மக்களின் பணத்தை கூட்டுக்கொள்ளை அடித்த பேர்வழிகளை ஊழல்வாதி என்கின்றார்கள். ஆனால் அதே ஊழல்வாதி சிறை சென்று திரும்பினால், ‘தியாகத் தலைவி’ என்கின்றார்கள். தியாகத் தலைவிகளோ சிறையிலேயே ஊழல் செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து இந்தியாவில் உள்ள மற்ற ஊழல் பெருச்சாளிகளுக்கு எல்லாம் முன் உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

Sasikala 700எனினும் ஊழல்வாதி என்பதற்காக ஒருவரை மக்கள் புறக்கணிப்பதில்லை என்பதை இந்திய அரசியலில் லாலு பிரசாத் யாதவ், சுரேஷ் கல்மாடி, ஓம்பிரகாஷ் செளதாலா, மதுகோடா, எடியூரப்பா, ஜெகன்மோகன் ரெட்டி, ஏ2வின் அன்பு சகோதரி ஜெயலலிதா வரை நாம் பல பேரைப் பார்த்திருக்கின்றோம்.

 மக்கள் ஊழலை ஒரு பெரும் பிரச்சினையாகப் பார்க்காததன் விளைவுதான் ஊரை அடித்து உலையில் போட்ட ஊழல்வாதிகள் எல்லாம் எந்தவித கூச்சமோ, குற்ற உணர்வோ இன்றி மீண்டும் மக்கள் முன் தங்களுடைய திருமுகத்தைக் காட்டவும், அவர்களிடம் மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வாய்ப்பளிக்கவும் கேட்க வைக்கின்றது.

தற்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் சிறை சென்ற குட்டி சிங்கமும், சின்ன அம்மாவுமான தியாகத் தலைவி சசிகலாவின் ரீஎன்ரியை நாம் அப்படித்தான் பார்க்க வேண்டி இருக்கின்றது.

 தன்னுடைய புனித சிறை வாழ்க்கையைக் கழித்தபின் தியாகத் தலைவியாக வெளியே வந்த சசிகலாவுக்கு வழி நெடுக அவரது பக்த கோடிகள் மலர் தூவி வரவேற்று மங்கள கீதம் இசைத்தார்கள். அந்தக் வரலாற்று சிறப்பு மிக்க காட்சியைக் கண்டவர்கள், எலும்புத் துண்டை கவ்வ சாரை சாரையாய் நாய்கள் அணிவகுத்து நின்றது போல இருந்தது என வியந்து போற்றினார்கள்.

சிறையில் இருந்து வந்த தியாகத் தலைவியைப் பார்ப்பதற்கு வரிசை கட்டி நின்றவர்களில் சில முற்போக்கு அரசியல் தரகர்களும் அடக்கம் என்பது நமக்குத் தெரியும். அரசியல் தரகர்கள் தங்களுக்குள் சந்தித்து குசலம் விசாரித்துக் கொள்வதற்கு ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்றும் பெயருண்டு.

 ஆனால் தரகர்கள் என்னதான் அரசியலுக்கு வரச் சொல்லி தூண்டி விட்டாலும் சசிகலாவால் அதிமுகவைக் கைப்பற்றுவது முடியாததாகவே இருந்தது. காரணம் அடிமைகளான ஓபிஎஸ், இபிஎஸ் கையில் அதிமுக இல்லை என்பதும், அதை பிஜேபியே தற்போது வழிநடத்துகின்றது என்பதும், ஓவராய் ஆட்டம் போட்டால் கொட்டம் அடக்கப்படும் என்பதும் தியாகத் தலைவிக்குத் தெரியாதது இல்லை.

அதனால்தான் அடிமைக் கூட்டம் எப்படியும் ஆட்சி அதிகாரத்தை இழந்து அரசியல் அனாதையாய் மாறிவிடும், அதற்குப் பின்னால் தன்னுடைய மன்னார்குடி முகத்தைக் காட்டலாம் எனப் பொறுமையாக இருந்திருக்கின்றார்.

 தற்போது அதை காட்டத் தொடங்கி இருக்கின்றார். அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு தி.நகரில் உள்ள எம்ஜிஆர் ஜானகி மாளிகையில் நடந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா, ''அதிமுகவை காலம் முழுக்க காப்பாற்ற வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. மக்களுக்காக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும். நாம் ஒன்றாக வேண்டும். அதிமுக வென்றாக வேண்டும். நமக்குத் தேவை ஒற்றுமை தான். நீரடித்து நீர் விலகாது. என்னால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றுதான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்தேன். நெருக்கடிகள் என்னைச் சூழ்ந்த போதும் கூட அதிமுகவை ஆட்சியில் அமர்த்திவிட்டுத்தான் சென்றேன்'' எனக் கூறியுள்ளார்.

 மேலும் அங்கு கட்சிக் கொடியை ஏற்றிவிட்டு 'அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா' என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றையும் திறந்து வைத்துள்ளார். இதன் மூலம் சசிகலாவின் அரசியல் வருகை உறுதியாகி இருக்கின்றது.

