தங்கள் வாழ்வாதரங்களுக்காகவும், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கிறானே என்ற சொல்லை ஏதிர்கொள்ள முடியாமலும்,ஏதாவது ஒரு வேலையில் ஒட்டி இருக்க வேண்டும் என்ற காரணத்திற்க்காக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் , சென்னையை தேடியும், கோவை ,திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை தேடியும் ஈசல் புற்றை போல, நாளுக்கு நாள் மக்கள் வருவது அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.

இப்படி வரும் மக்கள் விடுமுறைக்காகவோ, பண்டிகை நாட்களின் போதோ தங்கள் சொந்த ஊருக்கு போக ரயிலையும்,பேருந்தையும் தான் நம்பி இருக்கின்றனர்.

இப்படி பேருந்தில் 6 மணி நேரத்திற்கும் மேலே பயணிக்கும் மக்களுக்கு,ஒரே இடத்தில் அமர்ந்து பயணிப்பது என்பதே பேரும் அவஸ்த்தை தான். ஆனால் இந்தக் கொடுமை பத்தாதுனு,, பேருந்தில் பயணிக்கும் மக்களுக்கு பசியாற்றும் தேவ தூதர் போல, பேருந்தை மெதுவாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் ஓட்டுனர் நிறுத்துவார்.

அங்கே தான்,அடுத்த நாள் வேலையில் நாம் காண்பிக்கும் அத்தனை மன உளைச்சலும் அறுவடை செய்யப்படும்.பேருந்தில் குறைந்தது 2,3 மணி நேரமாவது பயணித்த பின்னர் தான் பெரும்பாலும் உணவு விடுதிக்கு பேருந்து செல்லும்.ஆக இத்தனை நேரம் பயணிக்கும் மக்கள் பேருந்தை விட்டு இறங்கியவுடன் சிறுநீரை வெளியேற்றுவது முதல் பணியாக அமையும்.

சரி,நெடுஞ்சாலை தானே,அப்படியே சில அடி நடந்து சென்று சிறுநீரை கழித்து வரலாம் என சாலை நோக்கி நடக்கும் மக்களை, ஒரு நபர் மறித்து,"இங்கே எல்லாம் போகக்கூடாது" என்பான்.இந்த ஆள் அரவம் இல்லாத காடு போல உள்ள நெடுஞ்சாலையில், எங்கே போனால் என்ன என வாக்குவாதம் செய்தாலும்,அதே பதில் தான் திரும்ப வரும்.அங்கேயே கழிவறை இருக்கு.5 ரூபா கொடுத்து போயா" என்ற பதிலைக் கூறி,நம்மை எரிச்சலின் எல்லைக்கே அழைத்துச் செல்வான்.

சரியென்று 5 ரூபாயை கொடுத்து சிறுநீர் கழித்து, சரி இனி உணவருந்தலாம் என உணவு விடுதிக்குள் செல்லும் முன் தெரியாது,அங்கே தான் அதிர்ச்சி வைத்தியமே காத்துக்கொண்டு இருக்கிறது என்று.உள்ளே சென்று அமர்ந்த பின்னர் இல்லை போட்டவுடன்,உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்க்கும் முன்பே இலையில் சர்வரின் தேர்வுக்கு ஏற்ப உணவு இலையை அலங்கரிக்கும்.

"எனக்கு ஒரு தோசை போதுங்க.2 வேண்டாம்" என்றால், அதெல்லாம் தெரியாது,இங்க 2 தான் வைப்போம் என்பான். சரி எதற்கு தேவை இல்லாத விவாதம் என பேசாமல் அமைதியாவோம்.

