பளிங்குக் கற்களால் ஆன சமாதியின் கீழ் செல்லரித்துப் போன எலும்புக்கூடுகள் கிடப்பதைப் போல, நம் நாட்டின் பெருமைமிகு ஜனநாயகத் தூண்கள், மலக் குழிகளின் மேல் நின்றுகொண்டு, அவற்றின் நாற்றம் வெளியில் கசிந்துவிடாதபடி கவனமாகப் பார்த்துக் கொள்கின்றன. நாடாளுமன்றக் கட்டிடத்தை கழிவறைபோலச் சித்தரித்து, கேலிப்படம் வரைந்தவரை அதிகாரம் தண்டித்தது. சொந்த மக்களில் ஒரு பகுதியினரைக் கழிவறைகளின் மலக் குழிக்குள் அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு நாட்டின் அதிகார மையத்தை வேறு எந்த வடிவத்தில் வெளிப்படுத்த முடியும்? நாடு முழுவதும் சுமார் 20 லட்சம் பேர், கையால் மலம் அள்ளும் தொழில் செய்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அவர்கள் அத்தனை பேரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கே சேர்த்துக்கொள்ள வேண்டும்.

manual scavanging 342

நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் உலர் கழிப்பிடங்கள் இன்றைக்கும் இருப்பதாக அரசே புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. உலர் கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பகக் கட்டுமானத் தடைச் சட்டத்தை மத்திய அரசு 1993, ஜீன் 5ஆம் தேதி கொண்டுவந்தது. 20 ஆண்டுகளுக்கு முன் உலர்க் கழிப்பிடங்கள் கட்டத் தடைச் சட்டம் கொண்டுவந்த அரசு, இன்றைக்கு 7 லட்சம் உலர்க் கழிப்பிடங்கள் இருப்பதாகக் கணக்குச் சொல்கிறது. ஏன் இந்த முரண்பாடு?

காரணம் சாதி. சாதியின் அடிப்படையில் திணிக்கப்பட்ட தொழில். “கர்மயோக்” எனும் மனுதர்மச் சட்டம். கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள் தலித்துகள் குறிப்பாக அருந்ததியர்கள்.அப்படி ஒரு பிரிவினரின் இருத்தலையே அங்கீகரிக்காத இந்தச் சாதியச் சமூகமும், நாடும், அவர்களுக்கான சட்டத்தை எப்படி மதிக்கும்?

நிலம் கையகப்படுத்தும் சட்டம், தொழிலாளர் சட்டத்திருத்தம், மாட்டிறைச்சித் தடைச் சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களுக்கு இந்நாட்டில் இடமிருக்கிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை இழிவான தொழிலில் இருந்து மீட்டெடுப்பதற்கான சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர இன்னும் எத்தனை காலத்திற்குப் போராட வேண்டும்?

கிழக்கிந்தியக் கம்பெனியின் வருகைக்குப் பின் தொடங்கிய கையால் மலம் அள்ளும் பணியில் அருந்ததியர் (தமிழ்நாடு), மாதிகா (ஆந்திரா), பங்கிகள் (குஜராத்), மகர் (மகாராஷ்டிரா) என நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள தலித் மக்களே ஈடுபட்டு வருகின்றனர். சாதியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த இழிவில் இருந்து மீள்வதற்காக அந்த மக்கள் 1924 முதல் போராடி வருகின்றனர். 1949இல் பார்வே கமிட்டி, 1957இல் தூய்மைப்பணி நிலை பற்றிய விசாரணைக் குழு, 1968இல் தொழிலாளர் குழுவிற்கான தேசிய ஆணையம் மற்றும் கையால் மலம் அள்ளுவோருக்கான தேசிய ஆணையம் எனப் பல்வேறு குழுக்களும், ஆணையங்களும், கையால் மலம் அள்ளும் தொழிலைத் தடை செய்யப் பரிந்துரைத்தன. இடைவிடாத போராட்டங்களுக்குப் பிறகு, 1993இல் உலர் கழிப்பகங்களில் மனிதக் கழிவுகளைக் கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பகக் கட்டுமானத் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது 2000 ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என்று இருக்கிறது. ஆனால் சட்டம் கொண்டுவரப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஒருவர் கூட இந்தச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படவில்லை.

உள்ளாட்சி அமைப்புகளிலும், இந்திய ரயில்வேத் துறையிலும் வெளிப்படையாகவே மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் தலித்துகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். ரயில்வேத் துறையில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு எனப் பல்வேறு போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்னக ரயில்வே தொழிலாளர் அமைப்பு உள்ளிட்ட எந்தவொரு அமைப்பும், கண்முன்னே நடக்கும் இந்தப் பேரவலத்தைக் கண்டித்து ஒழிக்க முன்வரவில்லை என்பது வேதனையான உண்மை.

