கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“தமிழனுக்குள்ள கலைகள் என்பனவெல்லாம் தமிழனை அடிமை ஆக்குவனவாகவே இருந்துவருகின்றன. தமிழனுக்கு அடியோடு சமயம் என்பதே இல்லாமல் போய்விட்டதே எனலாம். மக்களுக்கு விழா, முக்கியமான தேவையாகும். விழாவை முன்னிட்டு மக்களுக்கு, மகிழ்ச்சி, ஓய்வு, மக்களுடன் அளவளாவுதல், கவலையற்ற கொண்டாட்டம் கொள்ளுதல், அன்பு, ஆசைப்பரிமாற்றம், களியாட்டம் முதலியவைகளை அனுபவிக்க முடிகின்றது. இவைகளை ஏற்படுத்துவதால் தான் இவற்றை விழா என்று கூறுகிறோம்.

அரசாங்க விடுமுறைக்கு உரிய பண்டிகைகள் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், மகா சிவராத்திரி, தமிழ் வருஷப் பிறப்பு, ஆவணி அவிட்டம், கோகுலாஷ்டமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி. விடுமுறை இல்லாத பண்டிகைகள் பிள்ளையார் சதூர்த்தி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம், தைப்பூசம் இந்தப்படியாக இன்னும் பல.

இவைகளில் தமிழனுக்கு, தமிழ்ச்சமுதாயத்துக்கு தமிழன் பண்பிற்கு, தமிழன் வரலாற்று நடப்புக்கு, தமிழனின் அறிவு ஆராய்ச்சி பொருத்தத்துக்கு ஏற்றவாறு விழா அல்லது பண்டிகை என்பதாக எதையாவது சொல்ல முடிகிறதா?

இப்படிப்பட்ட நிலையில், தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக்கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாக கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டுகட்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம்.

இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா (Hervest Festivel) என்ற கருத்தில்தானே ஒழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப்பண்டிகை, இந்திரவிழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல.

இந்த பொங்கல் பண்டிகையை தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்டும்.” (விடுதலை : 30/1/1959))

மூட நம்பிக்கைகளை மூலதனமாகக் கொண்டு ஆரிய பார்ப்பனர்களால் புகுத்தப்பட்ட பண்டிகைகளும் விழாக்களும் மக்களின் நேரத்தை வீணடித்து, பொருளாதாரத்தைச் சீரழித்து, அறிவைக் கெடுத்து நாட்டை பிற்போக்குத்தனத்தில் ஆழ்த்துவதைக்கண்ட பெரியாரின் உள்ளக் கொதிப்பே மேலே உள்ள அவரின் கருத்து. சமுதாயத்தை ஏற்றம் பெறச் செய்யவும், வாழ்வை உயர்த்தவும், நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லவும் எது பயன்படவில்லையோ அவற்றை தந்தை பெரியார் எதிர்த்தார்; சாடினார். அறிவுலக ஆசான் பெரியாரால் கொண்டாடப்படவேண்டிய விழாவாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரே விழா தமிழர் திருநாள் மட்டுமே.

தமிழர் திருநாள் எனும் பொங்கல் விழா என்பது சமய சார்பற்ற விழா மட்டுமல்ல இயற்கை சார்ந்த விழாவாகும். எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான விழாவும் கூட. வான் சார்ந்து, மண் சார்ந்து முழுமையான வேளாண்மை சார்ந்து உருவான திருநாள் ஆகும். தமிழர்களான திராவிட குடியான நமக்கு மகிழ்ச்சியை பெருமையை தருகிற விழாயென்றால் மிகையில்லை. தமிழர் தம் பண்பாட்டு விழாவான பொங்கல் முதல் நாளை போகி என்றும், தமிழ் புத்தாண்டின் தொடக்க நாளை பொங்கல் என்றும், அடுத்த நாளை மாட்டுப்பொங்கல் என்றும், உறவினர்களை, அறிவிற்சான்றோர்களை கண்டு உறவாடும் நாளை காணும் பொங்கல் என்றும் மக்களால் மகிழ்வாக கொண்டாடப்படும் மகிழ்ச்சிக்குரிய திருநாளே தமிழர் திருநாள்.

ஓர் ஆஷ்டைப் போக்கியது ‘போக்கி’ (போகி) எனவும், அந்நாளில் பழையன கழிதல் புதியன புகுதல் என்பதாக பழைய தேவையற்ற பொருட்களை எரித்தல் போன்ற வழக்கங்களும் உண்டு. இதனைப் பயன்படுத்தி ஆரிய பார்ப்பனர்கள் தமிழர்தம் வரலாற்றுச் சுவடுகளை எரித்திட மக்களைத் தூண்டி சூழ்ச்சியாய் காரியமாற்றிய செய்திகளும் உண்டு. அடுத்து பொங்கல் நாளில் புத்தாடை உடுத்தி, புத்தரிசி பொங்கலிட்டு, வீடு தெரு எங்கும் தோரணங்கள் கட்டி, செங்கரும்பும் மஞ்சளும் கொண்டு வீட்டை அழகுப்படுத்தி ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சியாக கொண்டாடுவர். அதற்கும் அடுத்த நாள் வேளாண் குடிமக்களுக்கு உற்ற தோழனாக உதவிடும் மாடுகளை, இயற்கையை ஏற்றம் பெறச் செய்யும்வண்ணம் மாட்டுப்பொங்கல் கிராமப்புறங்களில் சீரோடும் சிறப்போடும் கொண்டாடிவருவதை காணலாம்.

