அதானியின் வரலாறு காணாத பங்குச்சந்தை ஊழலை அம்பலப்படுத்திய ஹிண்டன்பெர்க் நிறுவனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியப் பங்குச்சந்தையை மேலாண்மை செய்யும் ‘செபி’(SEBI) அமைப்பின் தலைவரே அதானியின் முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார் என்கிற ஆய்வினையும் வெளிப்படுத்தி உள்ளது.
அதானி தனது ஷெல்(Shell) நிறுவனங்கள் எனப்படும் மோசடியான 578 கிளை நிறுவனங்களை உலகம் முழுவதும் வைத்திருக்கிறார். ஷெல் நிறுவனங்கள் என்பவை பதிவு செய்யப்பட்ட, ஆனால் வர்த்தகம் செய்யாத போலி நிறுவனங்களாகும். வரி ஏய்ப்பு, பண மோசடி செய்வதற்காக அமைக்கப்படும் நிறுவனங்களாகும். கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதற்காக பெரிய நிறுவனங்கள் பயன்படுத்தும் மோசடி கிளை நிறுவனங்களே ஷெல் நிறுவனங்கள். வரியற்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த போலி நிறுவனங்கள் மூலம் பங்குகளை குவித்தல் (Stock parking), பங்குகளின் விலைகளை அதிகமாக்கி விற்பது (Stock Manipulation), பண மோசடி (Money laundering) போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்சம் கோடி ஊழல்களை செய்கிறார் என ‘ஹிண்டன்பெர்க் எனப்படும் பெருநிறுவனங்களின் முதலீடுகளைப் பற்றி பகுப்பாய்வு செய்யும் நிறுவனம்’ ஒன்று ஒரு பெரிய அறிக்கையை கடந்த 2023-ம் ஆண்டு வெளியிட்டது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே 100 பில்லியன் டாலர் (சுமார் 8.30 லட்சம் கோடி) பங்குகளாக குவித்துள்ளார். அதானி மற்றும் அவரின் குடும்பத்தினர் குவித்திருக்கும் பங்கு பத்திரங்களின் எண்ணிக்கை 120 பில்லியன் டாலர் (சுமார் 10 லட்சம் கோடி) என ஹிண்டன்பெர்க் தெரிவிக்கிறது.
அதானியின் பங்குச்சந்தை ஊழல் குறித்து மே 17 இயக்கம் வெளியிட்ட கட்டுரை :
அதானியின் பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டுகளை செபி (SEBl) எனப்படும் ‘இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்’ விசாரித்து வருகிறது. செபி அமைப்பு என்பது “பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்துதல், பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களின் நலன் பேணுதல், சந்தை மோசடிகளுக்கு எதிராக செயல்படுதல்” போன்ற அதிகாரம் உள்ள அமைப்பு செபி ஆகும். செபியின் உறுப்பினராக 2017 யிலும், செபியின் தலைவராக 2022லும் தேர்ந்தெடுக்கப்படுகிறார் மாதபி பூரி புச்.
மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர், 2015-ல் இந்தியன் இன்ஃபோலைன் (llFL) என்றும் நிறுவனத்தில், சம்பளம் மூலமான கிடைத்த பணம் என்று 2015-ல் 10 மில்லியன் டாலர் (சுமார் 63 கோடி ரூபாய்) கணக்கைத் தொடங்குகிறார்கள். இந்த இந்தியன் இன்ஃபோலைன் நிறுவனமானது, பங்குகள், முதலீடுகள், சொத்து, தரகு, கடன், முதலீடு போன்ற நிதிக் கட்டமைப்பு ஆலோசனைகளை வழங்கும் நிறுவனமாகும்.
