“புத்தகக் கண்காட்சிக்கு இன்று மதியம் செல்கிறேன். யாரெல்லாம் வருகிறீர்கள்? யாரெல்லாம் சந்தக்க விரும்புகிறீர்கள்?”

முகநூலில் காலையில் பதிவு செய்தார் தோழர்.

ஒரிரு மணிகள் கழித்து இதற்கு எவ்வளவு பேர் லைக் போட்டிருக்கிறார்கள் என்று செல்பேசியை சின்ன பையன் கணக்காக ஆவல் மேலிட முகநூலை திறந்து பார்த்தார். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரின் பதிவுக்கு ஏராளமான விருப்பக்குறிகள் அள்ளிக் குவிக்கப்பட்டிருந்தன.

கிட்டத்தட்ட நூறு விருப்பக்குறிகளை நெருங்கிக் கொண்டிருந்தது. அதில் சில பேர் ஆச்சரியக்குறி போட்டிருந்தனர். சிலர் இதயம்-அன்பு குறி என்று சொல்லக்கூடியதை போட்டிருந்தார்கள்.

சில பேர் வெறுப்பு விருப்பு குறியையும் கூட போட்டிருந்தார்கள். இன்னும் யாரோ சில பேர் கண்ணீர் துளிகளையும் பதிவுக்கு போட்டிருந்தார்கள். யாருப்பா இந்த புண்ணியவான்கள் என்று தோழருக்கு ஆச்சரியமாக இருந்தது. யார்ரா இவர்கள் கண்ணீர் துளிகள் போடுகிறார்கள் என்று பார்க்க விரும்பினார். ஆனால் அவர் பார்க்கவில்லை.

புத்தகக் கண்காட்சிக்கு போவது என்று முடிவாகிவிட்டது. அதற்கான ஜோல்னாப்பை உட்பட்ட அலங்காரங்களை செய்ய தயாரிக்க கொண்டிருந்தார். தோழருடைய இணையர் “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார். புத்தகக் கண்காட்சிக்கு போகிறேன் என்று சொன்னார்.

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா? இருக்குற புத்தகங்கள் அங்காங்கே இங்கும் அங்கும் குப்பையாக இறைந்து அங்காங்கே கிடைக்குதுங்க. அதை ஒழுங்காக அடுக்கி வைக்க முடியல.. போன வருஷம் வாங்கிய புத்தகங்கள படிச்சிட்டீங்களா. எதுக்கு இப்படி புத்தக கண்காட்சிக்கு போய் புத்தகங்களை வாங்கி குவிக்கிறீங்க?” என்று இணையர் அதட்டினார்.

தோழருடைய தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பிள்ளைகள் இருவரும் கூட முகத்தைச் எட்டு கோணலாக சுளித்தார்கள்.

ஆனால் அதே பிள்ளைகள் தான் ஒரு பத்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் புத்தகக் கண்காட்சிக்கு அழைத்துச் செல்கிறேன் என்ற பொழுது துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் வந்தார்கள். இன்று ஏன் இப்படி முகத்தை சுளிக்கிறார்கள். கால இடைவெளி அவர்களை தன்னிடம் இருந்து இவ்வளவு தூரம் நகர்த்தி விட்டதா? தோழருக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் அவர் மட்டும்தான் கோட்டை விட்டார். பல தோழர்களின் பிள்ளைகள் இப்படியாக இல்லை என்பதையும் நினைத்துப் யோசித்தார். காலம் கடந்து விட்டது. கால எந்திரம் கைக்கு எட்டும் தூரம் இருந்தால் முன்னால் சென்று எங்கே தவற விட்டோம் என்று அலசிப் பார்க்க முடியும். தோழரிடமும் இல்லை.. யாரிடமும் அது இல்லை!

புத்தகங்கள் எனும் கால கண்ணாடி இருந்தது. அதை கொண்டு சமூகம் சரி செய்து கொள்ள முடியும் தானே?

இப்பொழுது தோழருக்கு ஒரு சிக்கல்! புத்தகக் கண்காட்சிக்கு செல்ல வேண்டும் என்றால் பணம் வேண்டுமல்லவா? சும்மாவா புத்தகத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள். இலவசமாக எந்த பதிப்பகத்தார் கொடுப்பார்கள்? சில பதிப்பகத்தார் பழகிய பழக்கத்திற்கு, அதுவும் தோழர் என்பதற்காக தங்கள் இலாபத்தை குறைந்து கொண்டு தள்ளுபடி செய்து தருவார்கள்.

இப்படி கழிவு போனாலும் கூட கட்டாயம் தோழருக்கு பணம் போதுமானது வேண்டுமே! தோழருக்கு நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டி இருந்தது. புத்தகங்கள் இல்லாமல் அவரால் வாழ முடியாது? “சிறிது நேரம் அமைதியாக இரு.. ஒரு தோழன் இன்னொரு தோழனுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான்” என்று தூக்கு மேடைக்கு செல்லும் முன்பு தோழர் லெனினின் “அரசும் புரட்சியும்” நூலை உயிர் போகும்.

அந்த மரணம் அடுத்த நிமிடம் இருக்கிறது என்ற போதும் கூட வாசிக்க முடிந்த மாவீரன் பகத்சிங் சிந்திய ரத்தத்தில் பூத்த மலர்களின் வாசனையை நுகர்ந்த யாரும் புத்தகங்களை நேசிக்கத்தான் செய்வார்கள்!

