கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

kolathur maniதிராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி நேர்காணல்

1. பாமக, வன்னியர்களுக்கெனத் தனியாக 20% இடஒதுக்கீடு கேட்கின்றது. இன்னொரு பக்கம் அண்மையில் தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பட்டியல் இனத்தில் இருந்து தங்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று புதிய தமிழகம் கேட்கின்றது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களுக்கென்று தனியான இடம் வேண்டும் என்று பாமக கோரிக்கை வைத்திருக்கிறது. ஏற்கனவே பிற்படுத்தப்பட்டோரிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனப் பிரித்தார்கள். அதற்கான அடிப்படைக் காரணங்கள் சில இருந்தன.

1954ஆம் ஆண்டு காமராஜரிடம், திருவான்மியூரில் நடந்த மாநாட்டில் அந்தக் கோரிக்கையை வைக்கிறார்கள். “நாங்கள் வாழ்நிலையில் தலித்துகள் போலத்தான் இருக்கிறோம். ஆனால் சமூக நிலையில் மட்டும் தீண்டாமைக்கு உள்ளாகாமல் இருக்கிறோம்.” அதன் அடிப்படையில்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் என்று ஆக்கப்பட்டது.

பிரித்துக் காட்டுவதற்கு ஒரு அடையாளம் இருந்தது. இப்போதும்கூடத் தாழ்த்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு காட்ட முடிந்தது. அவர்கள் தீண்டாமைக்கு உள்ளான சமூகமாக இருந்தாலும் மற்ற அம்சங்கள் பொருந்தி இருந்தாலும் மலம் அள்ளுவதும், தோல் வேலை செய்வதும் என்ற தனித்த அடையாளம் அவர்களுக்கு இருந்தது.

ஆனால் வன்னியர்களை அப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோரிலிருந்து தனித்துக் காட்டுவதற்கு எந்த ஒரு அடையாளமும் இல்லை. தங்களுடைய செல்வாக்கை நிரூபிப்பதற்காகவும், தேர்தல் நேரத்தையும் பயன்படுத்தி வைக்கப்படும் கோரிக்கையாகத்தான் இது இருக்கிறதே தவிர, அவர்களுடைய எண்ணிக்கை, வாழ்க்கை நிலை பற்றிய எந்த ஒரு ஆய்வறிக்கையும் இல்லை.

எப்போதும் தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீடு மாற்றம் செய்யப்படும் போதெல்லாம் ஒரு குழு அமைத்து ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்துத்தான் இடஒதுக்கீடு மாற்றம் கொண்டு வரப்பட்டது.

அவசரத்தில் வைக்கப்பட்டச் செய்திகளை மட்டும் வைத்துக் கொண்டு கொண்டு வரப்படுவது ஏற்புடையதாக இல்லை என்பது எனது கருத்து. இன்றைக்கு இருக்கிற பிற்படுத்தப்பட்டச் சமுதாயங்களில் இதுவரை எந்தவித உயர்பதவிகளுக்கும் செல்லாதவர்கள் - சலவைத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் - ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எண்ணிக்கை பலமும் இல்லை எந்த செல்வாக்கும் இல்லை. அவர்கள் குறித்துத் தனி இடஒதுக்கீடு கேட்டால்கூடப் பொருள் இருக்க முடியும்.

தேவேந்திரகுல வேளாளர் என்று இப்போது பெயர் வைத்திருப்பதற்கு பெரிய ஆர்ப்பாட்டமாக, ஒரு சாதனை போலக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா ஜாதிகளும் பல காலங்களில் பல பெயர்களில் மாறி மாறி வந்திருக்கின்றன. அது ஒரு பெரிய சாதனை என்று சொல்லிவிட முடியாது.

ஆனால் தங்களைப் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கேட்பது குறிப்பிட்ட ஒரு கூட்டம்தான். பொது வெளியிலும், கட்சி அரசியலும் பங்கேற்பவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எங்கோ கிராமங்களில், உட்கிராமங்களில் ஒடுக்குமுறையைச் சந்தித்துக் கொண்டிருக்கிறப் பெருங்கூட்டத்தின் கருத்தாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதையும் ஜாதி மக்களைத் தூண்டிவிட்டுத் தங்கள் தலைமையை ஏற்க வைப்பதற்கான முயற்சியாகத்தான் பார்க்கிறேன்.

2. அண்மைக் காலங்களில் தமிழ் முறையிலான திருமணங்கள் - தமிழில் மந்திரங்கள் ஓதுவது அகரம் அல்லது ழகரத்தில் தாலி கட்டுவது - என ஒரு கலாச்சாரத்தை நாம் தமிழர் போன்ற கட்சியினர் முன்னெடுக்கின்றனர். திராவிட இயக்கம் சுயமரியாதைத் திருமணத்தைக் கொண்டு வந்தது. இந்த திருமணமுறைகள் பற்றிய தங்கள் கருத்து.

