ஆங்கில நாளேடு ஒன்றில் பேராசிரியர் ஆ. இரா. வேங்கடாசலபதி, தமிழ்நாடு அரசியல் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம் குறித்தும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையில் கடும் போட்டி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனைப் படித்தவுடன் ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது. கடைசி வரியைப் படித்த பிறகே நமக்கு ஒரு தெளிவு கிடைத்தது. இரண்டாவது இடத்திற்கு யார் வருவது என்பது குறித்தே அந்தப் போட்டி நடந்து வருவதாக அவர் குறித்துள்ளார்.

தலைவர் கலைஞர் இறந்த பிறகு நடைபெற்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், திமுக மிகப் பெரும் வெற்றி பெற்றது. இப்போது திமுக கூட்டணியின் நிலை, இரண்டு வகைகளில் மேலும் வலுவடைந்து உள்ளது என்பது அவர் கருத்து.

அன்றைய கூட்டணி அப்படியே இன்றும் தொடர்கிறது என்பதோடு, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தின் ஆதரவும் இப்போது கூடி உள்ளது. இன்னொரு பக்கம், எதிர்க்கட்சிகள் பிரிந்தும், சிதைந்தும் கிடக்கின்றன என்னும் அவர் பார்வை மிகச் சரியானது.jaishankar and arunachala pradesh mapதிமுக கூட்டணியை, அதிமுக அணி, பாஜக அணி மற்றும் மைக் சின்னத்தில் போட்டியிடும் சுயேச்சைகளைப் போன்றவர்கள் எதிர்க்கின்றனர். எதிர்ப்பு அணிகள் மூன்றாகப் பிரிந்து , திமுகவின் வெற்றியை மிக எளிதாக ஆக்கி இருக்கிறது என்பது உண்மை! நன்றாக இருந்த அதிமுக இப்போது நாலாக உடைந்திருக்கிறது. அல்லது பாஜகவால் திட்டமிட்டு உடைக்கப்பட்டு இருக்கிறது. இலை பழுத்து பலாப்பழம் தனியாக வந்து விட்டது!

இந்த உண்மை நிலை, அரசியல் விமர்சகர்களுக்கும், கல்வியாளர்களுக்குமே புரியும் போது, பாஜகவிற்குப் புரியாதா என்ன?

அதனால் தான் கச்சத்தீவு கதை இப்போது கட்டவிழ்த்து விடப்படுகிறது. ஆனால் அது கெட்டிக்காரன் புழுகாகக் கூட இல்லாமல், பட்டென்று உடனேயே உடைந்து போய்விட்டது.

அதனைத் தாண்டி, கச்சத்தீவு இருக்கட்டும் அருணாச்சலப் பிரதேசத்தை முழுமையாக இந்தியா எப்போது மீட்கப் போகிறது என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் ஆறு நதிகளுக்கும், 11 ஊர்களுக்கும் சீன அரசு, சீன மொழியில் பெயர் வைத்துள்ளது. இதுகுறித்து நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி உள்ள விளக்கம், இதுவரை உலகம் கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்கிறது!

அவர் சொல்கிறார் - அந்த நதிகளும், நகரங்களும் நம்மிடம்தான் உள்ளன. அவற்றிற்கு அவர்கள் மொழியில் பெயர் வைத்துக் கொள்வதால் என்ன ஆகிவிடப் போகிறது என்கிறார்.

“மாப்பிள்ளை இவர்தான், ஆனால் சட்டை இவருடையது இல்லை” என்பது போல, நம் தேசத்தின் நதிகளையும் நகரங்களையும் இழப்பது அவ்வளவு எளிதாகப் போய்விட்டது!

இந்தத் தேர்தலிலும், தப்பித்தவறி பாஜக மறுபடியும் வெற்றி பெற்று விட்டால், நதிகளுக்கும் நகரங்களுக்கும் மட்டுமில்லை, இந்திய நாட்டிற்கும் அவர்கள் பெயர் வைத்து விடுவார்கள். ஆட்சி இவர்கள் கைகளில் இருக்கும் - நாடு அவர்கள் கைகளுக்குப் போய்விடும்!

வாக்காளர்களே கவனம்!

- சுப.வீரபாண்டியன்

Pin It