தலைவன் - தளபதி, சமுதாயத் தலைவன் - அரசியல் தலைவன் என ஒன்றுக்கொன்று நெருங்கிய நிலைகளில் தத்தம் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் இயங்கியவர்கள் தோழர் பெரியாரும், தோழர் அண்ணாவும். தந்தை - மகன் என்ற உறவு நிலை அளவிலும் அவர்களது நெருக்கமும், முரண்களும் இருந்தன. தனக்குப்பிறகு இயக்கத்தையும், சொத்துக் களையும் காப்பாற்றுவார் என்ற அளவுக்குப் பெரியாரின் நம்பிக்கையைப் பெற்றிருந்தவர்தான் தோழர் அண்ணா.

periyar anna 501ஆனால், கொள்கைரீதியாக முரண்பட்டு, தி.மு.க என்ற அரசியல் பயணம் தொடங்கப்பட்ட பிறகு, பெரியாரால் மிகக்கடுமையாக விமர்சிக்கப் பட்டார். தி.மு.கவையும், அண்ணாவையும் இன்று வரை வேறு எவரும் அவ்வளவு கடுமையாக விமர்சிக்கவே இல்லை என்ற அளவுக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியவர் பெரியார்.

அரசியல் பயணத்தில், தமிழ்நாட்டு ஆட்சிபீடத்தைத் தி.மு.க பிடித்தபின், அண்ணாவின் அமைச்சரவை, பார்ப்பனரல்லாத அமைச்சர வையாக அறிவிக்கப்பட்டது. பெரியாருக்குப் பெரும் மகிழ்ச்சி. அந்த ஆட்சியே பெரியாருக்குச் சமர்ப் பிக்கப்பட்டது. அதற்குப் பிறகு அண்ணாவின் இறப்புவரை பெரியார் அண்ணாவை முழுமையாக ஆதரித்துப் பல சமூகநீதிச் சட்டங்கள் வருவதற்குக் காரணமாக இருந்தார். இரு தலைவர்களின் இணைந்த செயல்பாடுகளும், எதிர் எதிர்ச் செயல் பாடுகளும் இக்கால இளம் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான பாடங்களாகும்.

முரண்

அண்ணா பெரியாரிடம் இருந்து பிரிந்து செல்லக் காரணம் பெரியார் மணியம்மையாரைத் திருமணம் செய்ததே என்று கூறப்படுகின்றது. ஆனால் காரணம் அதுவன்று. அண்ணா ஆரம்ப காலத்தில் இருந்து பெரியாரிடமிருந்து முரண் பட்டே வந்தார். இதை அண்ணாவே பின்வருமாறு கூறகிறார்.

இராயபுரம் இராபின்சன் பூங்காவில் 17.9.1949 அன்று மாலை நடைபெற்ற தி.மு.க.வின் தொடக்க விழாப் பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசிய கருத்து கவனத்தில் கொள்ளத்தகக்து:

“பெரியாரோடு நான் மாறுபட்ட கருத்துடையவன் என்று கூறப்படுகிறது. சிற்சில விசயங்களிலே, நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்தாலும், நெடுநாள் களாகவே கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தாலும் அவைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த அளவு ஒத்துழைத்தே வந்திருக்கிறேன். முடியாத நேரத்தில் மிகமிகக் கண்ணியமாக ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை அவர் வழிப்படியே கழகம் நடக்கும். பிறகு பார்த்துக் கொள்வோம் என்ற போக்கைக் கொண்டிருந்தவன்.” - (டி.எம். பார்த்தசாரதி, தி.மு.க. வரலாறு, பாரதி பதிப்பகம், சென்னை, (1961) 1998, பக்.118)

தோழர் பெரியார் வெகுமக்களுக்கு விடுதலைக்குத் தேவையானதைப் பேசினார். தோழர் அண்ணா வெகுமக்கள் விரும்புவதைப் பேச விரும்பினார். இதை 1947 இந்திய விடுதலை தெளிவுபடுத்துகிறது. இந்தியா சுதந்திரம் பெற்றதை அடுத்து பெரியார் ‘ஆகஸ்ட் 15 துக்கநாள்’ என்று அறிக்கை விடுகிறார் அதை மறுத்து அண்ணா ‘ஆகஸ்ட் 15 இன்பநாள்’ என்று பெரியாரின் அறிக்கைக்கு எதிராக அறிக்கை விடுகிறார். இது பெரியாருக்கும் அண்ணாவிற்கும் இடையில் மேலும் பிளவை அதிகப்படுத்தியது. பெரியார் சுதந்திர தினத்தை “பிரிட்டிஷ் - பனியா - பார்ப்பனர் ஒப்பந்த நாள்” என்று கூறகிறார்.