இந்த நிறுவனமானது ‘உலகளாவிய வாய்ப்புகள் நிதி முதலீடு’ (GOF) என்ற பெயரில் கடல்சார் நாடுகளுடனான முதலீடுகளை அறிவிக்கிறது. இந்த நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமே ‘(GDOF-குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டி பண்ட்ஸ்)’. இந்த GDOF நிறுவனத்தில்தான், மாதபி புச் 10 மில்லியன் டாலரை முதலீடு செய்கிறார். இந்த நிறுவனங்களில்தான் அதானியின் இரண்டு சகோதரர்களும் முதலீடு செய்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்களையே அதானியின் ஷெல் நிறுவனங்களென ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது அதானியின் பங்குச்சந்தை ஊழல் குறித்து விசாரணை செய்யும் செபி நிறுவனத் தலைவரே, அதானியின் பங்குதாரராக இருந்திருக்கிறார் என இது அம்பலப்படுத்தியுள்ளது. மேலும் அதானியின் வெளிநாட்டு பங்குதாரர்கள் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், வெளிநாட்டு பங்குதாரராக மாதபி புச் இருப்பதால்தான், அதற்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஹிண்டர்பெர்க் சந்தேகிக்கிறது.மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர், கரீபியன் தீவுகளில் போன்ற கடல்சார் தீவுகளில் உள்ள ஷெல் நிறுவனங்களில், முதன்மையாக மொரீஷியஸ் ஷெல் நிறுவனங்களில நடைபெறும் பித்தலாட்ட வலைப்பின்னலை கண்டறிந்து 106 பக்கங்களில் வெளிப்படுத்தி இருந்தது ஹிண்டன்பெர்க் நிறுவனம். இந்த 106 பக்க ஆதாரங்களை 40-க்கும் மேற்பட்ட தன்னிச்சையான ஊடக நிறுவனங்களின் விசாரணைகளும் உறுதிப்படுத்தியதாக இந்நிறுவனம் தெரிவிக்கிறது. இவ்வளவு சிக்கல்களை உறுதியான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினாலும், செபி அமைப்பு இதனை குறைபாடுடைய அறிக்கை என்றும், வலுவான ஆதாரங்கள் இல்லை எனவுமே அதானிக்கு சார்பாக வாதிட்டு, இந்த அறிக்கை வெளியான 18 மாதங்கள் கடந்தும், அதானி நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது.
மாதபி புச் 2017- 2022 வரை செபி அமைப்பின் முழு நேர உறுப்பினராக இருந்தார். மார்ச் 16, 2022 ல் செபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். செபியின் தலைமையாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து இங்கு மூலதனம் செய்ய வருபவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். ஆனால் செபியின் தலைவரே ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்திருக்கிறார். அப்படியென்றால் இதன் நேர்மையின் மீதே கேள்விகள் எழும்புகிறது.
மதாபி புச்சும், அவரது கணவரும் அகோரா பார்ட்னர்ஸ் என்னும் ஆலோசனை வணிக நிறுவனத்தை 2013-ல் துவங்குகிறார்கள். ஆலோசனை நிறுவனம் என்றால் பங்குகளை எந்த துறையில் முதலீடு செய்யலாம் என்பது உள்ளிட்ட தகவல்களை ஆலோசனை வழங்கும் நிறுவனமாகும். அந்நிறுவனத்தின் 99% பங்குகளை இப்போதும் மதாபி புச் வைத்திருக்கிறார். 2022 நிதியாண்டின் முடிவில், வருடாந்திர அறிக்கையின் படி சுமார் 2.4 கோடியை அந்த நிறுவனம் ஈட்டியிருக்கிறது. இது செபியின் உறுப்பினராக இருந்த போது வாங்கிய சம்பளத்தை விட 4.4 மடங்கு அதிகமாக, ஆலோசகராக இருந்த போது பெற்றிருக்கிறார்.
மேலும், சிங்கப்பூரில் உள்ள இதே நிறுவனத்தின் கிளையில், 100% பங்குதாரராக இருந்தார். செபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட 2022-ல் இதன் பங்குகளை கணவர் பெயருக்கு மாற்றியிருக்கிறார். அவர் செபியின் உறுப்பினராக இருந்த போதும், இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவே இருந்திருக்கிறார். சிங்கப்பூரில் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்பதால், அவை குறித்தான பங்கு மற்றும் வருவாய் நிலவரம் அறிய முடியாததாகி இருப்பதாக ஹிண்டன்பெர்க் கூறுகிறது.
