தி.மு.க. வை எதிர்த்துப் போராடுவதற்கும் கூட, தி.மு.க. வெல்ல வேண்டும்!

DMK leaders 3502019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளும், அந்தக் கூட்டணிக் கட்சிகளும் தேர்தல் அறிக்கைகளும், வேட்பாளர் பட்டியல்களும் வெளியிடப்பட்டு விட்டன. தி.மு.க தலைமையிலான  கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளும், அதி.மு.க தலைமையிலான கூட்டணியின் வாக்குறுதிகளும் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.

காட்டாறு ஏட்டைப் பொறுத்தவரை, இந்தக் கூட்டணிகள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள், தேர்தலில் நிற்பவர்களின் ஜாதி, மதம், பாலினம், வர்க்கப் பின்னணிகள் என அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு - எந்த வரையறைகளையும், எந்த நிபந்தனைகளையும், எந்த வேண்டுகோள்களையும் ஒரு சடங்காகக்கூட முன்வைக்காமல், ஒற்றைச் செயல்பாடாக தி.மு.க. வையும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றிபெற உழைப்பது என முடிவு செய்துள்ளது.

தி.மு.க வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றால், நீட் தேர்வு ஒழியும், கல்வி மாநிலப் பட்டியலுக்கு வரும், மாநிலங்களின் அதிகாரங்கள் மீட்கப்படும், விவசாயிகள் - நெசவாளர் - மாணவர்களின் கடன்கள் ரத்து செய்யப்படும் என்பவை போன்ற பலவற்றைக் குறித்துக் கனவு காணவில்லை. இவற்றை எல்லாம் தி.மு.க. செய்து முடிக்கும் என்றாலும் கூட வாக்காளர்களுக்கு அப்படிப்பட்ட குறைந்தபட்ச நம்பிக்கையைக் கூட விதைக்க விரும்பவில்லை. ஏனெனில், இந்தத் தேர்தல் வாக்குறுதிகளை வைத்து நடக்கப் போகும் தேர்தல் அல்ல.

தேர்தல் அறிவிப்புகள், தேர்தல் ஆணைய நடைமுறைகள், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், பேரங்கள், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் வாக்குறுதி வெளியீடு, வேட்புமனுத்தாக்கல், தேர்தல் பரப்புரை, தேர்தல், தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.....இவை போன்ற செயல்பாடுகளை இனிமேல் நாம் பார்க்க முடியுமா? முடியாதா? அடுத்தடுத்த தலைமுறைகள் இவற்றைப் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை உறுதி செய்யப் போகும் தேர்தல் தான் இந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல்.

Bhartiya Shiksha Board

ஆர்.எஸ்.எஸ். மீண்டும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினால், கல்வித்துறையில் மாநிலப் பட்டியல், மத்தியப் பட்டியல் என்றெல்லாம் இரு பிரிவுகள் இருக்கப் போவதில்லை. ஒரே பட்டியல் தான். அது மத்திய, பார்ப்பனப் பட்டியல் மட்டும்தான். இந்தியாவில் ஏராளமான கல்வி முறைகள், பாடத்திட்ட முறைகள் நடைமுறையில் உள்ளன. அவை அனைத்தும் ஒழிக்கப்பட்டு BSB (Bhartiya Shiksha Board) என்ற பாடத்திட்ட, பயிற்சி முறை மட்டுமே செயல்படப்போகிறது.

இந்தப் பார்ப்பன குருகுலக் கல்வி முறையை இயக்குவதற் கென்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் பார்ப்பன சாமியார்களின் தலைமையிலான ஒரு துறை உருவாக்கப்பட்டுவிட்டது. (MSRVP) Maharshi Sandipani Rashtriya Vedavidya Pratishthan என்ற அமைப்பு தான் இனி இந்தியாவின்.... மன்னிக்கவும் பாரதநாட்டின் கல்வியை ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இருந்து நிர்வகிக்கப் போகிறது. கடந்த 11.01.2019 மற்றும் 12.02.2019 ஆகிய தேதிகளில் அதற்கான மத்திய அரசு அங்கீகாரங்களும் வழங்கப்பட்டு விட்டன.

மத்திய அரசு நிர்வாகம்

நிர்வாகத்துறையில், கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்தே, அதாவது, பா.ஜ.க வின் மோடி ஆட்சி தொடங்கிய நாளிலிருந்தே அனைத்து இந்திய நிர்வாகப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ். காரரர்களை நியமனம் செய்யும் நடைமுறையும் தொடங்கி விட்டது. மோடியின் இந்த மறைமுகத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் தான் ஊடகங்களில் வெளியானது.

அகில இந்திய நிர்வாகப் பணிகளுக்காக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் போன்ற பயிற்சிகளும் தேர்வு முறைகளும் உள்ளன. அதற்கென தனி தேர்வாணையமும் இயங்குகிறது. மத்திய அரசின் அனைத்து முக்கியத் துறைகளையும் இந்தத் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் தான் நடத்துகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் அதிகாரத்திற்கு வந்த 2014 ஆம் ஆண்டில், மத்திய அரசின் துறைகளில் இணைச் செயலாளர் என்ற நிலையில் 260 அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 100 பேர் ஐ.ஏ.எஸ் தேர்வு முடிக்காதவர்கள். அந்தப் பயிற்சிக்கே போகாத வர்கள் ஆவர். ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர், வெறும் பட்டப்படிப்பு முடித்திருந்தால் போதும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு இணையான நிர்வாகியாகப் பதவி பெற்றுவிடலாம் என்ற நிலை உருவாக்கப் பட்டுவிட்டது.

