மந்தைவெளிக் கல் வழிபாடும் நம்பிக்கையும்
தமிழர் நாகரீகத்தில் பொங்கல் பண்டிகை முதன்மையானதாகவும், பண்பாட்டை கட்டமைப்பதாகவும் விளங்குகிறது. காரணம் உழவுக்குடிகளை நம்பித்தான் உலகமே இயங்குகிறது. அப்படிப்பட்ட உழவுக்கும், அதற்கான காரணிகளாக உள்ள உழவர்களையும், உழவுத் தொழிலில் முக்கியப் பங்காற்றும் கால்நடைகளையும் போற்றும் விதமாக தமிழர் திருநாளான, பொங்கல் திருநாள் அமைகிறது. இந்தத் திருநாள் மட்டும் தான், தொடர்ந்து நான்கு நாட்கள், அனைத்து தரப்பு மக்களையும், உள்டக்கிய, மாபெரும் விழாவாக, பாகுபாடுன்றி தங்கள் வாழ்விடங்களில் (குடியான பகுதிகளில்) அனைவரும் ஒன்று கூடி, குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடப்படும் மாபெரும் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழாவாக கொண்டாடப் படுகிறது. தமிழ்ச் சமூகத்தில் பொங்கல் விழா பற்றியும், அதன் வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகள் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.
ஆண்டு முழுவதும் தனக்காகவும், தன்னை சார்ந்துள்ள சமூகத்திற்காகவும் உழைக்கும் சமூகமாக உழவுச்சமூகம் இருந்து வருகிறது. அதனால் தான் உலகம் உழவனின் பின்னே இயங்குகிறது. அதுவே மனித உயிர்களுக்கான உணவை வழங்குவதில் முதன்மையாகிறது. உழவனை சிறப்பித்துக் கூறும் திருவள்ளுவர், பாரதியார் போன்றோர்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் - (குறள் -1033)
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை - (குறள் -1031)
'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’
என்றார் பாரதியார்.உழவின் மேன்மையையும் அதன் இன்றியமையாத நிலைகளையும் எடுத்துரைக்கின்றனர். எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் வயிற்றுப் பசியைப் போக்கி மனித இனத்தைக் காக்கும் நடமாடும் தெய்வங்களாக உழவர்கள் உள்ளனர். இதைத்தான் ‘ஒரு ஜான் வயிறே இல்லாட்டா, உலகத்தில் ஏதடா கலட்டா' என்று பாடினார் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அப்படிப்பட்ட உழவையும், உழவனையும் போற்றும் விழாவாக, உணவைத் தரும் உழவனுக்கும் அதற்குத் துணையாக விளங்கும் கால்நடைகளை மகிழ்விக்க, கொண்டாட எடுக்கப்படும் விழாவாக பொங்கல் திருவிழா உள்ளது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது முதுமொழி. அப்படிப்பட்ட பெருமைக்குரிய தை முதல் நாள் அன்று கொண்டாடும் விழாவே, பெரும் பொங்கல் என்று விவசாயகுடி மக்களால் சொல்லப்படும் பொங்கல் பிரதானமாக அமைகிறது, அப்படிப்பட்ட சிறப்புக்குரிய பொங்கல் நாளின் முந்நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது, போகி என்பது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கு ஏற்ப விடியற் காலையில். மூன்று, நான்கு, ஐந்து மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பழைய கோரைப் பாய், முரம், துடப்பம் (தென்னங்கீற்று மற்றும் தென்னந் துடப்பம், பூந்துடப்பம்) மற்றும் பனை ஒலை, துவரை செடி போன்றவை காயவைத்தது (துவரை மளார்) இவற்றை தீ வைத்து எரித்தல், தைமாதம் குளிர் காலம் என்பதால் தீமூட்டி குளிரைப்போக்கி, போகிப்பண்டிகையை வரவேற்கும் விதமாக பொங்கலோ பொங்கல், போகிப் பொங்கல் என தொடங்கும்.
