உலகப் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கருடன் வாழ்ந்த மிக முக்கியமான நபர்களில் ஒருவர் பகவான் தாஸ். வாழ்நாள் முழுதும், ஒரு சமூக ஆர்வலனாக, வரலாற்று ஆய்வாளனாக, மானுடவியலனாக, தீவிர அம்பேத்கரியவாதிய, பெளத்த சமயப் பற்றாளனாக வாழ்ந்தவர். சிம்லாவில் இருக்கும் சூடாக் கண்டோன்மென்ட்  பகுதியில் ஏப்ரல் 23,1927 ல் பிறந்தவர்.  தன்னுடைய பதினாறாவது வயதில்(1943), சிம்லாவில் ஏழு மணி நேரம் காத்திருந்து, பின் அம்பேத்கரைச் சந்தித்தவர். பகவான் தாசிற்கு, ராகுல்தாஸ்  என்ற மகனும், சுரா தராபுரி, சோயா ஹட்கே என்ற இரண்டு மகள்களும்  உள்ளனர்.

பட்டியலின கூட்டமைப்பின் உறுப்பினராகவும், தொழிலாளர் விடுதலை அமைப்புகளிலும் செயல்பட்டார். தன்னுடைய மெட்ரிக்குலேஷன்  படிப்பை  முடித்து, இந்திய விமானப் படையில் ரேடர் கருவி செயல்பாட்டாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். அம்பேத்கரின் இறுதிக் காலங்களில் (1955-56)அவருடைய அலிப்பூர் இல்லத்தில்  கூடவே இருந்து ஆராய்ச்சி உதவியாளராக இருந்தார்.

இந்திய மண்ணில், சாதியத்திற்கு எதிரான போர் தொடுத்த அண்ணல் அம்பேத்கரின் பேச்சு, எழுத்துக்களை, மராட்டிய அரசு 1979ல் , பதிப்பித்து வெளியிடுவதற்கு முன்பே, 1963-1980களில், 'Thus spoke Ambedkar' என்ற தலைப்பில், நான்கு தொகுதிகளாக வெளியிட்டார். பகவான் தாஸ், 23க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக 'நான் ஒரு துப்புரவுத் தொழிலாளி' என்ற ஹிந்தி நூல், தனிச் சிறப்பும் மிகுந்த வரவேற்பையும் பெற்ற நூல் ஆகும். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை, அறிந்து கொள்வதற்கு, தனஞ்செய்கீர் நூலைத் தவிர நமக்கு போதுமான நூல்கள் இல்லை என்ற வருத்தம், பகவான் தாஸ் நினைவுக் குறிப்புகளின் வழி துடைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு நினைக்கத்தக்கது ஆகும். பகவான் தாஸ்,  1971ல் LLB படிப்பை முடித்து, கோர்டில் பயிற்சி பெற்றவர். 1983ல் ஜெனிவாவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கூட்டமைப்பில், தீண்டாமை குறித்து இவர் ஆற்றிய உரை, அங்கிருந்த சாதிய மனோபாவம் கொண்டவர்களுக்கு நெருடலாக இருந்தது.

அம்பேத்கருக்கு பிந்தைய தலித் அமைப்புகளின் மீதும், தலித் தலைவர்கள் மீதும்  கொண்ட வேதனையை, ஏப்ரல் 15, 2009 அன்று,  'The Times Of India' என்ற நாளிதழ் கண்ட நேர்காணலில், "தலித் அமைப்புக்கள், அம்பேத்கரை, தலித் மக்களை, வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுதுகின்றனர். தலித் தலைவர்கள், தான் சார்ந்த உட்சாதி நலனை மட்டுமே விரும்புகின்றனர். அம்பேத்கரின் கருத்துக்களை அறியாமலே, சாதி ஒழிப்பு என்ற போராட்டக் களம் இன்று  பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது" என்று பதிவு செய்திருக்கிறார். பகவான் தாஸ், தன்னுடைய கடைசி காலம் வரை, தன்னை நாடி வரும் (டெல்லி முனிர்கா இல்லம்)  சமூக ஆர்வலர்களுக்கு, தலித் அறிஞர்களுக்கு, ஓர் தகவலாளியாக, வரலாற்றாளனாக, மூத்த  அம்பேத்கரியவாதியாக திகழ்ந்தவர். எத்தனையோ இளம் தலைமுறையினரை உருவாக்கியதில் இவருக்கு மிகுந்த பங்கு உண்டு.

நமக்கும் அம்பேத்கருக்கும் உடனான நேரடி தொடர்பு பகவான் தாஸ் என்ற ஆளுமையின்  மூலம் 18.11.2010 அன்று துண்டிக்கப்பட்டுள்ளது  என்பது நமக்கெல்லாம் பெரிய  இழப்பு என்ற போதிலும், கூட்டம் கூடுவது, வருடா வருடம் அஞ்சலி செலுத்துவது மட்டும் நாம் கடமையாக இல்லாமல், பகவான் தாஸ் காண விரும்பிய உட்சாதி முரண் கடந்த, அம்பேத்கரை உள்வாங்கிய சாதி ஒழிப்பை முன்னெடுப்பதுதான் பகவான் தாசிற்கு செய்யும் கடமையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Pin It