2013இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம், மலத்தை கைகளால் அள்ளுகிறவர்கள் மட்டுமல்ல; சாக்கடை வழி மற்றும் பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்பவர்களும் மலமள்ளும் தொழிலாளர்கள்தான் என்று சொல்கிறது. கழிவுகளைச் சுத்தப்படுத்தும் பணியின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் இவை எந்த ஒன்றும் அந்த மக்களின் இழிவைத் துடைக்கப் பயன்படவில்லை என்னும் நடைமுறை உண்மை நம் முகத்தில் அறைகிறது.

உலர்க் கழிப்பிடங்களை மாற்றுவதற்கும், கையால் மலம் அள்ளும் தொழிலை மாற்றி அந்த மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவதற்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கியிருப்பதாக, சமூக நீதி மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் ஆவணங்கள் கூறுகின்றன. எனில் அந்தப் பணம் எந்தப் பொந்திற்குள் போயிருக்கும்?

அந்தப் பணத்தைக் கொண்டு, துப்புரவுப் பணிக்கு இயந்திரங்களை வாங்கியிருக்கலாம்..பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியிருக்கலாம்.

குறைந்தபட்சம் மலக்குழிகளுக்குள்ளும், சாக்கடைக்குள்ளும் மூச்சுத்திணறி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உச்சநீதிமன்றம் கூறியபடி உதவித் தொகையாவது வழங்கியிருக்கலாம் ஆனால் இவை எதுவும் செய்யப்படாமல் போனதற்கு சாதித்திமிரைத் தவிர வேறு எது காரணமாக இருக்க முடியும்? டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, தூய்மை இந்தியா எல்லாமும், மலக்குழிகள் தகர்க்கப்படும் நாளில் நாறிப்போய்விடும் என்பதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொட்டதெற்கெல்லாம் விவாதம் நடத்தி நியாயத்தை நிலைநாட்டப் பாடுபடும் ஊடகங்கள், இந்த மோசடியை விவாதிக்க முன்வரவில்லையே ஏன்? அந்தப் பக்கம் இந்தப்பக்கம் என எந்தப் பக்கமும் சாயாத, செய்திகளை முந்தித் தருவதில் முன்னணியில் நிற்கும் ஊடகங்களுக்கும், அப்பாவைப் பார்க்க மகன் வந்ததும், விஜயகாந்த் துப்பியதும்தான் பரபரப்பான செய்திகளாக இருக்கின்றனவே தவிர, துப்புரவுத் தொழிலாளிகளின் மரணம் விரைவுச் செய்திகளாகக் கடந்து போகின்றன.

இப்போதுதான் கையால் மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்கள் குறித்து சரியான கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 93ஆம் ஆண்டு தடைச்சட்டத்தின் 11 மற்றும் 12ஆவது பிரிவுகளில் கூறப்பட்டுள்ள, கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை சேஞ்ச் இந்தியா அமைப்பின் தலைவர் நாராயணன் போட்ட பொதுநல மனுவின் மீதுதான் மேற்படி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம்  பிறப்பித்துள்ளது. சமூகச் செயற்பாட்டாளர் பெசவாடா வில்சன், எழுத்தாளர் பாஷாசிங் உள்ளிட்ட பலரும், மனித உரிமைக்கு எதிரான இந்தத் தொழிலை ஒழிக்கப் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில், ஆதித்தமிழர் பேரவை, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவுப் பணிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்து வருகிறது.

சல்லிக்கட்டுக்கு மல்லுக்கட்டுவதில் காட்டும் முனைப்பை, சக மனிதர்களின் மீது திணிக்கப்பட்டுள்ள இந்தச் சாதி இழிவை நீக்குவதில் எந்த அரசியல் கட்சியும் காட்ட முன்வரவில்லை. ரோஹித் வெமுலாவின் சாவுக்கு நீதி கேட்பது, தலித் ஒருவர் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது ஆகியவை எந்த அளவுக்கு சமூக நீதி சார்ந்ததோ, அப்படிக் கையால் மலம் அள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் சமூக நீதி சார்ந்ததுதான். இன்னும் சொல்லப்போனால், முதலில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியது, சாதி இழிவைச் சுமத்தும் தொழிலை ஒழிப்பதற்கும், அந்த மக்களின் மறுவாழ்வுக்கும்தான் என்பதை சாதிக்கு எதிரானவர்கள், சமூக நீதியின் பக்கம் நின்று, மனு நீதியைக் குழி தோண்டி புதைக்கப் போராடுபவர்கள் ஒரு நாளும் மறுக்கமாட்டார்கள். அந்த மக்களை வெறும் வாக்குவங்கிகளாகப் பார்க்காமல், சுயமரியாதையோடு வாழத்துடிக்கும் சக மனிதர்களாகப் பார்த்து, அவர்களுக்கான மறுவாழ்வுக்கு அரசியல் கட்சிகள் உறுதி அளிக்க முன்வர வேண்டும். சமூக நீதிச் சட்டங்களுக்கு முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு, கையால் மலம் அள்ளும் இழிதொழிலை ஒழிப்பதிலும் நாட்டுக்கே வழிகாட்டியாக மாற வேண்டும் என்பது நம்மைப் போன்றவர்களின் எதிர்பார்ப்பு.

Pin It