“கோயில் அறங்காவலர்களாக உண்மையான கடவுள் பக்தர்களையே நியமிக்க வேண்டும். நாத்திகர்களை நியமிக்கக் கூடாது'' என்கிறார் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். பார்ப்பனர்கள், நீதிபதிகள், சங்கிகள் பலரும் உண்மையான பக்தர்களைத் தேடி அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும் என்கிறார்கள். பிரச்சினை என்னவென்றால் உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது என்பதுதான்!

உண்மையான நோய்களை கண்டுபிடிப்பதற்கு ஸ்கேன், எக்ஸ்ரே வந்துவிட்டன. உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு சிசிடிவி கேமராக்கள் வந்துவிட்டன. உண்மையான பக்தர்களை எப்படி கண்டுபிடிப்பது? நாள் தவறாமல் பூஜைகளை செய்கிறவர்கள்; நெற்றியில் அடையாள மார்க்குகளை வைத்திருப்பவர்கள்; ஆச்சாரங்களை அனுதினமும் கண்டிப்பாகக் கடைப்பிடிப்பவர்கள் இவர்களை எல்லாம் உண்மையான பக்தர்களாக அங்கீகரிக்கலாமா?corruption at templeஅதற்கும் வாய்ப்பு இல்லை! கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து நீதிமன்றம் கொண்டு வரப்படும் குற்றவாளிகளைப் பாருங்கள்; அவர்கள் பழுத்த பக்தர்களாக விபூதி, குங்குமத்துடன் காட்சித் தருகிறார்கள். ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு முன்ஜாமின் பெற்று வெற்றிப் புன்னகையுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் அரசியல் தலைவர்களைப் பாருங்கள்; நெற்றி முழுவதும் வண்ணமயம், கைகளில் கலர் கலர் கயிறுகள்.

அர்ச்சகர் என்றாலும் அதிகாரிகள் என்றாலும் கோயில்களில் நடக்கும் கொள்ளைகள், திருட்டுகள் பற்றி செய்திகள் வராத நாட்களே இல்லை. திருப்பதி, இராமேஸ்வரம், சபரிமலை, அயோத்தி என்று பிரபலமான கடவுள்களிடம் நெருக்கமாக இருக்கும் அர்ச்சகர்கள் உண்மையான பக்தர்களா? என்றால் அதுவும் இல்லை!

தங்கத்தைச் சுரண்டுகிறார்கள்; உண்டியல் பணத்தைக் கையாடுகிறார்கள்; பிரசாதத்தில் கலப்படம்; தங்க நகைகளுக்குப் பதிலாக பித்தளை நகைகளை மாற்றுகிறார்கள். இவ்வளவுக்கும் எந்தக் கடவுளும் எதிர்க்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை; தண்டிக்கவும் இல்லை! திருட்டு, மோசடி, கொள்ளை, ஊழல் எல்லாம் முடிந்த பிறகு சமஸ்கிருத மந்திரத்தை அவிழ்த்துவிட்டு பரிகாரம் செய்தால் போதும்; திருட்டுத் தீட்டுகள் ஓடிவிடும். உண்மையான பக்தர்களைக் கண்டுபிடிப்பதை விட, உண்மையான கடவுளையோ, கடவுள் சக்தியையோ கண்டுபிடிக்க முடியவில்லையே என்கிறார் ஒரு பகுத்தறிவாளர்.

நியாமான கேள்விதான். ஆனால் இப்படிக் கேட்டால் சங்கிகள் “புண்படுத்துகிறது” என்று கம்பு சுத்துவார்கள். நீதிமன்றம் ஓடுவார்கள்; உடனே விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்ப சில நீதிபதிகள் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சரி! வழக்குப் போடுகிற ஆசாமி உண்மையான பக்தர் தானா? என்பதற்கு என்ன ஆதாரம்? இதற்கு யார் சாட்சிக்கு வர வேண்டும்? அவதாரம் எடுத்து அந்த ஆண்டவன்தான் நீதிமன்றத்துக்கு வரவேண்டும். அவனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்குமா?

இதெல்லாம் நடக்கிற காரியமா, சார்? கடவுளாவது; ஆண்டவனாவது? அவன் நீதிமன்றம் வருவதாவது? ஏதாவது பகுத்தறிவுடன் பேசுங்க சார், என்று வழக்குப் போட்ட பக்தர்களே கேட்க ஆரம்பித்து விடுவார்கள்; அதைத் தானப்பா பகுத்தறிவாளர்களும் கேட்கிறார்கள்.

- கோடங்குடி மாரிமுத்து

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.