stalin 250மாநிலங்கள் ஒன்று கூடிய இந்தியாவா? அல்லது இந்தியாவிற்காக மாநிலங்களா? என்ற உரிமைக் குரல், இந்தப் பதத்தில் ஒளிந்துள்ளது.

India, that is Bharat shall be a Union of States (இந்தியா என்கிற பாரதம், அரசுகளின் ஒன்றியம்) என்றே அரசியலமைப்பு இந்தியாவை வரையறுக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய ஒன்றிய அரசு என்ற ஒற்றை பதத்தில், அரசியலமைப்பின் முதல் வரியில் உள்ள இந்தியா, பாரதம், ஒன்றியம், அரசு என ஏறக்குறைய எல்லாச் சொற்களையும் விவாதத்திற்கு உட்படுத்தி உள்ளது.

இறையாண்மை உடைய அரசுக்கு தான் State என்று பெயர். இறையாண்மை என்றால் தன்னிச்சையான அதிகாரங்களுடன் செயல்படக் கூடிய அமைப்பாகும். அந்த அதிகாரத்தில் வேறு அமைப்பு தலையிட முடியாது. இறையாண்மை இல்லாவிட்டால் அது Territory.

இறையாண்மை உள்ள மாநில அரசுகள் சேர்ந்து உருவாக்குவது தான் ஒன்றியமே தவிர, ஒன்றியத்தின் நிர்வாக வசதிக்காக, மாநில அரசுகள் ஏற்படுத்தப்பட்டது அல்ல. இவ்வாறு வரையறுக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணம், இந்தியா பல பண்பாட்டுக் கூறுகள் கொண்ட நாடு. ஆக எல்லோருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சியின் கூறே ஜனநாயகம்.

ஒன்றிய அரசை விரும்பாதவர்கள் எதை விரும்புகிறார்கள்?

நடைமுறையில் ஒன்றிய அரசாக இருக்க விரும்பாதவர்கள், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரக் குவிப்பை விரும்புகின்றனர். ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் என்று கூறுவார்கள். ஒரே சாதி என்று சொன்னால் இவர்கள் வாயை மூடிக் கொள்வார்கள். மொழி, பண்பாடு, மதம் ஆகியவை மக்களின் பன்முகத் தன்மையைக் குறிக்கிறது.

பிரிவுகள் இருந்தாலும், இவற்றில் ஏற்றத்தாழ்வு இல்லை. ஆனால் சாதி என்பது ஏற்றத் தாழ்வுடன் கூடிய பிரிவு; ஒழிக்கப் பட வேண்டிய பிரிவினை ஆகும். ஏற்றத் தாழ்வான சமூகத்தின் ஏற்றம் பெற்ற சிறு பிரிவினரே, அதிகாரத்தின் பெரும் பகுதியை கையில் வைத்து இருக்கிறார்கள்.

ஏற்றத் தாழ்வை தொடர்ந்து பாதுகாக்க, பன்முகத் தன்மையையும்; பல அரசுகளுடன் அதிகார பகிர்வையும் சிக்கலாகப் பார்க்கிறார்கள். ஆக ஒற்றை முகமும் ஒரே அதிகாரமும் அவர்களுடைய விருப்பமாக இருக்கிறது. அதாவது ஒன்றிய ஆட்சிக்கு மாறாக ஒற்றை ஆட்சியை எதிப்பார்க்கிறார்கள்.

ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை வேண்டி போராட்டங்களை முன் எடுத்தவர்கள், இந்தியாவை ஒன்றியமாகத் தான் குறிவைத்தார்கள். ஆனால் விடுதலைக்குப் பின்பு, ஒன்றியமாக இருக்க விடமாட்டர்கள் என்று பெரியார்  போன்ற சிலரே கணித்தார்கள்.

