அருங்கோடையின் நிறைமாதம்
மண் விறைத்து
புழுதி பறந்த பொழுதில்
கால்நடையாய் அலைந்து பசிவயிறுடன்
களைத்துத் திரும்புகின்றன
மாடுகள் தொழுவத்திற்கு

தக்க காப்பின்றி
பூஞ்சணம்படிய
குலைந்திருக்கும்
வைக்கோல்போரிலிருந்து
சிறு கற்றைகளை
பிடுங்கி வீசியெறுந்து
அக்கரையை பறைசாற்றும் மேய்ப்பானின் கரிசனை
மந்தைகளின் பசியை
நாசிக்குள் குமட்டலாய்
அசைபோட வைக்கிறது...

மேய்ச்சல்தரை
எரிந்த காகிதமாய் சாம்பல் பூத்து
பசும்புல் கனவில் மிதந்தலைந்து
திரும்பும் கணம்
கணுவுக்கு நகர்த்தும் கணம்
ஈமொய்க்கும் கன்றின்
உப்பிய நிலைகண்டு
தாய்மைக்குள் சுரக்கிறது கழிவிரக்கம்

சீர் பிசகி விசாரிக்கும்
இடையன் குறி
பால்பூத்த காம்புகளில்
தொக்கி நிற்க
நுரைத்தெழும் செம்புகளுக்காக
அலையும் மனம்
திருகு தாளமாய்
காற்றில் விடுகிறான்
இடைக்காலப் பாடலொன்றை

தனதும்,பிள்ளைகளினதும் பசியே பெரிதென்றெண்ணி
தடவியபடி தேடுகின்றன விரல்கள் தன் வாழ்வாதாரத்தை

அடி மண்டிக்காக எச்சில் சுரக்க
வீணியடித்து காத்திருக்கும்
கன்றின் பசி
கண்களில் இறங்குகிறது
இறுகச் சுருக்கும் வடமென!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It