மாசி
பங்குனி
சித்திரை
வைகாசி
அறுவடை முடிந்த
கிராமத்து தெருக்கள்!

எதிர்வீட்டு முனியன்
ஐப்பசிமாத மழையில் ஒழுகிய கூரைக்கு
புதுப் பனையோலையை
பின்னிக்கொண்டிருந்தான்!

எங்கோ வற்றிய குளத்திலிருந்து
தூக்கி வந்த நண்டு ஓடுகளை
வாசலில் போட்டுவிட்டுப் போயிருந்தது
செந்நாரை கொக்கு!

அந்த மத்தியான நேரத்தில் புளிய மரத்தடி நிழலில்
ரெட்டை மாட்டுவண்டியின் காளைகளுக்கு
லாடம் கட்டிக்கொண்டிருந்தான் வேலய்யன்!

அவிழ்த்த நெல்லை வாசலில் கொட்டி
காலால் பரப்பி காயவைத்துக்
கொண்டிருந்தாள் ஆரணியாமூட்டு பாட்டி!

ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்
விற்றுக்கொண்டிருந்த மாம்பட்டான் மணி
பழையை சைக்கிளை அரசமர மேடையில்
சாய்த்துவிட்டு தாயம் ஆடுபவர்களோடு
சேர்ந்துகொண்டான்!

கருவாட்டுக் கூடையோடு வந்த
கரிமேட்டுக்கெழவி கதைபேச
உட்கார்ந்துவிட்டாள் காத்தாயி
திண்ணையில!

வேப்ப மரத்தடியில் கார்கலப்பையைச்
செதுக்கிக்கொண்டு உலைக்களத்தை
ஊதிக்கொண்டிருந்தார்
மோட்டுத்தெரு பரமு ஆச்சாரி!

வேலிக்காத்தான் தோட்டத்து
சில்லுண்டு சத்தங்கள்
ரீங்காரமிட்டது தெற்குத்தெரு
தாண்டி!

தபால்காரரின் மிதிவண்டி சத்தம்
பட்டாளத்தான் வீட்டை
அடைந்ததும் ஓய்வெடுத்துக்
கொண்டது

படித்துறையில் குளித்து முடித்து
ஈரவேட்டியை இடுப்பில்கட்டி
அக்ரகாரத்தை நோக்கி நடந்து
வந்தார் சங்கரன் அய்யர்!

ஊர்க்கோடி வரை நடந்து வந்த
கீழத்தெரு அமாவாசை
கொல்லைப்புற வழியே
சென்றடைந்தான் அம்பேத்கர் காலனிக்கு!

மனிதர்கள் வாழ்ந்த தெருக்களில்
மனிதம் செத்துக்கிடந்தது
விண்ணில் கால்வைத்த தேசத்தில்
வீதியில் கால்வைக்க முடியாத
அமாவாசைகளின் கால்தடங்கள்
ஊருக்கு வெளியே!

- மண்டகொளத்தூர் நா.காமராசன்