மறுதலிக்கப்பட்ட ஒரு கவிதை... 

 

எனக்கு எப்போதும் 

வாய்த்து விடுகிறது 

எனக்குகந்தபடி சொற்கள் 

சொற்படி கேட்கும் 

ஒரு மழலையின் 

கைப்பற்றி உடன் நடக்கும் 

ஆர்வத்துடன் 

மாற்றியடுக்கிய 

சொற்களுக்கு 

செல்லமான கோபம் 

என் மேலிருந்தாலும் 

சிறிதும் முகம் சுளிக்காமல் 

என் பரிசோதனைக்கு 

உடன் படுகிறது 

வியப்பில் விழிகளை 

உயர்த்தியபடி 

ஆனால்... 

இதுநாள் வரை 

எனக்கு ஏனோ 

துளியும்  

வாய்க்கவேயில்லை. 

ஜாதியாதிக்கத்தால் 

மறுதலிக்கப்பட்ட 

என் நண்பனின் 

காதல் குறித்து 

ஒரு  

குறுங்கவிதையாவது 

 

என்னைப்போல் ஒருவன்... 

 

முதல் மழைத் துளிகளின்  

ஈரம் படர்ந்த முத்தத்தால் 

தளர்ந்த மண்ணில் 

தோன்றியிருந்தது 

ஏராளமான செடிகள். 

என்றோ வீசியெறிந்த 

பப்பாளி விதைகள் 

கூட்டம் கூட்டமாக. 

பள்ளி செல்லும் 

மழலைகள் போல 

குடை பிடித்திருந்தது. 

தக்காளிச் செடிகளுக்கோ 

பஞ்சமேயில்லை. 

கீழாநெல்லி 

துளிச்செடிகளென்று 

தோட்டம முழுவதும் 

அடர்த்தியான பசுமை 

நண்பர்கள் 

உறவினர்களுக்கென்று 

பகிர்ந்து கொண்டது போக 

எஞ்சிய செடிகள் எல்லாம் 

தோட்டத்தில் இடம் மாறியது 

எறிந்த கல் குறி தவறி 

கண்ணாடியை உடைக்க  

கைபிசைந்து 

மிரண்டபடி நிற்கப்போகும் 

அப்பாசிச் சிறுவனில் 

மீண்டும் என்னை 

அடையாளம் காட்டப்போகும் 

சுவரோர உரக்குழியில் 

தானே தோன்றிய 

மாங்கன்றினைத் தவிர 

 

- பிரேம பிரபா