கணவரிடமிருந்து வாங்கிக் குவிக்கும் வசவுகளைத் தாங்காது, சன்னல் வழியே வந்து குசலம் விசாரித்தத்தூவானத்தை ரசித்தஎனக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது. சிலுசிலுவென்ற காற்றோடு முகத்தில் முத்தமிடும் மழைத்துளிகள், ரணமாகியிருக்கும் இதயத்தை இதமாய் ஊடுருவின. இந்த இயற்கைக்கு தான் என்மேல் எவ்வளவு காருண்யம்? மழைநீர் பட்டதுமே களிமண்ணால் செய்த தேகத்தைப்போல துடித்துப் போகிறவர்களைக் கண்டு என்னுள் புன்னகை துளிர்க்கும்.

“மழை பெய்யுது, சன்னலை மூடாம லூசுமாதிரி சிரிக்கிறே” சமீபகாலமாய்ப் பழக்கப்பட்டுப்போன கணவரது கடிந்துரைகள் நினைவுக்கு வந்து மனத்திலிருந்த மகிழ்ச்சியைத் துடைத்துச் சென்றன. மகதி என்ற என்னை எப்பவோ மறந்து போனவர். ‘லூசுபோல இந்த வார்த்தையை எப்போதிருந்து பிரயோகிக்க ஆரம்பித்தார்?’ நினைவுக்குப்பையைக் கிளறிப் பார்க்க, அதிகநேரம் தேடத் தேவையின்றி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகக் கண்டுபிடிக்கப்பட்டது. ஆயினும் தூசின் நெடி தாளாது தும்மல் பிறக்க, விழிகளைத் துடைத்துக் கொள்கிறேன்.

‘ஆம்...இப்போது உயர்நிலை இரண்டில் படிக்கும் மகன் மகிந்தன் என்னுள் தரிப்பதில் ஆரம்பித்த பிரச்சினை, அவருக்கு உறைத்தது என்னவோ சமீபமாகதான்’ விடை கிடைத்த நிம்மதியில் என்னுள் விரும்பத்தகாத நினைவுகளும் சேர்ந்துகொண்டன...

“எப்படி நீங்க அன்னைக்குப் பார்த்த மாதிரியே இருக்கீங்க?” திருமணமான பின்பும் நான் கல்லூரி மாணவியைப்போலவே இருப்பதால் சுற்றத்தினர் அடிக்கடி என்னிடம் இந்தக் கேள்வியை எழுப்புவர்.

திருமணமாகி பல வருடங்களைக் கடந்த பின்பும் தாய்மையடையத் தாமதமாகியது. கலக்கத்தில் சிறப்பு சிகிச்சை மேற்கொள்ள, நம்பிக்கை உதித்தது. முடிந்தளவு ஓய்வில் இருப்பதுதான் நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதுவரை செய்துகொண்டிருந்த மனத்திற்குப் பிடித்த வேலையை மனமின்றியே கைவிட்டேன். அறுவைசிகிச்சையின் மூலம்தான் மகன் மகிந்தன் பூமியில் அவதரித்தான். தாமதமாய்க் கிடைத்த சொர்க்கத்தில் நாங்கள் எங்களை மறந்து திளைத்திருந்த சமயம் அது. அப்போதே உடம்பு சற்று பூசினார்போலானது. ‘எலும்பும் தோலுமாய் இருப்பதைவிட இப்போதான் இன்னும் அழகா இருக்கே’ என்ற கணவரது வசீகரப் பேச்சில் வசியமானவள் என்னை மறந்தேன்.

ஆரம்பத்தில் சரியான பணிப்பெண் அமையாத நிலை ரொம்பவே சோதிச்சது. நல்ல உதவியாளர் கிடைத்த பிறகோ ஒட்ட மாட்டேனென மகன் மூச்சுத் திணறல் வருமளவிற்கு அழுது ரகளை செய்தான். குழந்தையைப் பார்த்துக்கொள்வதே என் முழுநேரப் பணியாய்ப் பயணிக்கும் நிலைமைக்கு ஆளானேன். மகன் பள்ளிக்குப் போனபிறகு வேலைக்குப் போகலாம் என நினைக்க, அதுவும் முடியாது போனது. 