சுயமரியாதைத் திருமணம் என்பது ஒரு நாளில் ஒரு கட்டத்தில் வந்துவிட்டதல்ல. முதலில் நம்மை மதிக்காத பார்ப்பனர்களை அழைக்காதீர்கள் என்றும் புரியாத வடமொழியைப் பயன்படுத்தி நடத்தாதீர்கள் என்றும், அடுத்து அறிவுக்குப் புறம்பானச் சடங்குகளை விட்டொழிப்பதையும் பாலினச் சமத்துவத்தையும் சேர்த்து வலியுறுத்துவதுதான் சுயமரியாதைத் திருமணம். இந்தி எதிர்ப்புப் போரில் பெரியாரோடு தொடர்பில் இருந்த சைவத் தலைவர்கள் 1938ஆம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தினார்கள்.

அதிலேயே தமிழர் திருமணம் என்பதைச் சொன்னார்கள். பார்ப்பனர்களுக்குப் பதிலாக சைவர்கள் இருப்பார்கள் வடமொழிக்குப் பதிலாகத் தமிழ் இருக்கும். ஆனால் அறிவுக்குப் பொருந்தாத சடங்குகளைப் புறக்கணிப்பதாக அல்லது பாலினச் சமத்துவத்தைப் பேணுவதாக இருக்காது.

தாலி என்பது பெண்ணுக்கு மட்டும் அணியப்படுகிறது. அது ஒரு அடிமைச் சின்னம் என்பதால்தான் அதைத் தவிர்க்க வேண்டும் என்று சொன்னோம்.எப்படி இந்துக்கள் என்று பார்ப்பனர்கள் தங்கள் நலனைப் பேசிக் கொண்டு இருக்கிறார்களோ, அப்படித்தான் சுயமரியாதைத் திருமணத்தை ஏற்க முடியாத சைவர்கள் தமிழர் திருமணமுறை என்று தங்கள் நலனைத் தமிழர் நலன் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதுதான் இப்போது நடைபெறுவதாகப் பார்க்கிறேன். அறிவியல் பார்வையோடும், தன்மானப் பார்வையோடும், பாலினச் சமத்துவப் பார்வையோடும் பார்க்கும் போது இது போன்ற திருமண முறைகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பதே என்னுடையக் கருத்து.

3. இதுபோன்ற திருமணங்கள் பார்ப்பனியத்திற்கு ஆதரவாக அமையாதா?

நிச்சயமாக அப்படித்தான் அமையும். சடங்குகள் இருக்க வேண்டும், சைவர்கள் இருக்க வேண்டும், சைவர் கிடைக்காத போது பார்ப்பனர்களை அழைப்பார்கள். தமிழில் சொல்லப்படும் பாடல்கள் என்னவாக இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் பொருள் புரியும். அப்போது அதை எதிர்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதனால் வடமொழியில் சொன்னால்தான் புரியாது என்று வடமொழிக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது.ஒன்றை வைத்துக் கொண்டு அதோடு நின்றுவிடாமல் பெரியார் ஒவ்வொன்றாக மாற்றிக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு நடந்து கொண்டே இருந்தார். ஆனால் இது அப்படி இல்லாமல் பின்னோக்கிப் போகிறது. இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவதற்கு அதிக காலம் ஆகாது. இது மிக மோசமாக, தமிழர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாய் இருந்த காலகட்டத்திற்குத் தான் இட்டுச்செல்லும்.

4. திராவிடக் கருத்தியலையும் திராவிட இயக்கங்களையும் தொடர்ந்து தாக்கி வந்த திரு.சீமான், ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சசிகலா அவர்களைச் சந்தித்திருக்கின்றார். இந்தச் சந்திப்பை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

அதிமுகவை நாம் திராவிடக் கட்சி அல்ல என்று சொல்வதைப்போல சீமான் வேறு ஒரு கோணத்தில் பார்த்து அதிமுகவை விமர்சிப்பது கிடையாது. திமுகவை மட்டும்தான் அவர் எப்போதும் தாக்கியிருக்கிறார். மாநில உரிமைகள் பறிபோவது பற்றிப் பேசும்போது, உண்மையான தமிழ்த் தேசியவாதியாக இருப்பாரானால், அதிமுகவையும் பாசிசப் போக்குடைய பாஜகவையும் கண்டிப்பதைத்தான் அவர் முதன்மை அரசியலாகக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவரிடம் இருப்பது திமுக எதிர்ப்பு மட்டும்தான். அதற்கு அடிப்படையில் வேறு காரணங்கள் இருக்கலாம், வேறு இலாபங்கள் இருக்கலாம். அதை எல்லாம் சேர்த்து வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும். இப்போது போயிருக்கிறார். “இதிலிருந்து தனக்கு ஏதேனும் ஆதாயம் இருக்குமா?” என்பதற்கு மேல் அவருடைய சிந்தனைகள் இருக்காது என்று நான் கருதுகிறேன். பாவம் தமிழர்கள்!