இருளைப்போக்கி புத்தொளி வழங்கிடும் சூரியனைப் போற்றியும், உழைப்பை மட்டுமல்ல தனக்கு துணைநின்ற உயிரையும் போற்றிய சீர் உரு பண்பாட்டை பொங்கல்விழா என்பது எடுத்துக்காட்டுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் மிகவும் சிறப்பான விழாவாக பொங்கல்விழா பொலிவுடன் கொண்டாடப்படுகிறது. வடவரால் ஆரியத்தால் வழங்கப்பட்ட ‘தீபாவளி’ கொண்டாடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும். தமிழர் திருநாளை தமிழர் வாழும் ஊரெல்லாம், நாடெல்லாம் கொண்டாட வேண்டும்.

“கிறிஸ்தவர்கள் காலத்தைக் காட்ட கிறிஸ்தவ ஆண்டு (கி.பி, கி.மு) இருக்கிறது. முஸ்லீம்கள் காலத்தைக்காட்ட இஸ்லாம் ஆண்டு (ஹிஜ்ரி) இருக்கிறது. இதுபோல தமிழனுக்கு என்ன இருக்கிறது? இதற்கு தமிழனின் ஆதாரம் என்ன இருக்கிறது?” (விடுதலை : 30/1/1959)

இப்படிக் கேட்டவர் பகுத்தறிவுப் பகலவன் பெரியார். தமிழனுக்கென்று ஆண்டு கணக்குமுறை இல்லையே! ஆரியர்களால் சூதாககற்பிக்கப்பட்ட பிரபவ முதல் அட்சய வரை வருடங்களாக, அதுவும் சுழற்சி முறையில் 60 வருடங்களாக! 60 வயதுக்கு மேல் வாழும் ஒவ்வொரு மனிதனின் வயதுக்கணக்கு என்னவாகும்? 60 ஆண்டுகள் உருவாக்கத்துக்குச் சொல்லப்பட்ட கிருஷ்ணன் – நாரதன் கதை ஏற்படுத்திய சீரழிவு?

இந்த அவலத்தைப் போக்கத்தான் 1921 மே 19-ஆம் நாள் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், புலவர்களும் அய்நூறுக்கும் மேலாகக் கூடி ஆய்வு செய்து ஒத்த முடிவுக்கு வந்து நான்கு முடிவுகளை வெளிப்படுத்தினர் தமிழ்கடல் மறைமலை அடிகள் தலைமையில்!

             தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள்

             திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டுக்கணக்கு

             திருவள்ளுவர் காலம் கி.மு. 31

             திருவள்ளுவர் ஆண்டே தமிழ் ஆண்டு என கொள்வது

இம்முடிவைத் தான் 1935 சனவரி 18-ஆம் நாள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட ஆங்கில ஆண்டுடன் 31-னை கூட்டல் வேண்டும்.

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடங்க நாள் என்பதை தமிழ்நாடு அரசு ஏற்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முதல்வரிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களே முன்வைத்தார். பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள் கோரிக்கையைத் தொடர்ந்தனர்.

தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் 2008-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்தார். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் வரவேற்று மகிழ்ந்தனர்; உவகை பூத்தனர். மகிழ்ச்சி நீண்ட காலம் நிலைபெறவில்லை. காரணம் 2011-இல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் சித்திரை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டின் முதல்நாள் என இந்துத்துவ மனப்பான்மையுடன் அறிவித்தார்.

1971 முதல் தமிழ்நாடு அரசின் நாட்குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் திருவள்ளுவர் ஆண்டு எனும் நடைமுறையை செயல்பெறச் செய்தவரும் கலைஞரே. 1981 முதல் அரசு சார்ந்த அனைத்து அலுவலகங்களிலும் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்பட்டு வருவது பாராட்டுக்கு உரியதே! தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு தொடக்க நாளாக மீண்டும் நடைமுறைக்கு வரச்செய்ய முயலுவோமாக.

“தையே முதற்றிங்கள்; தை முதலே ஆண்டு முதல்

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று

பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு தைம் முதல்நாள் பொங்கல் நன்னாள்

நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப்புத்தாண்டு

அண்டிப்பிழைக்கவந்த ஆரியக்கூட்டம் காட்டியதே

அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழர்க்கு

தைமுதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

எனும் புரட்சிக்கவிஞரின் வரிகளை நினைவில் கொள்வோம்! பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம்! தந்தை பெரியாரின் கொள்கைப்பாட்டையில் திராவிடர் திறம் கூட்டுவோம்; தமிழர் உரிமை காப்போம்! தமிழர் திருநாளின் சிறப்பை, மதிப்பை பறைசாற்றுவோம்!. 