றவை இத்தகைய சித்தரிப்பு கொண்டவள் என்பது தற்செயலான ஒன்றாக இருப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த ஓவியத் தொகுதியில் முதன் முறையாக பெர்ஸ்பெக்டிவ் உத்தி மிகச் சிறிய அளவில் சுமேரிய ஓவியக் கலைஞரால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பான சுவர் ஓவியங்கள் பெரும் அளவிலும் ஓரளவு பாதுகாக்கப்பட்ட நிலையிலும் நமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பதால் இந்த ஓவியமே பெர்ஸ்பெக்டிவ் உத்தியின் தொடக்கமாக இருக்கலாம் என்று அனுமானமாக சொல்ல முடியும். இஸ்தார் மற்றும் மற்ற துணை கடவுளர்களின் தலையில் இருக்கும் கீரீடங்கள் போர்ஷார்டனிங் உத்தியில் வரையப்பட்டிருக்கிறது. ஆர்காயிக் கால கிரேக்க ஓவியர்களே, ஓவியங்களில் போர்ஷார்டனிங் உத்தியை அறிமுகப்படுத்தியவர்கள் என்று கலை வரலாற்று ஆராய்ச்சிகளில் சொல்லப்பட்டாலும் ஆர்காயிக் கால கிரேக்கர்களுக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே சுமேரிய ஓவியர்கள் இந்த உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதே வரலாற்று உண்மையாக இருக்கிறது.

(தொடரும்)

- நவீனா அலெக்சாண்டர்

Pin It