dmk sunriseதேர்தல் கணிப்புகளைத் தொடர்ந்து எண்ணிக்கை முடிவுகளும் வந்துவிட்டன. கணிப்பு முடிவுகள் தெரிவித்தபடி எண்ணிக்கை முடிவுகளும் தி.மு.க கூட்டணியின் வெற்றி வாய்ப்பினை உறுதிபடுத்தியுள்ளது.

இதற்கு தி.மு.கவின் தலைமையும், தொண்டர்களும் இது தமக்குத்தாமே தேடிக்கொண்ட வெற்றி என்று பெருமிதமும், இறுமாப்பும் கொள்ளக்கூடும்.

ஆனால் இது தி.மு.கவின் தலைமை மட்டுமல்லாது கூட்டணிக் கட்சிகளின் தலைமையும், தொண்டர்களும் கடுமையாக உழைத்து ஈட்டிய வெற்றியும் ஆகும் என்பதை மறுப்பதற்கில்லை.

அதேபோல் தேர்தல் களத்திற்கு வெளியே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஏனைய சமூக இயக்கங்கள், தேர்தல் புறக்கணிப்பை தலையாயக் கொள்கையாக கொண்டிருக்கின்ற இயக்கங்கள் உட்பட அனைத்து அமைப்புகளும் பாசிச பா.ஜ.க தமிழகத்தில் தேர்தல் வழி காலூன்றுவதை வேரறுப்போம் என்ற அறைகூவலுடன் பாசிச பா.ஜ.கவை தோற்கடிப்போம் என்ற முழக்கத்துடன் தேர்தல் பரப்புரையில் களம் இறங்கிய இயக்கங்கள் யாவும் வாக்காளர்களை தனித்தனியாகவும், குடும்பம் குடும்பமாகவும், கூட்டம் கூட்டமாகவும் சந்தித்து பா.ஜ.கவின் தலைமையில் உள்ள கூட்டணியை வீழ்த்துவது தமிழகத்தின் தன்னாட்சியை தக்கவைத்துக் கொள்ள இன்றியமையாதது என்பதை வாக்காளர்கள் மனதில் ஆழமாக பதித்தனர் என்பதையும் மறுப்பதற்கில்லை.

2009ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் பரப்புரையில் இறங்கி வெற்றிகண்டதைப் போல அதற்கு இணையான ஒரு பரப்புரையாகத்தான் தற்போதைய தேர்தல் முடிவுகளை காண வேண்டியுள்ளது.

ஆகவே, இந்த வெற்றியைக் கொண்டாடுகின்ற தி.மு.க தலைமையோ, தொண்டர்களோ மேற்படி வெற்றிக்கு அனைத்து நட்பு சக்திகளையும், துணை சக்திகளாக செயல்பட்ட சமூக இயக்கங்களின் இலக்குகளை தம் இலக்காகக் கொண்டு தம் ஆட்சியை அமைத்துக் கொள்வது நலம் பயக்கும்.

முதலாவதாக, இந்த வெற்றியானது தி.மு.கவின் வெற்றி மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகளின் வெற்றியும் ஆகும் என்பதை மதித்து கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்குகளின் சதவிகிதத்திற்கு ஏற்ப அமைச்சரவையில் கூட்டணி கட்சியினருக்கு தக்க பங்களிப்பை நல்க வேண்டும். அப்போதுதான் இந்த கூட்டணி வெற்றியானது கொள்கை கூட்டணி ஆட்சியாகவும் அமையும்.

தேர்தல் வெற்றிக்கு பிறகு அடுத்து வரும் 100 நாட்கள் மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்க்க முயற்சிப்போம் என்று திமுகவின் தலைமை அறிவித்திருந்தது.

இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக ஏற்று தேர்தல் களத்திற்கு வெளியே இந்த வெற்றியை சாத்தியப்படுத்திய சமூக இயக்கங்கள் மக்கள் இயக்கங்கள் மக்களின் குறைகளைப் பருண்மையான முறையில் தமிழக அரசிடம் மக்கள் சார்பாக முன்வைத்து குறைகளை தீர்ப்பதற்கான அழுத்த சக்தியாக முறையாக செயல்பட வேண்டும். இதனை ஆட்சியாளர்கள் இன்முகத்துடன் வரவேற்பதோடு, குறைகளை தீர்ப்பதற்கான தக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டியதில்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான மக்களின் கோரிக்கை, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு, டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள், மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள உழவர் சட்டங்களுக்கான மறுப்பு, நீட் எதிர்ப்பு போன்ற தமிழகம் தழுவிய குறைகளுக்கு மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி அதற்குரிய முன்னெடுப்புகளை உரிய வகையில் அமையவிருக்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

