தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சியில் நாட்டுப்புற இலக்கியத்திற்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவ்வகையில் மண் சார்ந்த மக்களின் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் அதற்குரிய தன்மைகளோடும் மாண்புகளோடும் காலங்காலமாகப் பறைசாற்றி நிற்பதில் பெரும்பங்கு உண்டு. மக்கள் இலக்கியமாகத் திகழுகின்ற அவற்றில் கதைப்பாடல்கள் ஒருவகையாக அமைந்து, மேலும் அது வளர்ச்சி நிலையை அடைய துணைபுரிகின்றன. மண்ணின் வீரகாவியங்களாகப் போற்றப்படுகின்ற கதைப்பாடல்களானது சமூகத்தின் அனைத்துக் கூறுகளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கான இன்றியமையாத காரணியாகவும் விளங்குகின்றன. கதைபொதிந்த பாட்டாக அமைகின்ற இவற்றில் நாட்டுப்புறம் சார்ந்த பல வீரநாயகர்களின் வரலாறுகளும் அவற்றை ஒட்டியமைந்த மண் மணம் மாறா நிகழ்வுகளும் மென்மேலும் பேசப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இக்கருத்தாக்கங்களின் அடிப்படையில் மம்மட்டியான் கொலைச்சிந்தில் புலனாகும் கதைப்பாடல்களின் தன்மைகளையும் அவற்றின்வழி அறியலாகும் தொன்மரபுகளையும் விளக்குரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கொலைச்சிந்தின் பெயர்க்காரணம்
தமிழில் உள்ள கதைப்பாடல்கள் அதன் தன்மைகளுக்கு ஏற்பவும் அது இயங்கும் களத்தின் அடிப்படையிலும் பல்வேறு வகைப்பாட்டிற்கு உட்பட்டதாக இருக்கின்றன. கதைப்பாடல்களைச் சேகரித்து அதனை ஆய்வுநிலைக்கு உட்புகுத்திப் பார்க்க, அம்மானை, பாட்டு, ஏற்றம், கும்மி, குறவஞ்சி, மசக்கை, கீர்த்தனை, சண்டை, யாகம், குறம், சிந்து எனப் பெயரமைவில் மாற்றம் பெறுகின்றன.
உண்மையாக நடந்த நிகழ்வுகளைக் குறிப்பாகக் கொலை நிகழ்வுகளை மையப் பொருண்மையாகக் கொண்டு முச்சீர்க்கொண்ட சிந்தடிகளால் பாடப்படுவதால் கொலைச்சிந்து எனப் பெயர் வடிவம் பெறுகின்றது. “கதைப்பாடல்களில் சில ஒரே பாடலில் பலவிதமான யாப்புகள் அமைந்துள்ளன. இவைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது சிந்து, நொண்டிச்சிந்து, திருகு சிந்து, சீர் சிந்து, ஈரடி சிந்து, விருத்தம், வெண்பா, தரு, தடை, பல்லவி, சரணம், துடுக்குச்சீர், இரட்டைச்சீர், நாலுசீர், அஞ்சுசீர், ஏழுசீர், சந்தம் போன்று பலவகையான பாவகைகள் நிறைந்துள்ளன.”1 கொலைச்சிந்தின் பாடுபொருள் தன்மைகளானது பெரும்பாலும் கொலை நிகழ்வுகளைச் சார்ந்து அமைவதுடன் சில இடங்களில் தற்கொலை நிகழ்வுகளை உட்பொருளாகக்கொண்டே அமைகின்றன. இக்கருத்தாக்கத்தின் அடிப்படையில் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்பில் அமைந்துள்ள மம்மட்டியான் கொலைச்சிந்து வீரத்தை முதன்மைப் பாடுபொருளாகக்கொண்டு பல அடுக்கடுக்கான கொலை நிகழ்வுகளால் பின்னப்பட்டுள்ளது. மேலும், மேச்சேரி பகுதிக்குரிய சொல் வழக்குகளும், நம்பிக்கைகளும் இதில் பயின்று வந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது. மம்மட்டியான் கொலைச்சிந்தினைப் போன்று மகாத்மா கொலைச்சிந்து, ஆளவந்தார் கொலைச்சிந்து, செம்புலிங்கம் கொலைச்சிந்து, தற்கொலைச்சிந்து போன்றவையும் பெயரமைப்பில் ஒத்துப் போவதையும் காணமுடிகின்றது.