பக்கவாட்டில் வளரும் உடம்பைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாது இருக்க, ஆண்டுகள் உருள உருமாறி நின்றேன்.பொதுப்போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கையில் இருக்கைகளை புன்னகையுடன் அளிக்க முன்வருபவர்கள் கண்டு உள்ளம் உடைய, ஒடுங்கிப் போனேன். “இவங்க என்ன எப்போதுமா இப்படி இருப்பாங்க?” என்றாவது யாராவது இந்தக் கேள்வியை எழுப்பிவிட்டால்? கணவரிடம் சஞ்சலத்தைக் கூற “நல்லா நடந்தால் உடம்பு இளைச்சுடும்” என்று சமாதானப்படுத்துவார். நானும் இரண்டு நாள் நடப்பேன். அடுத்ததாக அதை மறப்பேன்!

ஒருமுறை லிட்டில் இந்தியாவுக்குப் போய் வீட்டுக்குத் தேவையான பொருட்களையெல்லாம் வாங்கிய பிறகு, சில நிமிடங்களில் வரப்போகும் ‘கிரேப் டாக்சிக்காகக்’ காத்திருந்தேன். 

“இங்க அரிசி எந்தக் கடையில கிடைக்கும்?” என்று ஒருவன் கேட்க நானும் கர்மசிரத்தையாகக் கடையைக் கூறினேன். நமுட்டுச் சிரிப்புடன் நண்பனோடு அவன் கடக்க என்னுள் எரிமலை உருவானது. அனலை மூட்டிச் சென்றவர்களைப்பற்றி வீட்டுக்கு வந்ததும் கணவரிடம் கதறினேன். 

“அடுத்தவங்க பேசுறதைப் பத்தில்லாம் நினைச்சி கலங்காதே மகதி. தொடர்ச்சியா உடற்பயிற்சி செய்து, உணவுக் கட்டுப்பாட்டோடு இருந்தா நீ நிச்சயமா பழையபடி ஆகிடுவே” கணவரது வார்த்தைகள் ஊக்கமருந்தாகின. 

நானும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள, அதுவும் சில நாட்களுக்குமேல் தாக்குப்பிடிக்காது. கொஞ்சம் சாப்பாட்டைக் குறைத்தால் பிரிட்ஜை திறந்து ஏதாவது கிடைக்கிறதா என மனம் தேட விழைந்தது!

“இது பெரிய விஷயமில்லைடா. நீ மனசு வச்சா மாற்றிவிடலாம்” அன்று அப்படி கூறியவர்தான், இன்று என் மனத்தைக் கீறியும் பார்த்தார். மனம் நினைவென்னும் பரணில் ஏறியது....

“என்னங்க உங்க கம்பெனியோட ஆண்டுவிழா விருந்துக்கு நான் இந்த ட்ரஸ்சை போட்டுக்கவா?”

“....” நளன் கைத்தொலைபேசிக்குள் மூழ்கியிருந்தார்.

“நான் கேக்கிறது காதுல விழுதா?”

“ம்....டின்னருக்கு நான் மட்டுந்தான் போறேன்” என் பார்வையைத் தவிர்த்தவர், பதிலை எதிர்பாராது கடந்து சென்றார். 

 காரணம் புரியாதவள் “ஏன்?” என்றேன்.

“சதா தின்றதும், தூங்குறதுன்னும் இருந்தா? கூட அழைச்சிக்கிட்டுப் போற மாதிரியா இருக்கே!”

‘நளனா? தன் கணவரா தன் உருவத்தைப்பத்திக் குத்திக் காட்டுறார்? அவமானத்தை மிகுவிக்கும் சொற்களில் அடிபட்டுப் போனேன். மற்றவர்கள் என்னைப்பத்தி பேசுறப்பல்லாம் ஆறுதல் வேண்டி அவரிடம் சொல்வேனே! இப்போ அவரே என் மனத்தைக் காயப்படுத்திட்டுப் போறாரே!’அன்பு ஆதிக்கம் செலுத்திய இடத்தில், இன்று ஊனப்பட்டுப்போய் நின்றது. என் உள்ளத்தில் மின்னலும் இடியுமாக, என் கண்ணீரைக் காணப் பொறுக்காது அன்று வானமும் என்னுடன் சேர்ந்துகொண்டது.

