தமிழ்நாட்டை அழித்து சோற்றுக்காகவும், தண்ணீருக்காகவும் பிச்சை எடுக்க வைக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் பிஜேபி கும்பல் கங்கணம் கட்டிக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கின்றது. தமிழக மக்கள் எவ்வளவுதான் விடாப்பிடியாக நெஞ்சுரத்தோடு போராடினாலும் பெரும்முதலாளிகளின் காலை நக்கி வாழ்வதையே தன்னுடைய பிறவிக் கடமையாக நினைக்கும் இந்த நாசகாரக் கும்பல் திரும்பத் திரும்ப தமிழ்நாட்டு மக்களின் தன்மானத்துடனும், சுயமரியாதையுடனும் அவர்களின் வீரத்துடனும் மோதிப் பார்க்கத் துணிகின்றது. தாங்கள் என்ன அழிச்சாட்டியங்கள் செய்தாலும், கொடிய மாபாதகத்தை அரங்கேற்றினாலும் அதற்கு மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் துணிந்து செயல்பட்டு வருகின்றது. இல்லை என்றால் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் இது போன்று அந்த மாநில மக்களும், அரசும் வேண்டாம் என்று சொல்லும் திட்டங்களை துணிந்து செயல்படுத்தும் வேலையைச் செய்ய முடியாது. மாநிலத்தை ஆளும் பிஜேபியின் கைப்பாவைகள் ஒரு பக்கம் மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்லிக் கொண்டே, இன்னொரு புறம் தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்று வேதாந்தாவுக்கு எதிராகப் போராடினால் என்ன நடக்கும் என்று தமிழ்நாட்டு மக்களுக்குப் புரிய வைத்தார்கள்.
எனவே மாநில அரசு மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தாது என்று சொல்வதை இப்போதிருக்கும் சூழ்நிலையில் நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அப்படிச் சொல்வதெல்லாம் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கவும், நம்ப வைத்து கழுத்தறுக்கவும்தான் என்பதை தூத்துக்குடி போராட்டத்தின் போதே நாம் பார்த்து விட்டோம். உண்மையில் மாநிலத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசும் மத்தியில் ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாசிச பாஜகவும் அடிப்படையில் பெருமுதலாளிகளின் காலை நக்கிப் பிழைப்பதிலும், பார்ப்பனியத்தை சிரம் மேற்கொண்டு செயல்படுத்துவதிலும் ஒத்துப் போவதால் இரண்டு அழிவு சக்திகளும் சேர்ந்து, தன்னுடைய சொந்த சுயநலத்துகாக யார் குடியையும் கெடுக்கத் தயங்க மாட்டார்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் சென்று மக்களை காவு கொடுப்பார்கள் என்பதற்கு ஹைட்ரோகார்பன் திட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
"தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை' என்றும், "மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை' எனவும் தற்போது மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் தாங்கள் நினைத்தது போலவே காவிரி டெல்டாவை பாலைவனமாக மாற்றுவோம் என நேரடியாகவே மிரட்டல் விட்டிருக்கின்றது. கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி வேதாந்தா குழுமத்திற்கும், ஓ.என்.ஜி.சி.க்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அப்போது தமிழக மக்களின் கடுமையான போராட்டத்திற்கு அஞ்சி சிறிது காலத்திற்கு கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டத்தை தற்போது மீண்டும் கையில் எடுத்துள்ளது..
ஏற்கனவே தமிழ்நாட்டில் 3,200 ச.கி.மீ. பரப்பளவில் 4 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப் பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் தற்போது, 5-வதாக ஒரு திட்டத்தை செயல்படுத்த மத்திய பாசிச மோடி அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் செயல்படுத்த உரிமம் வழங்கப்படவுள்ள நிலப்பரப்பு மட்டும் 4,064 ச.கி.மீ. ஆகும். அதாவது, இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 4 ஹைட்ரோகார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படும் மொத்த பரப்பளவைவிட, 5-வது திட்டத்தின் பரப்பளவு மிகவும் அதிகம். இதற்கான ஏல அறிவிப்பு கடந்த ஜனவரி 15-ஆம் தேதியே வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 5-வது திட்டம் புதுச்சேரியில் தொடங்கி காரைக்கால் வரையிலான ஆழ்கடல் பகுதியில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியின் தொடக்கமும், முடிவும் புதுச்சேரியைச் சேர்ந்தவை என்றாலும், இடைப்பட்ட பகுதிகள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்தத் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள கடல் பகுதி முழுவதும் மீன்வளம் நிறைந்த பகுதியாகும். எனவே இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என அந்தப் பகுதி மீனவ மக்கள் தங்களின் அச்சத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். மேலும் இந்தத் திட்டம் ஆழ்கடல் பகுதியில் செயல்படுத்தப் படுவதாக மத்திய அரசு சொன்னாலும், இந்தத் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்ட பகுதிகளை ஒட்டிய நிலப்பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் மக்கள் அச்சப்படுகின்றார்கள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வுகள் மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவை இல்லை என்பது எங்களது கொள்கை முடிவு என்றும் அதை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார். இதுதான் பாசிசத் திமிர் என்பது. மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சியில் இருப்பதாலும் மாநிலத்தில் தங்களின் அடிமைகள் ஆட்சி செய்வதாலும் மக்களின் உணர்வுகளை மயிரளவுக்குக் கூட தங்களால் மதிக்க முடியாது என்று சொல்லாமல் சொல்கின்றார் ஜவடேகர். மீத்தேன், நியுட்ரினோ, கெயில், எட்டு வழிச்சாலை என இனி அனைத்துத் திட்டங்களும் தமிழ்நாட்டு மக்களின் ஓப்புதல் இன்றியே செயல்படுத்தப்படும் என்பதற்கான சமிக்ஞைதான் தற்போது மத்திய அரசு அடாவடித்தனமாக அறிவித்திருக்கும் அறிவிப்பு.
எப்படி நீட் தேர்வையும், புதிய கல்விக் கொள்கையும் ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டு குழந்தைகளை எல்லாம் படிக்கவிடாமல் கல்விக் கூடங்களில் இருந்து விரட்டுவதற்கு இந்த அரசு துணை போனதோ, அதே போல வரும் காலங்களில் மத்திய பாசிச பாஜக தமிழ்நாட்டு மக்களின் மீது திணிக்கும் அனைத்து நாசகாரத் திட்டங்களையும் இந்த அரசு ஏற்றுக் கொண்டு தமிழ்நாட்டை சுடுகாடாக்கப் போகின்றது. அதிகார, ஊழல் முறைகேடுகளில் சிக்கி தன்னுடைய உச்சிக் குடுமியை பிஜேபியிடம் கொடுத்த இந்த அடிமைகள் ஆட்சி செய்யும் வரை இந்த மண்ணும் மக்களும் நாசமாய்ப் போவதில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது.
- செ.கார்கி