எத்தனை எத்தனை சிறையின் அடக்குமுறை கொடும் மனப்போராட்டங்களுக்கும் இடையிலும் நம்பிக்கை ஒளியை வீசிய புத்தகங்கள் சிறைக்கம்பிகளின் நிழல்களில் மலர்ந்து புத்தகங்களாக பிறந்து இருக்கின்றன. அப்படியான புத்தகங்கள் சில புதிய வரவாக தமிழ் கூறும் நல்லுலகில் வந்துள்ளது அனைவருக்கும் தெரியும் தானே!

புதிய முயற்சிகள் இலக்கியத்தில் தொடர்ந்து செய்யப்படுகின்றன. அதுமட்டுமில்லாது மதம், இந்து மதம், இந்துத்வா, பார்ப்பனியம், தலித்தியம், கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் பற்றி இன்றைக்கு அரசியலில் பெரும் விவாதப் பொருள்களாக உருவாகியுள்ள பற்றிய சிந்தனைகளைப் பற்றி நிறைய புத்தகங்கள் வெளிவந்திருந்தன.

ஏன் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல் அதையொட்டிய தேர்தல் அரசியல் பற்றி ஆளுங்கட்சி இங்கிருக்கிற முக்கிய கட்சிகள் பற்றிய கருத்துக் கணிப்புகள் என்பது பற்றியெல்லாம் புத்தகங்கள் கிடைக்கும்.

பத்தாண்டுகளுக்கு பிறகு ஈழம், இனப்படுகொலை, தமிழன் வீரம், சித்ரவதைகள், போர் பற்றிய பல நூல்கள், நாவல்கள், படைப்புகள் அந்த அந்த காலத்திற்கே நம்மை இழுத்து சென்று கண் முன் நிறுத்தும். நம்மிடம், ஒவ்வொருவருடைய மனச்சாட்சியுடன் குறுக்கு விசாரணை அவை செய்கின்றன.

இதையெல்லாம் வாங்குவதற்கும், இதிலிருந்து குறைந்தது சில புத்தகங்களாவது கட்டாயம் வாங்க வேண்டியிருந்தது. இதற்கெல்லாம் குறைந்தது ஒரு மூவாயிரம் ரூபாயாவது தேவைப்படும். மூவாயிரம் போதுமா என்ன? ஒரு நான்காயிரம் முதல் ஐந்தாயிரம் வரை தேவைப்படும். அப்பொழுதுதான் தோழரின் மனம் நிம்மதி அடையும்.

இப்போது கொஞ்சம் தடி தடியான புத்தகங்கள் போட ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் நாவல் எழுத கூடியவர்கள் தடி தடியா நாவலை எழுதிக் குவிக்கிறார்கள். தோழருக்கு ஆச்சிரியமாக இருந்தது.

அவரும் கூட கட்டுரைகள் எழுதக்கூடிய ஆள் தான். சிறுகதைகள் கூட சில எழுதியிருக்கிறார். ஏன் கவிதைகள் கூட தன்னுடைய இளமை பருவத்தில் தன் படைப்பில் ஆரம்பத்தில் மானே.. தேனே .. மயிலே… எழுதியிருக்கிறார். யார் தான் படைப்பாளிகளாக இருக்க முடியாது.

ஒவ்வொரு மனிதனும் ஒரு மகத்தான படைப்பாளியே! படைப்பு மனம் மட்டும் மனிதனுக்கு இல்லாமல் இருந்திருந்தால் இன்று வரை மரத்திற்கு மரம் தாவி கிளைகளில் தொங்கி கொண்டு கிடைத்ததை தின்று வாழும் உயிரியாக இருந்திருப்பான்! பணம் வேண்டும் என்று மனைவியிடம் கேட்டார்.

அவர் வேண்டா வெறுப்பாக ஒரு இரண்டாயிரம் ரூபாயை டேபிள் மீது தூக்கி வைத்தார். தோழருக்கு இப்போது கிட்டத்தட்ட 60 வயது நெருங்கி விட்டது. இன்னும் சில நாட்களில் மூத்த குடிமகனாக கூட மாறிவிடுகிறார்.

பணம்.. பணம் என்று ஓடி ஓடி உழைத்து என்ன பயன்? ஆண்-பெண் சமத்துவத்தை பொருண்மையாக செய்ததை விட இன்னும் கருத்துக்கு அழுத்தம், ஆழம் கொடுத்திருக்க வேண்டுமோ என்று தோழர் கணக்கு போட்டு கொண்டிருந்தார்.

அனைத்தையும் போட்டு இப்போது குழப்பிக்கொள்ள வேண்டாம். புத்தக கண்காட்சிக்குச் செல்வோம். புத்தகங்கள் வாங்கின வரவு செலவு கணக்கை பின்பு போடுவோம் என்று யதார்த்தமாக முடிவு செய்தார்.

தோழருக்கு புத்தி தெளிந்து சுயமான அறிவு வளர்ந்த காலத்தில் இருந்து புத்தகக் கண்காட்சிக்கு போய் வருகிறார். அங்கு புத்தகங்கள் மட்டும் இல்லை. அவருக்கு தெரிந்த நண்பர்கள், தோழர்கள், படைப்பாளிகள் என்று எல்லோரும் வருவார்கள்.

எந்திரமயமான நகரமயமான, கார்ப்பரேட் நுகர்வுகள் கூடி வெறியாக மாறி வரும் காலத்தில், ஆண்டுக்கு ஒரு முறையாவது நண்பர்களைச் சந்திக்கும் இடமாகக் கூட அது இருந்தது.

