தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது படித்த ஏழைப் பட்டதாரிகளுக்கு, உயர் பதவிகளுக்கு வழிவகுக்கும் ஓர் அரசு நிறுவனம்.

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு நிறுவனங்கள் என்றால் ஊழல்... ஊழல் என்ற பட்டியலில் இத்தேர்வாணையமும் இப்போது சேர்ந்துகொண்டது.

2016ஆம் ஆண்டில் குரூப்&-1 தேர்வில் 74 பதவிகளுக்காகத் தேர்வு எழுதியவர்களில் 62 பேர்கள் இணைக் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பதவிகளுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இந்த 62 பேர்களும் மனித நேயம் - அப்பல்லோ பயிற்சி மையத்தில் இருந்தே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் மிகப் பெரும் ஊழல் நடைபெற்று உள்ளது.

ராம்குமார் என்பவர் தேர்வாணைய ஊழியர்களுடன் இணைந்து, தேர்வுக்கான வினாத்தாளைத் திருடிப் பயன்படுத்தி கொண்டு, மீண்டும் அங்கேயே வைத்துவிட்டார்.

இவர் கொடுத்த தகவலின்படி அதிகாரிகள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், தனியார் பயிற்சிமைய இயக்குநர்கள் இதில் சம்பந்தப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பிட்டுச் சொன்னால் தேர்வாணைய வினாத்தாள் மனிதநேயம் -- அப்பல்லோ பயிற்சி மையத்திற்கும் கிடைத்திருக்கிறது.

எப்படி கிடைத்தது என்பது மிகப் பெரிய கேள்வி.

18-1-2018 அன்று இப்பயிற்சி மையத்தில் காவல்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றப் பட்ட முக்கிய ஆவணங்கள், கைபேசியில் இருந்த தொடர்பு எண்கள், தொடர்பு கொண்டவர்கள் யார் என்ற விபரம் இதுவரை வெளிவரவில்லை.

அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குநர் சாம்ராஜேஸ்வர் தலைமறைவு ஆனார். அவர் கைது செய்யப்படவில்லை. அவருக்கு மிக எளிதாக முன்பிணை கிடைத்துள்ளது. மனிதநேய அறக்கட்டளைப் பயிற்சி மையத்தின் நிறுவனர் சைதை துரைசாமி அ.தி.மு.க.வின் முன்னாள் மேயர். அவரிடம் இன்னமும் விசாரணை கூட நடத்தவில்லை.

அப்பல்லோ பயிற்சி மையத்தில், பயிற்சி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் புரண்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன.

அரசு வேலை வாய்ப்புகளுக்காக இத்தேர்வாணையத்தை முழுமையாக நம்பிப் படிக்கும் ஏழைப் பட்டதாரிகள், கிராமப்புறங்களில் இருந்து வருபவர்களின் எதிர்காலம் இதன்மூலம் கேள்விக் குறியாகி இருக்கிறது.

இது குறித்துத் தேர்வாணையத் துணைச் செயலாளர், காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் கைது செய்யப் பட வேண்டியவர்கள் கைது செய்யப் படவில்லை. ஆளும் கட்சியின் ஆதரவுடன் முன்பிணையில் வெளிவருகிறார்கள். விசாரிக்கப் பட வேண்டியவர்கள் விசாரிக்கப் படவில்லை.

இந்த ஊழல் குறித்து நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்றால் அதற்கு மத்தியப் புலனாய்வுத்துறை இதை விசாரிக்க வேண்டும்! அதுவும் உயர்நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ்!

Pin It