டும் டும்..டும்…டும்..தேர்தல் அறிவிப்பு வந்தாச்சு; தேர்தல் ஆணையம் களத்தில் இறங்கி விட்டோம்.

  • இனி வாகனங்களில் லட்சக்கணக்கில் வணிகத்துக்கோ குடும்ப செலவுக்கோ திருமணத்துக்கோ பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விடுவோம்.

நாங்கள் தேர்தலில் பணப்பழக்கத்தையே முற்றாக ஒழித்து விட உறுதி எடுத்து வந்து விட்டோம் இதை நீங்கள் நம்ப வேண்டும்.

  • அடுத்த 30-நாட்களுக்கு கட்சி அடையாளங்களையே உங்கள் நினைவில் இருந்து அகற்றப் போகிறோம்; இதற்காக சுவர் எழுத்துக்களை அழிக்க கிளம்பிவிட்டோம்; எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களை பூட்டு போட புறப்பட்டு விட்டோம்; தலைவர்கள் படங்கள் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசு அலுவலகத்தில் இருக்கவே கூடாது அகற்றப் போகிறோம்.

எந்தத் தலைவரின் நினைவும் உங்கள் கனவில் கூட வரக்கூடாது அதற்கான மந்திரக்கோல் எங்களிடம் இருக்கிறது.

  • ஆனால் அலுவலகங்களில் பூஜை போடும் சரஸ்வதி,விநாயகர், ராமன் படங்களில் கை வைக்க மாட்டோம். இது பாஜகவின் சின்னம்தான் என்பது எங்களுக்கும் தெரியும். இதில் கை வைத்தால் இந்து மத அவமதிப்பு மட்டுமல்ல பாஜக அவமதிப்பும் எங்களுக்கு வந்து சேர்ந்து விடும்.

நாங்கள் மிக மிக நேர்மையானவர்கள் என்று சத்தியம் செய்கிறோம்.

  • எங்களுக்கான அதிகாரங்களை அரசியல் சட்டத்தையும் தாண்டி அமித் ஷாவும் மோடியும் வாரி வழங்கி இருக்கிறார்கள்.

அதனால் தான் வாக்காளர்களின் குடியுரிமையையே நாங்கள் கேள்வி கேட்கிறோம்.

  • நாங்கள் எதற்கும் அஞ்சப்போவதில்லை.

 ராகுல் காந்தி எங்களின் தில்லுமுல்லுகளை ஆதாரப்பூர்வமாக அம்பலப்படுத்தினாரே; அஞ்சினோமா? மம்தா பானர்ஜி வீதிகளில் போராடுகிறாரே கலங்கினோமா?

  • உச்சநீதிமன்றமே தலையிட்டு எங்களை தலையில் குட்டுகிறதே; அவமானப்பட்டோமா?
  • எங்களை கண்காணிக்க நீதிமன்றம் நீதிபதிகள் குழுவையே நியமித்திருக்கிறதே; அசந்தோமா?
  • எல்லாவற்றையும் விடுங்கள்; எங்கள் தலைவர் ஞானேஸ்வரன் மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் வந்திருக்கிறதே?கவலை இல்லை
  • விஜய் மொழியில் கூற வேண்டுமானால் வொர்த் இல்லாத பிரச்சனை!
  • நாங்கள் எம்எல்ஏக்கள் கட்சி தாவலை தடுக்க மாட்டோம் மாநிலங்களவை தேர்தலில் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறி ஓட்டு போடுவதை கைதட்டி வேடிக்கை பார்ப்போம். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரையே ஹைஜாக் செய்தால் கூட திரும்பி பார்க்க மாட்டோம்.

டும்.. டும் டும்.. மக்களே எங்களை ஆதரியுங்கள்…

  • நமது பாரதத் தாயின் ஜனநாயகப் பெருமையை உலகத்துக்கே படம் காட்டி ஆஸ்கார் பரிசை தட்டிப் பறிக்கப் போகிறோம்.

இது எஸ்.அய்.ஆர் மீது சத்தியம்!

- கோடங்குடி மாரிமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.