புத்தகங்களை தோழர் மிகவும் நேசித்தார். எப்பொழுது புத்தகங்களை நேசித்தார் என்பதை யோசித்துப் பார்த்தால் எப்போது வாசிக்கத் தொடங்கினானோ அப்பொழுதே நேசிக்கத் தொடங்கி விட்டார்.

இப்போது இருப்பது போன்று அன்றைக்கு அவர் படிக்கும் காலத்தில் செல்பேசிகள், தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி சினிமாக்கள் கிடையாது.

பலருக்கும் இருந்த ஒரே ஒரு பொழுதுபோக்கு எழுத்தும் படிப்பும் தான். தோழருடைய உறவினர் புத்தகங்கள் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து படிக்கும் பழக்கம் கொண்டிருந்தார். பெரும்பாலும் அவை புராண நூல்கள் தான். அந்த நூல்களை தோழர் ஆச்சரியத்தோடு வாசித்துப் பார்த்தார்.

மாயாஜால, மந்திர தந்திரங்கள், வீர சாகசங்கள் அனைத்தும் பக்தியுடன் கலந்த கதைகள் அவருக்கு மிகவும் பிடித்து போனது! அடுத்து துப்பறியும் கதைகள். பிறகு சித்ரகதைகள், தொடர்ந்து அறிவியல் புனைகதைகள். ஒரு கட்டத்தில் உறவினரை விட இவர் முதலில் புத்தகங்கள் கிடைக்கும் இடைவெளியில் படித்து முடிப்பவராக இருந்தார்.

அவரிடம் அடிக்கடி புத்தகங்கள் எடுத்து வரும்படி நச்சரிக்க தொடங்கினார். ஓரிரு ஆண்டுகளில் இவரே நூலகத்திற்கு செல்ல ஆரம்பி விட்டார். இப்படித்தான் தோழருடைய வாசிப்பு ஆரம்பித்தது. இவரின் வாசிப்பு குட்டையாக தேங்காமல், காட்டாற்று வெள்ளமாக கரை புரண்டு ரொம்ப விரிந்ததாய் சென்று கொண்டிருந்தது.

வீடு, பள்ளி, நூலகம் என்று முக்கோணத்திற்குள் அவர் வாழ்ந்தார். நூலகர் மட்டும் அவருக்கு நண்பனாக இருக்கவில்லை, நூல்களை அடுக்கி வைக்கும் அட்டண்டர், பெருக்கி கூட்டும் ஆயா கூட அவருக்கு நெருக்கமாகி விட்டார்.

இவர்கள் சிலர் ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆனாலும் அவர்களுடனான நட்பும், உறவும் நீடித்தது. இந்த நட்பு எதிலிருந்து வந்திருக்க வேண்டும். நூலக வாசகர்கள் அனைவரும் போன பிறகு கூட நூலகத்திலிருந்து அநேகமாக அவன் தான் கடைசியாக வெளியேறக்கூடிய ஆளாக இருப்பான்.

நூலகர் உட்பட எல்லாரும் போயிருப்பார்கள். நூலக காவலாளி ஒவ்வொரு கதவாக மூடிவிட்டு கடைசியில் வந்து அவன் தோளில் மெதுவாகத் தட்டுவார். அது ஒரு நேசமான தொடுகை. அந்த நேசம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு தான் அவன் மெதுவாக எழுந்து நூலகத்தை விட்டு வெளி செல்வான்.

இப்படித்தான் அவனுக்கும் புத்தகங்களுக்கும் உள்ள தொடர்பு ஆரம்பித்தது. இந்தத் தொடர்பு எப்பொழுதும் நீடித்துக் கொண்டே இருந்தது.

அதற்குப் பிறகு அவன் எப்பொழுதும் வாசித்துக் கொண்டே இருந்தான். ஒரு துறையில் மட்டும் இல்லை. புராணங்கள், நாவல்கள், அறிவியல், வரலாறு, கவிதை என்று நாளும் விரிந்தன. ஜோக்குகள், துணுக்கு புத்தகங்களையும் படித்தார். வார இதழ, மாத பத்திரிகை, காலாண்டு இதழ் எதுவும் அந்த நூலகத்தில் இருந்து இவன் கண்களுக்கு படாமல் தப்பியது கிடையாது.

இரும்பு கை மாயாவியாக அவனின் கனவுகளில் உலா வந்தான்! பெரிமேசன், சங்கர்லால், தமிழ்வாணன் துப்பறிவாளர்களாக சில மாதங்கள் இருந்தான். வரலாற்று சகாச நாவல்களுக்கு தாவினார். சாண்டில்யன் அவனுக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளராக அப்பொழுது இருந்தார். போர் வியூகங்கள், வகை வகையான காதல், மயிர்கூச்செறியும் வீரம்.. சர்வசாதாரணமாக 500 பக்க நாவலை ஒரு நாளில் படித்து மெய் மறந்தான்.

காதலும் வீரமும் தான் தமிழர்களின் மரபு என்று சொல்லக்கூடிய பொன்னியின் செல்வன் நாவலை எத்தனை முறை படித்திருப்பான் என்று அவனுக்கே தெரியாது. இந்த வரலாற்று நாவல்களுக்கு பிறகு அவன் யதார்த்த வகைப்பட்ட சமூக படைப்புகளுக்கு நழுவி சென்றான்.