அதுவும் சாதாரண துறைகளுக்கு அல்ல; பாதுகாப்புத் துறை, உள்துறை, நிதித்துறை, கல்வித்துறை பெட்ரோலியத்துறை, கனிம வளத்துறை, சாலை போக்குவரத்துத்துறை என நாட்டை இயக்கு கின்ற, முக்கியமான அனைத்துத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டு துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி, இந்தியாவின் நிதித்துறையின் மிக முக்கியத் தூண் ஆன, ரிசர்வு வங்கியின் 10 இயக்குநர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அவரைப் போலவே இனும் ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரான ‘சதீஷ் மாரத்தே’ என்பவரும்  ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் நியமனம் பெற்றார். இவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவுத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

மீண்டும் ஆர்.எஸ்.எஸ். அதிகாரத்திற்கு வருமானால், “ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்” போன்ற என்ற பதவிகளே முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும் வியப்பிப்லை. மாவட்ட ஆட்சித் தலைவர்களாக எச்.இராஜாக்களும், மாவட்டக் காவல் கண்காணிப் பாளர்களாக அர்ஜூன் சம்பத்களும் நியமனம் பெறும் அவலம் நடந்தே தீரும்.

நாடாளுமன்ற ஜனநாயகம்

“நாம் கேட்கும் சுயராஜ்யம் என்பது, வெள்ளையர்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. எங்கள் நாட்டின் வேத, சாஸ்திரங்கள்தான் எங்களை ஆளவேண்டும். சுயராஜ்யம் வந்தால் மனுநீதியை அரசமைப்புச் சட்டமாகவே ஆக்கவேண்டும். ஆக்குவோம்”  என 1917 இல் பார்ப்பன ஆதிக்க வெறியோடு பேசினார் பாலகங்காதர திலகர்.

திலகரின் வழிவந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி கடந்த கி.பி.2000 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 9 ஆம் நாள் “இந்திய அரசியல் சட்டத்திற்கு” மாற்றாக , “பாரத் அரசியல் சட்டத்தை” எழுதி, அதை விவாதத்திற்கு வெளியிட்டது.

இப்போது நடைமுறையில் இருக்கும், “நாடாளுமன்ற”, “தேர்தல்” முறைகளுக்கு மாற்றாக “குரு ஷபா” க்களையும், “ரக்ஷா ஷபா”க்களையும் பரிந்துரைத்துள்ளது. அந்த அமைப்பின் இணையதளத்திலேயே அதை வெளியிட்டு உள்ளது. அனில் சாவ்லா என்பவர் அந்த மனு சட்டத்தைத் தயாரித்துள்ளார். 

கி.பி. 2000 லிருந்து அவர்களின் “குரு ஷபா” நோக்கிய செயல்திட்டம் மெல்ல மெல்ல மறைமுகமாக முன்னேறி வருகிறது. இந்த 2019 தேர்தல், அந்த ஷபாக்களுக்கான இறுதிச் செயல்திட்டம். இதில் நாம் ஆர்.எஸ்.எஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால், இனி நமது தலைமுறைகள் தேர்தல் என்ற ஒரு நடைமுறையைப் பார்ப்பதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம்.

ஆக, நாட்டின் எதிர்காலத்தைக் கட்டி எழுப்பக் கூடிய கல்வித் துறை, நாட்டை இயக்கும் மத்திய அரசு நிர்வாகத்துறை, ஒரு அரசாங்கத்தை வழிநடத்தும் அரசியல் சட்டம், நாடாளுமன்றங்கள் போன்ற எல்லாவற்றையும் அழித்து - இந்தியாவைக் குப்தப் பேரரசுகளின் பார்ப்பனக் காட்டுமிராண்டிக் காலத்திற்குக் கொண்டு செல்லும் சீரழிவுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

தற்போது உள்ள நாடாளுமன்ற ஜனநாயக முறை அடித்தட்டு மக்களுக்குச் சாதகமாக உள்ளது என உறுதி கூற முடியாது. ஆனால், இந்த முறையையிடச் சிறப்பான வேறு ஒரு ஆட்சிமுறை அடித்தட்டு மக்களுக்கு இன்னும் அறிமுகமே ஆகாத நிலையில், நடைமுறையில் இருக்கும் சிறு சிறு உரிமை களையும், வாய்ப்புகளையும் பறிக்கும் பார்ப்பனத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒன்று தான் என்று பொதுமைப் படுத்திப் பேசுவதற்கும் - மாநிலக் கட்சிகள் அனைத்தும் யோக்கியமானவை; தேசியக் கட்சிகள் அனைத்தும் பித்தலாட்டமானவை என்று பொத்தாம் பொதுவாக அள்ளி விடுவதற்கும் - திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டைச் சீரழித்து விட்டன என்று நேர்காணல் கொடுப்பதற்கும் - தேர்தல் அரசியலைப் புறக்கணிப்போம், இயக்க அரசியலை முன்னெடுப்போம்! என்று நரம்பு புடைக்கப் பேசுவதற்கும் - தி.மு.க.வை எதிர்த்துப் போராடுவதற்கும் கூட - இந்தத் தேர்தலில் தி.மு.க வெல்ல வேண்டும். 

2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் தி.மு.க.வும் அதன்  கூட்டணிக் கட்சிகளும் வெல்ல வேண்டியது தி.மு.க.வுக்கோ, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ அவசியமல்ல; திராவிடர் இன விடுதலைக்குத்தான் இந்த வெற்றி மிகவும் அவசியமானது. 

சான்றுகள்:

Economic Times 18.02.2016,  Hindustan Times 11.08.2018, India Today 12.06.2018, The Wire.in 13.01.2019, Scroll.in 14.02.2019