தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டில் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் எம்.சாய்குமார் அவர் பதவி ஓய்வு பெற்ற நிலையில் நீட்டிப்புக் கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புதலைப் பெற்றது த.வெ.க ஆட்சி. தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டங்களிலோ அல்லது காக்ரோச் ஜனதா பார்ட்டி (CJP) கட்சியின் போராட்டங்களிலோ பங்கேற்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற உத்தரவுக்குக் காரணமாக இருந்தவர்; இந்தத் தலைமைச் செயலாளர் தான் என்பது இப்போது ஆதாரத்துடன் வெளி வந்திருக்கிறது.
ஜூலை-28,ஆம் தேதி தலைமைச் செயலாளர் கூட்டிய சட்டம் ஒழுங்கு குறித்த ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவரது ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதோடு, ஆகஸ்ட்-17, ஆம் தேதி சிறப்பு அதிகாரியின் வழியாக கல்வி நிறுவனங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இது மிகவும் அவசரமான நடவடிக்கை என்று அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்புக்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்களிலேயே ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. திரும்பப் பெற்றதற்கான காரணம் தனக்குத் தெரியாது என்கிறார் கல்லூரிக் கல்வி கூடுதல் இயக்குனர் சித்தியா செல்வி. உயர்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் தனது இயக்குனரகம் மட்டுமே இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது என்றும் பள்ளிக்கல்வி துறையிடமிருந்தோ, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்தோ இப்படி ஒரு சுற்றறிக்கை வரவில்லை என்றும் கூறுகிறார். ஆனால் பல்கலைகழகங்களுக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் கடும் குழப்பங்கள் நிலவுகின்றன.
இந்த அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களை கணக்கெடுக்கும் பணியில் குஜ்ஜிலியம்பாறை வட்ட ஆட்சி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது. இதேபோல் திராவிடர் கழகம் திட்டமிட்டிருந்த நீட் எதிர்ப்பு வாகனப் பரப்புரைக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. நாடு முழுதும் கிளர்ந்து எழும் மாணவர் இளைஞர் எழுச்சியை ஒடுக்க வேண்டும் என்ற ஒன்றிய ஆட்சியின் செயல் திட்டத்தை தமிழ்நாட்டில் வேகமாக அமல்படுத்தத் துடிப்பதாகவே தெரிகிறது. தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் அமித் ஷா முன்னிலையில் பேசிய முதலமைச்சர் விஜய் தொகுதி மறுவரையறைத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தைக் குறிப்பிடவே இல்லை. அதிகாரிகள் தயாரித்த உரையில் இந்த முக்கிய கருத்து திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இதை மாற்றி அமைக்க முதலமைச்சரும் தயாராக இல்லை; ஆனால் தங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று அமைச்சர்கள் முட்டுக்கொடுத்து சட்டமன்றத்தில் கம்பு சுற்றுகிறார்கள்.
இவர்களுக்கு நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினரும் இல்லை. இந்த நிலையில் தலைமைச் செயலாளரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கோரிக்கையை காதில் வாங்குவதற்குக்கூட இந்த ஆட்சி தயாராக இல்லை. மோடி ஆட்சி பற்றி சட்டசபையில் பேசினால் உடனே அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அமைச்சர்கள் பதறுகிறார்கள்
ஆட்சிக்கு ஆதரவு தரும் ஒரு கட்சிக்கு தலைமைச் செயலாளர் இப்படி நெருக்கடி உருவாக்குவதை இந்த ஆட்சி தொடர்ந்து பதவியில் நீட்டிக்க அனுமதிக்கப் போகிறதா? தமிழ்நாட்டில் ஆட்சியின் கொள்கைகளை முடிவெடுப்பது அதிகாரிகளா? ஆட்சியாளர்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ்நாடு அரசு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
மாநில உரிமைகளில் மற்றொரு குறுக்கீடு
மாநிலத்தில் உள்ள நிலங்களும் கனிமங்களும் மாநில உரிமைகளுக்கு உட்பட்டவை என்று சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் 18 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது. இந்த மாநில உரிமையை பறிக்கும் மசோதாவை கடந்த ஆக-13, அன்று எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது ஒன்றிய ஆட்சி.
சுரங்கம் மற்றும் கனிமவள சட்டத் திருத்தத்தின் படி வரிவிதிப்பு உரிமையை ஒன்றியஆட்சி கையில் எடுத்து இருக்கிறது. மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தையே குலைக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்!
முதலமைச்சர் விஜய் தனது சுதந்திர நாள் உரையில் ஒன்றிய ஆட்சியோடு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போம் என்றும் மாநில உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். மாநிலங்களின் பட்டியலில் உள்ள ஒரு பிரச்சனையில் ஒன்றிய அரசு இப்படி தலையிடுவது மாநில உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உணர்வாரா? இதற்கான கண்டனக் குரலை எழுப்புவாரா? இது நிர்வாக ஆணையா? அல்லது மாநில உரிமைப் பறிப்பா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
திமுக எம்.பி கனிமொழி இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாக இந்தச் சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மாநில உரிமைப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பறித்து வருகிறது பாஜக ஆட்சி!
- விடுதலை இராசேந்திரன்