இந்த அதிகாலையில் போகியும் போச்சு, பொங்கலும் போச்சு பொண்ணு தாடா ஓய் (மாமா) என முறைமாமன்களிடம் விளையாடும் வழக்கத்தை இந்தநாளில் பார்க்கலாம். அந்த அளவிற்கு இந்தப் போகிப்பண்டிகை கிராமங்களில் மிக உற்சாகமாக கொண்டாடுவர். சில இளைஞர்கள், சிறிய மேளம் போன்ற கொட்டு ஒன்றை கையில் வைத்து அடித்து போகியை வரவேற்பார்கள். போகி கொளுத்துதல், கொட்டு அடித்தல் போன்ற கலாச்சாரம் நகரங்களிலும் காணப்படுகிறது. மேலும் நாவிதர் சமூகம் ( அம்பட்டன், மருத்துவர்) அவர்கள் ஊர் எல்லைப்பகுதியில் வந்து இரன்டு சிறிய மேளம் அதாவது கொட்டு அடிப்பார்கள். அதேபோன்று பண்டாரம் என்ற சமூகத்தைச் சேர்ந்தவர் சங்கு ஊதிக்கொண்டு சிறிய தட்டை அடித்துக் கொண்டு விடியற்காலையில் 4 மணிக்கு பக்திப் பாடல்களை பாடிக்கொண்டே கிராமத்தைச் சுற்றி வருவார்கள். பிறகு இதற்கு ஊதியத்தை (கூலி அல்லது மேரை) கானும்பொங்கல் அன்று வீடுவீடாக சென்று பெறுவார்கள். பொதுவாக போகியை ஒரு பீடை நாளாக நாட்டுப்புற மக்கள் கருதுகின்றனர். பழைய பொருள்களை தீயில் போட்டு எரிப்பதால், பீடை கழிவதாகவும், குறிப்பாக கெட்டவைகள் விலகுவதாகவும், புதியன வரும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்.
போகிப்பண்டிகையை அடுத்த மறுநாள், தை முதல் நாள், பெரும்பொங்கல், உழவன் ஆண்டு முழுவதும் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பலன்களுக்கான நன்றிக்கடனாக உழவுத் தொழிலுக்கும், உழவர்களோடு முக்கிய அங்கம் வகிக்கும் இயற்கை சூரியனுக்கும் வழிபாடு நடத்தி படையலிடுவார்கள். இந்தப்படையல் முழுவதும் உழவோடு ஒன்றிய பொருட்களை கொண்டே அமையும். பசுஞ்சாணத்தால் செய்த இரண்டு கூம்பு போன்ற வடிவங்களை (பிள்ளையார்) செய்து, வாசலில் வைத்து, அவற்றிற்கு மஞ்சள், குங்குமத்தால் பொட்டு வைத்து, நிலத்தில் விளைந்த காய்கறிகள் (கத்தரிக்காய், வல்லிக்கிழங்கு, அவரைக்காய், வாழைக்காய், பூசணிக்காய், மொச்சை, காராமணி, கரும்பு) வாழைப்பழம், மஞ்சள் கிழங்கு, வெற்றிலைப்பாக்கு, வேப்பிலை, மா இலை, பெரண்டை, பூலாப்பூ, தேங்காய் இவற்றை வைத்து அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் சூரியனுக்கு படையலிடுவர்.