சுற்றுச்சூழலை கெடுக்கின்ற, மக்கள் வாழ்வாதாரங்களை பறிக்கின்ற எல்லா வளர்ச்சித் திட்டங்களையும் புதிய தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஆட்சியாளர்களின் மக்கள் விரோத திட்டங்களையும், கருத்துக்களையும் மறுக்கும் சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீது பா.ஜ.க அரசு தொடர்ந்து கொடுஞ்சட்டங்களை கொண்டு அடக்கி வருகிறது. அக்கொடுஞ்சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று புதிய தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

தற்சமயம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு சமூக, ஜனநாயக, மனித உரிமை ஆர்வலர்களால் முன்னெடுக்கப்பட்ட "UAPA வை நீக்கிடு, NIA வை கலைத்திடு" என்ற கோரிக்கையை நிறைவேற்ற புதிய தமிழக அரசு முன் வருவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி இதுவரை இக்கொடுஞ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் மாநில அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படுவதையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் தன்னாட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், விரிவாக்கவும் கேரளா, மேற்கு வங்கம், டில்லி போன்ற மாநிலங்களோடு இணைந்து இந்திய துணைக்கண்டத்தில் பலவீனப்படுத்தப்பட்டுவரும் கூட்டாட்சி அமைப்பு முறையை (Federal System) வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிக்கு தமிழகம் முன்னோடியாக இருந்து செயல்பட வேண்டும்.

இதற்கு தேவையான அழுத்தத்தை தமிழக அரசுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பை சமூக மக்கள் இயக்கங்கள் ஏற்க வேண்டும்.

அதுமட்டுமன்றி,

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது

• 7 தமிழர் விடுதலை - பல்லாண்டுகளாக சிறையில் உழன்று வரும் இஸ்லாமிய - சிறைவாசிகளின் விடுதலை

• இலங்கைத் தமிழர்களுக்கான குடியுரிமை

• வேற்று மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் குடியேறுவதை கட்டுப்படுத்துவது

• தமிழகத்தில் உள்ள மத்திய மாநில மற்றும் தனியார் நிறுவன வேலைகளில் தமிழக மக்களுக்கு முன்னுரிமை, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை அரசு தொழிலாக அறிவிப்பது போன்ற தமிழர், தமிழகம் சார்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிப்பது ஆகிய திட்டங்களை அமல்படுத்த அழுத்தம் கொடுப்பது

• அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வேலை உத்திரவாதம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகளையும் போராடிப் பெறவேண்டும்.

இந்த கொரோனா தொற்றுக் காலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடத்தை அமைச்சரவையில் ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி பிரதான எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

1975 முதல் 77 அவசர காலகட்டத்தில் பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் அனைத்தும் மீட்டெடுத்தல்

ஆன்மீகம் என்ற பெயரிலும், கல்வி நிறுவனங்கள் என்ற பெயரிலும் அறக்கட்டளை தொடங்கி நில உச்சவரம்பு ஏதுமின்றி வன நிலங்களையும் ஏழை - எளிய மக்களின் நிலங்களைப் பறித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் செயல்பட்டு வரும் நிறுவனங்களின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்.

அறக்கட்டளைகளின் மறையில் நில அபகரிப்பு நடப்பதை தடுத்து அந்நிலங்கள் நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கும் தலித் மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

பாதாளச் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதை தடைச் செய்து எந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்ய ஆவன செய்ய வேண்டும்

சமய நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் கருத்தைப் பரப்புவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று அறிவித்து, அப்படி செயல்படுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வழி வகுப்பது

ஆணவக் கொலைகளை தடுக்க தக்க சட்ட நடவடிக்கை ஏற்பாடு செய்தல்.

கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை பூங்காவின் விரிவாக்கத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது.

தமிழ் மொழியை அனைத்து மட்டங்களிலும் பயிற்று மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஆக்கிட முயற்சிக்க வேண்டும்.

பின் குறிப்பு: இவை ஒரு கூட்டறிக்கையை எதிர்நோக்கி சமூக ஜனநாயக இயக்கங்களின் பார்வைக்கு முன்வைக்கப்படுகிறது.

- பொன்.சந்திரன், பாசிச எதிர்ப்பு பள்ளி சார்பாக

Pin It