“வடநாட்டுக்காரர்களுக்கு இன்னும் அதிகமாக நம் மாகாணத்தின் பொருளாதாரத்தைச் சுரண்ட அதிகாரம் இந்த சுயராஜ்யத்தின் மூலம் ஏற்பட்டிருக்கிறதற்கு, அவர்களுக்குக் கொண்டாட்டம் ஏற்படலாமே தவிர, மானமுள்ள திராவிடன் இனி திண்டாட வேண்டித் தானே இருக்கப் போகிறது?” -- (எஸ்.வி. ராஜதுரை ,ஆகஸ்ட் 15 துக்கநாள்)

மக்களின் நலனுக்கு எதிராக இந்திய விடுதலை அமையும் என்று இந்திய விடுதலையைப் பெரியார் எதிர்த்தார். ஆனால் அண்ணா இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுவரை வெளிப்படை யாக எந்த எதிர்க் கருத்தும் தெரிவிக்காத அண்ணா முதன்முறையாக எதிர்க்கருத்தை முன் வைக்கிறார்.

அண்ணா சுதந்திர தினத்தை ஆதரிக்கும் காரணத்தைக் கூறகிறார்.

“நாம் மட்டுமல்ல, வேறு சிலரும் கூட, ஆகஸ்டு 15 ஆம் தேதியைத் துக்கநாளாகக் கொண்டாடு கின்றனர் என்று கூறுவது, நியாயமாகாது. நாம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி, ஒதுங்கி இருப்பது, அல்லது, துக்க நாளாகக் கருதுவது என்ற போக்கு, எந்நாட்டிலேயும் துணைக் கண்டத்திலேயும் மட்டுமல்ல, உலகிலேயே, நம்மைப்பற்றித் தவறான கருத்து கொள்ள, நாமாகவே, இடமளிப்பதாக வந்து சேரும். சுதந்திர தின விழாவை அசல் காங்கிரஸ் விழாவாக மாறும்படி, நாமே செய்தவர்களாவோம் - அந்த விழாவுக்கு, பாத்யதை கொள்ளக் கூடியவர்கள் காங்கிரசாரே, என்று நாமே அவர்களுக்குப் பட்டயம் தருவதாகவே முடியும் - அந்த நாளோ உண்மையில், எந்த துணைக்கண்டத்தினர் அனைவருக்கும், விடுதலை. விரும்பிகள் அனைவருக்கும், மகிழ்ச்சி தரும் நாள்.” - அண்ணாதுரை (திராவிடநாடு - 10.08.47)

இவ்வரிகள் மூலம், அண்ணா மக்கள் ஆதரவைப் பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த அறிக்கையானது அண்ணாவின் அரசியல் நோக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. அறிக்கையின் முடிவில் அண்ணாவே கூறகிறார்.

“தலைவரும் கட்சியும் என் போக்கு தவறு என்று கருதி என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் நான் சமூகச் சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், திராவிடத் தனிஅரசு எனும் அடிப்படைக் கொள்கைகளைக் கட்சிக்கு வெளியே இருந்தாகிலும் செய்து வருவேன் என்பதைக் கூறி இந்த அறிக்கையை முடிக்கிறேன்.’’

என்றார். ஆனால் பெரியாரோ, அண்ணா மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அண்ணாவும் பொதுச்செயலாளர் பதவியில் நீடித்தே வந்தார். 1948 மார்ச் மாதம் சென்னை மாகாண அரசு இந்தியைக் கட்டாயமாக்கிது. இந்தி எதிர்ப்பு மீண்டும் அண்ணாவையும் பெரியாரையும் நெருங்க வைத்தது. இந்த நெருக்கத்தை மக்களுக்கும், கழகத்தோழர்களுக்கும் எடுத்துக் காட்டும் வகையில் ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் அண்ணா வையே தலைமைத் தாங்கச் செய்தார் பெரியார். அண்ணாவை மட்டும் நடுநாயகமாக சாரட் வண்டியில் நிற்கவைத்து, தள்ளாத வயதிலும் தரையில் நடந்து வந்து, தொண்டர்களை ஆச்சரியப் படுத்தினார் பெரியார்.

அம் மாநாட்டில் பேசிய பெரியார், “எனக்கு வயது 70 ஐத் தாண்டிவிட்டது. எனவே பெட்டியின் சாவியை அண்ணாவிடம் ஒப்படைக்கிறேன்”என்று கூறினார். அண்ணா பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தார். இருந்தாலும் இந்த உறவு நீடிக்கவில்லை. அண்ணா திராவிடர்கழகத்தைவிட்டுப் பிரிந்தார்.