அதற்கு இசைந்தார் போன்று இலக்கிய மன்றம் அவன் (தோழர்) ஊரில் ஆரம்பிக்கப்பட்டது. அவனுடைய நண்பன் அந்த இலக்கிய மன்றத்தில் இருந்தான். இலக்கிய மன்றத்தில் நடக்கும் எல்லாக் கூட்டங்களுக்கும் அவனும் செல்லத் தொடங்கினான். இலக்கிய விமர்சனங்கள், சர்ச்சைகள் அங்கு நடந்தன.

ஒரு முறை இலக்கிய மன்றத்தில் சோவியத் இலக்கியங்களைப் பற்றி இடதுசாரி படைப்பாளி விரிவாகப் பேசினார். அது அவனுக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அப்போது தான் அவன் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளையும், சாதி பிரிவுகளையும், மதப்பிரிவுகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் கவனிக்க தொடங்கியிருந்தான். அவனுக்கு புரிந்து விட்டது. இந்தச் சமூகத்தில் எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது.

இதை புரிந்து கொள்ள எங்கிருந்து தொடங்க வேண்டும். அவனுக்கு கற்றுத் தருபவர்கள் யாரும் கிடையாது. அவனுக்கு கற்றுத் தரக்கூடிய இடமாக புத்தகங்கள் மட்டும் தான் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தது. அத்தகைய புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தான். அவனுக்கு அது பிடித்து போய்விட்டது.

அவனுடைய கல்லூரி நூலகத்தில் இடதுசாரி நூல்கள் இருந்தன. பொது நூலகத்திலும் அத்தகைய புத்தகங்கள் இருந்தன. அவனும் சில புத்தகங்களை வாங்கி படிக்கத் தொடங்கி விட்டான். இப்படி படிக்கும் பழக்கம் தான் தோழனாய் அவனை மாற்றியது என்றும் சொல்லலாம்!

சின்ன சின்னதாக கட்டமைக்கப்பட்ட புத்தக வாசிப்பு பிரம்மாண்டமாய் எழுந்து நிற்கிறது. சென்னை கல்லூரியில் படிக்கும் பொழுதுதான் மூர் மார்க்கெட் புத்தக கடைகள் அவனுக்கு அறிமுகமாகியது. அந்த மூர்மார்க்கெட் புத்தக கடைகளை சுற்றி வருவதே ஆனந்த அனுபவமாக இருக்கும்.

பாட புத்தகங்கள், படைப்பிலக்கியங்கள், உலகின் உள்ள அத்தனை மொழிகளிலும் உள்ள புத்தகங்கள், செக்ஸ் புத்தகங்கள் வரை பூமி பந்தின் அனைத்து பழைய, புதிய நூல்களும் இங்கு கிடைக்கும். 1985 ஆம் ஆண்டு அது எரிக்கப்பட்ட பின்பு அதே இடத்தில் சில கடைகளும், நகரின் பல பகுதிகளுக்கு புத்தக கடைகள் சிதறின.

கடற்கரையில் இருந்து நீளும் முன்னர் பைகிராப்ஸ் சாலை இன்று பாரதி சாலையின் தெற்கு நடைபாதைகள் முழுவதும் புத்தக கடைகளாக மாறி போனது.

மாலை நேரத்தில் பழைய புத்தகங்களும் புதிய புத்தகங்களும் அங்கு குவிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் பழைய புத்தகங்கள் அதிகமாக குவிக்கப்பட்டிருக்கும்.

எப்படியும் வாரத்திற்கு ஒரு நாள் அந்த பழைய புத்தகங்கள் இருக்கும் இடம் சென்று பார்வையிட்டு கொண்டே இருப்பான். சில சமயத்தில் நண்பர்களுடன் வருவான். பல சமயத்தில் நண்பர்கள் வரமாட்டார்கள். ஆனால் அவன் மட்டும் தொடர்ந்து பழைய புத்தகக் கடைகளுக்கு வரும் பழக்கத்தை வைத்து இருந்தான். பழைய புத்தகக் கடைகள் சிறு முதலாளிகள் பலர் இவன் நண்பர்கள் ஆகி விட்டார்கள்.

இவன் தொடர்ச்சியாக வருவதால் என்ன என்ன புத்தகங்களை புரட்டி பார்ப்பான், வாங்குவான் என்று அவர்களுக்கு இவனை பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது.

புத்தக பார்வையாளர்கள் எந்த வகையான புத்தகங்கள் படிப்பார்கள் என்று அவர்கள் தோற்றம், பார்வை, புத்தகங்கள் புரட்டுதல் என்பதில் இருந்தே அவர்கள் எப்படியானவர்கள் என்பதை புத்தக வியாபாரிகள் முடிவு செய்யும் திறமை பெற்று இருந்தார்கள்.

இடதுசாரி படைப்புக்களை இவன் விரும்பி படிக்க ஆரம்பித்தான். 80 களில் இடதுசாரி படைப்புகளை விரும்பி படிக்க ஆரம்பிப்பவர் பயணம் இடதுசாரி இயக்கத்தில் செயல்படுதில்தான் முடியும். அவன் தோழனாகி விட்டான்.

இப்போது புதிய புத்தகங்களை வாங்கி படிக்க அதிக விலை கொடுக்க வேண்டி இருந்ததால் பழைய புத்தகங்களை வாங்கி படிப்பது மிகவும் வசதியாக இருந்தது. அவர் பழைய புத்தக கடைக்கு தொடர்ந்து செல்லத் தொடங்கிவிட்டான்.

