தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையப் போகின்றன என்று எடப்பாடியும் நயினாரும் பேசாத நாள் இல்லை. அது வந்தே விட்டது கூட்டணிக்குள் கட்சிகளை இழுக்க அமித் ஷாவின் கீழ் இரண்டு படைகள் தயார் நிலையில் உள்ளன. ஒன்று, அமலாக்கப்படை! மற்றொன்று மத்திய புலனாய்வுப் படை! இப்போது மூன்றாவதாக ஒரு படை கிளம்பியுள்ளது, இது அறுபடை.

ஆமாம்! தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரப்போகிறார் முருக பகவான். மதுரை மாநாட்டுக்கு அறுபடை வீடுகளுடன் முருகன் வந்து சேர்ந்து விட்டார்! அதுவும் தனது மயில் வாகனத்தில், விபத்துக்கள் ஏதும் இன்றி பாதுக்காப்பாக வந்து விட்டார்! மாநாட்டுக்கு மாதிரி கோயில்களை முகப்புகளாக்கி அங்கே பூஜை சடங்குகளோடு பிரசாதம் வழங்கப் போகிறார்களாம். இது ஆகமத்துக்கு எதிரானது என்று அனைத்து ஜாதி அர்ச்சகர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. "இது எங்கள் கட்சி முருகன்; ஆகம முருகன் அல்ல" என்று வாதாடி நீதிமன்றத்தின் அனுமதியையும் பாஜகவினர் வாங்கி விட்டார்கள்.

“ஏற்கெனவே இதிகாச ராமனை நாங்கள் எங்கள் கட்சியில் சேர்த்துவிட்டோம்: இப்போது முருகனையும் உறுப்பினராக்கி விட்டோம். இந்து கடவுள்கள் எல்லாமே பாஜகவின் நிரந்தர உறுப்பினர்கள்தான்” என்கிறார்கள் இந்த 'இந்து காவலர்கள்'.

பழனியில் அமைச்சர் சேகர்பாபு நடத்திய மாநாட்டில் தமிழ்நாடு அரசின் கூட்டணியில் இருந்த முருகன் இப்போது தேசிய கூட்டணிக்கு மாறி விட்டானா? என்று கேட்டால் ஏன் முருகன் கூட்டணி மாறக்கூடாதா?என்று கேட்கிறார்கள். நியாயம்தான்.

அரசியல் முருகனுக்கும் ஆகம முருகனுக்கும் என்ன வேறுபாடு? ஆகம முருகன் பார்ப்பன மந்திரத்திற்கு கட்டுப்பட்டவன்: அரசியல் முருகன் பார்ப்பனிய கூட்டணிக்கு கட்டுப்பட்டவன்: அவ்வளவுதான்.

பாஜக தலைவர் நயினார் கூட்டணி இணைப்புக்காக விரதத்தை துவங்கி விட்டாராம். இணைப்புக்கு வரும் சங் பரிவாரங்களும் இதேபோல் சடங்குகளை பின்பற்றலாம் என்பது நமது தாழ்மையான யோசனை.

காவடி தூக்கிக் கொண்டு வரலாம், 

காவி கட்டி, 'மோடிஜீ வாழ்க: திமுக ஒழிக' என்று பக்தி பரவசத்தோடு பாதயாத்திரை வரலாம்.

 ‘பாஜக ஆட்சி அமைப்போம்' என்று அண்ணாமலை ஆதரவு முருக பக்தர்கள் முழக்கமிடலாம். நயினார் ஆதவாளர்கள் 'எடப்பாடிதான் முதல்வர்: பாஜகவினர் தான் அமைச்சர்கள் என்று அண்ணாமலைக்கு எதிராக வேண்டுதல் செய்யலாம்'.

2026-ல் எங்கள் ஆட்சிதான் என்று மொட்டை அடிக்கலாம். ஆனால் எது செய்தாலும் எது முருகன் நாக்கில் வேல் குத்தியே நிற்பான். அதாவது முருகன் வாய்திறக்கப் போவதில்லை. அப்படியே பேசினாலும் என்ன கேட்பான்? " பக்தர்களே! கடந்த தேர்தலிலேயே எனக்காக வேல் யாத்திரை நடத்தி படுதோல்வியை சந்தித்தீர்களே! அதற்குள் மறந்துவிட்டீர்களா? என்றுதான் கேட்பான்".

உபி முதல்வர் ஆதித்யனாத் உட்பட பாஜக முன்னணி தலைவர்கள் வருகிறார்களாம். மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் அனைவரும் 'கந்த சஷ்டி கவசம்' பாடப் போகிறார்களாம். நினைவு இருக்கிறதா? கந்த சஷ்டி கவசத்தை உள்ளது உள்ளடியே கூறினார்கள் என்பதற்காக கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நடத்தியவர்களை எடப்பாடியை மிரட்டி குண்டர் சட்டத்தில் கைது செய்ய வைத்தவர்கள் இதே முருக பக்தர்கள்தான். இப்போது இவர்கள்தான் கந்த சஷ்டி கவசத்தை பாடப் போகிறார்களாம். அதிலுள்ள அடல்ட்ஸ் ஒன்லி வாசகங்களை நீக்கிவிட போகிறார்களா?

அண்மைக் காலமாக வடிவேலு படங்கள் வரவில்லையே என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள். அவர்களுக்கு நல்ல காமெடி படத்தை மதுரையில் ஓட்டுகிறது பாஜக.

அரோகரா........

- கோடங்குடி மாரிமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.