மம்மட்டியான் கொலைச்சிந்தின் சுருக்கம்
சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி பகுதியை மையமாகக்கொண்டு வாழ்ந்த மம்மட்டியானை முன்னிலைப்படுத்திக் கதைப்பாடல் ஒன்று உருவாக்கம் பெற்றிருக்கின்றது. மம்மட்டியானின் கதை இன்றும் அங்கு வாழும் மக்களிடையே வாய்மொழி மரபாக வழங்கப்பட்டு வருவதும், இங்குச் சுட்டிக்காட்டுவதற்குரிய ஒன்றாகும். இருப்பினும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் முயற்சியில் உருவான மம்பட்டியான் திரைப்படம் வெளியான பிறகு தமிழகமெங்கும் மம்பட்டியான் கதைப்பாடல் இன்னும் பரவலாக்கம் பெற்றது என்று சொல்லலாம். மம்மட்டியான் கொலைச்சிந்து பாடலை கே. கிருட்டிணசாமி என்பவர் பாடியதன் அடிப்படையில் மம்மட்டியான் வரலாற்றை அறிந்துகொள்ளவும் அதன் கதையமைப்பில் பொதிந்துள்ள நாட்டுப்புறத் தன்மைகளைத் தெளிந்து கொள்ளவும் முடிகிறது.
(மம்மட்டியான் அவரின் உறவினர்களுடன்)
மேச்சேரி என்னும் கிராமத்தில் பங்காளிகள் இடையே ஏற்பட்ட கோவில் தகராறில் இருந்து இக்கதையானது தொடக்கம் பெறுகின்றது. தகராறு காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒருநாள் மம்மட்டியான், தம்பி ஊமையன், மம்மட்டியானின் தந்தை ஆகியோர் தருமபுரியிலிருந்து வந்துகொண்டிருக்க அவருடைய பங்காளிகள் மம்மட்டியானின் தந்தை கண்ணைக் குத்தியெடுத்து அவரைப் பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி கொலை செய்து விடுகின்றனர். மம்மட்டியானும் அவனது தம்பியுமான ஊமையனும் அவர்களிடமிருந்து தப்பித்து அங்கு நடந்த கொடூரத்தைத் தாயிடம் கூறிவிடுகின்றனர். பிறகு, அவனின் தாய் கூறிய சத்தியத்தின் அடிப்படையில், தன் தந்தையைக் கொன்ற பங்காளிகளைப் பழி வாங்குவதற்காக மம்மட்டியான் தனது நண்பர்களான சுண்டக்காயன், சாமிக்கண்ணு, ரத்தினவேலு, சுப்பிரமணியம், சின்னன் தம்பி ஆகியரோடும் தம்பி ஊமையனோடும் மாதேஸ்வர மலைப்பகுதிக்குச் செல்கின்றான். பிறகு, அங்குள்ள பத்திரகாளி கோவிலில் பூசைசெய்து தனது பகைவர்களான ஒன்பது பேரையும் கொல்லுவதற்குச் சபதம் எடுத்துக்கொள்கின்றனர்.