அதுபோலவே விடுதலை பெற்று அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய பின்னும், அதன் படி நடக்காமல், ஒன்றியத்தை மய்ய அரசாகவும், மாநிலங்களை அதன் துணை அரசாகவும் பாவிக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகவே மாநில அரசுகளின் அதிகாரங்களைக் குறைத்து, தன்னிடம் அதிகார குவிப்பில் ஈடுபடுகின்றது ஒன்றிய அரசு.

சமீபமாக மாநில அரசின் கட்டுப்பாடின் கீழ் உள்ள சிறு துறைமுகங்களை ஒழுங்கு படுத்த, ஒன்றிய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இந்த அத்துமீறலை கண்டித்தும், மாநில அரசுகளின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 9 கடற்கரை மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

மய்ய அரசு, ஒன்றிய அரசு, கூட்டனரசு என்பது ஒரு கயிறு இழுக்கும் போட்டி போல, இதனைக் கருதிக் கொள்ளலாம். நமக்கு தேவையோ கூட்டாட்சி. அதாவது மாநிலங்களின் பலத்தின் அடிப்படையில் கூட்டு பிரதிநிதியைக் கொண்டு அரசு அமைப்பது.

அப்பொழுது மாநிலங்களின் அதிகாரத்தில் கூட்டு அரசு தலையிடாது. திராவிடச் சித்தாந்த ஆட்சியின் நோக்கம் சமூகத்தில் சமத்துவத்தை நிலைநிறுத்துவதே. இதன் இறையாண்மையில் வேறு ஒரு அதிகாரமிக்க அமைப்பு தலையிட்டால், தடைகள் வரும். ஆகவே கூட்டாட்சியே நம் இலக்கு.

சமத்துவத்தை விரும்பாதவர்கள் விரும்புவது,மாநில ஆட்சியில் தலையிடக் கூடிய எல்லா அதிகாரமும் பெற்ற மய்ய அரசும் அதன் மூலம் சர்வதிகாரத்திற்கு வழி வகுக்கவும் வாய்ப்புள்ளது. மனுநீதி நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர வழி செய்வதாகவே அமையும். இது 97% சூத்திரர்கள் வாழும் தென்னிந்தியாவிற்கு நன்மையாக அமையாது.

அரசமைப்புச் சட்டமோ இரண்டிற்கும் நடுவில் ஒன்றிய அரசு என்ற பெயரில் ஒரளவிற்கு மாநில அதிகாரத்தில் தலையிட வழிவகுக்கிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரத்தைத் தவிர, ஒத்திசைவு பட்டியல் ஒன்று உள்ளது. இதில் ஒன்றிய அரசு தலையிடும்.

ஒன்றிய அரசு அதிகாரம்

ஒத்திசைவுப் பட்டியல்

மாநில அரசு அதிகாரம்

பாதுகாப்பு

வங்கி

பணம்

வெளியுறவு

கல்வி

காடுகள் பராமரித்தல்

வணிகம் (சந்தை)

வரி வாங்குதல்

கடன் பெறுதல்

காவல் துறை

உழவு

நீர் மேலாண்மை

சுயாட்சியை வலியுறுத்தும், திமுக ஆட்சியில் இல்லாத இடைப்பட்ட காலத்தில், முழுப் பெரும்பான்மை பெற்ற ஒன்றிய அரசு, கயிற்றைத் தன் பக்கம் வெகுவாக இழுத்து விட்டது.

அதிகாரக் குவிப்பு:

ஒத்திசைவுப் பட்டியலைத் தன் இசைவுக்கு ஆட்டி வைக்கும் ஒன்றியம். சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் 2017 இல் நிறைவேற்றப்பட்டு மாநில அரசின் வரி வாங்கும் முறையில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒன்றிய அரசே வரிகளை வசூல் செய்து, மாநிலங்களுக்கு பிரித்து தருவதாக வாக்கு கொடுத்தது. ஆனால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு மாநில அரசுக்கு வரியை நிலுவை வைத்து, வேண்டுமானால் நீங்கள் கடன் பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கிறோம் என்று கூறுகிறது.