இதனைத்தொடர்ந்து சூரியன் உதிக்கும் நேரத்தில், வீட்டின் வாசலின் நடுவில் பள்ளம் (ஒரு அடி ஆழம் இரண்டு மண் பானைகள் வைக்கும் அளவில்) தோண்டுவார்கள். நஞ்சை நிலத்தில் இருக்கும் களிமண் 50 சதவீதம் புஞ்சை நில செம்மண் 50 சதவீதம் கொண்டு வந்து, இரண்டையும் தண்ணீர் விட்டு நன்கு குழைத்து, பக்குவம் பார்த்து, உருளை வடிவில் 5, 7, 9 என ஒற்றை இலக்க எண்களில் பிடித்து வைப்பார்கள். (இது தற்போது 5 கட்டிகள் மட்டுமே அதிகமானோர் பிடிக்கின்றனர்) அந்த மண் உருண்டைகளுக்கு, பசுவின் சாணம் கொண்டு பூசி மொழுகி, அந்த மண் உருளைகள் மீது, அரிசி மாவு கோலமிட்டு, கோலத்தை சுற்றி செம்மன் கோடுகள் போட்டு அழகுபடுத்துவார்கள். அதற்கு மேல் களிமண்ணால் செய்த 5 உருண்டைகளை தெருவில் (வீட்டின் பிரதான வாயில் எதிர்புறம்) தோண்டிய பள்ளத்தின் மீது வைப்பார்கள். பிறகு அந்த உருளைகள் மேல் குயவர் சமூகத்தில் இருந்து பெற்ற மண் பானைகள் இரண்டையும் (பெரியது ஒன்று, சிறிது ஒன்று) என வைத்து, அடுப்பிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், கற்பூரம் ஏற்றி அடுப்பை பற்றவைத்து, பானைகள் வைக்கப்படும். அதன் பிறகு பானைகள் இரண்டிலும், வைக்கோல் சிறிய துண்டு போடுவார்கள். அது கருகும் தருவாயில் பானையில் பசும்பால் ஊற்றுவார்கள். பால் பொங்கும், அப்போது, பொங்கலோ பொங்கல் என்று உழவனின் குடும்பம் மகிழ்வோடு முழங்கும். இதைத்தான் கிராமத்தில் உள்ள அனைவரும் என்னைய்யா உங்கள் வீட்டில் பால் பொங்கியதா என ஒருவருக்கொருவர் கேட்டு, பொங்கியது எனக்கூறி மகிழ்வதோடு, பொங்கல் கொண்டாடியதை உறுதி செய்து கொள்வார்கள். அப்படி பொங்கல் பண்டிகை, இறப்பு உள்ளிட்ட எதோ சில காரணங்களால் கொண்டாடவில்லை என தெரிந்தால், பொங்கல் கொண்டாடிய உழவனின் குடியில் இருந்து பொங்கல் மற்றும் உணவு வகைகள் பொங்கல் கொண்டாடாத உழவனின் வீட்டிற்கு கொடுத்து அவர்களது குழந்தைகளை மகிழ்விப்பர்.
பொங்கலிடுதல் என்பது தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக உழைக்கும் தங்களது நிலத்தில் விளைந்த, பச்சரிசியை புதிய பானைகளில், அதன் கொள்ளளவிற்கு ஏற்றாற்போல் போட்டு, அதனை பனமரத்து ஒலை பட்டை அல்லது பால் மரங்கள் (ஆலமரக்கிளை) ஒன்று வெட்டி துடுப்பு போன்று உருவாக்கி கொண்டு பொங்கல் பானை பொங்கும் போது அதனைக்கொண்டு துழாவுவார்கள். அரிசி உலையிட்டு பொங்கியதும் மீண்டும் பொங்கலோ பொங்கல் என்று குடும்பத்தினர் உற்சாகத்துடன் முழங்குவர். பானைகளை இறக்கி வைக்க வைக்கோலால் செய்த புதிய பிரமனை வைத்து, அந்த பிரமனை வளையத்தில் உள்ள காலி இடத்தில் பசுவின் சாணத்தை நிரப்பிய பிறகு, பொங்கல் வைத்த பானைகளை இறக்கி வைப்பார்கள். இறக்கி வைக்கப்பட்ட பானைகளை தண்ணீரால் கழுவி