“தகப்பன் உயிர்போன பின்பு தங்குமடா நம் உயிரு
தகப்பன் உயிர்போன பின்பு தங்குமடா நம் உயிரு
பகையானி வர்க்கங்களை பழிக்குப்பழி வாங்கவேணும்”;
நீண்டநாள் கழித்து நடைபெற்ற மேச்சேரி மாரியம்மன் கோவில் திருவிழாவில் குழுமியிருக்கும் கூட்டத்தில் ஒளிந்துகொண்டு மின்விளக்கை அணைத்துப் பகைவர்களான வைத்தியக் கவுண்டர், தம்பி வேலாயுதம், சின்னக்குட்டி, முத்துசாமியார், சுப்பிரமணியம், அய்யண்ணன், பரமசிவன், பச்சியண்ணன் ஆகிய ஒன்பது பேர்களையும் கொலைசெய்து அவர்களுடைய வீடுகளுக்குத் தீவைத்து ஓடி விடுகின்றனர். பிறகு, மாதேஸ்வர மலைப்பகுதியில் ஒளிந்துகொண்ட மம்மட்டியான் மற்றும் அவர்களுடைய கூட்டாளிகளுக்கும், காவலர்களுக்கும் ஒரு ஐந்து வருடங்களாகச் சண்டை நடந்து வருகின்றது. மம்மட்டியானின் கூட்டாளிகளும், அவனுடைய தம்பியும் அடுத்தடுத்த நிலைகளில் இறந்துவிட மம்மட்டியான் தனித்துவிடப்படுகின்றான். தனது காதலியைச் சந்தித்து வெளியூருக்குச் செல்லத் திட்டமிட அவனுடைய காதலி நல்லமாள், தன் குடும்பத்தாரின் அனுமதியைப் பெறும்படி வேண்டுகிறாள்.
“அண்ணன் தம்பி தாய் தகப்பனுண்டு - நீங்கள்
அவர்களை நேரில் போய் கண்டு
உங்கள் ஆசையச் சொல்லிக் கேளு - அப்புறம்
அவர்களோட இஷ்டம் அல்லால் கஷ்டம்”
அதன் பொருட்டு நல்லமாளின் அண்ணனான கருப்பண்ணனை மம்மட்டியான் ஒரு மறைவிடத்தில் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்க, காவலர்கள் அவனைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர்.
நாட்டுப்புற மரபுகள்
கதைப்பாடல்களானது அதன் இயங்கு இடம், பொருண்மைச் சார்ந்து பல்வேறு பண்புகளைப் பெற்றிருக்கின்றன. மாக் எட்வர்ட் லீக், நிகார்டு, பிரிஸ்பெர்லி, சோமர் வில்லே போன்றோர் கதைப்பாடல்களின் பண்புகளை ஆய்ந்துள்ளனர். அவர்களில், பிரிஸ்பெர்லி கதைப்பாடல்களின் இயல்புகளை முதன்மைப் பண்புகள், துணைமைப்பண்புகள் என இருவகைப்படுத்தி சில காரணிகளைப் பட்டியலிடுகிறார். ‘முதன்மைப் பண்புகளாகச் செய்யுள் வடிவம், எடுத்துரைக்கப்படுவது, வாய்மொழிமரபு, பொதுரஞ்சகத் தன்மை, நோக்கம், எளியமொழி, எழுதுவதற்கு அவ்வளவு எளிதல்ல, பொதுமைப்பண்பு என்றும் துணைமைப் பண்புகளாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் விவரித்தல், உண்மையாக நடந்த நிகழ்வை அடிப்படையாக வைத்தல், வட்டாரக் கரு, வீரப்பண்புக்கு முக்கியத்துவம், எளிய பாத்திரப்படைப்பு, எவரும் கதைப்பாடலின் கதாநாயகன் ஆகலாம், உரையாடல், திரும்பத் திரும்ப வரல்’2 ஆகிய எண்வகையையும் கூறுகின்றார்.