மாநில அரசுக் கட்டுப்பாட்டில் வரும் விவசாயத்திற்கு, 2020 இல் ஒன்றிய அரசு சட்டம் இயற்றி உள்ளது. இது குறித்து கேட்டால், தாங்கள் சந்தைக்கு தான் சட்டம் இயற்றினோம் என்கின்றனர். பெயர் மட்டும் தான் விவசாயச் சட்டமா?

புதிய கல்வித் திட்டம் 2020 இல் சட்டமாக்கப்பட்டது. அது குலக்கல்வி திட்டத்தின் மறுவடிவமாக இயற்றப்பட்டு இருப்பதாகவே அனைவரும் பார்க்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சி என்பது விவசாயம் சார்ந்தது. அதே போல தமிழ் நாட்டின் வளர்ச்சி கல்வி, இட ஒதுக்கீடு சார்ந்தது. புதிய கல்வி கொள்கை திட்டம், நீட் ஆகியவை தேவை இல்லா சிக்கல்கள். மக்களைப் போராட்டத்திற்கே தள்ளும்.

மாநில இறையாண்மையை மதியாமை:

பீகார் மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே காங்கிரஸ் ஒன்றிய அரசு ஜார்கண்ட் பிரிக்கப்படுதாக அறிவித்தது. ஆந்திராவைப் பிரிக்கும் போது, காங்கிரஸ் அரசு ஒரு குழு அமைத்து, பேச்சு வார்த்தை நடத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தெலுங்கானா பிரிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய ஒன்றியம், எப்படி காஷ்மீரை பிரித்தது என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் காஷ்மீர் சட்டமன்றத்தைக் கலைத்து, அதனை இரண்டாகப் பிரித்து, இரண்டையும் மாநிலத்தில் இருந்து விலக்கி ஒன்றியப் பகுதி (Union Terriory) என அறிவித்தது.

நாடளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது, இராணுவம் கையில் இருக்கிறது என்பதால் இறையாண்மை பெற்ற மாநிலத்தை இவ்வாறு அத்துமீறல் செய்யலாமா? இதில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது? இப்படி ஒரு மாநிலத்தைக் கையாள்வதை சர்வதிகார போக்கு என்று தான் கூற வேண்டும்.

அமைச்சர் அவையில் கலந்து ஆலோசிக்காத பண மதிப்பு இழப்பு நடவடிக்கை; நாட்டு மக்களைப் பார்த்து நீ இந்த நாட்டு குடிமகன் தானா என்று கேட்க ஒரு சட்டம், மதம் சார்ந்து குடி உரிமை வழங்கும் சட்டம், இவை எல்லாம் அவலங்கள் தானே ஒழிய ஜனநாயகம் ஆகாது. இது போன்ற ஜனநாயக அத்துமீறல் நடைபெறுகின்றது. இந்த அவலங்கள் தொடரும் வரை உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்பது வெற்றுப் பெயர் மட்டுமே. மக்களாட்சியை வெற்றி பெற வைக்க உதவாது.

தீர்வு

எந்த ஒரு அரசியல் அமைப்பும், அந்தப் பகுதி மக்களின் விருப்பம் சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகம். பல பகுதியாக இந்தியா பிரிந்து இருப்பதால், ஒரு பகுதியில் நடப்பது மற்றொரு பகுதிக்கு செய்தியாக மட்டுமே இருக்கிறது. ஒரு பகுதி மக்கள் கதறினால், மற்ற பகுதிகளின் மக்கள் மௌனமாகப் போவதால், பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததாக ஆகாது.

ஜனநாயகம் என்பதே அதிகாரப் பரவல் தான். அனைவரையும் சமமாக மதிக்கின்ற ஆட்சி; அதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேவை.

தமிழ் நாட்டில் மாநில சுயாட்சி கோரும் ஒரு கட்சி ஆட்சிக்கு வந்து இருக்கிறது. சரியாக ‘ஒன்றியம்’ என்ற சொல்லில் இருந்து தொடங்கி உள்ளது. அதன் கரங்களை பலப்படுத்தி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

- மதிவாணன்

Pin It