சிறுதெய்வ வழிபாடு என்பது கிராமங்களைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் நடைமுறைகளைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுக் கூறாகும். இத்தெய்வங்கள் மலைகள், மரங்கள், நீர் நிலைகளில் உறைவதாக மக்கள் நம்பி வழிபட்டனர். மரம், நீர்நிலையின் அருகில் இருக்கும் சிறு தெய்வங்கள் பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கின்றன. சங்க இலக்கியத்திலும் நீர் நிலைகள், மரங்களில் உள்ள தெய்வங்கள் பெண்ணாகவே இருப்பதைக் காண முடிகிறது.

சிறுதெய்வ வழிபாடு

சிறுதெய்வ வழிபாடு என்பது இயற்கை வணக்கத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும். இயற்கை வழிபாடே சங்க காலத்தில் இருந்து வந்ததனைச் சங்கப் பாடல் வழி அறிய முடிகிறது. சங்க இலக்கியத்தில் தெய்வ வழிபாட்டினை பெருந் தெய்வம் என்றே குறிப்பு உள்ளது. இடைக்காலத்தில் வந்த பக்தி இலக்கியத்தில் ‘சிறுதெய்வம்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது. சிறுதெய்வ வழிபாடு குறித்து,

“இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை

சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்” (திருநாவுக்கரசர், தேவாரம் மறுபிற்றத் திருத்தாண்டகம், ப. 5)

தேவாரப் பாடலில் திருநாவுக்கரசர் சிறு தெய்வத்தினைக் கூறுகிறார். இதே கருத்தினையே இராமலிங்க அடிகள்,

“நலிவுறு சிறுதெய்வம்” (இராமலிங்கர், திருவருட்பா பிள்ளை சிறு வண்ணப்படம். ப. 59)

என விளக்கம் தந்துள்ளார். இவ்விரு அடியார்களும் சிறுதெய்வம் என்ற சொல்லினைப் பயன்படுத்தி இருக்கின்றனர். சங்க இலக்கியங்களில் சிறு தெய்வம் என்ற சொல் காணப்படவில்லை. பெருந் தெய்வம் என்ற சொல்லைக் காண முடிகிறது. பெருந்தெய்வத்தினை,

“வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து

உருவுடன் இயைந்த தோற்றம் போல,” (அகம். 360: 6-7)village goddessஎன்று அகநானூறு விளக்கம் தருகின்றது. இதே போன்று பெருந்தெய்வம் என்ற சொல்லினை குறுந்தொகை 263: (3-4), புறநானூறு 58:10, திருமுருகாற்றுப்படை அடி. 160 இவற்றுள் வந்துள்ளது. தெய்வம் என்று குறிப்பிடாமல் பெருதெய்வம் எனக் குறிப்பிடப்படுவதால் சிறு தெய்வம் இருந்தாகப் பொருள் கொள்வதாகும்.  சிறு தெய்வங்கள் என்பது மக்கள் தங்களது விருப்பமான வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். சிறுதெய்வம் என்பது நமது முன்னோர் வழிபாடாக ஏற்றுக் கொள்ளலாம்.

