இரவிற்கு
வாசம்
உண்டா?
இரவின்
வாசம்
எப்படியிருக்கக்கூடும்?
அன்னையின்
கழுத்தணைத்து
ஆழ்ந்துறங்கும்
குழந்தையின்
சிரிப்பின் வாசமா
இரவின் வாசம்?
அமானுஷ்ய
மௌனம் நிரம்பிய
இரவொன்றில்
காற்றிலாடும்
ஆலமரத்திலையின்
வாசமா இரவின் வாசம்?
புதுமணப் பெண்ணொருத்தி
களைந்தெறிகிற
கசங்கிய மல்லிகையின்
வாசமா
இரவின் வாசம்?
தூக்கம் தொலைத்த
நிறைமாத சூலியொருத்தி
உறக்கமற்று
துணையோடு
நடக்கையில்
அடிவயிறு நீவி
பேசிச் சிரிப்பாளே
அப்பேச்சின் வாசமா
இரவின் வாசம்?
சுவற்றில்
இப்போதும் கரிக்கோடு
கிழித்து கணக்கிடும்
சுயவரத்தில்
தோற்றழும்
கன்னியின்
கண்ணீரின் வாசமா
இரவின் வாசம்?
பூவின் காம்பு
வானம் பார்க்க
இதழ்களோ
தரையில் முத்தமிட
வீழ்ந்துக் கிடக்கும்
பவள மல்லிகையின்
வாசமா
இரவின் வாசம்?
இரவின் வாசம்
எப்படியிருக்கக்கூடும்?
விளக்கவியலா
பேரின்பமாய்..
உணரவியலா
இரவின் கனத்த மௌனமாய்...
பிரித்தறிய முடியா
பிரபஞ்சக்காற்றாய்..
இருக்கக்கூடும்..
இரவென்பது
வியப்பு!
இரவென்பது
மர்மம்!
இரவென்பது
கொண்டாட்டம்!
இரவென்பது
குறைந்த ஒளி!
இரவென்பது
மனிதர்களின் மர்மதேசம்!
- இசைமலர்