“டேய் கிஷோர் சீக்கிரம் வாடா. ஆன்லைன்ல...”
“இன்னைக்கு எல்லாத்தையும் சுட்டுத் தள்ளறோம் ...”. என்று தன் பிரீ பயர் விளையாட்டில் மும்மரமாக இருந்தான் விஷ்வா.
“ஏன்டா , விஷ்வா உனக்கு காலைல வேற வேலையே இல்லையா, இந்த கொரோனா வந்தும் தொலைச்சுது ... பசங்க படிக்கிறதும் இல்லாம ... சும்மா பிரீ பயர் விளையாடறதே பொழப்பா இருக்கு” என்று காலை அடுப்பங்கரையில் தன்னை சுட்டுக் கொண்டிருந்தாள் வளர்மதி.
“விடு, மதி ... சும்மா ... அவனை திட்டிட்டே இருக்காதே” என்றான் தியாகு .
விஷ்வா, அவர்களின் சின்ன உலகம். கொரோனா ஊர் முழுவதும் வியாபித்து இருந்த சமயத்தில், ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக இருக்கும் தியாகுவிற்கு வரும் மிக குறைந்த வருமானம் அந்த மூவரையும் இயக்கிக் கொண்டிருந்தது .
ஒருபுறம் கொரோனா தனது கோரரூபத்தை விரித்துக் கொண்டிருந்த வேளையில் வறுமை தனது அதீத சுயரூபத்தை தோலுரித்துக் கொண்டிருந்தது .
"ஏங்க வரும்போது நம்ம பாண்டியன் ஸ்டோர்ல, அரிசி வாங்கியாங்க...."
"மதி… மாசக் கடைசி ... சம்பளம் வாங்குனா தான் இனி ... அதுவரைக்கும் ரேஷன் அரிசில பொங்கிக்க ..."
"சம்பளம் வாங்குனா மட்டும் ... வாங்கற எட்டாயிர ரூபால ... வீட்டு வாடகை கட்டறதா... மளிகை சாமான் வாங்கறதா ... நான் வேலைக்குப் போலாம்னா ... இந்த கொரோனாவினால வீட்டு வேலை கூடத் தரமாட்டேங்குறாங்க ..."
"மதி, காலங்காத்தால இப்படி ராமாயணம் பாடாத... எல்லாம் நன்மைக்கே "
விஷ்வா தன்னுடைய பிரீ பயரில் இன்னும் தீவிரமாக இருந்தான்…
"தியாகு... பஸ்ட் ப்ளோர்ல. கொஞ்சம் சுத்தம் பண்ணிரு..." என்றார் மேலாளர்.
முகக் கவசத்தில் தான் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது. அனைவரும் முகக் கவசத்திற்குள் சிரிப்பையும், கோபத்தையும் தனிமைப் படுத்திக் கொள்கின்றன . மருத்துவமனைப் பணி கொரோனாவிற்கு மிக அருகாமையில் சஞ்சரிப்பதுப் போல அமைந்து விடுவதால் நம்மை அவ்வப்போது கிருமி நாசினியில் கைகளை ஊறவைத்து ஒரு குற்ற உணர்வோடு நடமாடவேண்டியதாய் இருக்கிறது.
வீட்டிற்கு கொரோனவை கொடுத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான் தியாகு .
இரவு மணி ஒன்பதைக் கடந்து இருந்தது
தியாகுவின் அலைபேசி சிணுங்கியது………
"அப்பா ... எனக்கு வரும் போது ... பால்கோவா வாங்கிட்டு வா... "
"சரி ...வாங்கிட்டு வரேன் ..."
அன்று இரவு வீட்டில் ….
"என்ன அதுக்குள்ள தூங்கிட்டானா ... சாப்பிட்டானா?"
"காலைல வடிச்ச சோறு தான் ... ஊறுகாய் தொட்டுட்டு சாப்பிட்டான் .
நெடு நேரமாய் தூக்கத்தை வரவழைத்து கொண்டிருந்தான் தியாகு.
