பொங்கல் என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.
நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.
இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.
மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.
இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.
இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.
ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக் குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ(பார்ப்பன ரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.
மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!
(‘விடுதலை’ - 14-1-1972)