இவர் செபியின் உறுப்பினராக இருந்த போதே 2018-ல் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பயன்படுத்தி, நிதியின் குறிப்பிட்ட பகுதியை மீட்பதற்காக, தனது கணவரின் பெயரைப் பயன்படுத்தி வணிகம் செய்திருக்கிறார் என, ஒரு விசில் ப்ளோயர் (நிறுவனங்களின் சட்டவிரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் நபர்) அளித்த ஆவணங்கள் மூலமாகவே தெரிய வந்திருக்கிறது.மேலும் இவரது கணவர், உலகளாவிய தனியார் பங்கு நிறுவனமும், இந்திய பெரும் முதலீட்டாளருமான பிளாக்ஸ்டோன் (Blackstone) என்னும் நிறுவனத்திற்கு, மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த பதவிக்குரிய தகுதி எதுவும் இல்லாதவர், எதற்காக இதன் ஆலோசகராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற கேள்வி முக்கியமானது. மனைவி, பங்குச்சந்தை நிதிக் கட்டுப்பாட்டு மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை செய்யும் செபியின் தலைவராகவும், கணவன் பங்குகளை முதலீடு செய்யும் நிறுவனத்தின் ஆலோசகராகவும் இருந்தால், பிளாக்ஸ்டோன் நிறுவனம் பங்குச்சந்தையில் ஆதாயத்தை அடைந்திருக்காதா என்பதே ஹிண்டன்பெர்க்கின் கேள்வியாக இருக்கிறது.
இந்த பிளாக்ஸ்டோன் REIT (ரியல் எஸ்டேட் இன்வெஸ்மென்ட் டிரஸ்ட்) நிறுவனம், இந்தியாவில் ரியல் எஸ்டேட் நிறுவனங்களான எம்பெசி REIT, மைன்ட்ஸ்பேஸ் மற்றும் நெக்சஸ் நிறுவனங்களில் முதலீடுகளை செய்கிறது. இந்த நிறுவனங்கள் மூலமாக ‘பொதுமக்களின் பங்கு நிதி திரட்டலில் (IPO)’, நிதிகளைத் திரட்ட செபி ஒப்புதல் அளிக்கிறது. இதனால் பிளாக்ஸ்டோனுக்கு அதிகப்படியான பங்கு நிதிகள் கிடைக்கின்றன. பிளாக்ஸ்டோன் நிறுவனத்திற்காக செபி REIT-ன் விதிகள் கூட தளர்த்தப்பட்டன. மேலும் மதாபி புச், வருங்காலப் பங்குச்சந்தைகளில் ரியல் எஸ்டேட் முதலீடுகளே (REIT) அதிக லாபத்தை ஈட்டக் கூடியவை என்றே பல பொருளாதார மாநாடுகளில் பேசுகிறார். இவை எல்லாம் பிளாஸ்டோன் REIT நிறுவனத்தின் நன்மைக்காகவே செய்தவைகளாக இருக்கின்றன. இவ்வாறு அவரது கணவர் ஆலோசகராக இருக்கும், அந்த நிறுவனத்தின் மூலம் இவர்கள் பெற்ற ஆதாயம் என்ன என்பது நேர்மையான விசாரணை அமைப்பு ஒன்று அமைந்தாலே சாத்தியமாகும். இதைப் போன்று சந்தைகளில் ஏற்படும் மோசடிகளை விசாரிக்கும் அமைப்பே செபி. ஆனால் செபியின் தலைமையே சந்தேக வட்டத்திற்குள் நிற்பதாக ஹிண்டன்பெர்க் கூறுகிறது.
ஒரு ஊழல் நிறுவனத்தை கண்டறிந்து வெளிப்படுத்தினால், அதை நோக்கி மக்கள் கேள்விகளை வைப்பதும், போராட்டங்கள் நடத்துவதும்தான் எங்கும் நடைபெறும். ஆனால் உலகில் வேறெங்குமே நடந்திராத வகையில், அதானி என்னும் ஊழல் நிறுவனத்தை ஹிண்டர்பெர்க் அம்பலப்படுத்தியதை, பாஜக, ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் இந்தியாவின் மீது நடந்த தாக்குதல் என கதறினர். பத்து லட்சம் கோடி அளவிலான பங்கு பரிவர்த்தனையில் நடந்த கொள்ளைகள் பற்றி பேசுவதையே எதிர்த்தனர். அதானியின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி என திட்டமிட்டே இந்தியப் பார்ப்பன கூடாரங்கள் கருத்துக் கட்டமைப்புகளை செய்தன.
