இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது நடைபெறும் 18 வது நாடாளு மன்றப் பொதுத்தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய ஒன்றியத்திற்கு இனியும் தேர்தல் நடைமுறை வேண்டுமா அல்லது சர்வாதிகார ஒற்றை ஆட்சி வேண்டுமா என்பதை முடிவு செய்கிற தேர்தல் இது. மக்களாட்சியின் மாண்பினைக் காக்கும் மாபெரும் பொறுப்பு நமக்கு இருப்பதால் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் அறிவித்தார். அவரது பரப்புரை நிரலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டது. அதன்படி அவர் 10 நாட்களில் 9 தொகுதிகளில், 2076 கி.மீ பயணம் செய்து, 15 வாகனப் பரப்புரைகள், 3 பரப்புரைக் கூட்டங்களுடன் 2 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று தி.மு.க கூட்டணிக்கு மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளில் பேரா. சுப.வீ அவர்கள் மேற்கொண்ட பரப்புரை நிகழ்வுகளில் அவருடன் பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், திராவிட நட்புக் கழகத் தலைவர் சிங்கராயர், பேரவை துணைப் பொதுச் செயலாளர் கா.சு.நாகராசன், தெற்கு மாவட்டங்களில் பங்கேற்று உரையாற்றினோம். பத்தாண்டு மோடி ஆட்சியின் அவலங்களையும், தமிழ்நாட்டிற்கு விடியலைத் தந்து மூன்றாண்டுகளாய் நல்லாட்சி நடத்தி வரும் திராவிட மாடல் நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனைகளையும் மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் பேரா. சுப.வீ அவர்கள் எடுத்துரைத்தார்.subavee in election campaignசிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி சாலைகிராமம் பரப்புரைக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் "பா.ஜ.க செய்யும் வட இந்திய மேல்சாதி சமஸ்கிருத சைவ உணவு முறை இந்துத்துவா அரசியல்" என்பது குறித்து உரையாற்றி, இது பற்றி பேராசிரியர் சுப.வீ அவரகள் முன் பேச வேண்டும் என்பதற்காகவே தனது வாக்கு சேகரிப்பை விரைவாக முடித்து விட்டு இந்த பரப்புரைக் கூட்டத்திற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டது நெகிழ்வாக இருந்தது.

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரையாற்றிய பேரா. சுப.வீ அவர்கள் பா.ஜ.க கூட்டணி வேட்பாளரின் சிங்கப்பூர் குடியுரிமையை அம்பலப்படுத்தி அவரது முகமூடியை கிழித்தெறிந்தார். பேரா. சுப.வீ. தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தை தகர்க்க கடப்பாரையோடு வருவேன் என்று வெற்றுக் கூச்சலிட்ட வீணருக்கு சுப.வீ விடுத்த கடும் எச்சரிக்கை மக்களிடம் வரவேற்பைப் பெற்றது. பரப்புரை நிறைவு நாள் திண்டுக்கல் பொதுக்கூட்டம் ஒரு மாநாட்டின் உணர்வை ஏற்படுத்தியது.

பரப்புரைக் குழுவில் தோழர்கள் சொக்கலிங்கம், மணி, பிரவீன், மூசா, ஸ்டூடியோ சரவணன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அவர்களுடன் அந்தந்த பகுதிப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இணைந்து கொண்டனர். ஓய்வு நேரங்களில் பேரா. சுப.வீ அவர்களுடனான உரையாடல் ஒரு பயிற்சிப் பாசறையாக அமைந்தது.

அ.இ.அ.தி.மு.கவுக்கு ஆதரவாக இருக்கும் பெண்கள் வாக்கு வங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மகளிர் நலத் திட்டங்களால் முற்றிலும் தி.மு.கவுக்கு ஆதரவாக மாறியிருந்தது. தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சியினால் பலன் பெறாத ஒருவர் கூட இல்லை என்ற நிலையை பயணத்தில் காண முடிந்தது. இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பா.ஜ.கஆட்சியை வீழ்த்திடும் முடிவில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்ற உண்மையை இந்த பரப்புரை பயணம் உணர்த்தியது.

- வழக்கறிஞர் இராம. வைரமுத்து