மஞ்சள் பூசி, மூன்று பட்டை திருநீரை பானைகளின் மூன்று பக்கங்களிலும் பூசப்படும். பிறகு குங்குமப் பொட்டு திருநீறு பட்டைக்கு மையத்தில் வைப்பார்கள். காலையில் பசுஞ் சாணத்தால் செய்த பிள்ளையாருக்கு படைத்த காய்கறி மற்றும் தானியங்கள் கத்தரிக்காய், வல்லிக்கிழங்கு, அவரைக்காய், வாழைக்காய், பூசணிக்காய், மொச்சை, காராமணி ஆகியவற்றை சமைத்து பூசணி இலையில் படையலிட்டு சூரியனுக்கு படையலிடுவர், அப்போதும் பொங்கலோ பொங்கல் என கூறுவர். படைத்த பொங்கலில் சிறிதளவு ஒரு செம்பில் எடுத்து போட்டு, கொஞ்சம் நீரை ஊற்றி, வேப்பிலை கொத்தைக்கொண்டு உழவு நிலம் முழுவதும் பொங்கலோ பொங்கல் எனக் கூறிக்கொண்டே அந்த தண்ணீரை வீடு மற்றும் உழவு நிலத்தில் வீசுவார்கள். அந்த தண்ணீர் நிலத்தில் பட்டால் விவசாயம் செழிக்கும் என்பது உழவுக்குடி மக்களின் நம்பிக்கை. பிறகு குடும்பத்தோடு படையலிட்ட பொங்கல் மற்றும் காய்கறிகளை உண்பார்கள். மண்ணால் செய்த பெரும் பானையில் பொங்கல் வைப்பதால் பெரும் பொங்கல் என்றும் பொங்கல் என்ற தை மாதத்தின் முதல்நாள் வருவதால் தைப்பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது.
பெரும்பொங்கல் முடிந்து மறுநாள் மாட்டுப்பொங்கல். உழவனுக்கும் உழவிற்கும் முதன்மையாக விளங்கும் கால்நடைகளுக்கான முக்கிய விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதுதான் கிராமங்களில் மிகவும் விமர்சையாக நடைபெறும். ஆண்டு முழுவதும் நிலத்திலும், வயலிலும், சேற்றிலும் கால் வைத்து உழைக்கும் உழவனுக்காகவும், உழவு செய்யும் நிலத்திற்கு, உரமாக சாணத்தை கொடுத்தும், விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு, மாட்டு வண்டிகள் மூலமாக கொண்டு செல்லவும், உழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாக விளங்கும் காளை உள்ளிட்ட கால்நடைகளை போற்றும் மாட்டுப்பொங்கல் விழாவாக உழைக்கும் குடிகள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
அப்படி கால்நடைகளுக்கான, ஒரு விழாவாக விளங்கும், இந்த மாட்டுப் பொங்கல் அன்று, பொங்கல் அன்று போலவே, அதிகாலை வீட்டின் வாயிலில் பசுஞ்சாண பிள்ளையார் அருகே படையலிடுவர். பிறகு கால்நடைகள் கட்டப்படும் கொட்டகைகளில் தூய்மை செய்து, அங்கே பசுவின் சாணத்தை நீரில் கலந்து தெளிப்பார்கள். மாடுகள் கட்டிவைக்கும் கல்தூண்களை அல்லது மரக்குச்சிகளைக் கொண்டு முனைகளை கூர்மையாக சீவி தரையில் அடிக்கப்படும் குச்சிகள், இதனை (மொளக்குச்சி என்றும் அழைப்பதுண்டு), கால்நடைகள் கட்டப்படும் கொட்டகையில் பசுஞ்சாணத்தால் செய்த இரண்டு கூம்பு வடிவ பிள்ளையார் செய்து, ஒவ்வொரு தூணிடமும் வைத்து அவற்றிற்கு மஞ்சள் குங்குமத்தால் பொட்டு வைக்கப்படும். பிறகு கால்நடைகளை, நீர் நிறைந்த குட்டை, ஏரி, கண்மாய், நீர் இருக்கும் பகுதிகளுக்கு கூட்டிச்சென்று குளிப்பாட்டுவார்கள்.
