கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் மஞ்சுநாதா என்ற கோயில் பாஜக எம்.பி வீரேந்திர ஹெக்டே கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான‌ நிலத்தில் 100க்கும்‌ மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும், உடல்களைப் புதைத்ததாகவும், மஞ்சுநாதா கோயிலின் முன்னாள் ஊழியர் பீமா கடந்த ஜீலை 4-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் தென் பகுதியில் உள்ள தர்மஸ்தலாவில் பத்தாண்டுகளாக பாலியல் வல்லுறவுகளும் படுகொலைகளும் நடந்து வருவதாக தற்போது ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

இதுகுறித்து அவர் கூறியதாவது: 1995ம் ஆண்டு முதல் 2014 வரை, மஞ்சுநாதா கோவிலில் துாய்மைப் பணியாளராக வேலை செய்தேன். இந்த காலகட்டத்தில் கோயிலின் அருகில் ஓடும், நேத்ராவதி ஆற்றங்கரையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை என் மேற்பார்வையாளர் உத்தரவின்படி புதைத்தேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்று‌ விடுவதாக மிரட்டியதால் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். குற்ற உணர்வோடு இதற்கு மேலும் தன்னால் உயிரோடு இருக்கமுடியாது" என அவர் தெரிவித்துள்ளார். தான் புதைத்ததற்கு சான்றாக எலும்புக்கூட்டை தோண்டி எடுத்து பாதுகாத்து வைத்திருப்பதை காண்பித்துள்ளார். கர்நாடகவில் இந்த காலகட்டத்தில் காணாமல் போன பெண்கள் 4000 என புள்ளிவிவரங்கள் சொல்லுகின்றன.

தெட்சிணக் கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தர்மஸ்தலாவானது சமணர்களால் உருவாக்கப்பட்டது. நாடெங்கும் சமண கோயில்களை விழுங்கிய பார்ப்பனர்களின் (சைவ, வைணவ சமயம்) ஆதிக்கமே இதிலும் மேலோங்கியுள்ளது. இக்கோயில் மூலவர்களாக மஞ்சுநாதரும் (சிவனும்), சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரான சந்திரபிரபாவும், கோயில் காவல் தெய்வங்களாக குமாரசுவாமியும் மற்றும் கன்னியாகுமரி எனும் யட்சினியும் உள்ளனர்.

“மத நல்லிணக்கத்திற்கு உதாரணம் என்று போற்றப்படும்” தர்மஸ்தலா கோயிலின் நிர்வாகத்தை சமண சமய வீரமன்னா பெர்கடே என்பவரின் வழிவந்த குடும்பத்தினர் மேற்பார்வையிடுகின்றனர். ஆனால் 'மத்வரின் துவைத' மரபைப் பின்பற்றும் வைணவ பார்ப்பனர்கள்தான் கோயில் பூசைகளை செய்கின்றனர்.

சம்பவத்தில் தொடர்புடைய தர்மஸ்தலாவின் அதிபராகவும் கோலோச்சி வருபவர் தான் வீரேந்திர ஹெக்டே என்ற பார்ப்பனர். பா.ஜ.க.வின் மாநிலங்களவை உறுப்பினரான வீரேந்திர ஹெக்டே தனது 21ஆவது வயதிலேயே தர்மஸ்தலாவின் நிர்வாகியானவர். 50 ஆண்டுகளையும் கடந்தும் கோயிலை மட்டுமின்றி அந்த ஊரையே ஆளும் பொறுப்பில் நீடிப்பவர். 2015இல் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜியிடம் பத்ம விபூஷண் விருதை வாங்கினார் ஹெக்டே. அடல் பிகாரி வாஜ்பாய் உள்ளிட்டவர்களிடமிருந்தும் கூட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார் ஹெக்டே. ஹெக்டே போல் பல உச்சிகுடுமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த சம்பவத்துக்குக் காரணம் என்ற கோணத்தில் தகவல் வந்து கொண்டு இருக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 100 பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன என்று ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குழுவின் முன் கூறினார். அதே மாவட்டத்தில், 402 பெண்கள் மாயமான வழக்குகளும், 106 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன." இந்த கோயில் தனியார் வசம் உள்ளது.‌ கோயிலை அறநிலையத் துறை இடமிருந்து மீட்க வேண்டும் என்று கூறும் சங்கிகள் தனியாரிடம் போனால் இது போன்ற நிகழ்வுகள் தான் நடக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.