"சரிங்க தோசைக்கு சாம்பார் ஊத்துங்க" என்று கூறி சில நிமிடங்களில், அருகில் வந்து நிற்கும் உருவம்,சாம்பார்,சட்னி தான் ஊத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் மெல்ல நிமிர்ந்து பார்த்தால், கோழிக்கறி  போல ஒன்றை படார் என மேசையின் மீது வைப்பான். சரி தோசைக்கு கோழிக்கறி நன்றாகத் தான் இருக்கும், என எண்ணி, "இதன் விலை என்ன? எனக் கேட்டால், கறியுடன் சேர்த்து மொத்தம் 150 என்பான். இவ்வளவா? எனக்கு கறி வேண்டாம்.சாம்பாரே போதும் என்றால், "சாம்பார் எல்லாம் கிடையாது.இது தான்" என ஒருவித தோரணையில் மிரட்டும் போது தான், நாம் ஏதோ மாட்டக்கூடாத இடத்தில் வந்து மட்டிக்கொண்டாமோ எனத் தோன்றும்.அவன்  சர்வர் அல்ல, சர்வர் என்ற பெயரில்  உலாவும் வழிப்பறி திருடன் என அப்போது தான் சிறு மூளைக்கு மெல்ல எட்டும்.

இப்படி பல கசப்பான அனுபவங்களை,இப்படி பேருந்தில் பயணிக்கும் அனைவரும் சந்தித்தே தான் ஆக வேண்டும்.ஆள் அரவம் அற்ற காட்டில் வேறு வழியில்லாமல் இதை செய்துதான் ஆகவேண்டும் என இப்படிக் கொள்ளை அடிக்கும் நபர்களுக்கும்,சாலையில் வழிப்பறி செய்பவனுக்கும் ஒரு வித்யாசமும் இல்லை. வழிப்பறி செய்பவன் கூட நம்மிடம் இருந்து காசை பிடிங்கியவுடன், நம்மை பார்த்து பயந்து ஓட்டம் எடுப்பான்.ஆனால் இதை போல ,மிகச் சாதாரண முகபாவனை வைத்து, நின்று நிதானமாக கொள்ளை அடிக்கும் கும்பலை என்னவென்று கூற?

இதை போல,நெடுஞ்சாலைகளில் உணவு விடுதிகளை குத்தகைக்கு எடுப்பது யார் என்று ஆராய்ந்தால்,அது அந்தப் பகுதி கவுன்சிலர்,எம்.எல்.எ, அரிசியல் பிரமுகர்கள் தான் எனத் தெரிய வருகிறது.

இப்போது தெரிகிறதா, அந்த முண்டா பனியன் போட்டு, சிறுநீர் கழிக்க விடாமல் தடுக்கும் நபருக்கும், ஜெயில் வாடனாக பயிற்சி எடுத்தது போல நம்மை மிரட்டும் அந்த சர்வருக்கும் எங்கே இருந்து இந்த தைரியம் வருகிறது என்று??

பயணிகளாக வருபவர்களும்,இது புது இடம் என்பதால், பெரும்பாலும் இது போல எதிர்கொள்ளும் சூழலிலும் வேறு வழியின்றி அமைதி காத்து நகர வேண்டிய பரிதாபத்திற்கு உரியவர்களாகின்றனர்.

பேருந்து கிளம்ப தயாராகின்றது. சரி,இடையில் பசி வேற எடுத்துத் தொலையும் என்று, அந்த உணவு விடுதிக்கு வெளியே, உணவு விடுதியுடம் ஒட்டி இருக்கும் சிறு கடையில், பிஸ்கட்டும், தண்ணி பாட்டாலும் வாங்கலாம் என சென்றால்,10 ரூபாய் பிஸ்கட் 30 ரூபாய்.தண்ணீர் 20 ரூபாய்.

வாங்கித் தொலைந்து பேருந்தில் ஏறினால், இந்த நாற்பது பயணிகளையும் இந்த வழிப்பறி கும்பலிடம் மாட்டி விட்டு, அவர்கள் தரும் ஓசி சோற்றை தின்று விட்டு அமர்ந்திருக்கும் ,அந்த ஓட்டுனர்,நடத்துனர் முகத்தை பார்க்கவே சகிக்காது.

பேருந்து மெதுவாக அந்த இடத்தை விட்டு நகரும் பொது தான் நிம்மது பெருமூச்சே வரும்.சரி என்று அவதானிக்க வேண்டாம்.அந்த வெளிக் கடைக்காரன்,உங்களுடன் ஒரு நேரக்கணிப்பு குண்டை அனுப்பி உள்ளான்.

அங்கே வாங்கி வந்த தண்ணீரை குடித்த உடன் தான் தெரியும் "அந்த தண்ணீரும் கசக்கும். தயாரிப்பு தேதி கூட இருக்காது" என்று

 - மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Pin It