மம்மட்டியான் கதையானது செய்யுள் வடிவத்துள் ஒன்றான சிந்து அமைப்பில் பாடப்பெற்றிருந்தாலும், இடையிடையே மக்களின் புரிதலுக்கு ஏற்ப, வசனங்களை அடுக்கிச்சொல்லும் மரபும் பின்பற்றப்பட்டு வந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. இரண்டு மற்றும் மூன்று வரிகளால் ஆன சிந்துமுறை இதில் பயன்படுத்தப்பட்டும் அதற்கேற்ற லாவணிமெட்டு, வளையல் சிந்துமெட்டு, சந்த வண்ண சிந்துமெட்டு, கும்மிமெட்டு போன்றவையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. ரெண்டு, ஊத்துக்கல், டுமில், சேதி, பொண்ணு, செத்திட்டான், மாண்டுவிட்டார் போன்ற பேச்சுவார்த்தைகள் இடையிடையே பயின்று வந்துள்ளதன் அடிப்படையில் மம்மட்டியான் கதை வாய்மொழி மரபிற்கு உட்பட்டதாக இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
மக்கள் இயல்பாகப் பேசும் மொழிகளில் மம்மட்டியான் கதைப்பின்னலானது அமைந்துள்ளது. மேலும் பெரும்பான்மையான வரிகள் இயைபுத் தொடையாகப் பயன்படுத்தப்பட்டு அதற்குரிய ஓசைநயங்களோடு எடுத்தாளப்பட்டுள்ளது. இதனை மம்மட்டியான் பகைவர்களைக் கொன்றுவிட்டு மறைமுக இடத்திற்குச் சென்றுள்ளதைக் கதைப்பாடலின் கட்டமைப்புக்குள் கொண்டு வருகையில்,
“கொலைபுரிந்து பதுங்கி பதுங்கி ஓட்டமும் எடுத்தார்
மலையங்காடு தொப்பூர் பாரஸ்ட்டு அடுத்தார்
தொப்பூர் கவுண்டரிடம் துப்பாக்கி பிடுங்கி
ராப்பகலாய் மம்மட்டியான் கோஷ்டி இருக்கிறார் பதுங்கி”
என அமைகின்றது.
மம்மட்டியானின் கூட்டாளிகளான ஊமையன், சுண்டக்காயன், சாமிக்கண்ணு, ரத்தினவேலு, சாமியார் மகன் சுப்ரமணியம், சின்னக்கண்ணு ஆகியோரும் பகைவர்களான வைத்திக்கவுண்டர், வேலாயுதம், சின்னக்குட்டி, முத்துசாமியார், சுப்ரமணியம், அய்யண்ணன், பச்சியண்ணன், கணக்கு உள்ளிட்டவர்களின் பெயர்களையும் அவர்களின் பின்புலங்களைப் பார்க்கும் பொழுது எளிமையான பாத்திரப் படைப்புகளால் இச்சிந்து வகையானது படைக்கப்பட்டுள்ளது.
மம்மட்டியான் கதையானது உண்மையான நடந்த நிகழ்வையே மையப்பொருளாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கதையின் நாயகனாக இருக்கின்ற மம்மட்டியான், மக்களில் ஒருவனாக வாழ்ந்தவனாகவே காட்டப்பட்டுள்ளதன் அடிப்படையில் எவரும் கதைப்பாடலின் கதாநாயகனாக ஆகலாம் எனும் துணைமைப் பண்பிற்கு உட்பட்டதாக அமைகின்றது. கதைப்பாடலின் இடையிடையே கேட்கும் மக்களின் புரிதலுக்கும் வசதிக்கும் உரையாடல் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது
கதைப்பாடலுக்கு உரிய முக்கியப் பங்காகப் பார்க்கப்படுவதில் திரும்பத் திரும்ப வரும் முறை கையாளப்படுவதாகும். மம்மட்டியான் கதையில் நிறைய இடங்களில் இந்த உத்திமுறையானது பயின்று வந்துள்ளது. மம்மட்டியான் தன் தாயிடம் சபதம் ஏற்றுக்கொள்ளும் நிகழ்வின்போது “சபதங்களை முடித்து வந்து சந்திக்கிறோம் அடுத்து” என்ற வரியும் “ஆள்களையுந் திரட்டி கத்தி ஆயுதங்கள் ஈட்டி”, “சின்னாணனாம் பாரு ஒன்று சேர்ந்தார் ஏழுபேரு” உள்ளிட்ட வரிகளும் திரும்பத் திரும்ப வரும் துணைமைப் பண்பிற்குச் சான்றாக அமைகிறது.