 “ஏம்மா அழறீங்க?” பள்ளி முடிந்து வந்த மகிந்தன் அதிர்ச்சியோடு வினவினான்.

“அதெல்லாம் இல்லைடா” மகன் வந்ததைக்கூட அறியாமல் இருந்திருக்கிறேனே!

“என்னன்னு சொல்லுங்க” தாயின் கண்களில் கண்ணீரைக் கண்ட பதின்ம வயது மகனின் முகத்தில் பரிதவிப்பு பிரவாகமெடுத்தது.

“உடம்பைக் குறைக்க என்ன செய்யலாம் சொல்லு?”

“வாங்க ஜிம்முக்குப் போலாம்” சற்றும் யோசியாது சொன்னான். அது ரொம்ப நாட்களாக அவன் சொல்லி நான் விடாப்பிடியாக மறுக்கும் ஒன்றுதான்.

“ச்... வேணாண்டா...”

 “அதெல்லாம் முடியாது, இப்பவே ஜிம்முக்குக் கிளம்புறோம்” என்றதோடு மட்டுமல்லாமல், உடனடியாகத் தன்னுடைய ஷூவைக் கொடுத்துப் போட்டுப் பார்க்கச் சொன்னான். ‘பிராண்டட்’ ஷூக்களின் மீது பித்தாக இருப்பவன்.

 ‘இது இவனுக்குப் ரொம்பவும் பிடித்த ‘அடிடாஸ்’ ஷூவாச்சே! மகன் புது ஷூவுக்கு அடிபோடுறானோ?’

“சரியாதான் இருக்கும், போட்டுப் பாருங்கம்மா” என்றவனின் குரலில் பந்தயத்துக்கு தயார்ப்படுத்துபவன்போல துடிப்பு மிஞ்சி நின்றது. அவனது மிதமிஞ்சிய ஆர்வம் கிரியாஊக்கியாக, என் சின்னப் புத்தியை நொந்தபடி மகனது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.வழியெங்கும் சாலைக்குக்காவல் காப்பதைப்போல நிற்கும் மரங்கள் மழையில் குளித்த புத்துணர்வில் சிலிர்த்துக்கொண்டிருந்தன.

‘பிராடல் ஹை கம்யூனிட்டி ஹப்செராங்கூன் சென்ட்ரலில்’ அமைந்துள்ளது. மனித வாழ்வின் ஆதியையும் அந்தத்தையும் தன்னுள் அடக்கியபடி வீற்றிருக்கும் நிலையத்தில்முதற்பகுதியில் குழந்தைப் பராமரிப்பு நிலையம், பாலர்பள்ளி எனத் துவங்கி இறுதியில் முதியோர் காப்பகத்தில் கொண்டு வந்து விட்டிருக்கும். இடையில் வாழ்வின் அத்தியாவசியமான மருத்துவமனையுடன், ஆரோக்கியத்தைப் பேண உதவும் உடற்பயிற்சி தளமும் அடக்கம்.

உடற்பயிற்சிக் கூடத்தில் நான் அடியெடுத்து வைக்க, கண்ட சித்திரம் விசித்திரமாய் எனக்குத் தோன்றியது. குளிர்சாதனம் தன் பணியைச் செவ்வனே புரிந்தபடியிருக்க, அங்கிருந்தவர்களோ வியர்வைக் குளியலில் இருந்தனர்!

“ட்ரட்மில்லில் முதலில் நடங்க” என்று என்னிடம் கூறிவிட்டு மகிந்தன் ஓடத் தொடங்கினான்.பெருமழை பிடிக்க இருப்பதைப்போல என் மனத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.