பழைய புத்தகங்களில் எந்த புத்தகங்களைத் தேடி பார்க்கிறீர்கள் என்பதை வைத்து பழைய புத்தகங்களை விற்பவர்கள் நீங்கள் எப்படி பட்டவர் என்று கணிக்கும் கூர்மையான அவதானிப்பு இயற்கையாகவே அவர்களுக்கு கை கூடி விட்டு இருந்தது.

நீங்கள் ஒரு புத்தகத்தை எப்படி பார்க்கிறீர்கள் நீங்கள் அதை தொடும் போது அதன் பக்கங்களை புரட்டும் போது உங்களின் கண்களின் பரவசம், முகபாவனைகளை பார்த்து அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நீட்டும் புத்தகங்களின் விலையை நிர்ணயிப்பார். எல்லா வியாபாரிகளும் செய்யக் கூடிய அதே உத்தி தான்.

ஆனால் பழைய புத்தகக் கடைக்கார்களுக்கு இன்னொரு முக்கியமான சிறப்பு இருந்தது. அவர்களுக்குத் தொடர்ச்சியாக வாங்க கூடியவர்கள் மேல் ஒரு ஈர்ப்பு, அன்பு இயல்பாக இருந்தது. புத்தகங்களை நேசிப்பவர்களுக்கு பழைய புத்தகக் கடைக்காரர்களுக்கும் ஒரு நெருக்கமான உறவை உங்களால் பார்க்க முடியும்.

உங்களுக்கு தேவையான புத்தகங்களை அவர்கள் தேடி எடுத்து தருவார்கள். புதிதாக வருபவர்களை விட இவர்களுக்கு தனி சலுகை விலைகள் உண்டு. தோழருக்கு அப்படியே பழைய புத்தக விற்பனையாளர்கள் சிலர் பழக்கம் நட்பு உண்டு.

திருமணமான புதியதில் தோழரின் பீரோவை திறந்த பார்த்த இணையர் அதில் நான்கே சட்டைகளும், கால் சட்டைகளும் இருப்பததை கவனித்தார். அவர் அலமாரிகளில் 400 புத்தகங்களுக்கு மேல் இருந்தது. அலமாரி போதவில்லையென்று சட்டை துணிகள், பணம் வைக்கும் பிரோவிலும் பாதி இடத்தை புத்தகங்கள் அடைத்து கொண்டிருப்பதை பார்த்து இணையர் ஆச்சரியப்பட்டு போனார்.

இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என்ன என்ற இயல்பாக அவர் தோழரிடம் கேள்வி எழுப்பினார்.

காதல் புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, பெண்ணுரிமைகள் பற்றிய சில கவிதை, சிறுகதை, நாவல்களை அவரிடம் தந்தார். அவரும் ஆவலுடன் படித்தார். சில ஆண்டுகளுக்கு மட்டும்தான் இது நடந்தது. பின் பழையபடி மாறி விட்டார்.

பெண் விடுதலை, ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் ..இத்தியாதிகள் கருத்து, வாசிப்பு, நடைமுறைகளை மீறிய சமூக மனப்படிவமாக கொட்டி கிடக்கின்றதா என்பது அவருக்கு சந்தேகமாக எழுந்து அடங்கி போனது!

ஏனெனில், இன்னொரு தோழி புத்தக கண்காட்சிக்கு போகும் முன்பு பிரபல எழுத்தாளரிடம் அவருடைய இல்லத்தில் உரையாடி விட்டு செல்லலாம் என்றார்.

தோழர் மகிழ்ச்சியுடன் உரையாடலில் கலந்து கொண்டார். அங்கிருந்து ஒர் ஆட்டோவை பிடித்து இருவரும் புறப்பட்டனர். இடையில் ஓர் இடத்தில் ஆட்டோவை நிறுத்த சொல்லிவிட்டு தோழி இறங்கி சிறிது நேரத்தில் திரும்பினார்.

ஏதோ மாற்றம் அவரிடம் தெரிந்தது. அவர் காதுகளில் அழகாக மாட்டி இருந்த கம்மல்கள் காணவில்லை. மார்வாடி கடையில் கம்மல்களை விற்று விட்டு வந்திருக்கிறார்.

“என்ன ஆச்சு தோழர்” என்று வினவினார்.

“ஒன்னுமில்ல… புத்தக கண்காட்சிக்கு போகிறோம் … பணம் சிறிது குறைவாக இருந்தது.. அதனால்தான் விற்று விட்டேன்” என்று இயல்பாக அந்த தோழி கூறினார். தொடர்ந்து எழுத்தாளரிடம் விவாதிப்பதை கூறிக் கொண்டிருந்தார்.

தன்னை போல் ஒருவர் இருப்பது கண்டு மகிழ்ச்சி கொண்டார்.

தற்பொழுதும் பேருந்தில் ஏறி நந்தனம் 19வது புத்தகக் கண்காட்சியை நோக்கி தோழர் கால்கள் நடந்து கொண்டிருந்தது. புத்தகக் கண்காட்சி செல்லும் நடைபாதை முழுக்க ஏராளமான பழைய புத்தகங்களின் கடைகாரர்கள் கடை விரித்து இருந்தனர். இவன் ஒவ்வொரு புத்தகக் கடையாக சென்று பார்த்தான்.