மாசி மாதம் நடைபெற்ற மாரியம்மன் பண்டிகையில் வேஷம் போட்டு ஆடுவதில் ஏற்பட்ட மோதல், பங்காளிக்குள் நடந்த பிரச்சினைகள், தந்தையைக் கொன்ற பகைவர்களைப் பழிக்குப் பழிவாங்குதல் போன்ற கதையோட்டங்கள் மேச்சேரி பகுதியும் அதனைச் சுற்றியுள்ள வட்டாரத்தை ஒட்டியும் அமைந்த வட்டாரக்கருவாகப் பார்க்க முடிகின்றது. சோமர் வில்லே கூறிய கதைப்பண்பான காதலும் வீரமும் மம்மட்டியான் கதையோடு ஒத்துப்போவதைப் பார்க்க முடிகிறது.
வாய்ப்பாட்டு முறை
பெரும்பாலும் கதைப்பாடல்களைப் பாடக்கூடியவர்கள் வாய்ப்பாட்டைப் பயன்படுத்திப் பாடுகிறார்கள். நாட்டுப்புறவியல்; அறிஞர் சு. சக்திவேல் குறிப்பிடுவது போன்று,“ கதைப்பாடல்களில் மீண்டும் வரல், இடையீடு மீண்டும் வரல் காணப்படுகின்றன. ஒரு சொல், ஒரு தொடர், ஒரு வரி, ஒரு பகுதி மீண்டும் வரும் அமைப்பு பரவலாகக் காணப்படுகின்றது”3 மாதேஸ்வரன் மலைப்பகுதியில் மம்மட்டியானும் அவனுடைய நண்பர்களையும் ஒளிந்துகொண்டதைக் காவலர்களால் கண்டுபிடிக்கப்பட்டபோது மேற்குறிப்பிடப்பட்ட வாய்ப்பாட்டு முறையானது பயன்படுத்தப்பட்டுள்ளது.
“சுண்டக்காய் மலைச்சாரலிலே மம்மட்டியாங் கோஷ்டி
ஒண்டியிருப்பதைப் கண்டுவிட்டார் போலீசார் பார்ட்டி
சுண்டக்காய் மலைச்சாரலிலே மம்மட்டியாங் கோஷ்டி
ஒண்டியிருப்பதைப் கண்டுவிட்டார் போலீசார் பார்ட்டி”
அடிக்கருத்துக்கள்
கதைப்பாடலானது தொடர்ச்சியான நிகழ்வுகளால் கட்டமைக் கப்பட்டு உருவாக்கப்படுவதாகும். இத்தகைய உருவாக்கத்திற்கு அடிக்கருத்துக்கள் முக்கிய காரணியாக அமைகின்றது. வாய்மொழியாக வழங்கப்பட்டு வந்த மம்மட்டியான் கதைப்பாடலை வைத்து சில அடிக்கருத்துக்கள் உருவாக்க முடிகின்றது. 1. திருவிழா நடைபெறுதல் 2. பகை உருவாதல் 3. மம்மட்டியானின் தந்தை கொலை செய்யப்படுதல் 4. மம்மட்டியான் தாயிடம் நடந்ததைக் கூறுதல் 5. சபதம் ஏற்றுக் கொள்ளுதல் 6. பகையாளிகளைக் கொலை செய்தல் 7. மாதேஸ்வரன் மலைப்பகுதியில் ஒளிந்து கொள்ளுதல் 8. காவல்துறையினர் தேடுதல் 9. ஐந்து ஆண்டுகள் மறைமுகமாக வாழ்தல் 10. மம்மட்டியான் கூட்டாளிகள் படிப்படியாக இறத்தல் 11. மம்மட்டியான் நல்லமாளைச் சந்தித்தல் 12. வெளியூருக்குச் செல்லத் திட்டமிடல் 13. கருப்பண்ணனை மம்மட்டியான் சந்தித்தல் 14. மம்மட்டியான் சுடப்படுதல்.