 தியாகத் தலைவியின் அரசியல் வருகை உறுதியாகி விட்டாலும் அதற்கான எந்த வெற்றிடமும் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. ஜெயலலிதா இல்லாமாலேயே 66 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருக்கின்றது. ஜெயலலிதா இருந்தபோது 2016 தேர்தலில் இது 136 ஆக இருந்தது.

 தியாகத் தலைவிக்கு தான் சார்ந்த சாதி ஓட்டுக்களே கைகொடுக்கவில்லை என்பதைத்தான் சட்டப்பேரவை தேர்தலில் டிடிவி.தினகரனின் (அமமுக) படுதோல்வி காட்டுகின்றது.

 அதுமட்டும் அல்லாமல் அந்தக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலர் திமுக மற்றும் அதிமுகவில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொண்டார்கள்.

 இப்படி அனைத்துக் கதவுகளுமே அடைக்கப்பட்ட பின்னால்தான் நேரடியாகவே அதிமுகவை கபளீகரம் செய்து விடுவது என்ற திட்டத்தோடு களம் இறங்கி இருக்கின்றார் சசிகலா. ஆனால் தியாகத் தலைவி மீது இன்னும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதுதான் தற்போதைய அவரது துயர நிலை.

 ஏற்கெனவே தியாகத் தலைவி அவர்கள் அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்கில் 1996 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டிருக்கின்றார். இரண்டு அன்னிய செலாவணி மோசடி (FERA) வழக்குகளில் இருந்து 2015ஆம் ஆண்டு அவர் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் மூன்று அன்னிய செலாவணி வழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளன.

 ஏ1 மற்றும் ஏ2 ஆகியோர் மீது 33 வழக்குகளும், அதில் ஏ1 மீது மட்டும் 12 ஊழல் வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. பார்ப்பன ஏ1 இறந்துவிட்ட சூழ்நிலையில். சூத்திர ஏ2 மீது நீதித்துறை கருணை காட்டும் என்றும் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

 அதனால் தியாகத் தலைவி அவர்கள் இப்போதைக்கு அடக்கி வாசிப்பது மிக முக்கியமானது. மெயின் ரோடு புகழ் ஜெயக்குமார் போன்ற நபர்கள் எல்லாம் இறங்கி அடிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதில் இருந்தே இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

சசிகலா தன்னிடம் இன்னும் மிச்சமுள்ள ஊழல் பணத்தை காப்பாற்றிக் கொள்ளவே தற்போது அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றார். மக்களின் முன் தான் விடும் கண்ணீரில் ஊழல் பேர்வழி பட்டம் கரைந்துவிடும் என கணக்குப் போடுகின்றார். ஊழல் பணத்தில் மக்களுக்கும் பங்கு கொடுத்து அவர்களையும் ஊழல்வாதிகளாக மாற்றி வைத்திருப்பதால் அது நிச்சயம் நடக்கும் என எதிர்பார்க்கின்றார்.

எலும்புத் துண்டுகளை வீசி எறிந்தால் அத்தனை வண்ண சட்டைகளும் வீட்டு வாசலில் தியாகத் தலைவியின் புகழ்பாட காத்திருப்பதை அவர் பல முறை தமிழ்நாட்டு மக்களுக்கு நிரூபித்து இருக்கின்றார். அவர் நினைத்தால் சட்டைகளை மட்டும் அல்ல, வேட்டிகளையும் கூட கக்கத்தில் வைத்துக் கொண்டு அவருக்கு ஆதரவாக தரகு அரசியல்வாதிகளை கருத்து சொல்ல வைத்து விடுவார்.

 சசிகலாவிடம் எந்த பயமும் இல்லை. அவரிடம் ஊழல் பணம் உள்ளது. அந்தப் பணத்திற்கு கூவும் கூட்டத்தை அவரால் நிச்சயம் ஏற்பாடு செய்ய முடியும்.

 ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என சொல்லி பாசிச ஜெயலிதாவுக்கு ஓட்டுப் பிச்சை கேட்ட சில பேர் ஏற்கெனவே அவரது வீட்டு வாசலில் காத்துக் கிடக்கின்றார்கள். தான் வைத்திருக்கும் கட்சியில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சசிகலாவின் வீட்டு வாசலில் நிற்பதை அவர்கள் பெருமையாகவும், கடமையாகவும் கருதுகின்றார்கள்.

 ஆனால் சசிகலா போன்றவர்களால் தமிழக அரசியலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. குறைந்த பட்சம் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்காத, அவர்களை தன் வாழ்நாளில் எந்தப் பிரச்சினைக்காகவும் சந்திக்காத சசிகலா, ஜெயலலிதாவின் ஊழல் பங்காளி என்ற ஒரு அசிங்கமான காரணத்தை முன்வைத்து, அரசியலில் காலுன்ற நினைத்தால் நிச்சயம் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படுவார்.

- செ.கார்கி

Pin It