2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றை நடத்தியது. இந்த தாக்குதல் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 40 இந்திய ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். பாஜக இதையே தன்னுடைய தேர்தல் பிரச்சாரமாகவும் மாற்றிக் கொண்டது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து வந்துவிட்டது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர்கள் முடுக்கி விட்டார்கள்.
இது குறித்து அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் இரண்டு நாட்களுக்கு முன்பு “The Wire” இணையதளத்திற்காக கரண் தாப்பருக்கு ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்திருக்க கூடிய கருத்துக்கள் அதிர்ச்சி தரக் கூடியவை, இது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இராணுவத்தினர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் செல்வதற்கு ஐந்து இராணுவ விமானங்களை அனுப்பி உதவுமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் கேட்ட போது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விமானங்களை அனுப்ப முடியாது என்று கூறிவிட்டார். இதன் காரணமாக இராணுவத்தினர் ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு தரைவழி மார்க்கமாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். அதன் காரணமாகத்தான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தாக்குதலை நடத்தி முடித்து இருக்கிறார்கள் தீவிரவாதிகள்.
இது குறித்து பிரதமர் மோடியிடம் பிரச்சினையை எடுத்துச் சென்றபோது "வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருங்கள், எதுவும் பேசக்கூடாது" என்று மோடி உத்தரவிட்டதாகவும், அதே போல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அமைதி காக்கும் படியும் தன்னை அறிவுறுத்தியதாகவும் சத்யபால் மாலிக் தற்போது குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஊழல் எதிர்ப்பில் மோடி மிகப் பெரிய அக்கறையுள்ளவர் என்று கூற முடியாது என்று கூறியுள்ள அவர், கோவாவில் நடந்த பாஜக ஆட்சியின் ஊழலை ஒன்றிய ஆட்சியின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், தன்னை மேகாலயாவிற்கு ஆளுநராக மாற்றினார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க அனுமதி கேட்டபோது, கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகம் தலையிட்டு அதை நிறுத்தியதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
சத்யாபால் மாலிக் பாஜகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். நான்கு மாநிலங்களில் ஒன்றிய பாஜக ஆட்சியால் ஆளுநராக நியமிக்கப்பட்டவர். தேசபக்தியையும், இராணுவத்தினரையும் தேர்தல் அரசியலுக்காக பாஜக எப்படி பயன்படுத்திக் கொண்டது என்ற அவரது குற்றச்சாட்டை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது.
பா.ஜ.க.வின் ‘தேசபக்தி’ வாக்கு வங்கிக்காகவே பயன்படுத்தப்படும் கச்சாப் பொருளாகிவிட்டது.