மம்மட்டியான் கதைப்பாடலில் சொல்லாட்சிகள்:
நாட்டுப்புற இலக்கிய வகைமைகளுள் ஒன்றாக உள்ள கதைப்பாடல்களில் பயன்படுத்தப்படும் சொல்லாட்சிகளின் திறன் முக்கியத்துவம் வாய்ந்தவையாகப் பார்க்கப் படுகின்றது. ஏனெனில் படிக்காத பாமர மக்கள் தொடங்கி, நடுநிலைக் கல்வி பயின்றோர், படித்த மக்களிடையே இக்கதைப்பாடல் பரவும் தன்மை கொண்டுள்ளது. “தமிழ்நாட்டார் கதைப்பாடல்களிலும் மரபுத்தொடர்களையும், அரை வரி வாய்ப்பாடுகளையும், முழு வரி வாய்ப்பாடுகளையும், இரு வரி வாய்ப்பாடுகளையும், அடுக்குகளையும், திருப்புகளையும் காணலாம்”4 மம்மட்டியான் கதைப்பாடலில் சொல்லாட்சிகளின் பங்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கின்றன. பேச்சு வழக்குச் சொற்களைப் பொறுத்தமட்டில், நெசவுத் தொழில் செய்கின்ற இடத்தைத் தறி கொட்டாயி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது. இக்கதைப்பாடலில் ஒலிக்குறிப்புச் சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மம்மட்டியான் தம்பி ஊமையன் காவல் துறையினரால் சுடப்பட்டு விழும்போது" குபீர் குபீர் என்று இரத்த வாந்தியும் எடுக்க” என்று பயன்படுத்தப்பட்டு அவன் இறப்பின் நிலையைத் தெரியப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், மக்கள் தங்கள் வாழ்க்கையில் அன்றாடம் பயன்படுத்துகின்ற வேற்றுமொழிச் சொற்களும் இதில் பயின்று வந்துள்ளன. உதாரணத்திற்கு ஜில்லா, ஜனம், ஆர்டர், பாரஸ்ட்டு, கவர்மெண்ட் போன்ற வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
மம்மட்டியான் கொலைச்சிந்து காட்டுகின்ற நம்பிக்கை:
ஒரு சமூகத்தால் கடைப்பிடிக்கின்ற நம்பிக்கையானது அம்மக்களின் தொன்மையான வரலாறுகளைக் குறித்து அறிவதற்கும், பழக்கவழக்கங்கள் சார்ந்த அவர்களின் வாழ்வியல் நெறிகள் கட்டமைக்கப்படுவதைத் தெரிந்து கொள்ளுவதற்கும் பயன்படுகிறது. “நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, மக்கள் சமுதாயத்தால் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனின் தன்னல உணர்வும், சமுதாய உணர்வுமே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன”5. இதன்வழியில் மம்மட்டியான் கொலைச்சிந்தில் சில நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளை அறிய முடிகின்றது. காட்டில் ஒளிந்துகொண்ட மம்மட்டியானும் அவனுடைய கூட்டாளிகளும் காளி தெய்வத்திடம் பகையாளிகளின் தலைகளை அறுத்துப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கு உன் துணை வேண்டும் எனச் சொல்லியும் அதற்குப் பொங்கல் வைத்துப் படையலிடுவதாகவும் ஆட்டுக்கிடாயைப் பலி கொடுப்பதாகவும் வேண்டுகின்றனர்.