சிறுதெய்வ வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்

பண்டைக்கால மனிதன் சிந்திக்கத் தொடங்கிய போது அவன் மனதில் விடைபெற இயலாத பல வினாக்கள் எழுந்தன. அவ்வகை வினாக்களுக்கு விடைகாணும் முயற்சியின் முதல் நிலை தெய்வ வழிபாட்டின் தோற்றமாகும். முயற்சியின் மாற்றங்களுக்கும் சீற்றங்களுக்கும் காரணம் காண பண்டைக்கால மனிதன் மேற்கொண்ட முயற்சிகள் வழிபாடு தோன்றக் காரணமாக இருந்தன. சிறுதெய்வ வழிபாட்டின் வரலாறு, மாந்தரின வரலாறாக உள்ளது. ஏனெனில் இவ்வழிபாடு தங்களது முன்னோர் வழிபாடாகும். தங்களது முன்னோரைத்தான் சாமியாகப் பாவித்து வழிபட்டு வருகின்றனர். குலதெய்வ வரலாற்றினை வைத்துத்தான் அவர்களின் பூர்வீகம் எது எங்கிருந்து வந்தனர் என்பதனையும் அறிய முடிகிறது. “வழிபாடு மனிதனுடைய அச்ச உணர்வில் இருந்தும் குற்ற உணர்வில் இருந்தும் உண்டாகி இருப்பதாகக் கூறப்படுகிறது” (தி.அ.அவினாசிலிங்கம், கலைக்களஞ்சியம், தொ.1, ப. 451) வழிபாடு என்பது சமூகத்தில் வாழுகின்ற மக்களை ஆற்றுப்படுத்தவும் நெறிப்படுத்தவும் வழி செய்கிறது. வழிபாட்டு முறைகளால்தான் மனிதன் பக்குவப்பட்டான் என்பது மிகையல்ல. காலமாற்றத்திற்கு ஏற்ப தங்களின் வழிபடு முறையினை மனிதன் மாற்றி வந்திருக்கிறான். இதனால்தான் இன்றளவும் இளைய சமுதாயத்தினரும் இவ்வழிபாட்டினைத் தொடர்சியாகப் பல்வேறு தலைமுறை தாண்டியும் அறுபடாச் சங்கிலித் தொடராகப் பின்பற்றி வருகின்றனர்.

பெண் தெய்வ வழிபாடு

குல தெய்வம் என்பது முன்னோரினைப் போற்றும் விதமாக வழிபடுவதாகும். ஒவ்வொரு நிலத்தில் உள்ள மக்களும் தாங்கள் வழிபட வேண்டும் என்பதற்காகத் தங்களுக்கான தெய்வங்களை அமைத்துக் கொண்டனர். நெய்தல் நிலமான கடற் பரப்பிலும் பெண் தெய்வ வழிபாடு இருந்ததாகக் குறிப்பு உள்ளது. கடல் தெய்வம் கரையில் நின்றிருந்தமையும், அத்தெய்வத்தை அமைதிப்படுத்த அணிகளைத் துறந்த மகளிர் வெறியாட்டம் நிகழ்த்தினர் என்பதை,

“கடல்கெழு செல்வி கரைநின் றாங்கு

நீயே கானம் ஒழிய யானே

வெறிகொள் பாவையிற் பொலவெண் அணிதுறந்து” (அகம். 370: 12-14)

என்னும் வரிகள் மூலம் அறிய முடிகிறது. நீர்த்துறையாக இருக்கின்ற கடலிலும் அதன் தெய்வம் பெண் தெய்வமாகவே இருக்கின்றது. தலைவியின் நோய் தணிய நீர்த்துறைக் கடவுளுக்குத் தங்களது பயன்பாட்டுப் பொருளான கள்ளும் கண்ணியும் படைத்து வெள்ளாட்டுக் கிடாயைப் பலியிட்டும் நோய் தணியவில்லை என அகநானூறு சுட்டுகிறது. இதனை,

“கள்ளும் கண்ணியும் கையுறை யாக

நிலைக்கோடு வெள்ளை நூல்செவிக் கிடாஅய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி” (அகம். 156: 13-15)

இப்பாடல் விளக்கியுள்ளது. சிறுதெய்வத்தின் படையல் பொருளாக மக்களின் பயன்பாட்டில் இருக்கின்றதனையே காண முடிகிறது. தற்காலத்திலும் இதே நிலைதான் தொடர்கிறது. மக்கள் தங்களது பயன்பாட்டுப் பொருளினையே படையலாக வைத்து வணங்கும் முறை இன்றளவும் தொடர்ந்து வருகின்றது. ஆண், பெண் தெய்வத்திற்கு வெவ்வேறு வகையான படையல் பொருள்கள் படைத்து வருகின்றனர். படையல் பொருள்கள் அனைத்தும் விரும்பும் பொருள்களாக இருந்தவையாக மக்கள் கூறுகின்றனர். மாயோனுக்கு முன்னரே காடுறை கடவுளாகத் தாய்த் தெய்வம் இருந்தது என்பதை,