என்னைப் பார்த்து யாராவது சிரிக்கிறார்களா எனப் பார்வையை நாலாபுறமும் அனுப்ப, விழிகள் தோற்றன. பயிற்சியைத் தொடங்கிய எனக்கு ஐந்து நிமிடங்களுக்குள்ளாகத் தாறுமாறாக மூச்சு வாங்கியது. பக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பெண் பத்தே நிமிடங்களில் நூற்றைம்பது கலோரியை எரித்திருப்பது வியப்பாய் என்னுள் பரவியது. நான் எரித்த அளவுகளைப் பார்க்க ஐந்து நிமிடங்களில் பன்னிரண்டு கலோரி! ‘யாராவது இதைப் பார்த்தால் மானம் போயிடுமே!’ நினைத்தவாறு மகனிடம் பார்வையைக் கொண்டுபோக, வேர்க்க விறுவிறுக்க அவன் ஓடிக்கொண்டிருந்தான். 

மகதி... உனக்கு இது போதுமென கால்கள் கெஞ்சின. அதற்குள் இறங்கிவிட்டால் மற்றவர்களது கேலிப்பார்வைக்கு ஆளாக நேரிடுமோ எனக் கலக்கம் பிறந்தது. ஒருவழியாக பத்து நிமிடம் நடந்தவள் இறங்கினேன். சைக்கிளை மிதிக்கையிலும் அப்படியே. எனக்கு இதெல்லாம் ஒத்து வராதோ என பரிதாபமாய் மகனை பார்த்தேன். உடலோடு சட்டை ஒட்டிக்கொண்ட நிலையில் இருந்தான். அந்த வியர்வையைத் துடைக்க என் கைகள் பரபரக்க, அவனது உக்கிரமானப் பார்வை என்னை நடக்கச்சொல்லி கட்டளையிட்டது! என்னுள் உத்வேகம் பிறக்க தொடர்ந்த முயற்சியோ, சில நிமிடங்களில் நொண்டியடித்தது!

ஜிம்முக்கு எதிரே சீனர்கள் கூட்டமாக உடற்பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்குத்தான் தங்களது ஆரோக்கியத்தின்மீது எவ்வளவு அக்கறை? அப்படி இருப்பதால்தான் இயலாத நிலையிலும் முடங்கியிராது, துடிப்புடன் தங்களை வைத்துக்கொள்ள இதைப்போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சின்னச்சின்ன அசைவுகள் மூலம் பெரிய மாற்றங்களை நிகழ்த்த முடியுமென்ற அவர்களின் நம்பிக்கை என்னுள் பிரமிப்பை உண்டாக்கியது!  

ஒரு மணி பொழுதை அந்தந்த இயந்திரங்களிலும் ஏறி, இறங்கி கடத்திய நான், எடை காட்டும் இயந்திரத்தை நாட, ஜிம்முக்கு வந்தபோது இருந்த எடை என்னைப் பார்த்து எள்ளி நகையாடியது.

“உடனேல்லாம் வித்தியாசம் தெரியாதும்மா, ஒரு வாரத்துல தெரியும் பாருங்க” மகனது நம்பிக்கை தொனிக்கும் வார்த்தைகள், கனவுகளை உலரவிடாது காக்கும் குடையாய் ஆனது. ஜிம்முக்குப் போகும் செய்தியை கணவரின் காதுகளில் போட்டேன். அவரது அலட்சியப் பார்வை என்னைக் கருக்கியது. 

“ஜிம்முக்கெல்லாம் போகாதே!” என்னும் உடம்பின் கட்டளையுடனே விடியல் பிறக்கும். “காபியைக் குடிக்காதீங்கம்மா” மகன் எச்சரித்தது நினைவில் எழும்ப, என்னுடைய காலைப்பொழுதின் சொர்க்கம் காணாது போனது. ‘இவ்ளோ பெரிய உடம்பைக் குறைக்கணும்னு மகன் மெனக்கெடும்போது ஒரு காபியை இழக்க என்னால் முடியாதா?’ உள்ளம் ஒத்துழைக்கச் சமாதானமானேன்.

பள்ளி விடுமுறையில் பதினொரு மணிவரை தூக்கத்தை அனுபவிக்கும் மகன், காலையிலேயே “வாங்க போகலாம்” என்று வந்து நின்றான்.