“காட்டில் வாழ்தேவதையே காடுமுனிக் கருப்பே
ஆட்டுக்கிடாயும் பொங்கல் தாறோம் - தாறோம் தலை
அறுக்கவே திட்டம் போறோம் - போறோம்”
என்னும் வரிகளால் எந்தவொரு தெய்வ நம்பிக்கை சார்ந்து வாழ்ந்துள்ளனர் என்பதை விளங்கிக்கொள்ள முடிகின்றது. அம்மனுக்கு விழா எடுக்கும் நம்பிக்கை மம்மட்டியான் கொலைச்சிந்தில் சிறந்த இடத்தைப் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
கிராமப்புறம் சார்ந்த மக்கள் பேய், பிசாசுகளிடம் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மற்ற தீய சக்திகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் மந்திரக்காப்பிட்டும் புலிப் பல்லைக் கழுத்தில் அணிந்துகொண்டும் நம்பிக்கையோடு வாழ்ந்து வந்தனர். அதைப்போலவே மம்மட்டியானும் வாழ்ந்துள்ளான் என்பதை அறிந்துகொள்ள இக்கொலைச்சிந்தின் இறுதிப்பகுதி உதவுகிறது. “மந்திரக்காப்பு புலிப்பல்லு குத்துவான் மம்மட்டியான்” என்ற வரி இதை உறுதிப்படுத்தும் சான்றாக அமைகின்றது.
இறந்துபோனவர்களைத் தெய்வமாக நினைத்து வழிபடுகின்ற நம்பிக்கை நாட்டுப்புறம் சார்ந்த மக்களிடம் பெருவாரியாக இன்று வரை இருந்து வருகின்றது. இறந்துபோனவர் தெய்வமாக மாறி தம்மைக் காத்து நிற்பர் என்பதன் அடிப்படையில், மம்மட்டியான் இறந்துபோய்ப் புதைக்கப்பட்டுள்ள தம் தம்பியின் சவக்குழிக்குச் சென்று பூமாலை, சந்தனம், பத்திவாடை போன்றவற்றைக்கொண்டு வணங்கினான்.
“ஜாமத்தில் மம்மட்டியான் போய் தம்பி சவக்குழிக்கு
பூமாலை சந்தனம் பத்தி வாடை வாடை
கட்டி பெரியதாய் கட்டி வைத்தான் மேடை மேடை”
என்பதன் வழி அறியலாம்
மம்மட்டியான் கொலைச்சிந்தின் தொடக்கமும் முடிவும்
நாட்டுப்புற கதையாகட்டும், கதைப்பாடலாகட்டும் அதைப் பாடக்கூடிய ஆசிரியர் அதனுடைய தொடக்கத்திலும் முடிவிலும் சில நாட்டுப்புற இலக்கியத்திற்கே உரிய சில உத்தி முறைகளைக் கையாண்டிருப்பர். பல கதைப்பாடல்களின் தொடக்கத்தைப் பொறுத்தமட்டில் இசைக்குறிப்புச் சொற்கள், கடவுளைப் பற்றிய வாழ்த்து, நாட்டு வளம், மங்கல நிகழ்வுகள் போன்றவை கையாளப்பட்டுள்ளன. மம்மட்டியான் கொலைச்சிந்தானது மகாபாரதப்போரை மையமிட்டுத் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இத்தகைய பாங்கு பாரதப்போர் பற்றிய கதையாடல் வாய்மொழி மரபாக நாட்டுப்புற மக்களிடையே வழங்கப்பட்டு வந்துள்ள செல்வாக்கை புலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
“ ஆதியிலே பாண்டவர்கள் பாரதப்போரு
காதிலே கேள் சேலம் ஜில்லா மேச்சேரி யூரு”
பல விதமான நிகழ்வுகள் மற்றும் நோக்கங்களுக்கு ஏற்ற முறையில் கதைப்பாடல்களானது எழுதப்படுகின்றன. அவற்றின் முடிவானது நிகழ்ந்த வரலாற்றை அடிப்படையாக வைத்தும் மக்களின் விருப்பத்திற்கேற்ற முறையிலும் பெரும்பான்மையாகத் துன்பியலாகவும் அதனுடைய முடிவு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். மம்மட்டியான் கொலைச்சிந்து மம்மட்டியானின் இறப்போடு முடிவதால் துன்பியல் முடிவோடு முடிக்கப்பட்ட கதைக்களமாகப் அமைந்துள்ளது.