“கானமர் செல்வி அருளலின் வெண்காற்

பல்படைப் புரவி எய்திய தொல்லிசை

நுணங்கு நுண்பனுவற் புலவன் பாடிய” (அகம். 345: 3-4)

என்னும் வரிகள் சுட்டுகிறது. கானமர் செல்வியின் அருளால் மன்னன் நன்னன் வெண் கால்களையுடைய குதிரைகளைப் பெற்றமை சுட்டப்படுகிறது. இத்தெய்வத்தைப் பொருநராற்றுப்படை காடுறை கடவுள் என்றும் மணிமேகலை காடமர் செல்வி என்றும் சுட்டுகின்றன. இதனை,

“வலைவலந் தன்ன மென்நிழல் மருங்கின்

காடூஉறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை” (பெரும். 49-50)

பெரும்பாணாற்றுப்படையும் விளக்கியுள்ளது. காடுகளில் தெய்வம் இருந்தாலும் அத்தெய்வத்தின் அருகில் நீர் நிலைகள் இருக்கின்றன. பெயர்தான் கானமர் செல்வி எனப் பெயர் மாற்றம் பெற்று உள்ளதே தவிர அதுவும் பெண் தெய்வம்தான். காட்டில் உள்ளதால் அதற்கு அப்பெயர் இட்டு அழைத்திருக்கலாம். இன்றைய காலத்திலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் பெயர் வைத்து வணங்கும் முறை இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. நீர்த்துறை என்பது கோவிலுக்கு வழிபடச் செல்லும் முன்பு கை, கால்களைச் சுத்தம் செய்வதற்காக அமைக்கப்பட்டதாகும். ஒரு சில பெண் தெய்வத்திற்கு அருகில் சூலாயுதம் நட்டு வைத்துள்ளனர். அதுவே மாரியம்மன் கோவில் என்பதற்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆண் தெய்வத்திற்கும் சூலாயுதம் நட்டு வைத்து வணங்குகின்றனர். 

தாய்த்தெய்வ வழிபாடு, படையல் பொருள்கள்

சிறுதெய்வ வழிபாடு என்பது கால மாற்றங்களுக்கு ஏற்ப மாறுதல் அடைந்து வந்தது. இன்றைய காலத்திலும் சில இடங்களில் உருவமாகவும், உருவம் இல்லாமலும் இத்தெய்வங்கள் வழிபடப்பட்டு வருகின்றன. பெண் தெய்வங்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு மரத்திற்கு அடியில் இருக்கின்றன. இதனை ஒரு குறியீடாகவே பார்த்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் மரத்தினை மட்டும் தெய்வமாக வைத்து வணங்குகின்றனர். இவை இயற்கையோடு இயைந்த வழிபாட்டிற்குச் சிறந்த சான்றாகும். இத்தெய்வங்கள் அனைத்தும் ஒரு கட்டிடத்திற்குள் வடிவம் பெறாத ஒன்றாகும். கால மாற்றத்தில் சில மாறுதல்கள் பெற்றிருந்தாலும் பண்டைக் காலத்தின் எச்சமாகவே இருந்து வருகின்றன.

கல்யாணம் ஆகாத பெண் தெய்வ வழிபாடாக இருந்தாலும் அதனைத் தாய்த்தெய்வம் என்றே அழைத்து வருகின்றனர். தெய்வத்திற்கு மரியாதை தர வேண்டும் எனக் கருதி இவ்வாறு அழைக்கின்றனர். தாய்த்தெய்வம் என்பது தாயாகவும், கன்னியாகவும் வழிபடப்பட்டது. எல்லோரையும் தானே பெற்ற தாய் என்று இத்தெய்வம் கருதப்படுகிறாள். இத்தெய்வம் நீர்த்துறைக் காடுகள், மரங்களில் உறைவதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். தாய்த் தெய்வத்திற்கு பால் குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல், பெண்கள் மாவிளக்கு வைத்தல் முதலானவை மூலம் வழிபாடு நடைபெறுகிறது. இளநீர், தேங்காய், வளையல் (பச்சை, கருப்பு), மஞ்சள் கிழங்கு, குங்குமம் மற்றும் பழ வகைகளினைப் படையலாக வைத்து வழிபட்டு வருகின்றனர். தெய்வங்களுக்குப் பொங்கல் வைத்து கிடாய் பலியிட்டு வணங்கி வருகின்றனர். சில தெய்வங்களுக்கு இரத்தப் பலி மட்டும் காட்டுகின்றனர். தாய்த் தெய்வங்கள் கிராமத்தினரைக் காப்பதாக நம்புகின்றனர். வரும் தீமைகளினை அகற்றி நன்மை செய்வதாக எண்ணி வழிபடுகின்றனர்.

