கேரள மாநிலத்தில் - வயநாடு, இடுக்கி, கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களில், 31 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இது தவிர வேறு பல மாவட்டங்களிலும் தமிழர்கள் பரவலாக வாழ்கிறார்கள். ஆனாலும், தமிழர்கள் அதிகமாக வாழும், மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்களிலாவது, ‘தமிழர் திருநாளான’ பொங்கலுக்கு அரசு விடுமுறையளிக்க வேண்டும் என்று, கேரளாவில் வாழும் தமிழர்கள், ‘கேரள மாநில தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின்’ சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியிடம் நியாயமான கோரிக்கையை முன் வைத்தனர்.

ஆனால், “தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கம் வேண்டும்; ஏற்றத்தாழ்வுகள் காட்டக் கூடாது; இல்லையேல் இந்திய ஒருமைப்பாடு சிதறி விடும்” என்று தேசபக்தியோடு பேசி வரும் மார்க்சிஸ்ட்டுகளில் ஆட்சி, கேரள வாழ் தமிழர்களின் நியாயமான கோரிக்கையை புறந்தள்ளிவிட்டது.

அந்தப் பகுதிகளில் தமிழர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே.கே.திவா கரன் என்பவரே, மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் தமிழர் திருநாளுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தியும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதை ஏற்க தயாராக இல்லை. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஓணம் பண்டிக்கைக்கு, அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகள் கோரிக்கை வைத்தவுடன், உடனே, தமிழக முதல்வர் கலைஞர் அதை ஏற்று கோவை, சென்னை, நீலகிரி, கன்யாகுமரி மாவட்டங்களுக்கு, அரசு பொது விடுமுறை அறிவித்தார்.

இத்தனைக்கும் சென்னை மாவட்டத்தில் மலையாளிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனாலும், விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எந்த சனிக் கிழமையும் வேலை நாளாகவும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியோ, மூன்று மாவட்டங்களில் (வயனாடு, இடுக்கி, திருவனந்தபுரம், பாலக்காடு) நிபந்தனையுடன் கூடிய விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்றும் (அதாவது, இதற்கு பதிலாக வேறு விடுமுறை நாளில் பணியாற்ற வேண்டும்), இதன் காரணமாக இம் மாவட்டங்களில் அலுவலகங்களோ, பள்ளிகளோ மூடப்படாது, பள்ளிகள் நடக்கும் என்றும் அறிவித்திருக்கிறது. முல்லைத் தீவு பிரச்னையானாலும், சேலம் ரயில் கோட்டப் பிரச்சினையானாலும், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கும், உணர்வுகளுக்கும் எதிராகவே ‘மலையாளி’ என்ற அதீத உணர்வோடு செயல்பட்டதை நாடு பார்த்துக் கொண்டிருந்தது.

‘ஓணம்’ பண்டிகைக்கு தமிழக முதல்வர் விடுமுறை அறிவித்ததையும், அதற்காக மலையாளிகள், தமிழக முதல்வரை சந்தித்து, பாராட்டுகளை குவித்ததையும், தமிழ்நாட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்று, செய்தி வெளியிட்டு பூரித்தது. ஆனால், கேரளாவில் தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த கோரிக்கை நிராகரிக்கப்படும் போது, நீண்ட மவுனம் சாதிக்கிறது. மார்க்சியத்தில் ‘தேசிய இனப் புரிதலும்’ - அதன் வழியாக அவர்கள், கட்டிக் காக்கத் துடிக்கும் ‘ஒருமைப்பாட்டுக்கான’ வரையறையும் இது தானா, என்று கேட்கிறோம்.

தமிழர்களின் உணர்வுகளையும், உரிமைகளையும் தொடர்ந்து தடுத்து வரும் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியின் போக்கை, தமிழர்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழர்கள் தொடர்ந்து ஏமாளிகளாகிவிடக் கூடாது என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்.