முடிவுரை
இன்று வளர்ந்து வருகின்ற முக்கியத் துறைகளில் ஒன்றான நாட்டுப்புறவியலானது பாடல்கள், கதைப்பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், கலைகள், மருத்துவம் போன்ற மண் சார்ந்த மக்களின் வழக்காறுகளை அடையாளப்படுத்துவதிலும் அதைக் கல்விப்புலம் சார்ந்து ஆவணப்படுத்துவதிலும் தனிப்பாங்கை ஆற்றி வருகின்றது. பாமர மக்களின் வாயிலிருந்து உதிருகின்ற பல வார்த்தைகள் நம் பண்பாட்டைச் செழிக்க வைப்பதற்கான விதைகளாகவே விழுகின்றன. நாட்டுப்புறவியலில் ஒரு கூறாகிப் புராணம், சமூகம், வரலாறு எனப்பட்ட வகைப்பாடுகளை உள்ளடக்கியதாகக் கதைப்பாடல் அமைந்திருக்கிறது. அதன் வகைமையில் அமைந்த மம்மட்டியான் கொலைச்சிந்தானது சில மரபுத்தன்மைகளுக்குப் பொருந்தி வருகின்றது. அறிஞர்களான பிரிஸ்பெர்லி, சோமர் வில்லே போன்றோர் முன்வைக்கும் கதைப்பாடலின் பொதுவான மரபுத்தன்மைகள் சில பொருந்தியும் பொருந்தாமலும் இருக்கின்றன என்பது கவனத்திற்குரிய ஒன்றாகும். படித்த, படிக்காத என அனைத்துத் தரப்பட்ட மக்களையும் சென்றடையும் வகையில் திருப்பியல் அமைப்பு, அடுக்கியல் அமைப்பு உள்ளிட்ட மொழியமைப்புக் கூறுகளோடு இக்கொலைச்சிந்தானது பாடப்பட்டிருக்கிறது. இன்றுவரை மம்மட்டியானைப் பற்றிய கதையானது மேச்சேரி சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் சொல்லப்பட்டு வந்தாலும் மம்மட்டியான் ஒரு மக்கள் தலைவனாகவும் கொள்ளைக்காரனாகவும் அது திரிபிற்கு உட்பட்டு பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
துணைநின்ற நூல்கள்:
1. சு.சண்முகசுந்தரம்., நாட்டுப்புறவியல், காவ்யா வெளியீடு, பக்கம் - 221
2. சு.சக்திவேல்., நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், பக்கம் - 89
3. சு.சக்திவேல்., நாட்டுப்புற இயல் ஆய்வு, மணிவாசகர் பதிப்பகம், பக்கம் - 98
4. தே.லூர்து., நாட்டார் வழக்காற்றியல்: சில அடிப்படைகள், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பக்கம் - 141.
5. ப. மகேஸ்வரி., புதிய நோக்கில் நாட்டுப்புறவியல், திருக்குறள் பதிப்பகம், பக்கம் - 39.
- முனைவர் தி.பெரியசாமி, தமிழ்த்துறை தலைவர் & பேராசிரியர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 636 011.