கால்நடைகள் அலங்காரம் அன்று முக்கியத்துவம் பெறும். குறிப்பாக கால்நடைகளின் கொம்புகளை சீவுவார்கள், பிறகு கொப்பி எனப்படும் பித்தளையால் செய்யப்பட்ட அணிகலனை, சீவப்பட்ட கொம்பின் முனையில் அணிவிப்பார்கள். இது காளைகளுக்கு மட்டுமே அணிவிக்கப்படும் வழக்கமாகும். சீவப்பட்ட கொம்பு அழகாக இருப்பதற்காகவும், அதேநேரத்தில் கொம்புகளின் கூர்மையால் தலையை காளைகள் அசைக்கும் போது யாருக்கும் பாதிப்பு நேராமல் இருக்கும் என்பதற்காக பாதுகாப்பிற்கான அணிகலன் என்றும் இதனை கூறலாம். கழுத்தில் ஜல் ஜல் என ஒசை வரும் மணிகளால் கோர்க்கப்பட்ட தோல் வளையம் கட்டுவர், இவை கட்டப்படுவதால் மாட்டு வண்டிகளில் இரவு நேரங்களில் பயணிக்கும் போது கொப்பியில் உள்ள கொலுசு மற்றும் கழுத்து மணி ஒசையின் சத்தம், எதிரே வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கையாகவும் அமையும்.
பிறகு காளைகளின் மார்பு பகுதியில் கருப்பு நிறக்கயிறு கட்டப்படும், கட்டும் இடத்தில் உள்ள சுங்கு வாடாமல்லி பூ நிறத்தில் இருக்கும். இது அலங்கரிக்கப்படும் கால்நடைகளுக்கு அழகு மட்டும் இல்லை. கண்ணாறு ஏற்படாமல் இருக்க அணிவிக்கப் படுவதாக உழவுக்குடி மக்கள் நம்பிக்கையாக உள்ளது. பிறகு கொம்புகளுக்கு வண்ணம் பூசுவர், பூசப்பட்ட வண்ணத்தின் மீது மூன்று அல்லது ஐந்து இடங்களில் மஞ்சள் வைத்து குங்குமப் பொட்டு வைப்பார்கள். நெற்றிப்பொட்டு, கொண்டை மற்றும் முதுகுப்பொட்டு (நெற்றியில், முதுகு, சிமில் அல்லது கொண்டையில் பொட்டு வைக்கும் இடம்போன்ற சுழி போல இருக்கும்), நான்கு கால்களின் முன் பகுதிகளிலும் மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்கப்படும். மா, வேப்பிலை கொத்து மற்றும் பூலாம்பூ, பெரண்டையால் மாலை செய்து அதில் ஒரு அரிசி மாவால் செய்த அடை ஒன்று கோர்த்து அதனை கால்நடைகளின் கழுத்தில் கட்டுவார்கள். பிறகு படையலுக்காக செய்த உணவான மண்பானை பொங்கல், பூசணிக்காய் மற்றும் மொச்சை, காராமணி உள்ளிட்ட தானியங்களால் செய்யப்பட்ட உணவை கால்நடைகளைக் கட்டும் கொட்டகைகளில் படையலிட்டு கால்நடைகளுக்கு உழவர்களே அன்பாக ஊட்டிவிடுவார்கள். தன்னைக் காத்து நிற்கும் கால்நடைகளை தினம் தினம் சாமியாக பார்த்தாலும் அன்றைய தினம் சாமியாக வழிபடுவர், கால்நடைகளை தனது குழந்தைக்கு நிகராக போற்றுவார்கள். கால்நடைகளுக்கு உணவு கொடுத்த பிறகுதான் உழவர்களின் குடும்பத்தினர் அன்றைய தினத்தில் சாப்பிடுவார்கள். இதனையடுத்து மந்தைவெளியில் மாடு விரட்டுதல் நிகழ்வு மாலை 5:30 -7 இரவு மணிக்குள் நடைபெறும்.