அந்தக் காலத்தில் வாரிசு உரிமைச் சட்டமில்லாததால், தனக்குப் பின் கட்சியையும் சொத்துக்களையும் பாதுகாக்க, தனக்கு நம்பிகையான மணியம்மையாரைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். உடுமலைப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து பெரியாருக்குச் சம்மன் வருகிறது. அடுத்தடுத்து மூன்று சம்மன்கள் காத்திருக்கின்றன. தான் சிறைக்குக் கொண்டு செல்லப்படுவோம் என்று பெரியாருக்குத் தெரிகிறது. உடனடியாக வாரிசை நியமித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டவர், மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். “திருமணம் என்பதுச் சட்டப்படியான பெயரே ஒழிய, காரியப்படி எனக்கு வாரிசுதான்” என்றார் பெரியார்.

அண்ணாவின், திராவிட நாடு ஏடு, மணியம்மையாரைத் திருமணம் செய்ததால் பெரியாரின் தொண்டர்கள் கண்ணீர் விடுவதாகவும் அந்தக் கண்ணீரில் பெரியார் மூழ்குவதைப் போன்றும் அட்டைப்படத்தை வெளியிட்டது. இதனால் பெரியார் தி.மு.க.வினரைக் ‘கண்ணீர்த் துளிகள்’ என்று விமர்சித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தத் திருமணத்தை காரணம் காட்டி அண்ணா கட்சியைவிட்டு வெளியேறி, தனிக்கட்சியைத் தொடங்குகிறார். திராவிடர் என்ற பெயரி லிருந்து ‘ர் ’ என்ற எழுத்தை நீக்கி, திராவிட முன்னேற்றக் கழகம் என கட்சிக்குப் பெயர் சூட்டினார்கள். அதற்கு விளக்கமாக இங்கு ‘திராவிடமும்’ வாழலாம் ‘ஆரியமும்’ வாழலாம் என்றனர். திராவிடர் கழகக் கடவுள் மறுப்பு கொள்கையை ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று மாற்றியமைத்துக்கொண்டனர். பார்ப்பனர் களைக் கட்சியின் உறுப்பினர்களாகவும் சேர்த்துக் கொண்டனர். தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்தனர். பார்ப்பனர்களைப் ‘பிராமணர்கள்’ என்று எழுதிவந்தனர். இதை அப்போதே பெரியார் கண்டித்தார்.

நட்பு

இப்படி பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும் 1967 இல் தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்ற உடனே தோழர் பெரியாரைத் தோழர் அண்ணா சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார். மேலும் தி.முக வின் வெற்றியை அய்யாவிற்கு காணிக்கையாக அளிப்பதாகக் கூறினார். அண்ணா அவர்கள் திருச்சி நகரிலுள்ள பெரியார் மாளிகையில் 07.06.1967 பெரியாரால் நடத்திவைக்கப்பட்ட திருமண விழாவில் பேசியபோது,

“நானும் அவரும் பிரிகிறபோதுகூட நான் அவரையே தான் தலைவராகக் கொண்டேன்; வேறு ஒருவரைத் தலைவராகப் பெறவில்லை. அன்று ஏற்றுக்கொண்டதைபோல் இன்றும் அவரையே தலைவராகக் கொண்டுதான் பணி செய்து வருகிறேன்.’’ என்று கூறினார்.

திருச்சியில் 17.9.1967 இல் நடைபெற்ற பெரியாரின் 89 வது பிறந்த நாள் விழாவில் இரு நூற்றாண்டுப் பணியை 20 ஆண்டுகளில் பெரியார் செய்துகாட்டினார் என்றும் பெரியாரின் போராட்டப் பாதையில் நான் என்று பேசினார். பேசியது மட்டும் இல்லாமல் ஆட்சிக்கு வந்த உடனே பெரியாரின் கொள்கைகளில் சிலவற்றிக்குச் சட்ட வடிவம் கொடுத்தார்.

* சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக்கப்பட்டன.

* சென்னை ராஜ்யம் என்ற பெயரை மாற்றித் ‘தமிழ் நாடு’ என்ற பெயரைச் சூட்டினார்.

* மும்மொழி கொள்கையை மாற்றி தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழித்திட்டத்தை கொண்டுவந்தார்.

* அரசு அலுவலகங்களில் கடவுள்கள், சாமியார்கள், படங்களை மாட்டக் கூடாது என்றும், ஏற்கனவே மாட்டப்பட்டிருக்குமானால் படிப்படியாக பிறர் கவனத்தை ஈர்க்காத வகையில் அகற்றிட வேண்டும் என்றும் தமிழக அரசு, தலைமைச்செயலாளர் ஒரு அரசாணையைப் பிறப்பித்தார்.