"என்னங்க ... தூங்கலையா..."
"தூக்கம் வரலே ..."
"இப்படி கஷ்டப்படறதுக்குக் கொரோனா நம்மை கொண்டு போயிறலாம் .."
"அப்படி இல்ல மதி மரணம் அவ்வளவு சீக்கிரம் நம்மை கொண்டு போகாது, நம்ம ஒவ்வொரு நாளும் புதுசா வாழறோம் "
"எங்க வாழறோம் ... தினமும் ... சாகறோம் ..."
"மதி நீ நம்ம வாழ்க்கையை தப்பா புருஞ்சுக்கிற... நீ அடுத்த நாளைத் தேடி இந்த நாளைத் தொலைக்கற ... இந்த நாள், நமக்குக் கிடைச்ச பொழுது, உணவு பலபேருக்கு கிடைக்கறது கிடையாது ... இந்த பிரபஞ்சம், நாம வாழற இந்த பூமி எல்லாமே நமக்கான ஒன்று ..."
"இப்படி பேசி பேசியே ஒரு நாள் காணாம போகப்போறிங்க ..."
"தினமும் காணாமல் போகும் நம்மை, நாமே தேடுவது தானே வாழ்க்கை.."
"எதிர்த்த வீடு, பக்கத்து வீடு, அடுத்த வீடுன்னு வந்த கொரோனா நாளைக்கு நம்மையும் தூக்கிட்டுப் போகப் போகுது ..."
"ஏன் இப்படி பயப்படறே... சோகங்களைச் சுமந்து, கொடுமைகளைக் கடப்பது தானே திடமான வழக்கைப் பயணம்... இங்கு மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட பலப்பரிட்சை ... இங்கு வாழ்வியல் தெரிந்தவர்கள் எதிர் கொண்டு கடக்கிறார்கள்.. மரணத்தை புரிந்தவர்கள் வாழ்வியல் பாடமாகிறார்கள்.
நடப்பது எல்லாம் இயற்கையின் விதிப்படியே ..." என்று சித்தாந்தம் பேசும் தியாகு ஒவ்வொரு நிமிடமும் வாழ்கிறான், அவன் வறுமையை ஏற்றுக்கொண்டு காலத்தைக் கடக்கிறான்.
"டேய் காலையிலேயே ஆரம்பிச்சுட்டையா ... உங்கப்பா எந்திரிக்கட்டும் உன்னை கொண்டுபோய் எதாவது ஹாஸ்டல்ல தள்ளிட்டு வரேன்.."
"ஏங்க எந்திரிங்க… மணி ஏழாச்சு..."
தியாகு எழுந்த பாடில்லை.
"லேட்டா தூங்கின இதுதான் " என்று தியாகுவின் அருகில் வந்து அவன் உடலைக் குலுக்கினாள்.
உடல் கனத்து ... உயிர் அற்று கிடந்த தியாகு ... நீண்ட நேரம் துயில் கொண்டவனாய் காணப்பட்டான்.
பதட்டத்தில் உறைந்து போனவள் உயிர் இருந்தும் சவமாய் கிடந்தாள் ..
ஊர்க்கூடியது ... சடங்குகளுக்கு மத்தியில் சபலம் இல்லாமல் கிடத்தப்பட்ட தியாகுவை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள் மதி. நேற்று தியாகு பேசியது ஒலிநாடாவாய் உருண்டோடியது. எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டாத மதியின் மௌனம் தியாகுவின் பாடத்தை ஒப்புவித்துக் கொண்டது போல இருந்தது.
வழக்கம்போல விஸ்வா பிரீ பயரில் யாருடனோ போராடிக் கொண்டிருந்தான் .
எல்லாவற்றையும் பழகிப் போனவனை மரணத்திற்கு மிகவும் பிடித்து போனது, அதனால் தான் யாருக்கும் தெரியாமல் விடிவதற்குள் பிடித்துப் போனது ...
- சன்மது