உழவுத்தொழில் சமூகத்தில் மந்தைவெளியில் மாடு விரட்டுதல் முக்கியச் சடங்காக பார்க்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தலித் சமூகத்தினர் 5 பேர் ஊரைச்சுற்றி பறையைக் கொண்டு இசைத்தவாறே வருவார்கள். பிறகு ஊரில் உள்ள உழவர்களின் குடும்பம் புத்தாடை அணியும். பிறகு அலங்கரிக் கப்பட்ட கால்நடைகள் மற்றும் காளைகள் பூட்டிய மாட்டு வண்டிகளில் உழவர்களின் குழந்தைகள் புத்தாடை அணிந்து அமர்ந்து செல்வார்கள். கிராமத்தில் உள்ள உழவர்கள் மற்றும் குடும்பத்தினர் புத்தாடை அணிந்து அனைவரும் மந்தைவெளிக்கல் அருகே ஒன்று கூடுவார்கள்.
மந்தவெளிப் பகுதி என்பது ஊர் (கொசப்பட்டு) தொடக்கத்தில் மாரியம்மன் கோவில், திரெளபதியம்மன் கோயில், பிள்ளையார் கோவில் மற்றும் சிவன் கோவில் சுற்றி இருக்கும். அந்த இடைவெளிப் பகுதியில் மைதானம் உள்ளது. ஊர் மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளாக வளர்த்த அலங்கரிக்கப்பட்ட கால்நடைகளோடு ஒரே இடத்தில் கூட்டுவார்கள். மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மந்தைவெளி நடுகல்லிற்கு (எந்த சிற்பமும் இல்லை, நட்ட நிலையில் உள்ள கல் மட்டுமே இருக்கும்) அதற்கு மாலை சூட்டுவர். மந்தை வெளிக்கல், மந்தை என்றால் கூட்டம் என்பது பொருள். வெளி என்றால் சமவெளிப்பகுதியைக் குறிக்கும். கால்நடைகளை கூட்டும் சமவெளிப் பகுதியில் உள்ள கல்லை குறிக்கும். இதுவே மந்தை வெளிக் கல் என்று அழைக்கப்படுகிறது. ஊரில் உள்ள கால்நடைகளை மேய்த்து, காத்து, பராமரித்து வந்த இடையர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு வீட்டார் செய்து வந்த பச்சரிசிப் பொங்கல் அந்த மந்தைவெளிகல் சிலைக்கு படையலிடுவார்கள். கால்நடைகளை வளர்ப்பதிலும் பாதுகாப்பதிலும் இடையர் சமூகம் இருந்து வந்துள்ளது என்பதையும் அதற்காக அந்த சமூக மக்களுக்கு கொடுக்கப்படும் ஒரு அங்கீகாரமாக அதனைப் பார்க்க முடிகிறது.