அவனுக்கு ஆச்சரியம். நிறைய புத்தகங்கள் பழயவைகள் அல்ல, புதிய புதிய புத்தகங்கள், அவனுக்கு விருப்பமான புத்தகங்கள் நிறைய அவற்றில் இருந்தன.

நிறைய நாவல்கள், கவிதை நூல்கள், இலக்கிய விமர்சன நூல்களும் இதில் அடக்கம். இன்றைக்கு விவாதத்தில் இருக்கக் கூடிய இடதுசாரி இதழ்கள் இருந்தது. பெரியார் இருந்தார். பல தமிழ் தேசியங்கள் சம்பந்தமான புத்தகங்கள் இருந்தது.

பக்தி நூல்கள் கிடந்தன. இந்துத்துவா நூல்கள் புத்தம் புதிய நூல்கள் பழைய புத்தக வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. பிரபலமான எழுத்தாளர்கள் முதல் அரிய வகையான எழுத்தாளர்கள் வரை பிளாட்பாரத்தில் இருந்தார். அவனுக்கு எல்லாவற்றையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது.

சில புத்தகங்களை அவன் வாங்கினான். அவன் வாங்கும் போது கவனமாக அவைகளின் பக்கங்களை திருப்பி திருப்பி பார்த்து வாங்கினான். ஒவ்வொரு பழைய புத்தகத்திற்கும் உள்ளே சில குறிகள், குறிப்புகள் நிச்சயம் இருக்கும். அந்தக் குறிகள் அந்தப் புத்தகத்தை வாங்கி வாசித்தவர்கள் வாசிப்பு ரசனைகளின் குறிகள்.

புத்தகங்களை வாங்குபவர்கள் பெரும்பாலானோர் கட்டாயம் தங்களின் பெயர்களை பொறிப்பார்கள். எங்கு வாங்கினோம். எந்தத் தேதியில் வாங்கினோம் என்று இருக்கும்.

பல புத்தகங்களை கூர்ந்து நோக்கினால் மக்கள் திரள் மாநாடுகளில், தொழிற்சங்க மாநாடுகள் , கட்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் வாங்கியவையாக அந்த நூல்கள் இருக்கும். இல்லையென்றால் சில புத்தகக் கண்காட்சியில் வாங்கியதாகக் கூட இருக்கும். இப்படியான புத்தகங்கள் நிறைய அங்கே இருந்தன.

அதுமட்டுமில்லாமல் நிறைய ஆங்கில புத்தகங்கள் பழையதும், புதியதும் ஏராளமாக குவிக்கப்பட்டிருந்தன. ஆங்கில புத்தகங்கள் எங்கிருந்து வருகின்றன என்று தோழருக்கு தெரியவில்லை. தடி தடியான ஆங்கில பாட புத்தகங்கள், இலக்கிய புத்தகங்கள், வரலாறுகள் இன்னும் ஏராளமான புத்தகங்கள் இருந்தது.

மொத்தத்தில் ஹிட்லர் முதல் மார்க்ஸ் வரை, ராமர், ஆண்டாள், பிள்ளையார் முதல் இயேசு, முகம்மது வரை நடைபாதையில் கிடத்தப்பட்டு கிடந்தார்கள்.

பூசை அறைகளில் இருக்க வேண்டிய கீதையும், திருவெம்பாவையும், விநாயகர் புராணமும் பிளாட்பாரத்தில் இருந்தன.

மார்க்சின் மூலதனம், பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள், அம்பேத்கரின் சாதி ஒழிப்பும் பிளாட்பாரத்தில் பழைய புத்தக அடுக்குகளில் கிடந்தன.

அவன் அதையெல்லாம் கடந்து புத்தக கண்காட்சிக்கு வந்தான். அவனுடைய நீண்ட அனுபவத்தில் புத்தக கண்காட்சி என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிப் போய் இருந்தது. அன்றைக்கான புத்தக கண்காட்சி எதிரில் இருந்த பெரும் திடலில் ஏராளமான மக்கள் குழுமியிருந்தனர். கொரோனா காலம் என்றாலும் கூட நிறைய மக்கள் வருவது தோழருக்கு ஆச்சரியத்தை தந்தது.

கார்களில் நிறைய பேர் வருகிறார்கள். அதுவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. நடந்து வருபவர்களை விட காரில் வருபவர்கள் அதிகமாக இருந்தார்கள். எல்லாரும் முகமூடி அணிந்து கொண்டிருந்தார்கள். முகமூடி ரொம்ப பிரச்சினையாக தோழருக்கு இருந்தது.

நேரடியாக உடனடியாக யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. முகங்கள்தான் மனிதர்களை காட்டி கொடுக்கும் அடையாளங்களாக விளங்கும். இன்று அடையாளங்கள் இல்லாமல் அலைவது தோழருக்கு சிக்கலாக இருந்தது.

கண்காட்சியில் அவருக்கு நெருக்கமான இருபது புத்தகடைகள் இருந்தன. அந்த இருபது புத்தகக் கடைக்கும் அவர் போய் வரவேண்டும். வயதாகி விட்டது.

உடல் நலம் பிரச்சனைகளுடன் கொரோனா வேறு சிறிது சிறிதாக மனம் தளர ஆரம்பித்துவிட்டது. இந்தநிலையில் ஒருநாளாவது செல்வது என்ற வைராக்கியதுடன் அவர் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தார். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கத் தொடங்கினார்.

