சக்தி வை. கோவிந்தன்

(தமிழின் முன்னோடி பதிப்பாளுமை)

பழ. அதியமான்

பதிப்பகம்: காலச்சுவடு, நாகர்கோவில்

பக்: 232 ரூ: 175/-

அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியிலுள்ள தமிழ் ஆர்வலர் பழ. அதியமான். தமிழின் முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர். தமிழின் முன்னணிப் பதிப்பாளர்களில் ஒருவரான சக்தி வை. கோவிந்தனைப் பற்றிய வாழ்க்கை சரிதத்தை சுவைபடவும் பிரமிக்கதக்க தகவல்களோடும் எழுதிப் போகிறார்.

1912ல் பிறந்த சக்தி வை. கோவிந்தன், வை.கோ. என்று பரவலாக அறியப்பட்டவர். ஒரு லட்சியப் பதிப்பாளர். கால் நூற்றாண்டு உழைத்து தமிழில் ஏறக்குறைய 200 புத்தகங்களை தனது சக்தி பதிப்பகத்தின் வழியே கொண்டு வந்தவர். சக்தி காரியாலயம் என்று அது 1939ல் தொடங்கப்பட்டது. இனி செய்ய வேண்டியது என்ன?’ என்ற நூல் மிகவும் பேசப்பட்ட புத்தகம். ஈசாப் குட்டிக் கதைகள் இன்றும் குழந்தைகள் விரும்பி வாசிக்கின்றனர். காந்தியவாதியாக இருப்பினும், தனது இதழில் பிடிவாதமாக கம்யூனிஸ்ட்களின் கட்டுரைகளை தைரியமாக 1950களில் வெளியிட்டு பொதுவுடமைவாதியாக வாழ்ந்த அந்த மாமனிதரின் வாழ்வை சுவைபட சித்தரிக்கும் நல்ல புத்தகம்

 

இந்திரா காந்தியைக் கொன்றது யார்?

தாரிக் அலி (தமிழில்: கே. முரளிதரன்) பதிப்பகம்: மதுரை பிரஸ், சென்னை -33.

பக்: 170 ரூ: 160/-

உலகிலேயே தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே ஈவு இரக்கமின்றி அரசியல் காரணங்களுக்காக சுட்டுக் கொல்லப்பட்ட ஒரே தலைவராக நாம் இந்திராகாந்தியை அறிவோம். தான் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என 1975 உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததால் நாட்டில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவரான அவரது கொலையை பொறுத்தவரை சீக்கிய இனவாத அரசியல் மட்டுமின்றி சர்வதேச சதி பின்னப்பட்டதை தாரிக் அலி காட்சி வடிவில் (தன் சொந்த கருத்துக்கு இடமளிக்காமல்) பதிவு செய்கிறார்.

பி.பி.சி. க்காக எடுக்கப்பட்ட ஒரு தொடர். அதற்காக 78 காட்சிகளில் இந்திராவின் கொலையை திட்டமிட்டு அமெரிக்க உளவாளி வெஸ்ட் எப்படி நடத்தி முடிக்கின்றான் என்பதை சித்தரிக்கும் புத்தகம். தாரிக் அலி பாகிஸ்தானிய அரசியல் விமர்சகர். இதை மொழிபெயர்த்திருக்கும் கே. முரளிதரன் இந்தியா டுடே பத்திரிகையில் பணிபுரிந்தவர்.

 

தலித் மக்களும் கல்வியும்

வே. அலெக்ஸ் (தொ)

தமிழில். ஆ. சுந்தரம்

எழுத்து, மதுரை - 4

பக்: 111 ரூ: 90/-

கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் அமெரிக்காவில் இருந்துகொண்டு பௌத்த சமயத்தை தழுவி இங்கே இந்தியாவில் தியோசோ பிக்கல் சொசைட்டியை 1879ல் தொடங்கியவர். அயோத்திதாச பண்டிதர் 1898ல் அவருக்கு A Unique Petition எனும் தலைப்பில் ஒரு பகிரங்க கடிதம் எழுதினார்..... ஒருவித ஆழமான நட்பு மேலோங்குகிறது. தென்னிந்திய பறையர்கள் பௌத்தர்களே எனும் முக்கிய அணுகுமுறையோடு தியோசோபிகல் சொசைட்டி அவர்களுக்கு கல்வியளிக்கும் பணிகளைத் தொடங்குகிறது.

கல்வி குறித்த முக்கியமான புத்தகம் இது. பள்ளிக் கல்வியோடு, ஆசிரியர் பயிற்சி கூட எப்படி இருக்க வேண்டும் என்று ஆல்காட் மிக விரிவாக விவரித்து செல்கிறார். பஞ்சமர் இலவச பள்ளிகள்பற்றிய இந்தத் தொகுப்பு நூலில் அயோத்திதாசரின் கடிதம், கர்னல் ஆல்காட் எழுதிய ஏழை பறையன் (The Poor Pariah) பறையரை எங்ஙனம் பயிற்றுவிக்கிறோம் (How me teach Pariah) உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களின் தொகுப்பு இந்த நூல். வே. அலெக்ஸ் அவர்கள் பேரா. ஆ. சுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் அவற்றைத் தொகுத்து உதவியுள்ளார். தலித் வரலாற்றில் அவசியம் இடம் பெறத்தக்க நூல்.