பிறகு ஊரில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்து ஒரு பித்தளை சொம்பு நிறைய தண்ணீர் மற்றும் சிறிது வீட்டில் செய்த பொங்கல் அதில் இடுவர். மேலே வேப்பிலை, மா இலைக் கொத்துக்கள் செருகி மந்தைவெளி கல் முன்பு வைக்கப்படும். அனைவரது வீடுகளில் இருந்து கொண்டு வரும் கற்பூரம் ஒரே தட்டில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் வைப்பார்கள். பிறகு கற்பூரம் ஏற்றப்படும். அப்போது பறை இசைக்கப்படும். அனைவரும் மந்தைவெளிக்கல்லை வணங்கிவிட்டு, செம்பில் உள்ள, பொங்கல் நீரை கால்நடைகள் மீது தெளித்தவாறே மூன்று சுற்று சுற்றி வருவர். இதனை உழவுக்குடியில் உள்ள ஆண்கள் குறிப்பாக 15 முதல் 50 வயது வரையில் உள்ளவர்கள் பொங்கலோ பொங்கல் எனக் கூறிக்கொண்டே தெளிப்பார்கள். புத்தாடை உடுத்திக்கொண்டு நிற்கும் முறைப்பெண்கள், முறை மாமன்கள் மீது அதிகமாக அந்த நீரைத் தெளிப்பார்கள். தெளிக்கப்படும் பொங்கல் நீரால் கால்நடைகளுக்கு நோய் வராது என்ற நம்பிக்கை உள்ளது. அன்று மந்தைவெளிப் பகுதி முழுவதுமாக விழாக்கோலம் பூண்டு, குதூகலத்தோடு கொண்டாட்டமும் நிறைந்திருக்கும்.
மந்தைவெளியில் பொங்கல் நீர் இரைத்த பின்னர், நீர் இரைத்த நபர்கள் அனைவரும், குளக்கரைக்கு சென்று பித்தளை செம்பு நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து, திரெளபதி அம்மன் கோவிலில் உள்ள வில்வ மரத்திற்கு ஊற்றுவார்கள். அப்போது பறை இசை வேகமாக அடிக்கும். மாட்டுப்பொங்கல் விழா சிறப்பாக முடிவுற்றதாக பறை ஒலியோடு அருகே உள்ள மற்ற கிராமங்களுக்கு கேட்கும் அளவில் ஒலி எழுப்புவர். இதனை அடுத்து பொங்கல் நீர் இரைத்த அனைவரும் மாரியம்மன், திரெளபதி அம்மன், பிள்ளையார், ஈஸ்வரன், வேம்புலியம்மன் ஆகிய கோவில்களில் கற்பூரத்தை ஏற்றி வணங்குவார்கள். அதற்குப் பிறகு ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பறையை அடித்துக்கொண்டே முன்னே செல்லுவார்கள், அவர்களின் பின்னால் பொங்கல் நீர் இரைத்த உழவர்களும் இளைஞர்களும் தங்களது வீடுகளுக்கு செல்வார்கள். கடைசி வீட்டிற்கு செல்லும் வரை பறை அடித்துக்கொண்டே செல்வார்கள்.
மந்தைவெளியில் இருந்து சென்ற கால்நடைகள் அதேபோன்று மாட்டு வண்டிகளும் அங்கிருந்து புறப்பட்டு வேம்பாத்தம்மன் கோவில் வரை சென்று அதனைச் சுற்றி வந்து வீடு சேர்வார்கள். வீடு சேர்ந்த பிறகு கால்நடைகளுக்கும் மந்தைவெளிக்கு சென்று திரும்பியவர்களுக்கு வீட்டில் உள்ள பெரியோர் வெள்ளைப் பூசணிக்காய், எலுமிச்சை பழம் அகியவற்றால் சுற்றிப்போடுவார்கள், நலங்கு (மஞ்சள் சுண்ணாம்பு கலந்த சிகப்பு நிரம் கொண்டது) நீரால் ஆரத்தி எடுப்பர். சூரைத்தேங்காய் உடைக்கப்படும். இவை எல்லாம் கண்ணேறு பட்டுவிடக் கூடாது என்பதற்காக வீட்டிலுள்ள பெரியவர்கள் அவர்களுக்கு சுற்றிப் போட்டு கண்ணேறு கழிப்பார்கள். மேலும் மந்தை வெளியில் மாடுகளும் பொங்கல் நீர் இரைத்தவர்களும், புறப்பட்ட