பிள்ளையின் ஆர்வத்தைக் கலைக்க விருப்பமின்றி கிளம்பினேன். பழுப்புநிற  வெயில் நாலாபுறமும் சிதறிக்கிடக்க மகிந்தன் முன்னே சென்றுகொண்டிருந்தான். ‘இவனது முயற்சிக்காகவாவது நான் இளைத்தே ஆக வேண்டும்’ என்று உள்ளம் திடமானது. உடற்பயிற்சிக் கூடத்தில் மூத்தோருக்கானப் பகுதி இருக்கிறது. சக்கரவண்டியின் உதவியுடன் அங்கே வரும் முதியவர்கள், உதவியாளர்களின் துணையோடு சின்னச்சின்ன அசைவுகளைக்கூட பெரும் பிரயத்தனத்துடன் செய்வதைக் காண்கையில், என் சிரமம் வெகுவாய்க் குறைந்தது.

அடுத்தடுத்து வந்த நாட்களில் உள்ளத்து உறுதியோடு கவனமாய் அக்கம் பக்கத்தில் பார்வையை அலையவிடாது நடக்கத் தொடங்கினேன். தொடர்ச்சியாகப் பத்து நிமிடங்கள் நடக்க முடிந்தது. கொஞ்சங் கொஞ்சமாக வேகத்தின் அளவை  உயர்த்தினேன். அதீதக் களைப்பில் வேகவேகமாக வாங்கும் மூச்சின் உபயத்தால் நெற்றியில் ஒரு துளி வியர்வை பளிங்கைப்போலத் துளிர்த்தது. அது எவரெஸ்ட்டின் உச்சியை எனக்குக் காட்ட பரவசமடைந்தேன். வியர்க்கும் அளவுக்கு என்னால் உடற்பயிற்சி செய்ய முடிகிறதே! கவனமாக என் பார்வையை கலோரி வசமிருந்து தவிர்த்தேன். 

நடக்கிறேன் என்னும் நினைப்பே எனக்குக் களைப்பைத் தர, பார்வையை வெளியே அனுப்பினேன். குட்டிக் குட்டியாய் ஆரஞ்சு வண்ணப் பட்டாம்பூச்சிகள் ஆசிரியையின் மேற்பார்வையில் வலம் வந்தன. ஆசிரியை இருவராகக் கைகோர்த்து வரச்சொல்ல, ஒரு சிறுமி கைகோர்த்து வரும் சிறுவனின் கைகளை மேலே தூக்கி ஒரு சுழற்சியுடன் நடனமாடிச் சிரித்தாள். அக்காட்சியை ஆசிரியை ரசிக்கவில்லை என்பது அவரது முகத்தில் பிரதிபலித்தது. அவள் வகுப்பில் குடைச்சல் கொடுக்கும் மாணவியாக இருக்க வேண்டும். இந்த லயிப்பில் சில நிமிடங்கள் கரைந்தன.

தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் நடந்து முடித்திருந்தேன். சைக்கிளை மிதிக்க அதிலும் முன்னேற்றத்தையே கண்டேன். கைசைக்கிளை, கைகள் சுற்றச் சுற்ற என்னுடைய பழைய ஜாக்கெட்டுகளெல்லாம் மனக்கண்ணில் நடனமாடின. அலமாரிக்கு அடியில் தஞ்சமடைந்துபோன சுடிதார்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு நான், நீயென முந்தி வந்தன. ‘என்னால் நிச்சயம் முடியும்!’ உள்ளத்தில் வைரம்போல உறுதி பிறந்தது. அன்றைய தினம் உடல் எடையைப் பார்க்க நூறு கிராம் காணாமல் போயிருந்தது! 

ஒரு தீர்மானத்தை நாம் எடுத்துவிட்டால் அதை மற்றவர்களிடம் தெரிவித்துவிட வேண்டும். அப்போதுதான் நமக்காக இல்லாவிடினும் பிறர் கேள்வி கேட்பாங்களே அதுக்காகவாவது அந்த வேலையை முடிப்போமென வானொலியில் அறிவிப்பாளர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. தோழிகளின் நமுட்டுச் சிரிப்பை மனத்திலிருந்து அழித்துவிட்டு, அவர்களது செவிகளில் உடற்பயிற்சிக்கூடம் போகும் செய்தியைப் போட்டு வைத்தேன்.  

