தலித் சமூகம் சமீப சில ஆண்டுகளில் நன்கு வளர்ச்சி பெற் றுள்ளது. கல்வி ரீதியிலும், பொருளியல் ரீதியிலும் பெருத்த முன்னேற்றம் கண்டுள்ளது. பிற சமூக மக்களும் கண்டு பொறாமைப் படுமளவுக்கு அதன் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது.

எனில், இச்சமூக மக்கள் மீது, தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற இழிவு நிலை மட்டும் நீக்கப் படாமலும், தீண்டாமை என்னும் கொடுமை முற்றாக ஒழிக்கப்படாமலும் இன்னமும் வெவ்வேறு வடிவங்களில் நீடிக்கும் நிலையே தொடர்ந்து வருகிறது.

தலித் மக்கள் மீதான இத் தீண்டாமைக் கொடுமையைப் போக்க குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் Protection of Civil rights act, PCR, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், Atrocities on SC, ST (Prevention) act ஆகிய சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட பின்னும் அவை முறையாகச் செயல்படுத்தப் படாமல், இன்னும் பல இடங்களில் இது சார்ந்த கொடுமைகள் நீடித்தே வருகின்றன.

இன்னமும் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் முதலான மாவட்டப் பகுதிகளில் உள்ள உட் கிராமங்களில் தேநீர்க் கடைகளில் தலித் மக்களுக்குத் தனிக் குவளை முறையே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் பழைய கொட்டாங்கச்சி முறையே நீடிக்கிறது. வேறு சில இடங்களில் பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் குவளைகள் வழங்கப் படுகிறது. இது நல்லதுதானே என்று சிலர் சொல்வதானாலும், தாழ்த்தப்பட்டவர் அல்லாதவர்களுக்கு எவர்சில்வர் தம்பர் தரப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த பாகுபாடு. பல இடங்களில் தேநீர் கடை பெஞ்சுகளில் பிற சமூக மக்களுக்கு சமமாக உட்காரும் உரிமையில்லை. கீழே குத்துக் காலிட்டுத்தான் அமர வேண்டும்.

கோவை, அவினாசி பகுதிகளில் அருந்ததியின சமூகம் ஒடுக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள உட் கிராமங்களில் அருந்ததியர் மிதி வண்டியில் ஏறி ஒட்டிச் செல்ல முடியாது. ஊர் எல்லை வரை தள்ளிக் கொண்டு போய், பிறகுதான் ஏறிச் செல்ல முடியும். சமீபத்தில் அவினாசி பக்கமுள்ள தண்டுக்காலம்பாளையம் என்னும் சிற்றூரில், செட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் தனது மனைவி தங்கமணியை பின்னால் அமரவைத்துக் கொண்டு ஈருளியில் வந்தார் என்பதற்காக பகுதி மக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இவை தவிர தலித் மக்கள் காவல் நிலையங்களில் கொல்லப்படும் கொடுமையும் நேர்கிறது. கடந்த ஜூலை 30ஆம் நாள் திருவைகுண்டம் பகுதியில் பி. ராமச்சந்திரன் என்கிற 28 வயது இளைஞர் ஒரு நகைத்திருட்டுக்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் உயிரிழந்திருக்கிறார்.

இதுபோன்று தொடரும் பல கொடுமைகளுடன், தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி ஊராட்சிகளில், இன்னும் பல இடங்களில் இடைத் தேர்தலே நடத்தப்படவில்லை என்கிற நிலையும் தொடர்கிறது.

பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்ட 603 காலி இடங்களுக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் 7இல் நடைபெறுகிறது. இதில் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 8 தனித் தொகுதிகளில் யாருமே வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லையாம். காரணம், தாழ்த்தப் பட்டோர் அல்லாத சாதியினரின் அச்சுறுத்தல். குறிப்பாக சில இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் பிழைப்பு தேடி நகர்ப்புறங்களுக்குச் செல்ல ஊரில் கணிசமான அளவு அவர்களது எண்ணிக்கைக் குறைவு போன்ற பல சொல்லப்படுகின்றன.

எனினும், இச்சிக்கல் பிற சாதி மக்களின் அச்சுறுத்தல் அல்லது, ஒத்துழையாமை காரணமாகவே நிகழ்கிறது. இதில் தேர்தல் ஆணையம், தகுதியோ, பொருத்தமோ அற்ற தனித் தொகுதிகளைப் பொது தொகுதிகளாக்கி தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. என்றாலும் பிற தொகுதிகளில் தேர்தல் இன்னமும் கேள்விக்குரியதாகவே உள்ளது.

அதாவது சட்ட ரீதியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன உரிமை வழங்கப்பட்டாலும் அச்சட்டங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் செயல்படுத்தாமை, சமூக ரீதியில் இன்னமும் நீடிக்கும் சாதி ஆதிக்க உணர்வு, இது சார்ந்த விழிப்புணர்வு, பக்குவம், சனநாயக சமத்துவ உணர்வு ஏற்படாதது ஆகியவையே இச்சிக்கல்களுக்கு காரணமாகின்றன.

எனவே, சட்டத்தின் காவலர்கள் நடைபெறும் சம்பவங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். சமூக, சமத்துவ, சனநாயகச் சிந்தனையாளர்கள் இது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தூங்குமூஞ்சி கப்பற்படை துறுதுறுப்பு மீனவர்கள்

இந்த மாதம் அக்டோபர் 1ஆம் நாள் சிங்கப்பூரைச் சேர்ந்த வணிகக் கப்பல்களுடன் செல்லும் இழுவைக் கப்பல் ஒன்று வழி தடுமாறி கூடங்குளம் அருகே நடுக்கடலில் இந்தியப் பகுதியில் மூன்று நாளாய் நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கிறது. இது இந்தியக் கப்பற்படை வெத்துவேட்டு சிப்பாய்கள் கண்ணில் படவில்லையாம். ஆனால் அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இதைப் பார்த்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்க, பின் அவரகள் வந்து சிங்கப்பூர் கப்பலை விசாரணைக்காக தூக்குக்குடி அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் இருக்கிறது நம் கப்பற்படை. அதாவது இந்திய எல்லையில் அந்நியக் கப்பல் நிற்பது மீனவர்கள் பார்த்து சொல்லித்தான் கடற்படைக்குத் தெரிகிறது.

இந்தக் கப்பற்படை போய் தமிழக மீனவர்களை எப்படி காப்பாற்றும்? ஆனால் இப்படி காப்பாற்ற இயலாத வீர தீர சிப்பாய்கள் கடந்த அக்டோபர் 6ஆம் நாள் ஓர் அரிய பெரிய சாதனை படைத்திருக்கிறார்கள். அதாவது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்தார்கள் என்று 22 பேரைப் பிடித்து மண்டபம் கடலோரக் காவல் படையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எப்படியிருக்கிறது கடற்படை சாதனை.

 

Pin It