பிறகு அந்த மந்தைவெளிப்பகுதியில் உழவர்களின் மனைவி மார்கள் விழுந்து வணங்குவார்கள். கால்நடைகள் போட்டுச் சென்ற சாணத்தைக் கொண்டு வந்து தங்கள் வீட்டில் வாயிலில் இருபுறங்களிலும் ராக்காசி என்று கூறுகிறார்கள் ஒரு குறியீடு வரைவார்கள். மந்தைவெளியில் இருந்து கொண்டுவந்த சாணத்தை வீட்டில் ஒரு குறியீடு வரைந்து வைத்தால் அந்த ஆண்டு விவசாயம் வளமாக இருக்கும் என்பது அந்த உழவுக்குடிகளின் வளமான நம்பிக்கையாக உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் காணும் பொங்கல். அன்றைய தினம் வயது முதிர்ந்த குடும்ப உறவுகளான தாத்தா பாட்டி, தாய் தந்தை காலில் விழுந்து வாழ்த்து பெறுவார்கள். அவர்களை வாழ்த்தி தங்கள் கையில் இருக்கும் பணத்தை அவர்களுக்கு பொங்கல் மரியாதையாக கொடுப்பார்கள். இதற்குப் பெயர்தான் காணும் பொங்கல். சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கால்நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் தினத்தன்று செய்தது போல ஆடு மற்றும் மாடு இரண்டும் மேய்ச்சல் பகுதியில் வைத்து அந்த சமவெளி நிலப்பரப்பு பகுதியில் பொங்கலிட்டு படையல் வைத்து சில குறிப்பிட்ட இனக்குழு சமூகம் குறிப்பாக இடையர் சமூக மக்கள் மட்டும் இதனை நடத்தி வந்தனர். தற்போது அதற்கென தனியாக பெரிய அளவில் கால்நடைகளைக் கூட்ட இடம் இல்லாமல் போனதாலும், கால்நடைகளின் எண்ணிக்கை கணிசமாக தற்காலத்தில் குறைந்து விட்டதாலும், தற்போது அந்த நடைமுறை வழக்கொழிந்து காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையால் பாய், முரம், துடப்பம் மற்றும் பானை உற்பத்தி அதிகரிக்கும். அதனை உற்பத்தி செய்யும் அந்த சமூக மக்களின் வாழ்க்கை செழிக்கும். பறை அடித்தல் மூலம் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் காக்கப் படுவதோடு, அதை இசைக்கும் கலைஞர்கள் வாழ்வு புதுப்பொலிவு பெறும். வருங்காலத் தலைமுறையினர் உழவனின் கலாச்சாரத்தை அறிய பொங்கல் விழா குறித்த இந்த கட்டுரை உதவும் என நம்புகிறேன்.
இந்த வழிபாட்டுமுறை இனக்குழு சமூகத்தில் இருந்து தொடர்ந்து கொண்டாடுவதைக் காணமுடியும். பறை இசைத்தல், கால்நடைகளைப் பாதுகாத்தல், பயிர்த்தொழில் செழுமைக்கான வழிபாடு இவை அனைத்தும் மனிதனுக்கும் கால்நடைகளுக்கும் உழவிற்கும் உள்ள நெருக்கத்தை அறிய முடிகிறது. இயற்கையை மகிழ்வித்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் சூரியனுக்கு படையல். நடுகல் வழிபாடு இதில் இடம்பெறுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முதுமொழியின் கூற்றிற்கு ஏற்ப போகியும், உழவனின் மேன்மைக்காக பெரும் பொங்கலும், கால்நடைகளை மகிழ்விக்க மாட்டுப் பொங்கலும், மூத்தோர் வழிபாட்டிற்காக காணும் பொங்கலும் என பொங்கல் பண்டிகை இனக்குழு மக்களின் வழிபாட்டு நீட்சியாகவும் தமிழர் பண்பாட்டின் எச்சமாகவும் நீள்கிறது.
- முனைவர் கோ.ஜெயக்குமார்