நித்திரை
யாசிக்கும் கடவுளை
யாழிசைக்கும்
குருட்டுப் பிச்சைக்காரனுக்கருகில்
கண்டேன்
ஏந்திய அவன் கைகளில்
கிரணம் மிதக்கும் விடியல்கள்
தீர்மானமேதுமற்ற உச்சிப் பொழுதுகள்
பிரியம் தீராத அந்திகள்
பிரிய மனமில்லாத முன்னிரவுகள்
கூடவே
கடிதே இரவைக் கடக்க உதவும்
உபாயங்கள்
தெய்வீகத்தின் தொலைவில்
கடவுளொரு
வாஞ்சையுண்டாக்கும் குழந்தை
நித்தியத்துவத்தின்
ரேகைகளோடும் அவன்
கண்கள்
அயர்ச்சியூட்டும்
ஞானசாகரங்கள்
தத்தளித்து தத்தளித்து
கணப்பொழுது மூடி
கணப்பொழுது திறக்கும்
ஏராளம் தூஷனைகள்,
நிராகரிக்கப்பட்ட வரங்கள்
பல்லாயிரம் வேண்டுதல்கள்
கொஞ்சமே சில்லரையிருக்கும்
பைக்குள் அவன் துழாவுகிறான்
பதினைந்து மில்லி கிராமை
முன் வந்தவன்* கொண்டு
சென்றுவிட்டிருந்தான்
என் அளவை நான்
களவு கொள்கையில்
உலகங்களனைத்தின் இரவும்
தீராத் துக்கத்துடன்
கொட்டுகிறது குருடனின் யாழிலிருந்து
துடித்தடங்கும் கடவுளின்
வலக்கண்ணிலிருந்து
அரவமின்றி
நழுவுகிறேன் நான்.
(முன் வந்தவன்* - பிரம்மராஜன்)
இரண்டு கவிதைகள்
ஒன்று
வெள்ளிக் கிண்ணங்கள்
மிதந்தலையும் உன் நதியில்
தீண்டாக் காற்றுக்கும்
பூச்சொரியும் உன் வனத்தில்
மரணமும் பரிதாபமுற்றழும்
உன் பெருங்கருணையின் தேசத்தில்
என் பேச்சு எப்போதும்
மௌனம்தான்
செந்தாழம் பூக்கள் நிறைந்து
நீண்டதுன்
யௌவனத்தின் பொன் வீதி
தொலைத்த என் பருவங்களை
அழைத்து வந்தது
நீ பார்க்காத
உனதொரு பார்வை
நீ பேசாத
உனதொரு சொல்
மௌனத்தைத் தொடரும்
மௌனத்திற்குப் பின்
பதைத்து நிற்கிறது
பேசாத என் நேசம்
ஆயினும் ஆன்பே,
உதடுகள் கருகிடினும்
முத்தமிடுவேன்
தீயென எனைச் சுடும்
உன் மௌனத்தை.
இரண்டு
இரவு மெல்ல
அமைதி கொள்கையில்
எனக்குள்
பெருகத் தொடங்குகின்றன
கனவுகள்
ஆயிரம் முகங்கள்
தோன்றிக் கலையும்
ஒரு கனவில்
உன் முகம் தேடி
உறக்கம் கலைந்தேன்
சில்வண்டுகள் கொண்டாடும்
தீராத இவ்விரவில்
நட்சத்திரங்கள் கொண்டாடும்
உன் முகத்தை
ரசித்தவாறு விழித்திருப்பேன்.
- அசதா