சபாஷ்! வாழ்த்து என்று பூரித்து பூங்கொத்து கொடுத்து மாலையிட்டு பாராட்டு விழா நடத்தத் துடிக்கிறோம்; அப்படி யாருக்கப்பா! பாராட்டு விழா என்று கேட்கிறீர்களா? சொன்னால் அதிர்ச்சியாக இருக்கும்! இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்தான் அந்த பாராட்டுக்குரிய ‘மகாபுருஷர்’. அப்படி என்ன சாதனை செய்துவிட்டார்? ‘பிராமண’ சேவையை கைக்கழுவி விட்டாரா? எதற்கெடுத்தாலும் இந்து விரோதி என்று கூச்சலிடமாட்டேன் என்று சபதமெடுத்துவிட்டாரா? ‘பிராமணர்’களைக் குறை கூறினால் மேடையில் கொதித்தெழுந்து அடிக்க பாயமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டாரா? அப்படியெல்லாம் இல்லை!arjun sampath 584இனி இந்து மதத்தை எதிர்த்தால் மிரட்ட மாட்டேன்; நீதிமன்றம் போக மாட்டேன்; ஆர்ப்பாட்டம் நடத்த மாட்டேன்; மாறாக கடவுளிடம் மனு கொடுப்பேன் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். “சனாதனத்தை எதிர்க்கும் உதயநிதிக்கு நல்ல புத்தியைக் கொடு!” என்று கோவை புளியங்குளம் விநாயகரிடம் தோப்புக்கரணம் போட்டார் சம்பத் என்று தினமலர் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

“ஓ விநாயகனே.. யானை முகத்தோனே; தும்பிக்கை நாயகனே; இது அடுக்குமா? சனாதான எதிர்ப்புக்காரர்கள் தமிழ்நாட்டில் வேக வேகமாக வளர்ந்து வருகிறார்களே; அவர்களுக்கெல்லாம் நல்ல புத்தி தந்து சனாதன ஆதரவாளராக மாற்ற மாட்டாயா? உனது சக்தி எங்கே போனது? உனது தும்பிக்கையை சுழற்ற வேண்டாமா?” என்று அர்ஜுன் சம்பத் கடவுளிடம் மூச்சுமுட்ட தோப்புக்கரணம் போட்டு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். சனாதன தர்மம் என்றால் அது ஜாதிப் பாகுபாடுகளை பிறப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கும் வர்ணாசிரமம்தான்; அதைத்தான் எதிர்க்கிறோம் என்று உதயநிதி தெளிவுபடுத்தி இருந்தாலும் அதற்கு காது கொடுக்க அர்ஜுன் சம்பத் தயாராக இல்லை!

இல்லை.. இல்லை! சனாதனம் என்றாலே இந்து மதம்தான் என்று சாதிக்கிறார். உதயநிதியைப் போலவே தமிழக வெற்றிக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் சனாதன எதிர்ப்பு பேசுகிறார்களே; முதலமைச்சர் விஜய் இதை கண்டிக்கவில்லையே! எல்லோருக்கும் நல்லபுத்தி தரமாட்டாயா? என்றும் தன்னுடைய தோப்புக்கரண வேண்டுதலில் இணைத்திருக்கிறார் அர்ஜுன் சம்பத்.

அப்பாடா! கடவுளுக்கு சக்தி இருக்குமென்று இப்பத்தான் அவரது புத்தியில் எட்டியிருக்கிறது போலும். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். தன்னை எதிர்ப்பவர்களை கடவுள் தண்டிப்பார் என்ற நம்பிக்கை வந்துவிட்டதே.

சனாதனவாதிகள் சனாதன தர்மத்தை காப்பாற்றத் துடிப்பவர்கள் இப்படித்தான் தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட வேண்டும் என்பது நமது வேண்டுகோள். நீதிமன்றங்களுக்கு போகக் கூடாது; வீதிகளில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது; கலவரங்களில் ஈடுபடக்கூடாது; தோப்புக் கரணம் போட்டது போல் வேறு சில போராட்ட வடிவங்களையும் நாம் பரிந்துரைக்கிறோம். காவடி தூக்கி மயக்கம் வரும் வரை ஆடலாம்; தீக்குழியில் இறங்கி ஆண்டவன் கவனத்தை ஈர்க்கலாம்; இன்னும் தீவிரமாக போராட நினைத்தால் தீயில் ஓடாமல் அப்படியே நின்று ‘தவம்’ செய்து `சனாதனிகள் ஒழிக!’ என்று திருவாயால் உச்சரிக்கலாம்; பழனிக்கு பாத யாத்திரை போகலாம்; கிடா வெட்டி பூஜை போடலாம்; கோயிலைச் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்யலாம், இப்படி ஏராளமான வேண்டுதல் பட்டியல்கள் நம்மிடம் இருக்கின்றன.

என்னடா இது கூத்து! உண்மையான சக்தி இந்த கடவுளுக்கு இருந்தால் சனாதன எதிர்ப்புகளை பேச அனுமதித்து இருப்பானா? அப்படியே சனாதனதத்தை எதிர்த்துப் பேசினால் ‘சம்ஹாரம்’ செய்து தலையை வெட்டியிருக்க மாட்டானா?

அட சந்துமுன்னணிகளே! இது கடவுள் பிரச்சனை இல்லையப்பா; இல்லாத கடவுள் பெயரால் சில இருக்கிற கயவர்கள் திணித்த கொடுமையப்பா! என்று கேட்கிறார் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரர்!.

 - கோடங்குடி மாரிமுத்து

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.