5. தங்களைப் பொதுவானவர்களாகக் காட்டிக் கொள்ளும் சகாயம் ஐஏஎஸ் போன்றவர்கள் ‘ஊழலை ஒழிப்போம்’ என்னும் பொதுவான முழக்கத்தை முன்வைத்து அரசியலுக்கு வருவதைப் பற்றியத் தங்களுடையக் கருத்து.

மக்களிடம் அல்லது சமூகத்தில் நிலவுகிற கேடு என்பது ஊழல் மட்டுமே என்று சுருக்கிப் பார்ப்பவர்கள்தான் இந்தக் கூட்டத்தினர். கெஜ்ரிவால் தொடங்கித் தற்போது சகாயம் வரை. கெஜ்ரிவாலிடம் போய் இடஒதுக்கீடு பற்றிக் கருத்துக் கேட்டால் சொல்ல மறுப்பார். அணு உலை பற்றிக் கேட்டால் கூறமாட்டார். பின்னர் அதில் என்ன பயன் இருக்க முடியும்?

ஊழல் இல்லை என்பதை அரசு அதிகாரிகள் செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் கொடுக்கலாம். ஆட்சிக்கு வந்துதான் கொடுக்க வேண்டும் என்பதில்லை.

ஆனால் மக்களுடைய நிலை என்ன, என்ன பாதிப்புகளில் மக்கள் இருக்கின்றனர், எந்தெந்த உரிமைகள் அவர்களிடம் இருந்து பறிக்கப் பட்டிருக்கின்றன என்பது பற்றிய பார்வையும் அதற்கானத் தீர் வையும் வைத்திருப்பதை மட்டும்தான் அரசியலாகப் பார்க்க முடியுமே தவிர வெறும் ஊழல் ஒழிப்பு மட்டுமே அரசியல் ஆகிவிடாது.

அது வேண்டுமானால் எல்லோராலும் வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கும். காசு வாங்குபவனும் ஊழல் ஒழிப்பை வரவேற்பான். வாயில் சொல்வதற்கு எந்த சிக்கலும் கிடையாது. ஊழல் ஒழிப்பு இப்படித்தான் இருக்குமேதவிர அவர்கள் எந்த பயனையும் விளைவிக்க மாட்டார்கள்.

அப்துல்கலாம் கூட அப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் சமூகத்திற்கு என்ன பயன் கிடைத்தது? காந்தியாரின் படத்திற்கு நேரெதிராக சாவர்க்கரின் படத்தைக் கொஞ்சம்கூடத் தயக்கமில்லாமல் திறந்துவைத்தார். எல்லோராலும் பாராட்டப்படுகிற அல்லது யாராலும் தாக்கப்படாத ஒரு இடத்தை ஊழல் ஒழிப்பு என்பது அளிக்குமேதவிர, அது மக்களுக்கு எந்தப் பயனையும் தராது.

பார்ப்பனர்கள்கூட ஊழல் ஒழிப்பைப் பற்றிப் பேசுவார்கள். முதல் தலைமுறையாகப் பணிகளுக்குள் நுழைந்திருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைக் குறை கூறுவதற்கு அதனைப் பயன்படுத்துவார்கள். காலம் காலமாகக் கணக்கு வழக்கு இல்லாமல் எல்லாத் துறைகளிலும் பணத்தை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்தான்.

ஆனால் இப்போது அவர்கள் பலரும் ஊழல் ஒழிப்புப் பற்றிப் பேசுவார்கள். நேர்மையில் உயர்ந்த கட்சி பாஜக என்று சொல்வார்கள். ஆனால் பாஜகவின் ஊழல் இவர்களுக்குத் தெரியுமோ தெரியாதோ! தெரிந்தும் அமைதியாக இருப்பார்கள்.

இது ஒரு ஜாதிய மனப்பான்மை அல்லது ஜாதிய அடிமை மனப்பான்மை. எனவே வெறும் ஊழல் ஒழிப்பால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை எந்த மாற்றத்தையும் இதனால் கொடுத்துவிட முடியாது என்பதுதான் என் கருத்து.

நேர்கண்டவர்: மா.உதயகுமார்

- கொளத்தூர் மணி