சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரு காரும், அதனைப் பராமரிக்க மாதம் ஒரு இலட்சம் ரூபாய் செலவுத் தொகையும் வழங்கப்படும் என்று ஆக-19, அன்று சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவித்தபோது, எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அனைவரும் அதனை ஆதரித்தனர்.

தன்னிடம் கார் இல்லை என்று கூறி இந்த வேண்டுகோளை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணியிடம் கார் உள்ளது என்பது, அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.vijay and jothimaniஇதனை ஆதரித்துப் பேசிய இதர சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், தங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்கள் இருப்பதை ஏற்கனவே தேர்தல் பத்திரத்தில் ஒப்புக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.

முன்பு சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் உயர்த்தப்பட்டபோது அதனை மறுத்த பொதுவுடைமைக் கட்சியினர் கூட, தற்போது இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆடம்பரக் கார்களை வைத்திருப்பவர்கள் தான்; அவர்களிடமிருந்தும் "தங்களுக்குக் கார் வேண்டாம்" என்ற எதிர்ப்புக் குரல் சட்டசபையில் எழவில்லை. பிறகு திமுக, பாமக, சி.பி.அய் கட்சிகள் தங்களுக்கு கார் வேண்டாம் என்று மறுத்து விட்டனர்.

மாத ஊதியம், தங்கும் விடுதி, இலவசப் பேருந்துப் பயணம், சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது வழங்கப்படும் தினசரி படி, ஓய்வூதியம் எனப் பல்வேறு சலுகைகள் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் கார் இல்லாதவர்கள் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்காகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊழலைத் தடுப்பதற்காகவே அரசே கார் வழங்குகிறது என்ற வாதமும் இங்கே முன்வைக்கப்படுகிறது. ஆனால், ஏற்கனவே கார்களை வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் கார் வழங்குவது என்பது கூட ஒரு சட்ட ரீதியான ஊழலாகும். தமிழக அரசு வழங்கும் இந்தக் கார் பரிசை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தில் முழுமையான நியாயம் உள்ளது. திமுக,பாமக,இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இங்கே ஒரு வரலாற்று நிகழ்வைச் சுட்டிக்காட்ட வேண்டும். 93 வயது வரை தம் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகச் சுற்றுப்பயணம் செய்தவர் தந்தை பெரியார். அவரது பயணத்திற்காகத் திராவிடர் கழகத் தோழர்கள் நிதி திரட்டிக் கார் வழங்கினார்கள்.

பெரியாரின் பரப்புரைப் பயணம் கார் வழியாகவே அமைந்தது. இறுதியில் அவருக்கு வழங்கப்பட்ட கார் பெட்ரோலில் இயங்குவதாக இருந்தது. பெட்ரோல் செலவு அதிகமாகிறது என்று கருதிய பெரியார், அதனை டீசல் என்ஜினுக்கு மாற்ற விரும்பினார். நீண்ட பயணத்திற்குப் பெட்ரோல் என்ஜினே வசதியாக இருக்கும் என்று தோழர்கள் கூறியும் பெரியார் கேட்கவில்லை. பெட்ரோல் காரில் பயணிப்பது ஆடம்பரச் செலவு என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதைய அமைச்சராக இருந்த ராஜாராம் அவர்களை வற்புறுத்தி, அந்த என்ஜினை டீசல் என்ஜினாக மாற்றினார். அப்படி மாற்றப்பட்ட பிறகு வண்டி பழுதாகிய நிலையில், ஒப்புக்கொண்ட பயணத்தை நிறுத்த விரும்பாத பெரியார், வண்டி பழுதுபார்த்து வரும் வரை ஒரு அம்பாசிடர் காரில் பயணித்தார். தனது உடலமைப்புக்கு ஏற்றதாக இந்தக் கார் பயணம் அமையாத காரணமாகவே அவரது குடலிறக்க நோய் தீவிரமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; அதுவே அவரது மரணத்திற்கும் காரணமாக அமைந்தது.

பொதுமக்கள் கொடுக்கும் பணத்தில் ஆடம்பர வாழ்வு வாழக்கூடாது என்பதில் தந்தை பெரியார் அந்த அளவிற்கு உறுதியாக இருந்தார். ஆனால், இன்று பல சொகுசு கார்களில் ஆடம்பரமாகப் பயணிக்கும் அரசியல் தலைவர்கள், அரசு ஒரு காரைத் தரும்போது 'அதுதான் கெத்து’ என்று வாங்குவதற்குத் துடிக்கிறார்கள்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.