நிலச்சீர்திருத்தச்சட்டங்களை அமல்படுத்தினார்.

அண்ணா பதவியில் இருந்தது சிறிது காலமே என்றாலும், பெரியாரின் கொள்கைகளுக்குச் சட்ட வடிவம் கொடுத்து தனது சுயமரியாதை உணர்வை வெளிப்படுத்தினார். ‘தான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார்’ என்று கூறினார். பின்னாட்களில் பெரியாரின் திருமணத்தைப் பற்றிய தனது தவறான நிலைப்பாட்டையும் உணர்ந்தார்.

 அண்ணா அவர்கள் உடல் நலம் சரியில்லாத போது பெரியார் மிகுந்த வருத்தம் அடைந்தார். அமெரிக்காவிலிருந்து அண்ணா 10.10.1968 அன்று பெரியாருக்குக் கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில்

“சென்னை மருத்துவமனையிலும், விமானத் தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என்முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவே தான் கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கிவிட்டது என்பதனை விளக்க மாகத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அன்புக்கு நன்றி.”

என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்.

இது அண்ணா மற்றும் பெரியாரின் இருவரின் நட்பை எடுத்துக்காட்டுகிறது. அண்ணா 1969 பிப்ரவரி 3 அன்று மறைந்தார். 04.02.1969 அன்று சென்னை வானொலி மூலம், அண்ணா மறைவுற்ற மைக்குத் தோழர் பெரியார் அவர்கள் ஆற்றிய இரங்கல் உரை:

“அண்ணா முடிவெய்துவிட்டார். அண்ணா வாழ்க! அதாவது அண்ணா தொண்டு வாழ்க. தோழர்களே! நோய் வருவதும் முடிவெய்துவதும் மனித ஜீவனுக்கு இயற்கையேயாகும். இதில் யாரும் தப்ப முடியாது ஆனால், அதற்காக மக்கள் வருந்துவதும், துக்கம் கொண்டாடுவதும் மக்களுக்கு ஒரு சம்பிரதாயமேயாகும் என்றாலும், இவ் விஷயத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் சம்பிர தாயத்தை எல்லாம் தாண்டி மக்களின் உச்சநிலைத் துக்கக் கொண்டாட்டத்தைப் பெற்றுவிட்டார்.”………

“சமுதாயச் சீர்திருத்தப்பணி, மற்ற பணிகளைப் போல் சாதாரணப் பணியல்ல. மக்களின் வெறுப்பிற்கும், ஏச்சுப் பேச்சுக்கும் ஆளாகி அவர்கள் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கும், நடப்பிற்கும் விரோதமாகச் செய்யும் பணியாகும். சமுதாயச் சீர்திருத்தப் பணிக்கு என்ன வேண்டுமோ அதையே சிறப்புப் பெயராகக் கொண்டவர் அண்ணா ஆவார். ‘அறிஞர்’ என்கின்ற பெயர் வேறு எவருக்கும் கிடைத்ததற்கரிய பெயராகும். அப்படிப்பட்ட பெயரை முதலில் அண்ணா பெற்றார். நம் நாட்டில் இதுபோல் பெயர் பெற்றிருந்தவர் ‘புத்தர்’ ஒருவர் தான் ஆவார். புத்தியைக் கொண்டு சிந்தித்தாலேயே அவர் புத்தரானார். அறிஞர் என்ற பெயர் பெற்றவர்களால் தான் சமுதாயச் சீர்திருத்தம் செய்ய முடியும்.” - தோழர் பெரியார், விடுதலை, 20.03.1969.

அண்ணாவும் பெரியாரும் சில இடங்களில் முரண்பட்டாலும் பின் நாட்களில் ஒன்று சேர்ந்து செயல்பட்டனர். அண்ணாவை ஆதரித்த காலங் களில் கூட சில சமயங்களில் கொள்கைக்கு முரண் பட்டபோது, பெரியார் அண்ணாவை விமர்சிக்க மறக்கவில்லை. ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரித்தார் எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்க்கவும் செய்தார். எதிர்க் கருத்துக் கொண்டவ ராயினும் சமூகநீதிக்காக ஒன்று சேர்ந்து நின்று எதிரிகளை (பார்ப்பனர்களை) வெல்வதே பெரியாரின் இயல்பு. அப்படி வென்றதே அண்ணா மற்றும் பெரியார் இருவரின் நட்பு.

Pin It