அநேகமாக ஒவ்வொரு கடைகளிலும் அவனுக்கு பேசுவதற்கு, பழகுவதற்கு, விசாரிப்பதற்கு நிறைய இருந்தது. ஒவ்வொரு புத்தகத்தமாக எல்லாவற்றையும் புரட்டி பார்த்தார்.

ஒரு வேளை அங்கு தோழருக்கு வசிப்பதற்கு இடம் கிடைத்தால் அங்கேயே கூட அவர் தங்கி விடுவார். ஏனென்றால் எல்லாமே அங்கு இருந்தது. உலகமே அதற்குள் இருந்தது. புதிய நூல்களின் நறுமணம், அலமாரிகளில் வரிசையாக அடுக்கப்பட்ட புத்தகங்களின் அழகு ஆகியவைகளை அனுபவித்தவர்களுக்கு தான் புரியும்!

ஆச்சரியத்தோடு தோழர் தனது ரசனைக்கான புத்தகங்கள் மட்டுமல்ல மற்ற புத்தகங்களையும் புரட்டினார். அதிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் அவருக்கு ரொம்பவும் பிடித்ததாக இருந்தது. குழந்தைகளுக்கான புத்தகங்கள் மட்டும் அல்ல குழந்தைகள் விளையாடுவதற்கு இப்பொழுது எல்லாம் வித விதமான விளையாட்டு பொருட்களும் வந்துவிட்டது.

புதிய புதிய சிடிக்கள், குட்டி குட்டி விதவிதமான எலக்ட்ரானிக் விளையாட்டு பொருட்கள், அறிவியலும் விளையாட்டும் இணைந்து கண்டுபிடிக்கப்பட்ட புதிய பொருட்கள் எல்லாம் அங்கு இருந்தன.

இவருக்கு அதையெல்லாம் வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அதை அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தார். அவருக்கு கை துறுதுறுத்தது. வாங்கு வாங்கு என்று மனம் அலை பாய்ந்தது. வாங்குவதை வலுக்கட்டாயமாக தவிர்த்து விட்டு சென்றார். அதை வாங்கினால் பணம் கரைந்து விடும் என்ற பயம்தான்!

தோளில் இருந்த ஜோல்னா பையில் ஒவ்வொரு புத்தகங்களாக நிறைந்து கொண்டிருந்தது. எந்தப் புத்தகங்களையும் அவர் முதலில் ஒரு தடவை புத்தக கண்காட்சி கடைகளுக்கும் ஒரு தடவை முழுமையாக வலம் வந்து விட்டார். கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மணி நேரங்கள் கடந்தது. மாலை நெருங்க கூட்டம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது.

மிகச் சில புத்தகங்களை மட்டும் வாங்க முடிந்தது. இப்போது இரண்டாவது தடவை அவன் மனம் எது எது தேவை என்று யோசிக்கத் தொடங்கி விட்டது. இருப்பு பணம், புத்தகங்கள் வாங்க வேண்டியவை இரண்டையும் மனம் சமன் செய்து கொண்டிருந்தது!

நிறைய எழுத்தாளர்களைப் பார்த்து அளவோடு பேசி பிரிந்தார். தோழரின் நண்பர் புதிய நாவலை எழுதி வெளியிட்டு கொண்டிருந்தார். ஒரு புத்தக கடையில் வெளியீட்டு விழா நடந்தது. எல்லோருக்கும் பதிப்பாளர் தேநீர் வாங்கிக் கொடுத்தார்.

தேநீர் அருந்தும் நேரத்தில் ஒரு சிற்றுரையை ஒரு பிரபல எழுத்தாளர் அந்த நாவல் பற்றி சிறிய செறிவான அறிமுகம் செய்து வைத்தார். அதற்குப் பிறகு அவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்று தோழரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நாவலை விலை கொடுத்து வாங்கி கொண்டார்.

இன்னும் புதிதாக வந்திருக்கும் புத்தகங்களையும் அவருக்கு வாங்குவதற்கு ஆசைதான். அவர் கையில் பேருந்துக்கும், பழைய புத்தகக் கடையில் சில புத்தகங்களை தேர்வு செய்து கொடுத்து வைத்து விட்டு வந்ததிற்கும்தான் பணம் இருந்தது.

பழைய புத்தகங்களை தூக்கிக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு வயதான காலத்தில் சுற்றுவது என்பது கடினமாக இருக்கும் என்பதால் புத்தகங்களை மட்டும் அவர் தேர்வு செய்து வைத்து விட்டு வந்திருந்தார். அவன் பை முழுக்க நிரம்பி விட்டது.

மெல்ல அவன் வெளியே செல்கிறார். இதற்கு மேல் கண்காட்சிக்குள் இருந்தால் அவர் வாங்க நினைத்து வாங்காமல் போகும் புத்தகங்கள் அவர் சட்டையை பிடித்து உலுக்க ஆரம்பித்து விடும்.

கண்காட்சிக்கு வெளியே படைப்பாளிகள், வாசகர்கள், நண்பர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். அந்த கூடுகை ஒர் ஆண்டில் இலக்கிய புத்தாக்கம், அரசியல் மாற்றங்கள் அனைத்தையும் அலசும் தேநீர் விருந்து!

இடை இடையே கொறிக்க சுண்டல்கள் கிடைக்கும். சிறிது தூரத்தில் நடந்து கொண்டிருந்த இலக்கிய சண்டையை விலக்கி விட்டு வந்து அதை பற்றி கிண்டலடித்து கொண்டிருந்தார் ஒரு தோழர்... அதற்குள் இன்னொரு கூடுகையில் சிறு சலசலப்பு எழுந்ததை பார்க்க முடிந்தது.