“ஏதும் சொல்லிக்கிற மாதிரி மாற்றம் தெரியலையே” என்றார் கணவர்.

ஜிம்முக்குள் அடியெடுத்து வைத்துவிட்டாலே ‘சிக்ஸ் பேக்’ கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையில் வந்து, சில நாட்களிலேயே காணாமற்போன இளைஞர்களைப்போல அவரது பேச்சு இருந்தது. இதற்கு என்ன பதில் சொல்வது? முட்டை பொரியு முன் குஞ்சுகளை எண்ண முடியவில்லையே என்று அங்கலாய்த்தால் என்னாவது?

“தொடர்ந்து போனால்தான் நல்ல ரிசல்ட் தெரியும்பா” எனக்குப் பக்கபலமாய் நிற்கும் மகன் அவருக்குப் பதிலைச் சொன்னான். அவனது வார்த்தைகள் என் பார்வையில் போதிமரமாய்க் கிளை பரப்பி நின்றன! 

இப்போதெல்லாம் மகிந்தனை எதிர்பார்க்காமல் கிளம்பிவிடுகிறேன். ஒவ்வொரு நாளும் இளைக்கும் எடை, பெருகும் உற்சாகமென நாட்கள் பறந்தன. சில சமயங்களில் இது போதுமே என மனம் அடம்பிடிக்கும். தோழிகளைப் பார்க்கையில் “ஜிம்முக்கெல்லாம் போய் அப்படியே ஐஸ்வர்யாராயைப்போல ஆகிடுவேன்னு பார்த்தால், பெரிய சைஸ் அண்டா மாதிரி வந்து நிக்குறே” என்று யாராவது இளக்காரமாகக் கேட்டுவிடுவார்களோ என்ற எண்ணம், மேலும் பயிற்சிகளைச் செய்யச் சொன்னது.

நீண்ட நாட்கள் சந்திக்காதவர்களைப் பார்க்கும்போது “உடம்புக்கு ஏதேனும்?” என்று தணிந்த குரலில் விசாரித்தனர். ‘வாழ்ந்தாலும் ஏசும்... தாழ்ந்தாலும் ஏசும்.....’ என்று சும்மாவா சொன்னாங்க?

உடற்பயிற்சியால் நித்தமும் பெருகும் வியர்வை என் நம்பிக்கை வளர ஆதாரமானது. முன்பு நாவை அடிமையாக்கிய உணவுகளைக் காணும்போது பழக்கத்தின் காரணமாய் மனம் கொஞ்சம் முரண்டு பண்ணும்தான். ‘இதைச் சாப்பிட்டுவிட்டு, உடம்பு அந்த அதிகமான கலோரியை எரிப்பதற்கு எத்தனை கிலோமீட்டர் ஓட வேண்டியிருக்கும்?’ எடைகாட்டும் இயந்திரம்நினைவுக்கு வந்து தலையைக்காட்டி சமாதானப்படுத்தியது.

 “மகதி.... எங்க கம்பெனியின் பொன்விழா கொண்டாட்டத்திற்குப் போலாமா?” என் அருமை கணவர் ஐஸ்க்கிரீமுக்கு குளுமையை அளிக்க முயற்சிக்கிறார்.

வீட்டிலிருந்துகொண்டு கூசாமல் கும்பகர்ணசேவையைப் புரிந்து பெருத்துப் போவதைவிட ஏதாகிலும் செய்து ‘மகதின்னா என்னன்னு நினைச்சீங்க?’ என்று கணவரிடம் நிரூபிக்க வேண்டும்! உடம்பு டிரட்மில்லில் இயங்க, உள்ளம் லட்சியத்தை நோக்கி ஓடியது.

ஸ்டோர் ரூமுக்குள் நெடுங்காலமாய் முடங்கியிருந்த கணவரது உடற்பயிற்சி உபகரணங்கள் கூடத்தை அடைந்திருந்தன.

 ‘சட்டைக்குள் அடங்கமாட்டேனென்று அடம்பிடிப்பது இப்போது அவரது பிரச்சினையோ?’

Pin It