தமிழகத்தில் 2003ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம், இவற்றுக்குரிய அகவிலைப்படி (டி.ஏ.) ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே அளவு தொகையை அரசு தன் பங்கிற்குச் செலுத்துகிறது. இவ்வாறு சேரும் தொகையானது அரசு ஊழியர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் வழங்கப்பட்டுவிடும். எஞ்சிய 40 சதவீதத் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்.

புதிய பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடந்த 14 ஆண்டுகளில் ஏறத்தாழ 4 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

பழைய பென்சன் திட்டப்படி, அரசு ஊழியர் ஒருவர் 30 ஆண்டுகள் பணியாற்றியிருந்தால் அவர் முழு ஓய்வூதியம் பெறலாம். முழு ஓய்வூதியம் என்பது அவர் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளம் மற்றும் அதற்கு உரிய அகவிலைப்படி ஆகியவற்றை உள்ளடக்கியது. 30 ஆண்டுகளுக்குக் குறைவாக இருந்தால் பணிக்காலத்துக்கு ஏற்ப ஓய்வூதியத் தொகை நிர்ணயிக்கப்படும். இதற்கெனத் தனிக் கணக்கீடு உள்ளது.

புதிய பென்சன் திட்டத்தில் எவ்வளவு ஓய்வூதியத்தொகை கிடைக்கும் என்று வரையறுக்க இயலாது. ஊழியரிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டு பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டின் பலனைப் பொருத்தது. பணிக்கொடை (கிராஜுவிட்டி), சிபிஎப் தொகையில் கடன் மற்றும் முன்பணம் பெறும் வசதி, குடும்ப ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு இவை எதுவும் கிடையாது என்பதால்தான் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புதிய பென்சன் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஜாக்டோ ஜியோ அமைப்பானது பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து அரசு ஊழியர்களைப் புறக்கணித்ததன் விளைவாக, கடந்த 08.05.2018 அன்று சென்னையில் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தது.

 ஜாக்டோ ஜியோ அமைப்பினரை எவ்விதப் பேச்சுவார்த்தைக்கும் அழைக்காத தமிழக அரசு நூற்றுக்கணக்கான ஜாக்டோஜியோ நிர்வாகிகளைக் கைது செய்து போராட்டத்தை ஒடுக்க முயன்றது. சென்னைக்கு வெளியேயுள்ள சுங்கச் சாவடிகளிலேயே வாகனங்களைத் தடுத்து நிறுத்தியும், திருப்பி அனுப்பியும் போராட்டத்தின் தீவிரத்தைக் குறைக்க முயன்றது. இத்தனை கெடுபிடிகளையும் தாண்டி ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கோட்டை முற்றுகையில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1700 பெண்கள் உட்பட 7,600 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் ஒருவர் போராட்டத்தின் போது உயிரிழந்த அவலமும் நிகழ்ந்தது.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 100% ஊதிய உயர்வு வழங்கிடும் அடிமை அரசுக்கு, அரசு ஊழியர்கள் என்றவுடன் நிதிப் பற்றாக்குறை கண்ணுக்குத் தெரிகிறது. அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் அவர்களை அழைத்துப் பேசாத செயலற்ற அரசு, மாறாக தமிழக அரசின் வருமானம் முழுவதும் அரசாங்க ஊழியர்களுக்கே செலவழிக்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. காவல்துறையை ஏவிப் போராடுவோரை அச்சுறுத்துகிறது. அரசு ஊழியர்களின் ஆண்டாண்டு காலக் கோரிக்கைகளைத் தூக்கியெறியும் சர்வாதிகார அரசு, தூக்கியெறியப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Pin It