இந்த ஆய்வறிக்கை வெளிவந்ததும் அதானியின் பங்குகள் பல லட்சம் கோடி அளவில் வீழ்ந்தன. உடனே நண்பரை மீட்க பொதுத்துறைகளான SBI, LIC பங்குகளை கொண்டு அதானியை தூக்கி விட்டார் மோடி. இன்றும் வங்கதேசத்திற்கு மின்சாரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த அதானியின் நிறுவனம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்திய சந்தையை திறந்து விட்டிருக்கிறார் மோடி. அதானிக்கு சொந்தமான 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் ஜார்கண்டில் இருக்கிறது. அதன் மின்சாரம் வங்கதேசத்திற்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்தது. வங்கதேசத்தில் ஏற்பட்ட குழப்பத்தினால், அங்கு விற்க முடியாத நிலையில், இந்திய மின் விதியையே அதானிக்காக வளைத்திருக்கிறார் மோடி.
இந்தியப் பார்ப்பனியம் கோலோச்சும் செபி போன்ற அரசு அமைப்புகளை பனியா குசராத்தி மார்வாடிகளின் நலனுக்கானதாக மாற்ற, அதன் விதிகளை தளர்த்தி பார்ப்பனியம் வளைந்து கொடுக்கிறது. தங்களுக்கு சாதகமான நிறுவனங்களுக்காக பங்குச்சந்தையின் போக்கை தீர்மானித்து ஐந்து லட்சம் கோடிகள் அளவிற்கு பங்குச்சந்தையில் ஊழல் செய்த சித்ரா ராமகிருஷ்ணனும், அதானிக்கான பங்குதாரராக இருந்தும் செபி அமைப்பில் தலைவராக இருந்து அதானியின் கொள்ளைக்கு துணை புரிந்த மதாபி புச்சும் பார்ப்பனியக் கொள்ளைகளின் முகங்கள்.
அம்பானி, அதானி போன்ற குடும்பங்களின் வளர்ச்சிக்காக இந்திய நிர்வாகக் கட்டமைப்பேயே மாற்றுகிறார் மோடி. அவர் ஆட்சிக்கு வந்த பத்தாண்டுகளில் குசராத்தி பனியா முதலாளிகளின் வராக்கடன்களை 25 லட்சம் கோடி அளவில் தள்ளுபடி செய்தது பாஜக அரசு. ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி அளவிற்கு வரி சலுகைகளும் செய்தது பாஜக அரசு. ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் 100 கோடி அளவு இந்தியக் கடனை உயர்த்தி, இன்று சுமார் 170 கோடி அளவிலான கடன்களை இந்தியக் குடிமக்களின் தலையில் சுமத்தியிருக்கிறது.
நிதிநிலை அறிக்கைகளை சாமானிய, நடுத்தர மனிதர்கள் ஈட்டும் வருமானத்திலிருந்து வரிகளாக உறிஞ்சும் வகையில் அமைக்கிறது. குடிமக்களை கடனில் ஆழ்த்தி, உழைப்பை உறிஞ்சி கொண்டு, சுதந்திர தினம் கொண்டாட ஒவ்வொருவர் வீட்டிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என அழைப்பு விடுக்கிறார் மோடி.
அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால் பணத்தோட்டமாக பங்குச்சந்தை இந்த கும்பல்களின் கொள்ளைகளுக்கு உரம் ஊட்டிக் கொண்டிருக்கிறது என்றே சொல்ல முடியும். இந்திய அதிகாரப் பார்ப்பனியமும், பனியா குசராத்தி முதலாளிகளும், இந்திய ஆளும் பாஜகவும் 140 கோடி மக்களை சுரண்டி சுதந்திரத்தை அனுபவிக்கும் போது, சுரண்டப்படுபவர்களும் சுதந்திர நாள் கொண்டாடுவது நகைமுரணாக இருக்கிறது.
- மே பதினேழு இயக்கம்