இந்த தேநீர் கூடுகை முடிந்த பின் திண்பண்ட கூடுகை வேறு படைப்பாளிகள், வாசகர்கள், தோழர்கள், நண்பர்களுடன் தொடர்ந்தது. ஒரு சிறுமி வைத்திருந்த பறக்கும் பலூன் விடுபட்டு இவர்களை வலம் வந்து வானில் சென்றது. அதை தோழர் ஒருவன் எட்டிப் பிடித்து அந்த சிறுமியிடம் தந்தார். இப்படி சில கூடுகை விவாதங்களுக்குப் பிறகு தோழர் புத்தக கண்காட்சியிடம் விடை பெற்று நகர்ந்தார்.

அவர்கள் அநேகமாக தோழரிடம் கூடி பிரிவது கடைசியாக இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

தோழர் மெல்ல நடந்து சென்று ஒவ்வொரு புத்தகங்களாக பழைய புத்தக கடைக்காரர்களிடம் கொடுத்து இருந்ததை பணத்தை கொடுத்து பெற்றுக் கொண்டு சென்றார். ஜோல்னா பையுடன் இன்னொரு பிளாஸ்டிக் பையும் மற்றொரு கையில் குடியேறியது.

அவருடைய சிந்தனை இந்தப் புத்தகங்களை எப்படி வாசிப்பது, எங்கே அடுக்கி வைப்பது, வீட்டுக்குச் சென்றால் இணையர் என்ன சொல்வாளோ என்பதாக மாறி போனது.

தோழர் பழைய புத்தக கடைகளில் தேர்வு செய்து வைத்திருந்த புத்தகங்களை பார்த்துக் கொண்டே ஆச்சரியம் அடைந்தார்.

அந்த பழைய புத்தகங்களின் முதல் உள்பக்கத்தில் தோழருடைய பெயரும், வாங்கிய தேதியும், வாங்கிய இடமும் எழுதப்பட்டு இருந்தது.

இருபது ஆண்டுகளுக்கு, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், ஏன் சில புத்தகங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கிய புத்தகங்கள் கூட அந்த பழைய புத்தகக் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு பழைய புத்தக கடையில் நீள்வாங்கு வரிசையில் அடுக்கி வைத்திருந்த அனைத்தும் வெவ்வேறு காலங்களில் மாநாடுகளில், பொது கூட்டங்களில், கண்காட்சிகளில் அவர் வாங்கிய புத்தகங்களாக இருந்தது.

தோழர் திடுக்கிட்டார். அவர் மனம் பதை பதைத்து. நம்முடைய புத்தகங்கள் எப்படி இங்கே வந்தன.

அந்த புத்தகங்களை திருப்பி திருப்பி பார்க்கிறார். அதில் பல புத்தகங்கள் முழுவதும் அவருக்கு நன்கு பரிச்சயமானது. அவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அந்த புத்தகங்களில் பல இடங்களில் அவர் போட்ட குறிகள் தெளிவாக அவருக்கு அவைகள் அவருடைய புத்தகங்கள் தான் என்று உணர்த்தியது. சில புத்தகங்களில் முக்கிய பகுதிகளில் கோடுகள் கூட போட்டிருந்தார்.

அந்தக் கோடுகளும் அப்படியே இருந்தது. தோழர் சில புத்தகங்களில் ஒரு சில இடங்களில் மீள்வாசிப்பு செய்ய மடித்து வைத்திருப்பார். அந்த மடிப்புகள் கூட லேசாக அப்படியே இருந்தது.

அவர் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டார்.

"என்னடா இது? என்னுடைய புத்தகங்கள் நமக்கு தெரியாமல் எப்படி இங்கே வந்தது?" என்று அவர் நினைத்தார்.

"யாரோ என்னுடைய புத்தகங்களை திருடி விட்டார்களா? அல்லது நான் தான் தெரியாமல் போட்டு விட்டோமா?" என்று யோசித்துக் கொண்டிருந்தான்.

இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் தோழரின் மரமண்டைக்கு நினைவுக்கு வந்தது.

ஆம்! நாம் தான் இறந்து போய் விட்டோமே?

இப்போது இங்கே நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம். இறந்து போன நாம் எப்படி இப்போது இந்த இடத்தில் இருந்து கொண்டிருக்கிறோம்.

தோழர் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவரின் தலை மெல்ல மெல்ல காற்றில் கலந்து அந்த புத்தகங்களுடன் கரைந்து கொண்டிருந்தது.

தோழர் தோளில் சுமந்த ஜோல்னாப் பையில் இருந்து அவர் வாங்கிய புதிய புத்தகங்கள் ஒவ்வொன்றாக கீழே சிதறி சிதறி விழுந்து கொண்டிருந்தன.

அவரும்... 40 ஆண்டுகளாக தோழர் சேமித்து வைத்த புத்தகங்களுடன் காற்றில் கலந்து கொண்டு இருந்தார்.

தோழரின் உடல் அணுக்கள் கலந்த காற்று வேகமாக சுழன்று அடித்தது. அது விரிந்து பரந்து கிடந்த பெரும் மரங்களில் பூத்து குலுங்கி கொண்டிருந்த மலர்களை பழைய புத்தகங்களின் மீது சொரிந்து தூவி கொண்டிருந்தது.

- கி.நடராசன்