பெண் தெய்வம் என்பது வளமை தரக் கூடியதாகவும், காக்கும் சக்தியுடையதாகவும் பார்க்கப்படுகிறது. “உயிர்களைப் பெருக்கும் ஆற்றல் பெண்களுக்குரிய பண்பாகும். எனவே பெண் தெய்வங்கள் எல்லாம் சமூகத்தில் இத்தகைய தேவைகளை நிறைவு செய்யப் பிறந்தவையே. நோய்க் காலத்தில் குழந்தையைத் தாய் அக்கறையுடன் பேணிக் காக்கிறாள். (அம்மை, கோமாரி முதலிய) இப்பெண் தெய்வங்களும் நோய்களிலிருந்து மக்களையும் கால்நடைகளையும் காக்கின்றன”. என்னும் கருத்தை விளக்கியுள்ளார் தொ. பரமசிவன். (தொ. பரமசிவன், 2001, பண்பாட்டு அசைவுகள், ப. 137). பெண் தெய்வங்களே பொறுமையுடன் மக்களைக் காத்து வருகின்றதாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் அம்மை முதலான நோய்களைத் தீர்க்க உதவும் படி பெண் தெய்வங்களிடமே முறைப்படி வேண்டுதல் செய்கின்றனர். இதே போன்று தங்கள் வீடுகளில் இருக்கும் கால்நடைகளுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டாலும் பெண் தெய்வத்திடமே முறையிட்டு வருகின்றனர். நோயினைத் தீர்க்க வல்ல தெய்வமாகப் பார்ப்பதால்தான் கிராமங்கள் அனைத்திலும் பெண் தெய்வங்கள் உள்ளன. கால் நடைகள் செழித்து வளரவும் பெண் தெய்வத்தினை வழிபட்டு வருகின்றனர். இதன் மூலம் வளமை உடைய தெய்வமாகவும் பார்த்து வருவதனை அறிய முடிகின்றன.

முடிவுரை

தன்னைக் காத்துக் கொள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் தெய்வ வழிபாடாகும். அவை படிப்படியாக வளர்ச்சி அடைந்து எல்லாத் தேவைகளுக்கும் பின்பற்றப்படும் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. தமிழர் தெய்வழிபாட்டில்  குலதெய்வ வழிபாடு என்பது வளர்ந்து வரும் கால சூழ்நிலையில் வளர்ந்துள்ளது. சிறுதெய்வ வழிபாட்டில் குலதெய்வ வழிபாடு முதன்மையானது ஆகும். குலதெய்வ வழிபாட்டில் பெண் தெய்வங்களே பெரும்பான்மையாக வழிபாட்டிற்குரிய தெய்வமாக அமையப்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்வியல் தொடங்கும் தொன்மக் காலத்தில் இருந்து பெண்மைப் போற்றப்பட வேண்டும் என்பதனை அடுத்த தலைமுறைக்குப் பதியமிடுவதாக அமைகின்றது. பெண் தெய்வ வழிபாடு என்பது பழமையான வரலாற்றினையும், புதிய சிந்தனை மரபினையும் கொண்ட வரலாற்றுப் பெட்டகமாக இருக்கின்றது.

- சி.தவமணி, தமிழ் உயராய்வு மையம், ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை

Pin It