என்னை
யார் ஆள்கிறார்கள்
என்பது புரிந்ததில்லை.
முக்கியமல்ல அது.
முகமற்றவர்களாயினும்
மூழ்கிவிடப் போவதில்லை
எதுவும்.
யாரும் ஆளாமலே கூட
ஜீவித்திருக்கலாம்
ஆணைகளுக்குக்
கீழ்ப்படிதல்
இயற்கைக்கு முரண்
என்பது பாலபாடம்.
சுதந்திரத்தை
அடித்து நொறுக்கியது
அது.
ஆள்வது என்பது
ஓர் ஏற்பாடுதவிர
வேறென்ன என்பர்
அவர்கள்.
அதை விலக்கவும்
கூடுவதில்லை.
ஓயாமல்
ஆணைகளைத்
துப்பிக் கொண்டிருப்பதும்
கேட்பதும் கீழ்ப்படிவதும்
ஒரு யுத்தம் தான்.
அதற்கான நியாயம்
தேடிப்பதிவதுதான்
வரலாறெனும் சூட்சுமம்.
காயம் படுவதும்
ஓலமிடுவதும்
ஓய்ந்து போவதும்
இயற்கையாகவும்
இயல்பாகவும்
ஆக்கப்பட்டு விட்டது.
வழியும் வலிமையும்
இல்லாவிடினும்
ஆணைகளைச் சொல்ல
தேடியலைவதுதான்
எனக்கானது தவிர
ஏதுமில்லை சொல்ல.