அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் பற்றிய கருத்துக்கு வலதுசாரிகள், சங்கிகள் என்று எல்லோரும் சூடுபட்டப் பூனையைப் போலத் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

 “பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண் இனத்துக்கு எதிரான சனாதன கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை,” என்று அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆனாலும் இதை இனப்படுகொலையைத் தூண்டுவதாக மடைமாற்றி பா.ஜ.க பொய்களை அவிழ்த்து விட்டார்கள்.

உதயநிதி இனப்படுகொலை பற்றிப் பேசுகிறார் என்று (பொய்) சொல்லும் கனவான்கள், பிரதமர் பேசாமல் இருந்ததாலேயே மணிப்பூர் பற்றி எரிந்ததே! அதற்கு என்ன சொல்வார்கள்?

பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பிறப்பின் அடிப்படையில் சொல்லும் வருணம், வருணத்தின் அடிப்படையில் சொல்லும் குலத்தொழில், பெண்களின் மீது திணிக்கப்படும் ஆதிக்கம் இவையெல்லாம் சனாதனத்தில் தானே அடங்குகிறது.

சனாதனத்திற்கு எதிராக ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே, தந்தை பெரியார், அம்பேத்கர், நாராயண குரு போன்றோர் எல்லாம் போராடி இருக்கிறார்கள் என்பது வரலாறு.

 உண்மையில் ‘இந்தியா’ என்ற பலமான எதிர்க்கட்சியைக் கண்டு பயம். அதில் விரிசலை ஏற்படுத்திட முடியாதா என்ற வயிற்றுப் பொறுமலின் வெளிப்பாடுதான், உதயநிதியின் மேல் பா.ஜ.க வின் பாய்ச்சல்.

சாமியார் என்பவர் அடக்கமானவர், பொறுமையானவர், நிதானமாகப் பேசுபவர், அன்பானவர், கோபப்படாதவர் என்று தானே சொல்லப்படுகிறார்.

அப்படியிருக்கும் போது தலையைக் கொண்டு வந்தால்10 கோடி என்று வன்முறை பேசும் சாமியாரைப் பற்றி காவிகள் ஒன்றுமே பேசவில்லை, பிரதமரும் ஏன் வாய் திறக்கவில்லை?

அவர்களுக்குச் சனாதனம் என்பது பேச்சு. ‘இந்தியா’ கூட்டணி என்றால் கலக்கம். விசயம் அவ்வளவுதான்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It